'என் பாட்டி எனக்குத் தெரியாமல் என் குழந்தைக்கு பெண் பிறப்புறுப்புச் சிதைப்பை செய்தார்'

வெள்ளை புள்ளிகள் கொண்ட மெரூன் நிறத் துணியின் பின்னணியில் மூன்று தலைமுறை எம்பேரா பெண்களின் பென்சில் படம். இடதுபுறத்தில் நீல நிற ஆடை அணிந்த ஒரு பெண் குழந்தை கீழே பார்க்கிறது, நடுவில் நீண்ட கருப்பு முடி மற்றும் கன்னங்கள் மற்றும் மூக்கில் கருப்பு கோடுகளுடன் கூடிய ஒரு பெண் (தாய்) ஜம்பர் அணிந்துள்ளார், வலதுபுறத்தில் நீண்ட வெள்ளை முடி மற்றும் சுருக்கங்களுடன் கூடிய ஒரு முதிய பெண். இரு பெண்களும் தங்களுக்கு நேரே பார்க்கிறார்கள்.
படக்குறிப்பு, கார்லா கினியோனஸ் தனது எம்பேரா சமூகத்திற்குள் பெண்களின் பிறப்புறுப்புச் சிதைவை முடிவுக்குக் கொண்டுவரப் பரப்புரை செய்து வருகிறார்
    • எழுதியவர், ஜோஸ் கார்லோஸ் குவேட்டோ
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் பெண் உறுப்பு சிதைப்பு நடைமுறைகள் குறித்த விவரிப்புகள் இடம் பெற்றுள்ளன

லத்தீன் அமெரிக்காவில் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட முதல் நாடாக கடந்த வாரம் கொலம்பியா மாறியது. இதை மனித உரிமை ஆர்வலர்கள் ஒரு சாதனை என கூறி வரவேற்றுள்ளனர்.

கொலம்பிய நாடாளுமன்றத்தில் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டாலும், ஆபத்தானதும் பெரும்பாலும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த நடைமுறையை ஒழிக்க நீண்டகாலப் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.

கார்லா குயினோனெஸின் (உண்மைப் பெயர் அல்ல) மகளுக்கு வெறும் ஆறு மாத வயதுதான் இருந்தது. அப்போது, குழந்தையின் கொள்ளுப்பாட்டி அக்குழந்தைக்கு பெண் பிறப்புறுப்பு சிதைப்பு செய்தார்.

"என் பாட்டி குழந்தையை என்னிடம் திருப்பிக் கொடுத்தபோது, அவளுக்கு காய்ச்சல் இருந்தது. உடல் வீங்கியிருந்தது. ரத்தப்போக்கும் ஏற்பட்டிருந்தது. அவள் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள்," என்று குயினோனெஸ் கூறுகிறார்.

"நான் என் பாட்டியிடம் இதுபற்றி கேட்டபோது, 'இது சாதாரணமான விஷயம்தான். இதைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது' என்று அவர் கூறினார்."

அருகிலிருந்த சுகாதார மையம் மிகவும் தொலைவில் இருந்தது. பிரசவ உதவியாளரான குயினோனெஸின் தாயார், மருத்துவ மூலிகைகளைப் பயன்படுத்தி குழந்தையின் வலியை குறைக்க முயன்றார். அதே நேரத்தில், அவர் குயினோனெஸின் பாட்டியையும் எதிர்கொண்டார். ஆனால், அந்த பெண் தனது முடிவில் உறுதியாகவே இருந்தார்.

