காபி, தேநீரை சூடாக குடித்தால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தா? எச்சரிக்கும் புதிய ஆய்வு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மிஷெல் ராபர்ட்ஸ்
- பதவி, டிஜிட்டல் சுகாதார ஆசிரியர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், தேநீர், காபி போன்ற பானங்களைத் தொடர்ந்து மிகவும் சூடாக அருந்துவது உணவுக் குழாயில் ஏற்படக் கூடிய உணவுக் குழாய் புற்றுநோய் (esophageal cancer) ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாகத் தெரிய வந்துள்ளது.
சுமார் 10 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, இந்தப் பிரிவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஆய்வு என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த ஆய்வில், "மிகவும் சூடான" பானங்களை அருந்தியவர்களுக்கு, "மிதமான சூட்டில்" தேநீர் அல்லது காபி அருந்தியவர்களுடன் ஒப்பிடும்போது, புற்றுநோய் ஏற்படும் அபாயம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளது.
இருப்பினும், இந்த வகை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உணவுக் குழாயில் இருந்து வயிற்றுக்குச் செல்லும் பகுதியைச் சுற்றியுள்ள செல்களை மிகவும் சூடான திரவங்கள் சேதப்படுத்தக்கூடும்.
இந்த ஆய்வு, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு, 'இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கேன்சர்' எனப்படும் புற்றுநோய் குறித்தான சர்வதேச ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில், 65 டிகிரி செல்ஷியஸ் அல்லது அதற்கு மேற்பட்ட வெப்பநிலையைக் கொண்டுள்ள எந்தவொரு திரவமும் "மிகவும் சூடானது" என்றும், அது ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்கள், பெண்கள் என நடுத்தர வயதுடைய 9,77,282 பேரிடம் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, நாளொன்றுக்கு ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட முறை சூடான பானங்களை அருந்துவதும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரித்தது.

பட மூலாதாரம், Getty Images
எதையெல்லாம் குளிர்ச்சியாகக் குடிப்பது நல்லது?
பானங்களில் பாலைச் சேர்ப்பது அவற்றின் வெப்பநிலையை ஓரளவு குறைக்கக் கூடும் என்றாலும், அவற்றைக் குடிப்பதற்கு முன்பாகச் சிறிது நேரம் ஆறவிடுவது சிறந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுப்பில் வைக்கப்படும் தண்ணீர் முழுமையாகக் கொதித்த உடனேயே அதைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் தேநீரின் வெப்பநிலை, கொதிநிலையான 100 டிகிரி செல்ஷியஸாக இருக்கும். அதை கோப்பையில் ஊற்றிய பிறகு, இந்த வெப்பநிலை சுமார் 90 அல்லது 95 டிகிரி செல்ஷியஸாக குறையும்.
"அந்த பானம் சூடு தணிந்து பாதுகாப்பான வெப்பநிலைக்கு வரும் வரை சில நிமிடங்கள் காத்திருந்து குடிப்பது நல்லது. இருப்பினும் சூடான பானம் எவ்வளவு நேரம் ஆற வேண்டும் என்பதைத் துல்லியமாகக் குறிப்பிடுவது கடினம்," என்று பிரிட்டன் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
"இது குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், ஒரு பானம் மிகவும் சூடாக இருக்கும்போது குடிப்பதற்குப் பதிலாக, குடிப்பதற்கு வசதியான வெப்பநிலைக்கு வரும் வரை காத்திருக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்" என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆய்வாளரான கேரென் பாப்பியர் கூறுகையில், "தென்னமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அங்கு பலர் 'மேட்' எனப்படும் மிகவும் சூடான மூலிகை பானத்தைக் குடிக்கின்றனர். சூடான பானங்களுக்கும் உணவுக் குழாய் புற்றுநோய்க்கும் இடையே இதேபோன்ற தொடர்பை ஏற்கெனவே காட்டியுள்ளதாக" தெரிவித்தார்.
"எனினும், பானங்கள் எந்த வெப்பநிலையில் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன என்பதைத் தீர்மானிக்க மேலதிக ஆய்வுகள் தேவை" என்று அவர் குறிப்பிட்டார்.
மற்றுமோர் ஆய்வில், 118 இளம் வயதினர் வெவ்வேறு வகையான பிளாக் காபியை பலமுறை சுவைத்துப் பார்த்தனர். இதில், காபியின் வெப்பநிலை 70 டிகிரி செல்ஷியஸ் அல்லது அதற்கு மேல் இருந்தபோதுதான் பெரும்பாலானோர் அதை மிகவும் சூடாக இருப்பதாகக் கருதியது தெரிய வந்தது.
இந்த விஷயத்தில், பார்சலாக வாங்கிச் செல்லும் காபி கோப்பைகளைத் தயாரிக்கும் ஒரு நிறுவனம், "வெளியே எடுத்துச் செல்லப்படும் சூடான காபிக்கு 49 முதல் 60 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பநிலையே சிறந்தது" என்று கூறுகிறது .
எம்டிபிகே காபி நிறுவனத்தின்படி, காபி நீண்ட நேரம் சூடாக இருக்க வேண்டுமென ஒரு வாடிக்கையாளர் விரும்பினால், 82 டிகிரி செல்ஷியஸுக்கும் அதிகமான வெப்பநிலையில் காபியை வழங்க முடியும்.

பட மூலாதாரம், Getty Images
ஒட்டுமொத்த ஆபத்து குறைவு
மக்கள் மிகவும் சூடான பானங்களை அருந்துவதை நிறுத்தினால், உணவுக் குழாய் புற்றுநோய் ஏற்படும் 10 பேரில் ஒருவருக்கு அல்லது இருவருக்கு இந்தப் பாதிப்பைத் தவிர்க்க முடியுமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்குவாமஸ் செல் உணவுக் குழாய் புற்றுநோய் (Squamous cell esophageal cancer) என்பது அரிதான நோய். ஆண்டுதோறும் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த நோய் ஏற்படுகிறது. பிரிட்டனில், ஒருவரது வாழ்நாளில் இந்த வகை புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் சுமார் ஒரு சதவிகிதமாக உள்ளது.
எனவே, மிகவும் சூடான பானங்களை அருந்துவது ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்றாலும், புற்றுநோய் ஏற்படுவதற்கான ஒட்டுமொத்த அபாயம் குறைவாகவே உள்ளது. மேலும், புகை பிடித்தல் போன்ற பிற காரணிகள் உணவுக் குழாய் புற்றுநோயை ஏற்படுத்துவதில் அதிக ஆபத்தைக் கொண்டுள்ளன.
"இந்த வகை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கான மிக முக்கியமான வழி, புகை பிடிக்காமல் இருப்பதும், மது அருந்துவதைக் குறைப்பதும்தான்" என்று இந்த ஆய்வுக்கு நிதியளித்த கேன்சர் ரிசர்ச் யுகே அமைப்பைச் சேர்ந்த ஃபியோனா ஒசாகுன் வலியுறுத்தினார்.
உணவுக் குழாய் புற்றுநோயின் அறிகுறிகளில் நெஞ்செரிச்சல், அஜீரணம் அல்லது தொண்டை அல்லது மார்புப் பகுதியில் வலி, உடல் எடை குறைதல் ஆகியவை அடங்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































