'30 நிமிடத்தில் உயர்ந்த நீர்மட்டம்': நேபாளத்தில் திடீர் வெள்ளம் - பின்னணி ஆபத்துகளை விளக்கும் நிபுணர்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டெஸ்ஸா வோங்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
நேபாள - திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்குக்கு உடைந்து விழுந்த பனிப்பாறையே காரணம் என்று முதற்கட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டுவதாக விஞ்ஞானிகள் பிபிசிக்குத் தெரிவித்துள்ளனர். இது இமயமலைப் பனி பாறைகள் வேகமாக உருகுவது குறித்த கவலையை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, அதன் மூலம் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்பத்தில் வந்த தகவல்கள் பலரை நம்பச் செய்தன. இந்தப் பேரழிவில் குறைந்தது 177 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனால், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யூஎஸ்ஜிஎஸ்) பின்னர் வெளியிட்ட விளக்கத்தில், இந்தப் பேரிடர் "பனிப்பாறை சரிவு" காரணமாக ஏற்பட்டதாகத் தெரிவித்தது. பனிப்பாறை அல்லது அதன் ஒரு பகுதி உடைந்து சிதறுவதே பனிப்பாறை சரிவு என அழைக்கப்படுகிறது.
யூஎஸ்ஜிஎஸ் தரவுகள் மற்றும் இந்த நிகழ்வை ஆய்வு செய்த விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, உடைந்து விழுந்த பனிப்பாறை பள்ளத்தாக்கின் கீழ் பகுதியில் மோதிய தாக்கம் மிக வலிமையாக இருந்ததால், அது 5.2 என்ற அளவிலான நில அதிர்வாகப் பதிவாகியுள்ளது.
வெள்ளம் ஏற்பட்ட இடத்திற்கு மேற்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள லாங்டாங் லிருங் சிகரத்திற்கு அருகில் உள்ள நேபாளப் பனிப்பாறையின் கீழ் பகுதி உடைந்து சரிந்ததை தனது குழு கண்டறிந்ததாக டண்டி பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை நிபுணர் டாக்டர் சைமன் குக் பிபிசியிடம் தெரிவித்தார்.
அந்தப் பனிப்பாறை வடமேற்கு திசையில் உடைந்து சரிந்து, பின்னர் அங்கிருந்து மேற்கே நீரோட்டப் பாதையில் நகர்ந்திருக்கலாம் என அவர் மதிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச ஒருங்கிணைந்த மலைப்பகுதி மேம்பாட்டு மையம் (ஐசிமோட்) மேற்கொண்ட பகுப்பாய்வின்படி, "மிக உயரமான பகுதியில் இருந்து பனி மற்றும் பாறைகள் சரிந்த நிகழ்வு" நடந்திருக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சரிவின் காரணமாக, போடே கோஷி ஆற்றின் துணை ஆறான லெண்டே கோலாவில் மிகப்பெரிய அளவில் பனிக்கட்டிகள் மற்றும் பாறைகள் கலந்துள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. இதன் விளைவாக, தண்ணீர், வண்டல் மண் மற்றும் பெரிய பாறைகளை அடித்துச் சென்ற திடீர் வெள்ளப்பெருக்கு உருவானது.
வெள்ளம் ஏற்பட்ட இடத்திற்குக் கீழே உள்ள நதிகளில் நீர்மட்டம் வெறும் 30 நிமிட இடைவெளியில் 7 முதல் 9 மீட்டர் வரை உயர்ந்ததாகவும், பல நீர் கண்காணிப்பு நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டோ அல்லது சேதமடைந்தோ உள்ளதாகவும் அந்த மையம் கண்டறிந்துள்ளது.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் மைக் சியர்ல், நிலச்சரிவில் இருந்து வெள்ளம் உருவாகும் முழு செயல்முறையும் சில மணி நேரங்களோ அல்லது சில நாட்களோ எடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
"பெரிய அளவிலான பாறைகள் அடித்துச் செல்லப்பட்டிருப்பது முதலில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. அதன் பின்னர் தண்ணீர் தேங்கி, ஆற்றின் ஓட்டம் தடுக்கப்பட்டு, இறுதியில் அது உடைந்து மிகப்பெரிய வெள்ளமாக மாறியிருக்கலாம்," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்
அந்தப் பகுதியின் நில அமைப்பும் வெள்ளத்தின் தீவிரத்தை அதிகரித்திருக்கலாம் என்று மைக் சியர்ல் கூறினார். லாங்டாங் லிருங் சிகரம் உயரமான இமயமலைத் தொடரின் உச்சிப்பகுதியில் அமைந்துள்ளது என்றும், அதன் இருபுறங்களிலும் மிகவும் செங்குத்தான பள்ளத்தாக்குகள் இருப்பதால், வெள்ளநீர் அதிக வேகத்தில் கீழ்நோக்கிப் பாய்ந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்

பட மூலாதாரம், Getty Images
புதன்கிழமை பனிப்பாறை சரிவதற்கான துல்லியமான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் மைக் சியர்லின் கூற்றுப்படி, லாங்டாங் லிருங் சிகரம் உட்பட முழு இமயமலைத் தொடரும் நீண்டகால புவித்தட்டு நகர்வுகளால் மெதுவாக உயர்ந்து வருகிறது. ஒரு புவித்தட்டு மற்றொரு புவித்தட்டை மேலே தள்ளுவதால் இந்த உயர்வு ஏற்படுகிறது.