"கிளிட்டோரிஸ் உள்ள பெண்களை ஆண்கள் கேலி செய்வார்கள் என்று அவர் கூறினார்''

ஒரு சிறு குழந்தையின் வெற்றுப் பாதம் மற்றும் கையின் நெருக்கமான தோற்றம் தாயாரின் பாவாடையின் பின்னணியில் காட்டப்பட்டுள்ளது - இது ஒரு பாரம்பரிய பழங்குடியின ஆடை. தாய் குழந்தையைப் பிடித்துள்ளதாகத் தெரிகிறது. குழந்தை ஒரு எளிய கார்ட்டூன் நாய் அச்சிடப்பட்ட வெளிர் நிறச் சட்டையை அணிந்துள்ளது, கை பாதத்திற்கு அருகில் தளர்வாகத் தொங்குகிறது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதை விட எம்பேரா சமூகத்தில் பெண் பிறப்புறுப்புச் சிதைவு அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது

கொலம்பியாவில் பெண் பிறப்புறுப்புச் சிதைப்பு

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பெண் பிறப்புறுப்பு சிதைப்பு என்பது, மருத்துவக் காரணங்கள் எதுவும் இல்லாமல் பெண்களின் வெளிப்புற பிறப்புறுப்பின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையோ அகற்றுவது அல்லது அந்த உறுப்புகளில் வேறு விதமான காயங்களை ஏற்படுத்துவது ஆகும்.

இந்த நடைமுறை கடுமையான ரத்தப்போக்கு, தொற்று உள்ளிட்ட உடனடி மருத்துவச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். மேலும், பின்னர் மாதவிடாய் காலத்திலும் பிரசவத்தின்போதும் உடல்நலப் பிரச்னைகளை உருவாக்கலாம். பெண்களின் பாலியல் இன்பத்தையும் இது பாதிக்கக்கூடும்.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, உலகம் முழுவதும் தற்போது உயிருடன் வாழும் 230 மில்லியனுக்கும் அதிகமான பெண்களும் சிறுமிகளும் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

தற்போது 30 வயதான குயினோனெஸ், கொலம்பியாவில் இந்த நடைமுறையை ஒழிப்பதற்காக பிரசாரம் செய்து வருகிறார். அவர் சேர்ந்துள்ள எம்பெரா பழங்குடியின சமூகத்தின் சில உறுப்பினர்களிடையே இந்த நடைமுறை இன்னும் தொடர்கிறது.

சமூக ஆர்வலர்கள் மற்றும் கொலம்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, இந்தத் தடைச் சட்டம் அமலுக்கு வர வழிவகுத்த இயக்கத்தில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

தான் வளர்ந்த பிறகுதான், தனது சமூகத்திற்குள் ரகசியமாக என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை உணர்ந்ததாக அவர் கூறுகிறார்.

"பிறந்த சில நாட்களிலேயே ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் அதிகமாக இறப்பது ஏன் என்று நான் எப்போதும் ஆச்சரியப்பட்டேன். என் உறவுப் பெண் குழந்தை ஒருவர் பிறந்தபோது, அவரது பிரசவத்தை என் அம்மாதான் கவனித்தார். அந்தக் குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்தது. ஆனால், மூன்று நாட்களுக்குப் பிறகு இறந்துவிட்டது. அதைப் பற்றி நான் என் அம்மாவிடம் கேட்டபோது, 'ஜாய்' என்ற பாரம்பரிய நோயால் குழந்தை இறந்துவிட்டது என்று அவர் கூறினார்," என்கிறார் குயினோனெஸ்.

ஆனால், 'ஜாய்' காரணமாக இறந்ததாகக் கூறப்பட்ட பல பெண் குழந்தைகள், உண்மையில் பெண் பிறப்புறுப்பு சிதைப்பால் ஏற்பட்ட உடல்நலச் சிக்கல்களால்தான் உயிரிழந்திருக்கலாம் என்று தற்போது அவர் நம்புகிறார்.

நீண்ட பழுப்பு நிற முடியைக் கொண்ட ஒரு பெண் வெள்ளை மருத்துவச் சட்டையையும் அடர் நிற சட்டகம் கொண்ட கண்ணாடியையும் அணிந்துள்ளார். அவர் ஒரு மருத்துவச் சூழலை ஒத்த பிரகாசமான, பெரும்பான்மையாக வெள்ளை பின்னணியில் வீட்டிற்குள் அமர்ந்துள்ளார். படம் மென்மையான வெளிச்சம் கொண்ட நடுத்தர நெருக்கமான உருவப்படமாகும்

