முகலாய மன்னர் ஜஹாங்கீர் மதுப்பழக்கத்தால் மனைவி நூர்ஜஹானிடம் அதிகாரத்தை இழந்தாரா?

ஜஹாங்கீர்

பட மூலாதாரம், Heritage Art/Heritage Images via Getty Images

    • எழுதியவர், வக்கார் முஸ்தபா
    • பதவி, பத்திரிகையாளர், ஆய்வாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

"நான் சுல்தானை நூர்ஜஹானிடம் ஒப்படைத்துவிட்டேன். எனக்கு இப்போது அரை கிலோ இறைச்சியும், ஒரு குவளை மதுவும் மட்டுமே தேவை."

இது நான்காவது முகலாயப் பேரரசர் நூருதீன் முகமது ஜஹாங்கீர் கூறியது என மிர்சா முகமது ஹாதி தனது துஸுக்-இ-ஜஹாங்கிரி நூலின் முன்னுரையில் எழுதியுள்ளார்.

ஆனால், அன்றாட நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தான் எழுதிய ஜஹாங்கீர்நாமா நூலில், மதுபானம் மற்றும் பிற போதைப் பொருட்களை உட்கொண்ட சம்பவங்களை ஜஹாங்கீர் மறைக்கவில்லை.

ஆட்சி, நீதி, கலை மற்றும் இயற்கை குறித்த தனது அனுபவங்களுடன், இவற்றைப் பற்றியும் அவர் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

பெனி பிரசாத் எழுதிய ஹிஸ்டரி ஆஃப் ஜஹாங்கீர் நூலில், 1569-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஜஹாங்கீர் பிறந்தது குறித்து, "பிரார்த்தனைகள், நேர்த்திக்கடன்கள் மற்றும் புனிதப் பயணங்களுக்குப் பிறகு பிறந்த அந்தக் குழந்தை, அந்தக் காலத்தின் செல்வமும் சிறப்பும் மிக்க பேரரசரின் மூத்த மகனாக இருந்தான். அழகிய அரச நகரமான ஃபதேபூர் சிக்ரியின் மிகவும் பிரியமான இளவரசனாகவும் இருந்தான்" என்று எழுதப்பட்டுள்ளது.

முந்தைய முகலாயப் பேரரசர்களுடன் ஒப்பிடும்போது, ஜஹாங்கீரின் வாழ்க்கைப் பாதை மலர்களால் அலங்கரிக்கப்பட்டதைப் போலவே இருந்தது.

"ஆனால், இந்த வசதியும் சுகபோகமும் காரணமாக, ஜஹாங்கீர் தனது வாழ்நாள் முழுவதும் மன உறுதியிலும் முடிவெடுப்பதிலும் பலவீனங்களுடன் போராடினார். தன்னைவிட திறமையானவர்களிடமோ அல்லது புத்திசாலிகளிடமோ எளிதில் தனது கட்டுப்பாட்டை இழக்கும் நிலைக்கு அவர் ஆளானார். இளமைப் பருவத்தின் தொடக்கத்தில் அவர் பழக்கப்படுத்திக்கொண்ட மதுப்பழக்கம், இந்த பலவீனங்களை மேலும் தீவிரப்படுத்தியது."

பெனி பிரசாத்தின் கூற்றுப்படி, மதுப்பழக்கம் முகலாயக் குடும்பத்தின் பலவீனமாக இருந்தது.

தனது சுயசரிதையில், பாபர் மதுவும் விருந்துகளும் துயரத்திலிருந்தும் கவலைகளிலிருந்தும் தப்பிப்பதற்கான ஒரு வழியாக இருந்த அந்தக் காலக் கூட்டங்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். ஹுமாயூனின் உடல்நலம் மதுபானம் மற்றும் அபின் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டது. அவரது மகன் முகமது ஹக்கீமும் மதுவுக்கு அடிமையாகி, 31 வயதிலேயே உயிரிழந்தார்.

