திமுக, அதிமுக திட்டங்களை விஜய் அரசு மீண்டும் அறிவித்ததா? 8 திட்டங்களின் நிலவரம்

பட மூலாதாரம், TVK HQ/X
"தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் அவர்களின் கட்சிப் பெயரை சேர்த்து 'வெற்றி' என்று ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்" - த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் குறித்து புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 5) எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இவ்வாறு விமர்சித்தார்.
இதே கருத்தை முன்வைத்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயரை த.வெ.க அரசு மாற்றியுள்ளதாகப் பேசினார்.
"புதிய அரசு வரும்போது நல்ல திட்டங்களை செயல்படுத்துவது வழக்கமான ஒன்று" என, தமிழ்நாடு எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிக்காலங்களில் கொண்டு வந்த திட்டங்களில் பெயர் மாற்றம் செய்து புதிய திட்டம் போல த.வெ.க அறிவித்துள்ளதா? நிலவரம் என்ன?
தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் முதல் பட்ஜெட்டை புதன்கிழமையன்று நிதியமைச்சர் மரியவில்சன் தாக்கல் செய்தார்.
துறைவாரியாக பல்வேறு திட்டங்களையும் அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரங்களை அமைச்சர் அறிவித்தார். பட்ஜெட் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, தி.மு.க ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை பெயரை மாற்றி அறிவித்துள்ளதாகக் கூறினார்.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், 'அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயரை த.வெ.க அரசு மாற்றியுள்ளதாக விமர்சித்தார்.
தி.மு.க, அ.தி.மு.க முன்வைத்த விமர்சனங்களுக்கு வியாழக்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.
"ஒவ்வொரு காலகட்டத்திலும் கொண்டு வரப்படும் திட்டங்களை அடுத்த அரசு வரும்போது நல்ல திட்டங்களை செயல்படுத்துவதும் தேவையில்லாத திட்டம் என்றால் அதை மாற்றியமைப்பதும் வழக்கமான ஒன்று" என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்தார்.
எவையெல்லாம் மக்களுக்குப் பயன் உள்ள திட்டங்களோ அவற்றை நல்லபடியாக செயல்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தி.மு.க, அ.தி.மு.க குறிப்பிடும் திட்டங்களில் எவையெல்லாம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

பட மூலாதாரம், DIPR
காலை உணவுத் திட்டம்
2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதுரை ஆதிமூலம் மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
நகரப்பகுதிகள், கிராமப் பகுதிகளில் பள்ளிக்குச் செல்லும் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்பதால் இத்திட்டத்தை தீட்டியுள்ளதாக, மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பொறுப்பேற்ற த.வெ.க அரசு திட்டத்தின் பெயரை, 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த காலை உணவை, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. திட்டத்துக்காக பட்ஜெட்டில் 710 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மண்ணின் மகள் திட்டம்
"எங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின் பெயரை மாற்றி மண்ணின் மகள் திட்டம் என்று பெயரை மட்டும் மாற்றியுள்ளனர்" என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறியிருந்தார்.
ஆனால், 2004-05 ஆம் ஆண்டில் (அ.தி.மு.க ஆட்சி) மாநில அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக தாட்கோ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினப் பெண்களை பொருளாதாரீதியாக மேம்படுத்தும் நோக்கில் அவர்கள் பெயரில் நிலம் வாங்குவதற்காக திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
திட்டத்தின் மூலம் சொத்து வாங்குவதாக இருந்தால் 5 லட்ச ரூபாய் வரை அரசு மானியம் வழங்குகிறது. அதன்படி பெண்கள் நிலம் வாங்குவதற்கு 50 சதவீதம் வரை மானியம் (அதிகபட்சம் 5 லட்ச ரூபாய்) மானியம் வழங்கப்படுகிறது.
பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 'மண்ணின் மகள்' பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாய தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் திட்டம் செயல்படுத்தப்படும்' என த.வெ.க அரசு கூறியுள்ளது.
பட்ஜெட்டில், 'மண்ணின் மகள்' திட்டத்துக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டம்
தி.மு.க ஆட்சியில் 2024 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி 1000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 'தொல்குடி திட்டம்' செயல்படுத்தப்பட உள்ளதாக, அன்றைய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
பழங்குடி குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உள்ளதாகவும் தி.மு.க அரசு கூறியிருந்தது.
தற்போது, 'ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டம்' என்ற பெயரில் இந்த திட்டத்தை த.வெ.க அரசு செயல்படுத்த உள்ளது. 'திட்டத்தின்படி 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்' என, பட்ஜெட்டில் நிதி அமைச்சர் மரியவில்சன் அறிவித்துள்ளார்.

