சென்னையில் அதிகரிக்கும் 'கோ-லிவிங்' விடுதிகள்: எதிர்ப்புகள் எழுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஆர். ராஜலட்சுமி, உளவியல் முதுநிலை படிப்பின் ஒரு பகுதியாக சென்னையில் சில வாரங்கள் தங்க வேண்டியிருந்தது.
பொதுவாக வெளியூரில் இருந்து வரும் பெண்கள் தங்குவதற்கு பெண்கள் விடுதிகளையே தேடுகின்றனர்.
"எனது பணி குறித்து நான் வெவ்வேறு நேரங்களில் வெளியே சென்று வர வேண்டியிருந்தது. பெண்கள் விடுதிகளில் மிகக் கடுமையான நேர கட்டுப்பாடுகள் இருந்தன. கோ லிவிங் (ஆண்கள், பெண்கள் ஒரே இடத்தில் தங்க அனுமதிக்கப்படும் இடங்கள்) விடுதிகளில் அந்தக் கட்டுப்பாடுகள் கிடையாது," என்கிறார் ராஜலட்சுமி.
மேல் தளத்தில் ஆண்களும் கீழ் தளத்தில் பெண்களும் இருப்பதால் தனக்கு அசௌகரியம் எதுவுமில்லை எனக் கூறிய அவர், "எனது பெற்றோர்களே வந்து என்னை இங்கு தங்க வைத்தனர். அப்போது அவர்கள், 'ஆண்களும் இந்தக் கட்டடத்தில் இருக்கிறார்களா?' என்று தயக்கத்துடன் கேட்டார்கள். ஆனால் எனக்கு அதில் எந்தப் பிரச்னையும் நேரவில்லை. மொட்டை மாடி, சமையலறை போன்ற பொது இடங்களில் மட்டுமே ஆண்களைப் பார்க்க முடியும். அதில் எனக்குப் பிரச்னை இல்லை" என்றார்.
ராஜலட்சுமி போலப் பல இளைஞர்கள் இன்று மாறி வரும் கலாசாரத்தின் அடையாளமாக இருக்கும் இதுபோன்ற கோ லிவிங் விடுதிகளை பல்வேறு காரணங்களுக்காக தேர்ந்தெடுக்கின்றனர்.
கோ லிவிங் விடுதிகளில் தனித்தனி அறைகள், இருவர் அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் தங்குவதற்கான அறைகள் இருக்கும். அங்கு படுக்கை, மேசை, நாற்காலி போன்ற அறைகலன்கள் இருக்கும். வைஃபை, ஏசி போன்ற வசதிகளும் உண்டு. சில விடுதிகளில் உடற்பயிற்சிக் கூடம், அலுவலகப் பணிகளைச் செய்யப் பொதுவான இடம் போன்றவையும் இருக்கும்.
கேரளாவின் வயநாட்டைச் சேர்ந்த எபின் தாமஸ், சென்னையில் பணிபுரிகிறார். கடந்த ஒரு மாதமாக சென்னையில் வசிக்கும் அவர், "கோ லிவிங் விடுதியில் இருப்பதை பெற்றோர்களும், வீட்டிலுள்ள பெரியவர்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு இந்த யோசனையே ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருக்காது. நான் சென்னை வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. இப்போது ஆண்கள் விடுதியில் இருக்கிறேன். கோ லிவிங் விடுதிகளில் கட்டணம் அதிகமாக இருப்பதால் அங்கு தங்க முடியவில்லை" என்கிறார்.
கால்லியெர்ஸ் இந்தியா 2025 ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 2021-ஆம் ஆண்டில் 2,10,000 படுக்கைகள் கோ-லிவிங் விடுதிகளில் இருந்தன. இந்தத் துறை மேலும் வேகமாக வளர்ந்து வருகிறது என்று துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
எவ்ரிதிங் கோலிவிங்கின் அறிக்கைப்படி, பெங்களூரூ, ஹைதராபாத், புனே, சென்னை, டெல்லி என்.சி.ஆர் ஆகிய பகுதிகளில் இந்தியாவின் 70% கோ-லிவிங் விடுதிகள் உள்ளன.
நாட்டின் பிரதான ஐந்து கோ-லிவிங் நிறுவனங்கள் இந்த நகரங்களிலேயே கவனம் செலுத்துகின்றன. கொச்சி, கோவை, இந்தூர், சண்டிகர் போன்ற இரண்டாம் கட்ட நகரங்களில் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக இந்தச் சந்தை வளர்ந்து வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
கோ-லிவிங் விடுதிகள் சென்னையில் பெரிய அளவில் வளர்ந்து வருவதாக ஜே.எல்.எல் ப்ராபர்டி கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் அரசு ஆலோசனை மற்றும் கட்டுமானத் தீர்வுகள் பிரிவின் இந்திய தலைவர் ஏ. ஷங்கர் கூறுகிறார்.
"கோ லிவிங் விடுதிகளில் சிறிய குடும்பங்கள் கூட தங்கலாம். இந்த விடுதிகளில் அறைகலன்கள் அனைத்தும் இருக்கும் என்பதால், வெவ்வேறு ஊர்களுக்கு மாறிச் செல்ல வேண்டிய அவசியமுள்ள சிறிய குடும்பங்களுக்கு இது மிகவும் வசதியான தேர்வு" என்று அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கட்டட உரிமையாளர்களுக்கும் இது அதிக வருவாய் ஈட்டுவதாக இருக்கும் என்று கூறிய ஷங்கர், "ஒரு வீட்டைக் கட்டி, அதை வாடகைக்கு விடுவதைவிட, ஒரு நிறுவனத்தின் பொறுப்பில் கோ லிவிங் விடுதி நடத்துவதை லாபமாகக் கருதுகின்றனர். இது இளைஞர்களுக்கும் பணி செய்பவர்களுக்கும் மட்டுமின்றி, முதியோர்களுக்கான பிரத்யேக கோ-லிவிங் விடுதிகளும் உள்ளன" என்றார்.
கோ-லிவிங் இடங்களில் தங்குபவர்களில் பெரும்பாலானோர் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சம்பாதிக்கும் இளைஞர்களே என்று எவ்ரிதிங் கோலிவிங் அறிக்கை கூறுகிறது. அதேபோல, மோர்டோர் இன்டெலிஜென்ஸ் 2026 அறிக்கை, இந்தியாவின் கோ-லிவிங் சந்தை 2026இல் 0.66 பில்லியன் டாலர் மதிப்பிலும், 2031இல் 1.96 பில்லியன் டாலர் மதிப்பிலும் உயரக்கூடும் என்று கணிக்கிறது.

'இதில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை'
ஆனால் மறுபுறம் ஒருதரப்பினர் இந்த கோ-லிவிங் யோசனையைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.
"இந்த விடுதிகள் கலாசார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. இது பெண்களுக்குப் பாதுகாப்பானதல்ல. பக்கத்து அறையில் யார் என்றே தெரியாத ஓர் ஆண் இருந்தால், அங்கிருக்கும் பெண்ணுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? இப்படித்தான், பெங்களூரூவில் சமீபத்தில் ஒரு பெண் தாக்கப்பட்டிருந்தார்" என்கிறார் தமிழ்நாடு ஐ.டி. விடுதி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் பொருளாளர் ஜி.கார்த்திக்.
மும்பை, பெங்களூரூ ஆகிய நகரங்களில் பரவலாக உள்ள இந்த கோ-லிவிங் விடுதிகள் தற்போது சென்னையிலும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர் "திருமணம் ஆகாத ஆணுக்கும் பெண்ணுக்கும் எளிதாக வீடு கிடைக்காது. அவர்கள் இந்த விடுதிகளில் தங்கிக் கொள்கின்றனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பி வெளியூருக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் இதுபோன்ற விடுதிகள் அவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது," என்றும் ஜி.கார்த்திக் விமர்சித்தார்.
ஆனால் தனியார் விடுதிகளைவிட கோ-லிவிங் விடுதிகளில் பாதுகாப்பு அதிகம் என்று ஏ.ஷங்கர் கூறுகிறார்.
புதிதாக எது வந்தாலும் அதற்கு எதிர்ப்புகள் இருப்பது இயல்புதான் எனக் கூறும் ஷங்கர், "ஷாப்பிங் மால்கள் வந்தபோதும், அடுக்குமாடிக் குடியிருப்புகள் புதிதாக வந்தபோதும் மாற்றுக் கருத்துகள் இருந்தன. கோ-லிவிங் விடுதிகளில் யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்துவிட முடியாது. அங்கு வசிப்போருக்கு மட்டுமே வழங்கப்படும் அனுமதி அட்டை இருந்தால்தான் உள்ளே செல்ல முடியும். தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்குவதைவிடவும் இது பாதுகாப்பானதே" என்கிறார்.