இந்தப் பாரம்பரியத்தில் இருந்து அக்பர் பெருமளவில் விலகியிருந்தார். இருப்பினும், தனது இளமைப் பருவத்தில் அவரும் அடிக்கடி மது அருந்தினார். சில நேரங்களில் அளவுக்கு அதிகமாகவும் குடித்தார். அவரது இளைய மகன்களான முராத் மற்றும் தானியாலும் பின்னர் மதுப்பழக்கத்தால் உயிரிழந்தனர்.

ஜஹாங்கீர் தனது 17-ஆவது பிறந்தநாள் வரை மதுவைத் தொடக்கூட இல்லை.

'வேட்டையாடப்பட்ட விலங்குகளைத் தனது முன்னிலையிலேயே சுத்தம் செய்யச் சொல்வார்'

வேட்டையாடப்பட்ட விலங்குகளைத் தனது முன்னிலையிலேயே சுத்தம் செய்யச் சொல்வார்'

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

1605 முதல் 1627-ஆம் ஆண்டு தற்போதைய இந்தியாவில் ஆட்சி செய்த ஜஹாங்கீர், தனது ஆட்சிக் காலத்தின் பாதிக்கும் மேற்பட்ட காலத்தைப் பேரரசு முழுவதும் பயணம் செய்வதிலேயே செலவிட்டார்.

"எம்பரர் ஜஹாங்கீர்: தி நேச்சுரலிஸ்ட்'' என்ற தனது கட்டுரையில், அன்ஷிகா ஜெயின், சிறு வயது முதலே ஜஹாங்கீர் தன்னைச் சுற்றியிருந்த உலகத்தை உன்னிப்பாகக் கவனிப்பதில் ஆர்வம் கொண்டிருந்ததாக எழுதுகிறார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து அவருக்குப் பரிசாகக் கிடைத்த விலங்குகள் மற்றும் பறவைகளை அவர் உன்னிப்பாகக் கவனித்ததுடன், அவற்றின் ஓவியங்களையும் வரையச் செய்தார்.

அன்ஷிகா ஜெயினின் கூற்றுப்படி, ஜஹாங்கீர் மார்க்கோர் மற்றும் பார்பரி வகை ஆடுகளை இனக்கலப்பும் செய்தார். அவற்றுக்குப் பிறந்த குட்டிகளின் அசைவுகளையும் செயல்பாடுகளையும் அவர் உன்னிப்பாகக் கண்காணித்தார்.

ஜஹாங்கீரின் விலங்குகள் மீதான ஆர்வம், அவரது வாழ்க்கையின் இறுதிக் காலங்களில் உணவு குறித்த அசாதாரணமான எச்சரிக்கையாகவும் மாறியது.

"வேட்டையாடப்பட்ட விலங்குகளைத் தனது முன்னிலையிலேயே சுத்தம் செய்யுமாறு அவர் உத்தரவிடுவார். அவை என்ன சாப்பிட்டிருந்தன என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, அவற்றின் வயிற்றைத் தானே பரிசோதிப்பார். ஒரு விலங்கின் வயிற்றில் அருவருக்கத்தக்க ஏதாவது இருப்பதைக் கண்டால், அந்த வகை விலங்கைத் தனது உணவுப் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவார்."

அன்ஷிகா ஜெயினின் கூற்றுப்படி, ஜஹாங்கீரின் ஆளுமை முரண்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. ஒருபுறம், அவர் ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கியிருந்த மன்னர். மறுபுறம், உலகைப் பற்றி ஆழமான பார்வை கொண்ட தத்துவவாதியாகவும் இருந்தார்.

ஜஹாங்கீர், வரலாற்று அருங்காட்சியகத்தின் தலைவராக இருந்திருந்தால், அவர் "மேலும் சிறந்தவராகவும் மகிழ்ச்சியானவராகவும்" இருந்திருப்பார் என்று வரலாற்றாசிரியர் ஹென்றி பெவரிட்ஜ் குறிப்பிட்டுள்ளார்.

"பேரரசர் ஜஹாங்கீர் மற்றும் இன்பத்தைத் தேடிய அவரது வாழ்க்கைப் பயணம்'' என்ற தனது ஆய்வுக் கட்டுரையில், லிசா பாலபன் லில்லர், ஜஹாங்கீர் அரிதாகவே படைகளுக்கு நேரடியாகத் தலைமை தாங்கியதாக எழுதுகிறார். ''தனது மகன்கள் தலைமையிலான படைகளை அவர் பெரும்பாலும் பின்தொடர்ந்தார். அல்லது தனிப்பட்ட இன்பத்தையும் பொழுதுபோக்கையும் தேடி, எந்தக் குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் அலைந்து திரிந்தார்.''

"அவரது நாடோடி வாழ்க்கை, வேட்டையாடும் பழக்கம், வெளிப்படையாக போதைப் பொருட்களைப் பயன்படுத்தியது, கிட்டத்தட்ட தொடர்ந்து அலைந்து திரிந்தது ஆகியவற்றுக்கு மத்தியிலும், அரச ஊழியர்களாலும் பிரபுக்களாலும் அவர் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார்."

தனது சுயசரிதையான துஸுக்-இ-ஜஹாங்கிரியில், பேரரசர் ஜஹாங்கீர் தனது வெற்றிகள், அரசவை மற்றும் பேரரசு குறித்து மட்டுமல்லாமல், தனது பலவீனங்களையும் வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார்.

அவரது நூல், மதுவுடனான அவரது தொடர்பு ஒரு சிறிய சம்பவத்திலிருந்தே தொடங்கியதை வெளிப்படுத்துகிறது.

'எனக்கு மதுப்பழக்கம் எப்படி ஏற்பட்டது?'

ஜஹாங்கீர்

பட மூலாதாரம், Getty Images

இளம் இளவரசராக இருந்த ஜஹாங்கீர், சிந்து நதிக்கரையில் அட்டாக் அருகே தனது தந்தை அக்பரின் படையுடன் இருந்தார். ஒருநாள் வேட்டைக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது அவருக்கு களைப்பாக இருந்தது. அப்போது உஸ்தாத் ஷா குலி என்ற வீரர், ஒரு குவளை மதுவை அருந்துமாறு அவருக்கு அறிவுறுத்தினார்.

அதையடுத்து, ஹக்கீம் அலியின் வீட்டில் இருந்து போதை தரும் பானம் ஒன்றைக் கொண்டுவருமாறு ஜஹாங்கீர் தனது பணியாளர் மஹ்மூதுக்கு உத்தரவிட்டார். அதன்படி, மதுபானம் கொண்டுவரப்பட்டது.

ஜஹாங்கீர் அதை அருந்தினார். அதன் சுவை அவருக்குப் பிடித்திருந்தது. அதன்பிறகு, அவரது சொந்த வார்த்தைகளில் கூறுவதானால், அவர் "நாளுக்கு நாள் மதுவின் அளவை அதிகரிக்கத் தொடங்கினேன்."

ஒரு கட்டத்தில், தினமும் மது அருந்தியதாகவும், ஆனால் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை இரவுகளில் மட்டும் மதுவைத் தவிர்த்ததாகவும் அவர் பதிவு செய்துள்ளார். வியாழக்கிழமை அவரது அரியணை ஏறிய நாள்; வெள்ளிக்கிழமை புனித நாளாகக் கருதப்பட்டது. இந்த நாட்களில் மதுவைத் தவிர்ப்பது அவரது மத மற்றும் அரச சடங்குகளுடன் தொடர்புடையதாக இருந்தது.