பட மூலாதாரம், Courtesy of Diana Ramos / Photo by David Jiménez

படக்குறிப்பு, குழந்தைகள் நல மருத்துவர் டயானா ராமோஸ் பெண் பிறப்புறுப்புச் சிதைப்பு குறித்து மருத்துவர்கள் மேலும் தெரிந்திருக்க வேண்டுமென விரும்புகிறார்

ஒரு குழந்தைகள் நல மருத்துவரின் பார்வை

2020 முதல் 2026 ஜூன் வரையிலான காலகட்டத்தில் கொலம்பியாவில் 240 பெண் பிறப்புறுப்புச் சிதைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பெரும்பாலான நேர்வுகளில், சிறுமிகள் ஆறு வயதுக்கும் குறைந்தவர்களாக இருந்தனர்.

ஆனால் இது "வெளிப்படையாகத் தெரிந்த ஒரு சிறிய பகுதி மட்டுமே " என்று தாம் நம்புவதாகக் குழந்தைகள் நல மருத்துவர் டயானா ராமோஸ் மொஸ்கெரா கூறுகிறார்.

கொலம்பியாவின் வடமேற்கு காபி உற்பத்திப் பிராந்தியத்தில் உள்ள பெரைரா நகரில் உள்ள சான் ஜார்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரியும் அவர், பிற மருத்துவ சிகிச்சைகளுக்காக தன்னிடம் பரிசோதனைக்கு வந்த சிறுமிகளைப் பரிசோதித்த போது தழும்புகள், தீக்காயங்கள் மற்றும் உறுப்பு சிதைவுக்கான அறிகுறிகளைத் தான் கண்டதாகக் கூறுகிறார்.

பிறப்புறுப்புப் பாதை முழுமையாக மூடி தையலிடப்பட்டது போன்ற நிலையில் வந்திருந்த ஒரு சிறுமியை அவர் நினைவுகூர்கிறார்.

இதனால், எதிர்காலத்தில் அச்சிறுமியால் மாதவிடாய் வெளியேறவோ அல்லது பாலியல் உறவில் ஈடுபடவோ முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம்.

"அவருக்கு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது," என்று மருத்துவர் ராமோஸ் கூறுகிறார்.

அவர் பிறப்புறுப்புச் சிதைவை வாழ்நாள் முழுவதும் விளைவுகளை ஏற்படுத்தும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையின் ஒரு வடிவமாகக் கருதுகிறார். ஆனால் இதற்குத் தண்டனை மூலம் மட்டுமல்லாமல் கல்வி மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறுகிறார்.

"இந்தச் சமூகங்களை சேர்ந்த சிலர் தாங்கள் எந்தத் தீங்கும் செய்யவில்லை என்று உண்மையாக நம்புகிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.

'கலாசாரம் கொல்வதில்லை'

நீண்ட அடர் நிற முடியைக் கொண்ட ஒரு பெண் மரங்கள், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் பின்னணியில் தெரியும் ஒரு தெரு சந்திப்பில் நிற்கிறார்.

பட மூலாதாரம், José Carlos Cueto / BBC Mundo

படக்குறிப்பு, ஜூலியானா டோமிகோ

சுமார் 300,000 உறுப்பினர்களைக் கொண்ட 'தி கிரேட் எம்பெரா நேஷன்' கொலம்பியாவின் மிகப்பெரிய பழங்குடியின சமூகங்களில் ஒன்றாகும். இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் ஈக்வடார் மற்றும் பனாமாவிலும் வாழ்கின்றனர்.

லத்தீன் அமெரிக்காவின் பிற பகுதிகளில் அரிதாகக் காணப்படும் இந்த நடைமுறை, எம்பெரா சமூகத்தில் ஏன் தொடர்கிறது? ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட மக்களுடன் இந்த நடைமுறை இப்பகுதிக்கு வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

அதிக ஆஃப்ரோ-கொலம்பிய மக்கள் தொகையை கொண்ட அல்லது அவற்றின் எல்லைகளாகவோ உள்ள ரிசாரல்டா, சோகோ மற்றும் வால் டெல் கவுக்கா ஆகிய பகுதிகளில் இந்த நடைமுறை பரவலாக இருப்பதற்கான காரணத்தை இந்த கோட்பாடு விளக்கக்கூடும்.

மற்றொரு கோட்பாடு என்னவென்றால், நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாற்றுப் பாலினக் குழந்தை பிறந்ததால், இந்தச் சமூகத்திற்குள் கிளிட்டோரிஸ் குறித்த ஒரு பயம் ஏற்பட்டது. பல வயதான பெண்கள் அதனை வெட்டாமல் விட்டால் அது ஆண் உறுப்பாக வளர்ந்துவிடும் என்று நம்புகிறார்கள்.

மேலும் சிலர், பாலியல் இன்பத்துடன் தொடர்புடைய உறுப்பைக் கொண்டிருக்கும் பெண் "ஒழுக்கமற்றவராக" மாறக்கூடும் என்ற ஆணாதிக்கக் கருத்துக்களில்தான் இந்த நடைமுறை வேரூன்றியிருக்கிறது என்று கருதுகின்றனர்.

இதன் தோற்றம் எதுவாக இருந்தாலும், இந்த நடைமுறை கலாசார ரீதியானது என்ற கருத்தை நிராகரிக்கிறார் கொலம்பியாவின் கிரேட் எம்பேரா தேசத்தின் மக்களின் தேசியக் கூட்டமைப்பின் சட்டப் பிரதிநிதியும் தலைமைப் பழங்குடியின ஆலோசகருமான ஜூலியானா டோமிகோ.

"நமது கலாசாரம் என்பது நமது ஆடை, நமது கைவினைப்பொருட்கள், நமது நடனங்கள் மற்றும் நமது மொழிதானே தவிர, உயிரைக் கொல்லும் நடைமுறை அல்ல. கலாசாரம் கொல்வதில்லை."

இந்த புதிய சட்டம், சமூகத்திற்குள் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு மற்றும் உரிமைப் போராட்டங்களின் விளைவாக உருவானது என்று அவர் கூறுகிறார்.

"இந்தச் சட்டம் வெறும் காகிதத்தில் மட்டுமே இல்லாமல், போதுமான நிதி மற்றும் வளங்களுடன் கூடிய பொதுக் கொள்கைகளாக மாற்றப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,"

அச்சுறுத்தல்

இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடை அணிந்து சித்தரிக்கப்பட்டுள்ள ஒரு பெண், தனது முதுகில் ஒரு குழந்தையைச் சுமந்து செல்கிறார், அவரைச் சுற்றி, ஸ்டெதாஸ்கோப் கொண்ட ஒரு மருத்துவ நிபுணர் மற்றும் சாதாரண உடையில் சித்தரிக்கப்பட்டுள்ள நான்கு நபர்கள் உள்ளனர், இது சுகாதாரம், அரசு மற்றும் சமூகத்தின் கவனத்தை உணர்த்துகிறது.

குயினோனெஸ் இந்த நடைமுறையை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் சமூக ஆர்வலர்களில் ஒருவராக உள்ளார். ஆனால், அதற்காக தனக்கு மிரட்டல்கள் வந்ததாகவும், குறிப்பாக ஆண்களிடமிருந்தே அதிக எதிர்ப்பை சந்தித்ததாகவும் அவர் கூறுகிறார்.

பாரம்பரியமாக, இந்தச் சடங்கைப் பற்றி ஆண்கள் அறிந்திருக்கக் கூடாது என்று கருதப்படுகிறது. இருப்பினும், அதை ஒழிப்பது தொடர்பான விவாதங்கள் பெரும்பாலும் ஆண் சமூகத் தலைவர்களுடன்தான் நடைபெறுகின்றன. காரணம், பல எம்பெரா பெண்கள் எம்பெரா என்ற தங்களது பழங்குடியின மொழியையே பேசுகிறார்கள். அவர்களில் அனைவரும் ஸ்பானிஷ் மொழியை கற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த மொழித் தடையே, தங்கள் குழந்தைகளுக்கான மருத்துவ உதவியைப் பெறுவதிலும் பெண்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும், சில நேரங்களில் போதுமான புரிதல் இல்லாத அல்லது குற்றம் சாட்டும் அணுகுமுறையைக் கொண்ட மருத்துவப் பணியாளர்களை சந்திக்க வேண்டிய நிலை இந்தப் பிரச்னையை மேலும் மோசமாக்குவதாக குயினோனெஸ் கூறுகிறார்.

