ஈஃபிள் கோபுரம் இந்து அமைப்பினரால் மூடப்பட்டதா? பின்னணி என்ன? - காணொளி
இந்து மதக் குழுவினர் வருகைக்காக பெண் பணியாளர்கள் சிலர், பணியிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஈஃபிள் கோபுரம் செப்டம்பர் 7ஆம் தேதி மூடப்பட்டது.
பி.ஏ.பி.எஸ் (B.A.P.S) அமைப்புடன் தொடர்புடைய சுமார் 100 பேர் கொண்ட குழு, சனிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்தைப் பார்வையிட்டது.
அவர்கள் நினைவுச்சின்னத்துக்கு வந்தபோது, பெண் ஊழியர்கள் தங்கள் பணியிடங்களில் இருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக ஊழியர் சங்கப் பிரதிநிதி டயான் டவோயின் தெரிவித்துள்ளார்.
"இந்தக் குழுவினர் வருகையின்போது, ஆண் ஊழியர்களை அந்த இடங்களில் பணியமர்த்துவதற்காக, பெண் ஊழியர்கள் தங்கள் பணியிடங்களில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்," என்று அவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நிர்வாகம் பின்னர் ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும் டவோயின் கூறினார்.
அதுகுறித்துப் பேசிய டவோயின், "நடந்த சம்பவத்தாலும், சில பெண் ஊழியர்கள் நடத்தப்பட்ட விதத்தாலும் அவர்கள் அனைவரும் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கின்றனர். குறிப்பாக பெண் ஊழியர்களுக்கு இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது," என்று கூறினார்.
விரிவாகக் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