சென்னையில் பணிபுரியும் ஆலன் ஷாஜி, " விடுதியில் தங்குவதைவிட கோ-லிவிங் விடுதியில் தங்குவதையே நான் விரும்புவேன். விடுதி சுகாதாரமாக இல்லை, உணவு தரமாக இல்லை. நான் கேரளாவில் இருந்து வந்துள்ளேன். ஆன்லைன் மூலம் சென்னையில் ஒரு விடுதியைக் கண்டுபிடித்தேன். அங்குதான் தங்கி வருகிறேன். ஆன்லைனில் பதிவிட்டிருந்த புகைப்படங்களுக்கும் நேரில் வந்து பார்ப்பதற்கும் சம்பந்தமே இல்லை. இங்கு ஏசி இல்லாமல் ரூ.6500 கட்டணம் செலுத்த வேண்டும். கோ-லிவிங் விடுதிகளில் கட்டணம் அதிகமாக இருப்பதாலும் எனது பணியிடத்துக்கு அருகில் இல்லாததாலும் தற்போது அங்கு தங்க முடியவில்லை" என்று கூறுகிறார்.

ஆணும் பெண்ணும் சேர்ந்து வசிப்பதால் இந்த விடுதிகளை கலாசார சீர்கேடு என்று கூறுவது நியாயமற்றது என்கிறார் கோ-லிவிங் விடுதி ஒன்றில் தங்கி வரும் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
"நான் விரும்பும் நபர் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால் எனது வீட்டில் அவரை மணமுடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. நாங்கள் இருவரும் ஒரே நகரில் பணிபுரிகிறோம். இருவரும் தனித்தனியாகத் தங்குவதால் செலவு அதிகமாகிறது. எனவே, வீட்டில் பேசி ஒரு தீர்வு காணும் வரை இருவரும் ஒரு கோ-லிவிங் விடுதியில் தங்கி வருகிறோம்" என்றார் கீதா.
எஸ்.குஷ்பு எதிர் கன்னியம்மாள் வழக்கில் 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் லிவ்-இன் உறவுகள் சட்டவிரோதமல்ல என்று கூறியது.
"நமது சமூகத்தின் பொதுப் பார்வையில் திருமணமான இருவருக்கு இடையேதான் பாலியல் உறவு இருக்க வேண்டும். ஆனால், திருமணத்தை மீறிய உறவு தவிர, திருமண உறவில் இல்லாத வயது வந்தவர்கள் விருப்பத்துடன் பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றமல்ல" என்று அந்தத் தீர்ப்பு கூறுகிறது.
சென்னையில் பணிபுரியும் வர்ஷினி வெளியூரில் இருந்து வந்து தங்கியுள்ளார். அவர் இதுகுறித்துப் பேசியபோது, "பாதுகாப்பை விரும்புவோர் தனி விடுதிகள், பெண்கள் விடுதிகள் போன்ற இடங்களையே தேர்வு செய்வார்கள். வசதிகளை பிரதானமாகக் கருதுவோர் கோ-லிவிங் இடங்களைத் தேர்வு செய்வார்கள். பக்கத்து அறையில் யார் இருந்தாலும் கவலை இல்லை என்று நினைப்பவர்கள் அந்த இடங்களைத் தேர்வு செய்யலாம்" என்றார்.
இன்றைய சூழலில், மாறி வரும் சமூக உறவுகள், தனிப்பட்ட உறவுகளின் பிரதிபலிப்பாக இருக்கும் கோ-லிவிங் விடுதிகள் சரியா தவறா என்ற கேள்விக்கு இடமில்லை என்கிறார் ஆர்.ராஜலட்சுமி.
அதோடு, "அது மிகவும் தனிப்பட்ட விவகாரம். என் அனுபவத்தில் எனக்கு எந்தத் தொல்லையும், பிரச்னையும் இல்லை. ஆனால் வேறு சிலருக்கு, அவர்களது அறையில் ஆண் நண்பர்கள் திடீரென நுழைவது போன்ற சூழல்கள் இருந்துள்ளன. அது அவர்களுக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சூழல்கள் அனைவருக்கும் நெருடலை ஏற்படுத்தும் என்று கூற முடியாது. நமது சுய கட்டுப்பாடு, நமது பழக்க வழக்கம், நமது நம்பிக்கை ஆகியவற்றைப் பொருத்தே நம் அனுபவங்களும் அமையும்" என்று கூறினார் ராஜலட்சுமி.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