"சிறுநீரகப் பாதை தொற்றால் ஏற்பட்ட காய்ச்சலுக்காக என் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த செவிலியர் என்னை 'காட்டுமிராண்டி' என்று திட்டினார். 'உனக்குத் தகுந்த தண்டனையே இது' என்றும் கூறினார்," என்று அவர் நினைவுகூர்கிறார்.

"என் மகளை என்னிடமிருந்து பிரித்து, குழந்தைகள் நலத் துறையின் பராமரிப்பில் ஒப்படைத்துவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டினர்.

அதன்பிறகு, என் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நான் விரும்புவதில்லை. மருத்துவ மூலிகைகளையும் மருந்துகளையும் பயன்படுத்தி வீட்டிலேயே சிகிச்சை அளிக்கிறேன். அவளை ஒருபோதும் என் கண்காணிப்பிலிருந்து விலக விடுவதில்லை," என்று குயினோனெஸ் கூறுகிறார்.

'உரையாடலைத் தவிர்க்க முடியாது'

நீண்ட முடியைக் கொண்ட இரண்டு சிறிய குழந்தைகள் - புதர்கள் மற்றும் பசுமை சூழ்ந்த ஒரு மண் பாதையில் நடந்து செல்கிறார்கள். ஒருவர் வெள்ளை புள்ளிகள் கொண்ட சிவப்பு பாவாடை மற்றும் இளஞ்சிவப்பு காலணிகளை அணிந்துள்ளார். மற்றவர் நீல நிற டி-ஷர்ட் மற்றும் பச்சை நிற பேன்ட் மற்றும் ஸ்லிப்பர் அணிந்துள்ளார். அவர்களுக்கு கீழே தொலைவில் தகரக் கூரைகள் கொண்ட சில கட்டடங்கள் உள்ளன.

பட மூலாதாரம், AFP via Getty Images

எம்பெரா சமூகத்திற்குள் தற்போது மாற்றம் உருவாகி வருவதாக குயினோனெஸ் கூறுகிறார். பெண் பிறப்புறுப்பு சிதைப்பு தொடர வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து பெண்களே தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, தனது பேத்திகளுக்கு இந்த நடைமுறையை மேற்கொண்டிருந்த ஒரு பாட்டியின் வார்த்தைகள் தன்னை ஆழமாக நெகிழச் செய்ததாக அவர் கூறுகிறார்.

"நான் ஒருபோதும் தீய நோக்கத்துடன் இதைச் செய்யவில்லை. என் பேத்திகளை ஆண்கள் விமர்சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் செய்தேன்," என்று அந்தப் பாட்டி கூறியதாக குயினோனெஸ் நினைவுகூர்கிறார்.

வேறுபட்ட வாழ்க்கை முறையைப் பற்றி உரையாடுவது பல நேரங்களில் வேதனையானதாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

"கிளிட்டோரிஸ் இல்லாமல் வளர்ந்த பெண்களால், தங்கள் உடல் வேறு விதமாக இருக்கக்கூடும் என்பதை கற்பனை செய்துகொள்வதே கடினம்," என்று அவர் கூறுகிறார்.

எதிர்காலத்தில் தனது மகளுடனும் இந்த விஷயத்தைப் பற்றி பேசுவது எளிதாக இருக்காது என குயினோனெஸ் ஒப்புக்கொள்கிறார்.

"ஆனால், தவிர்க்க முடியாத ஒரு உரையாடல் அது," என்று அவர் கூறுகிறார்.

"நம் அனைவருக்கும் நம் உடலைப் பற்றி புரிந்துகொள்ளவும், அதைப் பற்றி வெட்கமின்றி பேசவும் உரிமை உள்ளது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு