'சூழ்ந்துகொண்டு முழக்கம்': வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள் - நடந்தது என்ன?

பட மூலாதாரம், Tamilnadu Assembly
தமிழக சட்டப்பேரவையில் இன்று (08-09-2026) சட்டப்பேரவை தலைவர் இருக்கையைச் சூழ்ந்துகொண்டு முழக்கமிட்ட திமுக உறுப்பினர்கள், அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.
சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன், திமுக கொறடா எ.வ. வேலு பாயிண்ட் ஆஃப் ஆர்டர் ஒன்றை எழுப்பினார்.
நேற்றைய அவை நடவடிக்கைகளின்போது, காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளிக்கும்போது, சர்க்காரியா கமிஷன் அறிக்கை, மிசா கைது, அமலாக்கத்துறை ஆவணங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என எ.வ. வேலு வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், அவையில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கையை மட்டுமே முதலமைச்சர் குறிப்பிட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறிய கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.

பட மூலாதாரம், Tamilnadu Assembly
பின்னர், முன்னாள் அமைச்சர் கே.என். நேருவும் முதல்வரின் கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மறைந்தவர்களைப் பற்றியும், அவையில் இல்லாதவர்களைப் பற்றியும் முதலமைச்சர் பேசுவது நியாயம் அல்ல என்றும் அவர் கூறினார்.
அதன் பின்னர் பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், சர்க்காரியா கமிஷன் குறித்து முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சட்டப்பேரவையில் ஏற்கெனவே பேசியிருப்பதால், அதுகுறித்து முதலமைச்சர் விஜய் தெரிவித்த கருத்துகளை நீக்கத் தேவையில்லை எனக் கூறினார்.

பட மூலாதாரம், Tamilnadu Assembly
தொடர்ந்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா , கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை பதிவு செய்வதுடன் தங்களுடைய ஆட்சியில் இதுபோன்ற ஊழல்கள் நடைபெறாது என்பதையும் உறுதிப்படுத்துவதுதான் முதலமைச்சரின் நோக்கம் என கூறினார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் எழுந்துநின்று முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர் கோவி செழியனுக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அவர் நீதிமன்றத்தில் வழக்கில் இருக்கும் அமலாக்கத்துறை ஆவணத்தை சட்டப்பேரவையில் பேசியது சரியா என கேள்வி எழுப்பினார்.
சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்படாத நிலையிலும் அதை பேசுவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என குறிப்பிட்டார்.
மறைந்த தலைவர் முரசொலி மாறனைப் பற்றி பேசவேண்டிய அவசியம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

பட மூலாதாரம், Tamilnadu Assembly
சட்டப்பேரவைத் தலைவர் கூறியது என்ன?
இதைத் தொடர்ந்து திமுகவினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர், ''முதலமைச்சர் விஜய் பதிலளிக்கும்போது திமுகவினர் அவரை முறையாக பேச விடவில்லை'' என தெரிவித்தார்.
முதலமைச்சர் சில ஆதாரங்களை தம்மிடம் முன்கூட்டியே காட்டியதாகவும் அந்த ஆதாரங்கள் அவையில் ஏற்கனவே பலமுறை விவாதிக்கப்பட்டவை எனவும் முதலமைச்சர் புதிதாக எதுவும் சொல்லவில்லை எனவும் கூறினார்.
முரசொலி மாறனைப் பற்றி அவையில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டதைத்தான் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார் என ஜே.சி.டி பிரபாகர் கூறினார்.
அமலாக்கத்துறை அறிக்கை கொடுத்தது பொதுவெளியில் உள்ள தகவல் என குறிப்பிட்ட ஜே.சி.டி பிரபாகர், அமலாக்கத்துறை அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை மட்டும்தான் முதலமைச்சர் அவையில் தெரிவித்தார் என்றார். எனவே முதலமைச்சரின் பேச்சிலிருந்து எதையும் அவைக்குறிப்பிலிருந்து நீக்க தேவையில்லை என தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தலைவரின் முடிவை ஏற்காத திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து சட்டப்பேரவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டனர்.
அப்போது பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இருப்பினும், திமுக உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதியில் இருந்துகொண்டு தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, அவர்களை அவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என செங்கோட்டையன் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, எ.வ. வேலுவையோ அல்லது கே.என். நேருவையோ பேச அனுமதிப்பதாகவும், அவர்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம் எனவும் சட்டப்பேரவைத் தலைவர் தெரிவித்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
''திமுக உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளில் அமர வேண்டும், எ.வ. வேலு பேச வேண்டும் என்பதுதான் தனது விருப்பம்'' என சட்டப்பேரவைத் தலைவர் கூறினார்.
திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவை முன்னவர் செங்கோட்டையன் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, திமுக உறுப்பினர்களை வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு ஜே.சி.டி. பிரபாகர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