திராட்சை வைன் போதை தருவது போதுமானதாக இல்லாதபோது, அவர் அரக் எனப்படும் காய்ச்சி வடிக்கப்பட்ட மதுபானத்துக்கு மாறினார். ஒன்பது ஆண்டுகளுக்குள் நிலைமை மோசமடைந்து, அவர் தினமும் 20 குவளை அரக் அருந்தும் அளவுக்குச் சென்றார். இதில் பகலில் 14 குவளைகளும், இரவில் ஆறு குவளைகளும் அடங்கும். ஒவ்வொரு குவளையிலும் சுமார் 82 கிராம் அல்லது 85 மில்லிலிட்டர் அளவுக்கு பானம் இருந்தது.

இந்த அளவு மதுவை அவர் அருந்தியிருந்தார் என்பது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல. அதன் உடல்ரீதியான பாதிப்புகள் குறித்தும் ஜஹாங்கீரின் சொந்த எழுத்துகள் அதிர்ச்சியூட்டும் சித்திரத்தை அளிக்கின்றன.

தனது கைகள் மிகவும் நடுங்கியதால், அவரால் தனது குவளையில் இருந்து தானாக மது அருந்த முடியவில்லை என்று அவர் எழுதுகிறார். மற்றவர்கள்தான் அவருக்கு மது ஊட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது ஹக்கீம் ஹம்மாம், தொடர்ந்து மது அருந்தினால் இன்னும் சில மாதங்களில் அவருக்கு எந்தச் சிகிச்சையும் பலனளிக்காத நிலை ஏற்படும் என்று மன்னரை நேரடியாக எச்சரித்தார்.

இந்த அறிவுரை தன் மீது தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஜஹாங்கீர் எழுதுகிறார். ஏனெனில், "உயிர் மிகவும் மதிப்புமிக்கது." இதையடுத்து அவர் மதுவின் அளவைக் குறைக்கத் தொடங்கினார். ஆனால், ஒரு போதைப்பழக்கத்திலிருந்து விலகிய அவர் மற்றொரு போதைப்பழக்கத்துக்குள் சிக்கிக்கொண்டார்.

தலையிட்ட அரசி

ஜஹாங்கீர்

பட மூலாதாரம், Museum of Art & Photography, India

ஜஹாங்கீரின் கூற்றுப்படி, அவர் மதுவின் அளவைக் குறைத்த அதே அளவுக்கு, 'ஃபிலோனியா' எனப்படும் போதைப்பொருளின் அளவை அதிகரித்தார்.

இதையடுத்து, கதைக்குள் அபின் வருகிறது.

தனது 46 வயதில், தான் தினமும் உட்கொண்ட அபினின் அளவை ஜஹாங்கீர் பதிவு செய்துள்ளார்.

18 வயது முதல் மது அருந்தி வந்ததாக அவர் எழுதுகிறார். ஒரு கட்டத்தில், தினமும் 20 குவளை வரை மது அருந்தியுள்ளார். பின்னர் அதன் அளவைக் குறைத்த அவர், 30 வயதுக்குப் பிறகு இரவில் மட்டுமே மது அருந்தினார். அதற்கும் காரணத்தை கூறினார், ''மது இப்போது செரிமானத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது'' என்றார்.

தனது ஆட்சியின் 13-ஆவது ஆண்டில், குஜராத்தின் தட்பவெப்பநிலை தனக்கு ஏற்றதாக இல்லை என்று கருதினர். அவரது உடல்நலம் மோசமடைந்தது. மது மற்றும் அபின் ஆகிய இரண்டின் அளவையும் குறைக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தினர். அதன்படி, இரண்டின் அளவையும் உடனடியாகக் குறைத்ததாகவும், முதல் நாளிலேயே தனது உடல்நிலையில் "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" ஏற்பட்டதாக உணர்ந்ததாகவும் ஜஹாங்கீர் எழுதுகிறார்.

ஆனால், அறிவுரை எப்போதும் பழக்கத்தை மாற்றிவிடுவதில்லை.

கடுமையான தலைவலி மற்றும் காய்ச்சல் இருந்தபோதிலும், அவர் விரைவிலேயே தனது தினசரி மதுப்பழக்கத்துக்குத் திரும்பினார்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் நிலைமை மேலும் சிக்கலானது.

