கனடாவில் தோன்றி மறைந்து, பின்னர் மீண்டும் தென்பட்ட 'மரங்கள் அடர்ந்த நகரும் தீவு'

இந்த மிதக்கும் தீவு ஆகஸ்ட் மாத மத்தியில் படகோட்டிகளால் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

பட மூலாதாரம், Supplied by Rocky Avery

படக்குறிப்பு, இந்த மிதக்கும் தீவு ஆகஸ்ட் மாத மத்தியில் படகோட்டிகளால் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
    • எழுதியவர், நடீன் யூசுப்
    • பதவி, கனடா, மூத்த நிருபர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு ஏரியில் காணப்பட்ட சிறிய மிதக்கும் தீவு ஒன்று, செயற்கைக்கோள் படங்களில் காணாமல் போனதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான வில்லிஸ்டன் நீர்த்தேக்கத்தின் (Williston Reservoir) நடுவே அமைந்துள்ள இந்த மரங்கள் சூழ்ந்த தீவு, கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் படகோட்டிகளால் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அவர்கள் எடுத்த அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

அமெரிக்க கால்பந்து மைதானத்தைப் போல் ஒன்றரை மடங்கு பரப்பளவு கொண்ட இந்தத் தீவு இருப்பது, கடந்த ஜூலை மாத இறுதியில் செயற்கைக்கோள் படம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால், சில வாரங்களுக்குப் பிறகு அது அந்த இடத்திலிருந்து மாயமாகிவிட்டது.

இது எங்கு தோன்றியது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், தற்போது அது கரைக்கு அருகில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீர்த்தேக்கத்தையும் அருகிலுள்ள அணையையும் பராமரிக்கும் அரசாங்கத்திற்குச் சொந்தமான 'பிசி ஹைட்ரோ' (BC Hydro) நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரான பாப் காமர், கனடாவின் சமூக வலைதளப் பக்கங்களில் உலா வந்த இதன் காணொளியைப் பார்த்த பின்னர்தான் இந்தத் தீவு இருப்பதை முதன்முதலில் அறிந்தார்.

படகோட்டிகளால் எடுக்கப்பட்ட அந்தக் காணொளியில், மரங்கள் செறிந்த நிலப்பகுதி ஒன்று தண்ணீரில் மிதப்பதுபோல் காட்சியளித்தது.

இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான காணொளியாக இருக்குமோ என்று முதலில் நினைத்ததாகக் காமர் கூறினார்.

"இது எங்கு வேண்டுமானாலும் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன். இது உண்மையானதாக இருக்காது என்றே கருதினேன்" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஆனால், அவரது குழுவினர் ஜூலை 21-ஆம் தேதியிட்ட செயற்கைக்கோள் படத்தை ஆய்வு செய்தபோது, இது உண்மையானது என்பதும், மாகாணத்தின் தொலைதூர வடக்குப் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தின் நடுவே அது உண்மையிலேயே மிதந்து கொண்டிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இருப்பினும், அதற்கடுத்த சில வாரங்களில் , ஆகஸ்ட் 5 அன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில் இந்தத் தீவு மாயமாகியிருந்தது. இது பல சர்வதேச செய்தி நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்ததுடன், உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

"இது எங்கு சென்றது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அது மூழ்கிவிட்டதா? அல்லது நீர்த்தேக்கத்தின் வேறு முனையை அடைந்துவிட்டதா?" என்று காமர் தெரிவித்தார்.

தற்போது அந்தத் கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டதாக காமர் கூறுகிறார். இந்தத் தீவு வெறுமனே கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து, அது முதன்முதலில் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 30 கி.மீ. (18.6 மைல்) தொலைவில் வந்து சேர்ந்துள்ளதாகத் தெரிகிறது.

புதிய செயற்கைக்கோள் படமும், மேலே பறந்த விமானிகளின் சில நேரடி சாட்சியங்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

இந்தத் தீவு 9,800 சதுர மீட்டர் அல்லது ஒரு ஹெக்டேர் பரப்பளவு கொண்டிருக்கலாம் எனப் 'பிசி ஹைட்ரோ' மதிப்பிடுகிறது. இது தோராயமாக ஒன்றரை அமெரிக்கக் கால்பந்து மைதானங்களின் அளவுக்குச் சமமாகும்.

இதன் தோற்றம் குறித்துப் பேசிய காமர், பிசி ஹைட்ரோ அமைப்புக்கு இன்னும் முழுமையான உறுதி செய்யவில்லை என்றாலும், ஒரு வலுவான கோட்பாடு உள்ளதாகத் தெரிவித்தார். அதாவது, பல ஆண்டுகளாக அடித்து வரப்பட்ட மரக்கட்டைகள் மற்றும் மிதக்கும் குப்பைகள் சேர்ந்து அதன் மீது தாவரங்களும் மரங்களும் வேரூன்றியதன் மூலம் இந்தத் தீவு உருவாகியிருக்கலாம்.

2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு கோடைகாலத்தில் நீரின் மட்டம் அதிகஅளவில் உயர்ந்தபோது, இது நீர்த்தேக்கத்தின் கரையிலிருந்து பிரிந்து சென்றிருக்கக்கூடும் என்றும் அவர் நம்புவதாகத் தெரிவித்தார்.

மற்ற இடங்களிலும் மிதக்கும் தீவுகள் இருந்தன.

விஸ்கான்சின் மாகாணத்தின் சிப்பவா ஏரியில் உள்ள இதுபோன்ற ஒரு தீவு 'போர்ட்டி ஏக்கர் பாக்' (Forty Acre Bog) என்று அழைக்கப்படுகிறது. ஏரியின் அடிப்பகுதியிலிருந்து பீட் பாசிகள் (peat bogs) பிரிந்து நீர்ப்பரப்புக்கு மேலே மிதப்பதன் விளைவாக இது உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சில ஆண்டுகளில், உள்ளூர் படகோட்டிகள் இந்த மிதக்கும் சதுப்பு நிலம் அருகில் உள்ள பாலத்தை நோக்கி நகர்வதைத் தடுக்க அதைத் தள்ளி விடுவார்கள்.

தவளைகள் போன்ற பல்வேறு வகையான வனஉயிரினங்கள் இங்கு வாழ்வதாக லேக் சிப்பதூ ப்ளோகேஜ் ரிசார்ட் சங்கம் தெரிவித்துள்ளது. ஏரியின் மற்ற பகுதிகளைப் போலவே இதுவும் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப் படுகிறது.

உள்ளூர்வாசியான செரில் ட்ரெலண்ட் 2024 ஆம் ஆண்டில் விஸ்கான்சின் பப்ளிக் ரேடியோவிடம் பேசுகையில், இந்த சதுப்பு நிலம் "ஒரு பனிப்பாறையைப் போன்றது" என்று கூறினார்.

"இது நீரின் மேற்பரப்பில் மிதக்கும் இலை போன்றது அல்ல" என்று அவர் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள இந்தத் தீவு நிலையான கட்டமைப்பு அல்ல என்று எச்சரித்துள்ள காமர், யாரும் அதன் மீது கால் வைக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

"இது ஒரு தொலைதூரப் பகுதியாகும், பெரும்பாலான மக்கள் இதன் அருகில் செல்ல மாட்டார்கள்" என்றார் அவர்.

இதனைத் தேடிச் செல்லக் கூடிய வசதியும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு அவர் விடுத்துள்ள எச்சரிக்கை இதுதான்: "தீவுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். அது எப்போது வேண்டுமானாலும் உடையலாம்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு