தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் காலியாக இருக்கும் போது, 2 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் ஏன்?

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி உட்பட 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 2 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மற்ற தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்ததே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், அதிமுக சார்பில் வென்று பதவிகளை ராஜிநாமா செய்த 6 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று கோரும் மனு நிலுவையில் இருக்கும் நிலையில், இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தக் கூடாது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. ஆனால் இடைத்தேர்தலை எதிர்கொள்ளப் போவதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.
மற்ற 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வரும் செப்டெம்பர் 28 ஆம் தேதி இவ்வழக்கின் இறுதி விசாரணை நடக்குமென்று தெரிவித்துள்ளது.
இந்த 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி வழக்குத் தொடுத்துள்ள வெங்கடாஜலபதி, 'இந்தத் தொகுதிகளில் வென்றவர்கள், ராஜிநாமா செய்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இந்த இடைத்தேர்தல் ஆளும்கட்சிக்கே சாதகமாகும் என்கிறார் தேர்தல் வியூக வகுப்பாளர் லியோ.
காலியாகவுள்ள 7 தொகுதிகளும், அதற்கான காரணங்களும்
தமிழகத்தில் முதல்வர் விஜய் வென்று ராஜிநாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி, அதிமுக வேட்பாளர்கள் வென்று ராஜிநாமா செய்த விராலிமலை, கரூர், மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி), அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய தொகுதிகள் காலியாகவுள்ளன. சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த அதிமுகவைச் சேர்ந்த 6 பேரும் உடனடியாக தவெகவில் இணைந்துவிட்டனர்.
இவற்றில், 5 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தாக்கல் செய்த மனுவில், குழந்தைகளை வைத்து விஜய் தேர்தல் பரப்புரை செய்தார், வருமானவரி வழக்கை மறைத்துவிட்டார் போன்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன.
இதேபோல முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக வேட்பாளர் செல்லபாண்டியன் தாக்கல் செய்த மனுவும் விசாரணையில் உள்ளது. தேர்தல் பரப்புரையின் போது, 10 ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன்களை விநியோகம் செய்தார், குளிர்சாதனப்பெட்டி வாங்க கூப்பன்களை விநியோகித்து தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டார் என்ற காரணங்களைக் கூறி, அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென்று அந்த மனுவின் கோரப்பட்டுள்ளது.
கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து, தவெக வேட்பாளர் மதியழகன் மனு தாக்கல் செய்தார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தபின்பு, அந்த வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். ஆனால், அந்த வழக்கும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் வென்ற ஜெயக்குமாரும், பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளார். அவருடைய வெற்றியை எதிர்த்து, அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் மனு தாக்கல் செய்திருந்தார். அதை நிராகரிக்குமாறு ஜெயக்குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, தோப்பு வெங்கடாசலம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு தொடர்பான மனுவில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட எந்த காரணங்களும் இல்லை என்று கூறி அந்த மனுவை இன்று (செப்டெம்பர் 8) நிராகரித்துள்ளார்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் வென்ற இசக்கி சுப்பையாவும், தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்திருக்கிறார். அவருடைய வெற்றியை எதிர்த்து, வழக்கறிஞர் காந்திமதிநாதன் மனு தாக்கல் செய்துள்ளார். திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த இவர், கட்சித்தலைமை அனுமதி பெற்று வாக்காளர் என்ற முறையில் இந்த வழக்கை பதிவு செய்ததாக பிபிசி தமிழிடம் பேசுகையில் தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் இந்த 5 தொகுதிகளைத் தவிர்த்து, மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் செப்டெம்பர் 9-ஆம் தேதி துவங்குகிறது. வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9 ஆம் தேதியும் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு: செப்டெம்பர் 28-ல் இறுதி விசாரணை!

பட மூலாதாரம், Handout
மொத்தம் 7 தொகுதிகள் காலியாகவுள்ள நிலையில், இந்த 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு, மற்ற 5 தொகுதிகளிலும் தேர்தல் வழக்குகள் இருப்பதே காரணமாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தல் வழக்குகளைக் காரணம் காட்டி, இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி வழக்கு தொடர்ந்துள்ளார். அவருடைய மனுவை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றம், அந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தடை விதித்திருந்தது. அந்த தடையை செப்டெம்பர் 28 வரை நீட்டித்து இன்று (செப்டெம்பர் 8) உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கின் இறுதி விசாரணையும் அன்று நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் வெங்கடாஜலபதி பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கினார்.
''ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளின் வெற்றிகளை எதிர்த்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அவை நிலுவையில் உள்ளன. உதாரணமாக அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, தனது பதவியை ராஜிநாமா செய்வதற்கு முன்பே அங்கு தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றியை எதிர்த்து இனிகோ இருதயராஜ் தாக்கல் செய்த மனுவும் விசாரணையில் உள்ளது.'' என்றார் வழக்கறிஞர் வெங்கடாஜலபதி.
மேலும் தொடர்ந்த அவர், ''தேர்தல் வழக்குகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள சில வழக்குகளின் தீர்ப்பைக் குறிப்பிட்டு, இந்த 5 தொகுதிகளிலும் தேர்தல் வழக்குகள் முடியும்வரை இடைத்தேர்தலை அறிவிக்கக்கூடாது என்பதே என்னுடைய மனு. அதாவது பொதுத்தேர்தல் நடத்தி முடிந்தபின், இதுபோன்று தேவையற்ற விதங்களில் இடைத்தேர்தலை வரவழைப்பது மக்கள் நம்பிக்கையின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் தொடுக்கப்படும் மிகப்பெரும் தாக்குதல். அதற்காகவே இந்த மனுவை தாக்கல் செய்தேன்.'' என்றார்.
இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல்வர் விஜய் போட்டியிட்டு வென்ற திருச்சி கிழக்கு தொகுதியும் ஒன்றாகும். அதன் காரணமாக, திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி, முதல்வர் விஜய் சார்பிலும் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ''மனுவைத் தாக்கல் செய்துள்ள மனுதாரர் சம்பந்தப்பட்ட தொகுதியில் தேர்தல் வழக்கு தொடர்ந்தவரும் இல்லை. வாக்காளருமில்லை. திருச்சி கிழக்கு தொகுதியில் மக்கள் பிரதிநிதி இல்லாமல் காலவரையின்றி இடைத்தேர்தலை தாமதப்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று இடைக்காலத் தடையை நீக்கக் கோரி முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆகியோர் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இன்றைய மனு விசாரணையின்போது, பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் வென்ற ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து தோப்பு வெங்கடாசலம் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்ட தகவலை அவருடைய சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்குப் பின்பே, இடைக்காலத் தடையை செப்டெம்பர் 28 வரை நீட்டித்து, இறுதி விசாரணை அன்றைய தினம் நடக்குமென்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
அதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் வெங்கடாஜலபதி, ''வரும் செப்டெம்பர் 28 ஆம் தேதி இறுதி விசாரணை நடக்கும்போதே, நீதிமன்றம் ஏதாவது உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது. அப்படி உத்தரவிட்டாலும் அதை எதிர்த்து அவர்கள் மேல் முறையீடு செய்யும்போது மேலும் தாமதம் ஏற்படலாம். அதனால் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் நான் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறேன். நிச்சயமாக இதில் நல்லதொரு உத்தரவு வருமென்று எதிர்பார்க்கிறேன்.'' என்றார்.
இந்த வழக்கு ஒரு புறமிருக்க, அதிமுக சார்பில் வென்று பதவிகளை ராஜிநாமா செய்த 6 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று அக்கட்சியின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
அந்த வழக்கு விசாரணையிலும், ''அதிமுக வென்ற 6 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது நீதிமன்ற மறுஆய்வை முடக்கி, ஒரு மாற்ற முடியாத நிலையை உருவாக்கிவிடும் என்று அதிமுக வாதிட்டு வருகிறது. அந்த வழக்கைப் பற்றி பிபிசியிடம் விளக்கினார் அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக வழக்கறிஞர் பிரிவின் மாநிலச் செயலாளருமான இன்பதுரை.
பிபிசியிடம் பேசிய வழக்கறிஞர் இன்பதுரை, ''ஒரு வழக்கறிஞராக இதில் சட்டப்பூர்வமாக பதிலளிக்க விரும்புகிறேன். அதிமுக சார்பில் வென்ற 6 பேர் வென்ற தொகுதிகள், முதல்வர் விஜய் வென்ற திருச்சி கிழக்கு என 7 தொகுதிகளில் மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 151 ஏ பிரிவின்படி, 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவற்றில் 5 தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கின்றன. அந்த வழக்குகளில் அவர்களின் வெற்றி செல்லாது என்று அறிவித்தால், அதற்கடுத்து அதிக வாக்கு பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.'' என்றார்.
இதற்கிடையில் இந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தி, ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒரே தொகுதிக்கு இரு சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்ற சட்ட ரீதியாக முரண்பாடான, அசாதாரண சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
'அதிமுக தாக்கல் செய்த மனு நிலுவையில் இருக்கிறது'

பட மூலாதாரம், ANI
''தேர்தல் தொடர்பான வழக்கு இருந்தால் அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்பது சஞ்சீவய்யா–டிஆர்எஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் தந்துள்ள தெளிவான உத்தரவாகும். அதேநேரத்தில் அதிமுக வென்ற 6 தொகுதிகளில் கட்சி மாறிய உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று அதிமுக தாக்கல் செய்த மனு நிலுவையில் இருக்கிறது. அதில் தீர்ப்பு வராத நிலையில் அதிமுக வென்ற 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கக் கூடாது. இருப்பினும் இந்த இடைத்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகவுள்ளது. நிச்சயமாக 2 தொகுதிகளிலும் நாங்கள் மீண்டும் வெல்வோம்.'' என்றார் எம்.பி.இன்பதுரை.
தவெக சார்பில் யாருக்கு வாய்ப்பு?
இசக்கி சுப்பையா வெற்றி பெற்ற அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டு தோல்வியடைந்தது. தற்போது காங்கிரஸ் கட்சி, தவெக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. அப்படியிருக்கும்போது இந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கேட்கவும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து அம்பாசமுத்திரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வி.பி.துரையிடம் பிபிசி தமிழ் சில கேள்விகளை எழுப்பியது. இவர் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தலைவராக இருக்கிறார்.
பிபிசியிடம் பேசிய வி.பி.துரை, ''இது மிகவும் தர்மசங்கடமான நிலைதான். உண்மையைச் சொல்லப்போனால் இந்த தொகுதியை காங்கிரசுக்கு தவெக விட்டுக்கொடுக்க வேண்டும். ஆனால் அதைக் கேட்பது பற்றி மாநிலத் தலைமைதான் முடிவெடுக்க வேண்டும்.'' என்றார்.
இதேபோன்று இடைத்தேர்தல் நடக்கவுள்ள 2 தொகுதிகள் உட்பட அதிமுக வென்ற 6 தொகுதிகளிலும், ராஜிநாமா செய்த அதே 6 பேருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது புதிய வேட்பாளரை தவெக தலைமை நிறுத்துமா என்பதும் உற்றுநோக்கப்படுகிறது. தற்போது இடைத்தேர்தல் நடக்கவுள்ள 2 தொகுதிகளில் தவெக தலைமை யாருக்கு வாய்ப்பளிக்கும் என்பதில்தான் இதற்கு ஓரளவு விடை தெரியவரும்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய தாராபுரம் தொகுதியில் வென்று ராஜிநாமா செய்த சட்டப்பேரவை உறுப்பினர் சத்யபாமா, ''இப்போதுதான் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைதான் நான் விருப்பமனு கொடுக்க இருக்கிறேன். எனக்கு மீண்டும் வாய்ப்பளிப்பதாக கட்சித்தலைமை எந்த உறுதியும் தரவில்லை. அதை நாங்கள் எதிர்பார்க்கவுமில்லை. ஆனால் முயற்சி செய்யப்போகிறேன்.'' என்றார்.
தற்போது பெருந்துறை சட்டப்பேரவை தொகுதியில் வென்ற ஜெயக்குமாருக்கு எதிரான வழக்கு நிராகரிக்கப்பட்ட காரணத்தால், அங்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா அல்லது இடைக்காலத் தடை தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்தபின், மொத்தமாக அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையம் தரப்பில் பேசிய வழக்கறிஞர் ஒருவர், ''தேர்தல் வழக்குகள் காரணமாகத்தான் மற்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் வெற்றி தொடர்பான வழக்குகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டுமென்பதால் விரைவில் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டு, அதன்பின்பு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது.'' என்றார்.
தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றால் பெரும்பாலும் ஆளும்கட்சி வெற்றி பெறுவதே, சமீபத்திய ஆண்டுகளில் கண்டுள்ள அனுபவமாகவுள்ளது. இதுகுறித்து பிபிசியிடம் பேசிய தேர்தல் வியூக வகுப்பாளர் லியோ ரீகன், ''எந்த ஆட்சியில் இடைத்தேர்தல் நடந்தாலும் அங்குள்ள மக்கள், ஆளும்கட்சி வெற்றி பெறுவதே தங்களுக்கு சாதகம் என்று நினைக்கவே வாய்ப்பு அதிகம். ஆனால் அரசியல் காரணமாக ஏற்படும் போட்டியில் இதற்கு முன்பாக பல்வேறு முயற்சிகள் நடந்தன. இப்போதுள்ள நிலையில் ஊரகப் பகுதிகளில் எந்தவொரு மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.'' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