கடுமையான உடல்நலக் குறைபாட்டின்போது மது அருந்துவது தனக்கு தற்காலிக நிவாரணம் அளித்ததாக ஜஹாங்கீர் எழுதுகிறார்.

பின்னர், மதுவின் அளவு படிப்படியாக வரம்பை மீறி அதிகரித்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். வெப்பமான காலநிலை, பாதிப்பை மேலும் மோசமாக்கி, உடல் பலவீனம் மற்றும் சுவாசப் பிரச்னைகளுக்கு வழிவகுத்தது.

இங்குதான் நூர்ஜஹானின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

ஜஹாங்கீரின் கூற்றுப்படி, நூர்ஜஹான் பேகம் படிப்படியாக அவரது மதுப்பழக்கத்தைக் குறைத்ததுடன், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவு மற்றும் பானங்களை அவர் உட்கொள்வதையும் தடுத்து, அவருக்குத் தேவையான சிகிச்சையையும் ஏற்பாடு செய்தார்.

மருத்துவர்களின் திறமையையும் அனுபவத்தையும் காட்டிலும் நூர்ஜஹானின் திறமையும் அனுபவமும் சிறப்பாகப் பலனளித்ததாக ஜஹாங்கீர் விவரிக்கிறார். அதற்குக் காரணம், அவரது சிகிச்சையில் அன்பும் அக்கறையும் இணைந்திருந்ததுதான் என அவர் குறிப்பிடுகிறார்.

துஸுக்-இ-ஜஹாங்கிரியில் இடம்பெறும் இந்தக் குறிப்பு, நூர்ஜஹானை செல்வாக்கு மிக்க அரசியாக மட்டுமல்லாமல், நோய்வாய்ப்பட்ட தனது கணவரைக் கவனித்துக்கொண்டதுடன், அவரது மதுப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் முயன்ற ஒருவராகவும் காட்டுகிறது.

பேரரசர் முழுமையாக நூர்ஜஹான் பேகத்தைச் சார்ந்தவராகிவிட்டாரா?

ஜஹாங்கீர்

பட மூலாதாரம், Getty Images

முனி லால் தனது ஜஹாங்கீர் நூலில், ஜஹாங்கீரின் கையறு நிலை பரிதாபத்துக்குரிய அளவுக்கு சென்றுவிட்டதாக எழுதுகிறார். நூர்ஜஹானின் வசீகரம், அவரிடம் எஞ்சியிருந்த சிறிதளவு அறிவையும் மன உறுதியையும் கூட பறித்துவிட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.

நீண்டகால நோய், மதுப்பழக்கம் மற்றும் உடல் இச்சைகள் ஆகியவையே ஜஹாங்கீர் முழுமையாக நூர்ஜஹானைச் சார்ந்தவராக மாறியதற்கான முக்கியக் காரணங்கள் என்று கூறப்படுகிறது. சில நேரங்களில் அதிகமான உணர்ச்சிப்பூர்வ அழுத்தத்தால் அவர் அமைதியிழந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஆனால், லிசா பாலபன் லில்லர் என்சைக்ளோபீடியா இரானிகாவில், சில வரலாற்றாசிரியர்கள் ஜஹாங்கீர் தனது பேரரசின் அதிகாரத்தை மனைவி நூர்ஜஹானிடம் ஒப்படைத்ததாகக் கருதினாலும், அவரது ஆட்சியின் கடைசி ஐந்து ஆண்டுகளிலும் அவர் அரசியல் விவகாரங்களில் தொடர்ந்து தீவிர அக்கறை காட்டியதாகவும், அவற்றில் தீவிரமாகப் பங்கேற்றதாகவும் குறிப்பிடுகிறார்.