"ஒரு காரின் கீழ் ஜாக்கியை வைத்து அதை மேலே தூக்குவது போன்றதே இது," என்று அவர் விளக்கினார்.
"மலை உயர உயர, அதன் மீது இருக்கும் பனிப்பாறைகளும் மேலும் செங்குத்தாக மாறுகின்றன. எனவே அவற்றின் சில பகுதிகள் உடைந்து விழுவது தவிர்க்க முடியாதது," என்றும் அவர் கூறினார்.
பொதுவாக இவ்வாறு உடைந்து விழும் பனிப்பாறைத் துண்டுகள் சிறிய அளவிலேயே இருக்கும். அவை தற்காலிகமாக ஆறுகளின் ஓட்டத்தைத் தடுத்தாலும், பின்னர் எளிதில் அடித்துச் செல்லப்பட்டுவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் இந்தப் பேரிடரில், முழுப் பனிப்பாறையும் ஒரே நேரத்தில் சரிந்திருப்பதாகத் தெரிகிறது. இது மிகவும் அரிதான நிகழ்வு என்று மைக் சியர்ல் கூறினார்.
"இப்படிப்பட்ட வெள்ளங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. ஆனால் இந்த அளவிலான பேரிடர் மிகவும் அரிது," என்றார் அவர்.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் இரண்டு காரணிகள் இணைந்து செயல்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார். ஒன்று, இமயமலைத் தொடர் தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏற்படும் புவியியல் மாற்றங்கள்; மற்றொன்று, காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் பனிப்பாறைகள் உருகுவது.
"இந்த இரண்டு காரணிகளும் இணைந்து தற்போது நாம் அடிக்கடி காணும் பேரழிவுகளை உருவாக்குகின்றன," என்று அவர் தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தால் இமயமலைப் பகுதியில் உள்ள பனிப்பாறைகளும், பல நூற்றாண்டுகளாக உறைந்த நிலையில் இருக்கும் நிரந்தர உறைமண்ணும் வேகமாக உருகி வருவதாக விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக எச்சரித்து வருகின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐசிமோட் வெளியிட்ட ஆய்வில், இந்துக் குஷ்-இமயமலைப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் 2000-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது இரு மடங்கு வேகத்தில் பனியை இழந்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக வெள்ளம் போன்ற அபாயங்களும் அதிகரித்து வருகின்றன.
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா, சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் பனிப்பாறை சரிவுகளால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று சைமன் குக் சுட்டிக்காட்டினார்.
2021-ஆம் ஆண்டு, வட இந்தியாவின் சாமோலி பள்ளத்தாக்கில் இமயமலைப் பனிப்பாறையின் பெரிய பகுதி ஒன்று சரிந்தது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு சுமார் 200 பேரின் உயிரைப் பறித்தது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், அந்தப் பனிப்பாறை சரிவின் தாக்கம் 15 அணுகுண்டுகள் வெடித்ததற்கு இணையான சக்தியைக் கொண்டிருந்ததாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டனர்.

ஐசிமோட் அமைப்பைச் சேர்ந்த நிபுணர் முகமது ஃபரூக் அசாம், பூமியின் உறைந்த பகுதிகளான பனிப்பாறைகள் மற்றும் நிரந்தர உறைமண் பகுதிகளில் ஏற்படும் அபாயங்கள் தற்போது முன்பைவிட அதிகமாகக் காணப்படுவதாகக் கூறினார்.
"மாற்றங்கள் ஏற்படும் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது. இதன் தாக்கங்கள் தற்போது மிகவும் தெளிவாகக் கண்ணுக்குப் புலப்படுகின்றன," என்று அவர் தெரிவித்தார்.
ஒரு குறிப்பிட்ட பேரிடருக்கு காலநிலை மாற்றம்தான் நேரடிக் காரணம் என்று உறுதியாகக் கூறுவது கடினம் என்றாலும், இதுபோன்ற சம்பவங்களின் தொடர்ச்சியான போக்கைப் பார்க்கும்போது காலநிலை மாற்றத்தின் தாக்கம் இருக்கக்கூடும் என்று சைமன் குக் கூறினார்.
"புவியின் வெப்பநிலை உயரும்போது, பனிப்பாறைகள் சுருங்குவதையும் பனி உருகுவதையும் அதிகமாகக் காண முடியும். மலைச் சரிவுகளை ஓரளவு நிலைத்திருக்கச் செய்யும் நிரந்தர உறைமண்ணும் வெப்பமடைந்து உருகி அதன் வலிமையை இழக்கிறது," என்று அவர் விளக்கினார்.
"இதன் விளைவாக நிலச்சரிவுகள், பாறைகள் கலந்த வெள்ளப்பெருக்குகள், பனிப்பாறை உருகிய நீரின் ஓட்டம், பனிப்பாறை ஏரிகள் உடைவது மற்றும் பனிப்பாறைகள் சரிவது போன்ற சம்பவங்கள் அதிகரிக்கும். ஏனெனில் காலநிலை வெப்பமயமாதல் இறுதியில் இந்த உயரமான மலைப் பகுதிகளின் இயற்கை நிலைத்தன்மையை பாதிக்கிறது," என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