பட மூலாதாரம், DMK
வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்
அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட விலையில்லா ஆடு, மாடு, கோழி வளர்ப்புத் திட்டத்தின் பெயரை த.வெ.க அரசு மாற்றியுள்ளதாக, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.
தமிழ்நாட்டில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தை கடந்த 2011-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். அதே ஆண்டில் நிலமற்ற ஒரு லட்சம் ஏழை விவசாயிகளுக்கு தலா 4 ஆடுகள் வழங்கப்பட உள்ளதாக, அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஐந்தாண்டுகளில் 7 லட்சம் பேருக்கு இலவச ஆடுகள் வழங்கப்படும் என்றும் இந்தத் திட்டத்துக்காக 925 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அ.தி.மு.க அரசு அறிவித்தது.
இத்திட்டத்தை 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்' என்ற பெயரில் த.வெ.க அரசு செயல்படுத்த உள்ளது. திட்டத்தின்படி, '100 சதவீத மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்படும் என்றும் கணவரை இழந்த பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறுவர்' என்றும் அமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார்.
திட்டத்தை செயல்படுத்துவதற்கு 110 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கறவை மாடுகள் வழங்கும் திட்டம்
தமிழ்நாட்டில் இரண்டாவது வெண்மைப் புரட்சியை உருவாக்கும் வகையில் ஏழைகளுக்கு 60 ஆயிரம் கறவை மாடுகளை இலவசமாக வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாகக் கூறி, திட்டத்தை 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இதே திட்டத்தை, 'கறவை மாடுகள் வழங்கும் திட்டம்' என்ற பெயரில் ஒவ்வோர் ஆண்டும் பத்தாயிரம் கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும் என, த.வெ.க அரசின் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
"இதன்மூலம், பால் உற்பத்தி அதிகரிப்பு, ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்" என, அமைச்சர் மரியவில்சன் குறிப்பிட்டார். திட்டத்துக்கு 57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
வெற்றி மடிக்கணினி திட்டம்
அ.தி.மு.க ஆட்சியில் (2011) மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
திட்டத்தின் மூலம் 52.35 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் இத்திட்டம் வரவேற்பைப் பெற்றது.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, மடிக்கணினி வழங்கும் திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டதாக அ.தி.மு.க விமர்சித்தது.
2026 ஜனவரி மாதம், 20 லட்சம் மடிக்கணினிகளை வழங்க உள்ளதாக முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 'நான்காண்டுகளாக திட்டத்தைக் கிடப்பில் போட்டு வைத்திருந்தது ஏன்?" என, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியிருந்தார்.
"திட்டத்தின் பெயரை 'உலகம் உங்கள் கையில்' என, தி.மு.க தலைவர் பெயர் வைத்தார். அதன்படி 20 லட்சம் மடிக்கணினிகளை வழங்குவதாக அறிவித்து பத்து லட்சம் பேருக்குக் கொடுத்தோம். அதன் பெயரை மாற்றிவிட்டனர்" என, ஆகஸ்ட் 5-ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சித்தார்.
இத்திட்டம், 'வெற்றி மடிக்கணினி திட்டம்' என்ற பெயரில் அரசு செயல்படுத்த உள்ளதாக, நிதி அமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார். ரூ.2000 கோடி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பட மூலாதாரம், DIPR
அண்ணன் சீர் திட்டம்
தி.மு.க ஆட்சியில் (1989) ஏழைப் பெண்களின் திருமண உதவிக்காகக் கொண்டு வரப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தை, 'தாலிக்குத் தங்கம்' திட்டமாக ஜெயலலிதா அறிவித்தார்.
2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு 25,000 ரூபாய் பணமும் எட்டு கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.
கல்லூரிப் படிப்பை முடித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணமும் எட்டு கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. கடந்த தி.மு.க ஆட்சியில் இத்திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டதாக, அ.தி.மு.க குற்றம் சுமத்தியது.
சட்டப்பேரவையில் இதற்குப் பதில் அளித்த அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், "2018-19 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியிலேயே திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது. தங்கம் விலை ஏற்ற, இறக்கம் காரணமாக யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை" எனக் கூறியிருந்தார்.
இதே திட்டத்தை பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்வியில் சேரும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் 'புதுமைப் பெண்' திட்டமாக தி.மு.க அரசு அறிவித்து செயல்படுத்தியது.
த.வெ.க அரசின் பட்ஜெட்டில் 'அண்ணன் சீர்' என்ற பெயரில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தின்கீழ் பெண்களின் திருமணத்துக்கு எட்டு கிராம் தங்க நாணயமும் ஒரு பட்டுப்புடவையும் அரசின் சார்பாக வழங்கப்படும் என, அமைச்சர் மரியவில்சன் அறிவித்துள்ளார்.
திட்டத்துக்கு 812 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெற்றி வீடு திட்டம்
தமிழ்நாட்டில் குடிசைவாழ் மக்களுக்கு நிரந்தர வீடுகளைக் கட்டித் தரும் வகையில் 1970 ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியத்தை முதலமைச்சராக இருந்த கருணாநிதி கொண்டு வந்தார்.
இதன் நீட்சியாக, 2010 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் 'கலைஞர் வீடு வழங்கும் திட்டம்' செயல்படுத்தப்பட்டது. கடந்த தி.மு.க ஆட்சியில் 'கலைஞரின் கனவு இல்லம்' என்ற திட்டமாக அறிவிக்கப்பட்டது.
வீட்டுக்கு தலா 3.50 லட்ச ரூபாய் என்ற அளவில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்பட உள்ளதாக, தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதே திட்டத்தின் பெயரை 'வெற்றி வீடு திட்டம்' என மாற்றியுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 70,000 குடிசை வீடுகளை உறுதியான வீடுகளாக மாற்றும் வகையில் வெற்றி வீடு திட்டம் செயல்படுத்தப்படும் என, த.வெ.க அரசு அறிவித்துள்ளது.
அடுத்த 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளதாக, நிதி அமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