உண்மையில், ஆட்சியிலிருந்து விலகிய ஒரு மன்னரின் மனைவியாக அல்லாமல், தனது ஆட்சிப் பொறுப்புகளில் ஒரு பகுதியை நம்பிக்கைக்குரிய மற்றும் திறமையான துணையிடம் ஒப்படைத்திருந்த மன்னரின் அதிகார கூட்டாளியாக நூர்ஜஹான் இருந்தார்.

துஸுக் நூலை மேற்கோள்காட்டி லிசா, ஜஹாங்கீர் விளையாட்டுகளிலும் வேட்டையாடுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நூர்ஜஹானும் அவருடன் அடிக்கடி வேட்டைப் பயணங்களில் சென்றார் என குறிப்பிட்டுள்ளார்.

"அத்தகைய ஒரு வேட்டைப் பயணத்தின்போது, நூர்ஜஹான் வெறும் ஆறு தோட்டாக்களைக் கொண்டு நான்கு சிங்கங்களைக் கொன்றார். தனது மனைவியின் அபாரமான திறமையால் பெருமிதம் கொண்ட ஜஹாங்கீர், அவருக்கு 1,000 தங்க நாணயங்களைப் பரிசாக வழங்கினார். மேலும், ஒரு ஜோடி முத்து அணிகலன்களையும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரத்தையும் வழங்கினார்."

"ஆனால், அவரது ஆட்சியின் ஒப்பீட்டளவில் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான அந்த ஆண்டுகளிலும், எந்த இளவரசரின் கிளர்ச்சியும் பேரரசரின் அமைதியைக் குலைக்காத நிலையிலும், ஜஹாங்கீரால் மதுபானம் மற்றும் பிற போதைப் பொருட்கள் மீதான தனது ஆழமான சார்பிலிருந்து விடுபட முடியவில்லை. அரசவையில் போதைப் பொருட்களைப் பாதுகாத்து வைப்பதும் பராமரிப்பதும் மட்டுமே தனது ஒரே பொறுப்பாகக் கொண்ட ஓர் அதிகாரியையும் அவர் வைத்திருந்தார்."

இந்த சுயசரிதையில் இடம்பெறும் மிகப்பெரிய முரண்பாடுகளில் ஒன்று, பேரரசராகப் பொறுப்பேற்ற பிறகு தனது குடிமக்கள் மதுபானம் மற்றும் பிற போதைப் பொருட்களைத் தயாரிப்பதையும் விற்பதையும் ஜஹாங்கீர் தடை செய்ததுதான். ஆனால், அதே உத்தரவில் தனது சொந்த மதுப்பழக்கத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சுயசரிதையில், மற்றவர்களின் மதுப்பழக்கம் மற்றும் அபின் பயன்பாட்டால் ஏற்பட்ட பாதிப்புகளையும் ஜஹாங்கீர் பதிவு செய்துள்ளார்.

அபினுக்கு அடிமையாகி, மதுவும் அருந்திய இனாயத் கான் குறித்து அவர் எழுதுகிறார். மதுபானம் அவரது உடல்நிலையை மேலும் மோசமாக்கியதாகவும் குறிப்பிடுகிறார். பிறரைப் பற்றி எழுதும்போது, போதைப்பழக்கத்தின் ஆபத்தான விளைவுகளை ஜஹாங்கீரால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ஆனால், தனது சொந்த மதுப்பழக்கத்தை அவர் பல நேரங்களில் கட்டுப்பாடு, மருத்துவத் தேவை அல்லது செரிமானத்துக்கான தேவை என்ற வகையில் விளக்கியுள்ளார்.

இந்த முரண்பாட்டுக்கு மற்றொரு சிறந்த உதாரணமாக, பின்னாளில் பேரரசர் ஷாஜஹானாக மாறிய அவரது மகன் குர்ரம் குறித்த சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

24 வயது வரை குர்ரம் மதுவைத் தவிர்த்து வந்ததாக ஜஹாங்கீர் எழுதுகிறார். ஒருமுறை, ஜஹாங்கீர் அவருக்கு மதுவை வழங்கியதுடன், கட்டுப்பாட்டுடன் அருந்துமாறு அறிவுறுத்தினார். சிறிதளவு மது மருந்தைப் போன்றது என்றும், அதிகமாக அருந்தினால் அது பாம்பின் விஷத்தைப் போன்றது என்றும் இப்னு சீனாவின் கூற்றை அவர் மேற்கோள்காட்டினார்.

பேரரசர் தனது அரசவையில் தொடர்ந்து மதுவிருந்துகளை நடத்தினார். ஜஹாங்கீரின் சொந்த வார்த்தைகளில் கூறுவதானால், இந்த விருந்துகளில் பங்கேற்ற அரசவைப் பிரமுகர்கள் "விசுவாசம் என்ற மதுவால் போதையேறியவர்களாக" மாறினர்.

நவ்ரூஸ் பண்டிகையின்போது, அரசவையில் பங்கேற்பவர்கள் தாங்கள் விரும்பும் எந்தவொரு "போதை தரும் அல்லது மதுபானப் பொருளையும்" உட்கொள்ளலாம் என்றும், எந்தவிதமான "கட்டுப்பாடுகள் அல்லது தடைகளையும்" பொருட்படுத்தத் தேவையில்லை என்றும் ஜஹாங்கீர் உத்தரவிட்டிருந்தார்.

நீதியை நிலைநாட்டிய மன்னர்

ஜஹாங்கீர்

பட மூலாதாரம், Getty Images

ராம் சந்திர பிரசாத் தனது எர்லி இங்கிலீஷ் டிராவலர்ஸ் இன் இந்தியா என்ற நூலில், 1616-ஆம் ஆண்டு ஜஹாங்கீர் மதுபோதையில் இருந்தபோது, தனது அரசவையினர் சிலரைத் தன்னுடன் அமர்ந்து மது அருந்துமாறு உத்தரவிட்டதாக எழுதியுள்ளார்.

அடுத்த நாள், முந்தைய இரவு நடந்த சம்பவத்தை ஒருவர் தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றோ ஜஹாங்கீரிடம் தெரிவித்தார். முந்தைய இரவு தான் பிறப்பித்த உத்தரவு குறித்து நினைவில் இல்லாத பேரரசர், அரசவையினர் மதுபானம் அருந்துவதற்கு யார் அனுமதி அளித்தது என்று விசாரித்தார்.

ஜஹாங்கீரின் போதைப்பழக்கம் மதுவுக்கும் அபினுக்கும் மட்டும் வரையறுக்கப்பட்டதாக இல்லை.

காஷ்மீருக்குச் சென்றிருந்தபோது, அங்கு தயாரிக்கப்பட்ட ஒரு வகை போதை தரும் பானம் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் கஞ்சா கலக்கப்பட்டிருப்பதாக அவர் நம்பினார். அதன் போதை தரும் தன்மை மற்றும் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளை அவர் விவரித்துள்ளார். மதுபானம் கிடைக்காத நேரங்களில், தேவைக்கேற்ப அதற்கு மாற்றாக இதைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் கருதியதாகத் தெரிகிறது.

புகழ்பெற்ற இந்திய-அமெரிக்க வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான நரசிம்ம பி. சில், ஜஹாங்கீர் ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கியிருந்த மன்னராகப் பார்க்கப்பட்டாலும், நீதியை வழங்குவதற்கான முறையான அமைப்பை அவர் உருவாக்கினார். அவற்றில் குறிப்பிடத்தக்கது 'ஜன்ஜீர்-இ-அதல்' எனப்படும் நீதி சங்கிலி. மக்களின் புகார்கள் மற்றும் குறைகளை நேரடியாகப் பேரரசரிடம் கொண்டு சேர்ப்பதற்கான தனது உறுதிப்பாட்டின் அடையாளமாக இந்த அமைப்பு இருந்தது என்கிறார்.

ஜஹாங்கீரின் ஆட்சிக் காலத்தில், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியுடனான வர்த்தக உறவுகளும் ஏற்படுத்தப்பட்டன.

கலை மற்றும் கலாசாரத்துக்கு அளித்த ஆதரவு, நிர்வாக நடவடிக்கைகள், சிக்கலான குடும்ப உறவுகள் ஆகியவற்றின் கலவையாக ஜஹாங்கீரின் ஆட்சிப் பாரம்பரியம் அமைந்திருந்தது.

ஜஹாங்கீரின் வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில், அதிகப்படியான மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அவரது உடலை மிகவும் பலவீனப்படுத்தியதாக லிசா எழுதுகிறார். மற்றொரு மகனின் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக மேற்கொண்ட வெற்றிகரமான, ஆனால் மிகவும் சோர்வடையச் செய்த படையெடுப்புக்குப் பிறகு, அவர் கிட்டத்தட்ட முடங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இருப்பினும், அவர் பயணங்களை நிறுத்தவில்லை.

1627-ஆம் ஆண்டு கோடையில், அமைதியையும் ஓய்வையும் பெற தனக்குப் மிகவும் பிடித்த இடமான காஷ்மீரை நோக்கி ஜஹாங்கீர் புறப்பட்டார். ஆனால், அங்கு சென்ற சில நாட்களிலேயே ஜஹாங்கீரும், அவருடன் சென்ற அவரது இளைய மகன் இளவரசர் ஷஹ்ரியாரும் கடுமையாக நோய்வாய்ப்பட்டனர். இருவரது உடல்நிலையும் கவலைக்கிடமானதாக மாறியது.

இதையடுத்து, லாகூருக்குத் திரும்புவதற்காக அவர் புறப்பட்டார். ஆனால், பயணத்தின்போது 1627-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி சிங்கர் சிரியில் ஜஹாங்கீர் உயிரிழந்தார். அப்போது அவருக்கு 58 வயது. அவர் அரியணையில் அமர்ந்து 21 ஆண்டுகளுக்கும் சற்று அதிகமான காலம் ஆகியிருந்தது.

ஜஹாங்கீரின் சுயசரிதை, அவரது ஆட்சியின் 17-ஆவது ஆண்டுக்குப் பிறகு நோய் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக எழுதப்படாமல் நின்றுபோனது. அதன் பின்னர் வந்த பகுதிகளை அரசவை வரலாற்றாசிரியர்களான மோத்தமித் கான் மற்றும் முகமது ஹாதி உள்ளிட்டோர் நிறைவு செய்தனர்.

ஜஹாங்கீருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த முகலாயப் பேரரசர்கள், தங்களிடம் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரம் இருந்தவரை, தங்களது முன்னோர்களின் நாடோடி மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைத் தொடர்ந்து கடைப்பிடித்ததாக லிசா கூறுகிறார். இந்தப் போக்கு அடுத்த சுமார் 100 ஆண்டுகளுக்கும் நீடித்தது.

ஆனால், ஜஹாங்கீரைப் போல இன்பத்தையும் பொழுதுபோக்கையும் தேடி தொடர்ந்து பயணம் செய்வதை தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இவ்வளவு வழக்கமாக்கிக்கொண்ட முகலாயப் பேரரசர் அவருக்கு முன்னரோ பின்னரோ அரிதாகவே இருந்தார்.

ஜஹாங்கீர் தனது மதுப்பழக்கத்தையும், அதைக் கட்டுப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். ஜஹாங்கீரின் சொந்தக் கூற்றுப்படி, அவரது அரசவைக் கவிஞர் தாலிப் அமலி இந்த நிலையை ஒரு இரட்டை வரியில் இவ்வாறு விவரித்தார்:

"எனக்கு இரண்டு உதடுகள் உள்ளன; ஒன்றுக்கு மதுவைக் குடிப்பதுதான் தெரியும்,

மற்றொன்று, குடித்துவிட்டதற்காக மன்னிப்புக் கேட்கிறது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு