'மெட்டா ஸ்மார்ட் கிளாஸ் புரட்சி' - அனுமதியின்றி பிறரை வீடியோ எடுக்க விடாமல் தடுக்குமா?

ஸ்மார்ட் கண்ணாடிகள், ஏஐ, தொழில்நுட்பம், பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அந்த ஒளியை யாராவது சேதப்படுத்தினாலோ அல்லது மறைத்தாலோ கேமரா வேலை செய்யாதபடி கண்ணாடிகளை சமீபத்தில் அப்டேட் செய்துள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.
    • எழுதியவர், ஒலிவியா கோப்லேண்ட்
    • பதவி, பிபிசி நியூஸ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தற்போது வேகமாக வளர்ந்து வரும் அணியக் கூடிய, தொழில்நுட்பங்களில் ஒன்றான மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கண்ணாடிகள் விரைவில் நமது தெருக்களுக்கும், பூங்காக்களுக்கும் வரக்கூடும். ஆனால், இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளின் எதிர்காலம் அனைவருக்கும் சாதகமானதாகத் தெரியவில்லை.

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் பயனர்கள் யார் உதவியுமின்றி ஃபோன் பேசவும், செயற்கை நுண்ணறிவுடன் உரையாடவும், கண்ணாடியைத் தொடுவதன் மூலம் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுக்கவும் முடியும். இது மக்களிடையே தனியுரிமை குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

பிரிட்டனில் 800க்கும் மேற்பட்ட பப்களை நடத்தும் 'வெதர்ஸ்பூன்ஸ்' நிறுவனம், தங்கள் வளாகத்திற்குள் இந்தக் கண்ணாடிகளைப் பயன்படுத்தி வீடியோ எடுக்கத் தடை விதித்துள்ளது. மேலும், இது பெண்களைத் துன்புறுத்தப் பயன்படுத்தப்படலாம் என பெண்ணுரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், டிக்டோக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் கன்டென்ட் கிரியேட்டர்களின் வீடியோக்கள் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருவதால், பொது இடங்களில் இவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பெல்ஃபாஸ்டை சேர்ந்த 31 வயது இளைஞரான பியர்ஸ் வலேலி, மெட்டா ரே-பான் கண்ணாடிகளைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வீடியோக்களை உருவாக்குகிறார். வழிப்போக்கர்களிடம் அவர் இயல்பாகப் பேசி எடுக்கும் வீடியோக்கள் டிக்டோக்கில் பல லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளன. பெல்ஃபாஸ்ட் நகர மையத்தில் படமாக்கப்பட்ட அவருடைய மிகவும் பிரபலமான வீடியோக்களில் ஒன்று, டிக்டோக்கில் 6 லட்சம் பார்வைகளைப் பெற்றது.

இந்த வீடியோக்களின் வெற்றியானது, "அதன் இயல்பான மற்றும் நல்லெண்ணம் கொண்ட தன்மையையே சார்ந்துள்ளது. யாராவது வீடியோவை வெளியிட வேண்டாமென தன்னிடம் கேட்டால், அதைத் தான் ஒருபோதும் பதிவிட்டதில்லை என்றும், வீடியோவை நீக்குமாறு இதுவரை யாரும் தன்னைத் தொடர்புகொண்டு கேட்டதில்லை" என்றும் அவர் கூறினார்.

"அவர்களுடனான உரையாடலின் தன்மைதான் இதற்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன். நான் அவர்களை முட்டாளாக்கவில்லை என்பதும், இதை ஒரு நேர்மறையான விதத்திலேயே செய்கிறேன் என்பதும் அவர்களுக்குத் தெரியும்."

வலேலி பயன்படுத்தும் மெட்டா கண்ணாடிகள் பிராண்ட், தற்போதைய ஸ்மார்ட் கிளாஸ் விற்பனையில் சந்தையில் முன்னணியில் உள்ளது. இதுவரை 70 லட்சத்திற்கும் அதிகமான கண்ணாடிகள் விற்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறுகிறது.

மெட்டா கண்ணாடிகள் எப்படிச் செயல்படுகின்றன?

சில நூறு பவுண்டுகளில் (இந்திய மதிப்பில் ரூ. 22,000 முதல்) கிடைக்கும் இந்தக் கண்ணாடிகள், பிரபலமான ரே-பான் சன்கிளாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் சட்டங்களில் உள்ள கண்ணுக்கு சட்டெனத் தெரியாத சிறிய கேமராவை, பயனர்கள் தொடுவதன் மூலம் இயக்கலாம்.

இது வீடியோ எடுக்கப்படும்போது ஒரு சிறிய வெள்ளை ஒளியை ஒளிரச் செய்கிறது. இது மற்றவர்களுக்கு வீடியோ எடுக்கப்படுகிறது என்பதைத் தெரியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், புகைப்படம் எடுக்க ஒரு ஃபிளாஷ் லைட்டும் உள்ளது. "இந்த அம்சம் ஸ்மார்ட்போன்களிலும் பிற கேமராக்களிலும் இல்லை" என்று மெட்டா செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஸ்மார்ட் கண்ணாடிகள், ஏஐ, தொழில்நுட்பம், பெண்கள்

பட மூலாதாரம், Pearse Vallely

படக்குறிப்பு, மெட்டா கண்ணாடிகளை அணிந்திருக்கும் பியர்ஸ் வலேலி, தான் அவற்றை "ஒரு நேர்மறையான விதத்தில்" பயன்படுத்துவதாகக் கூறுகிறார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அந்த வெள்ளை ஒளியின் மீது ஏதாவது செய்து அதை மறைத்தால், கேமரா வேலை செய்யாதவாறு கண்ணாடிகளை சமீபத்தில் அப்டேட் செய்துள்ளதாகவும் மெட்டா தெரிவித்துள்ளது. மற்ற நிறுவனங்களின் ஏஐ அல்லது ஸ்மார்ட் கண்ணாடிகள் மெட்டாவை போலவே விற்பனையானால், அடுத்த சில ஆண்டுகளில் சுமார் 10 கோடி மக்கள் இந்தக் கண்ணாடிகளை வாங்குவார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தன்னிச்சையான மற்றும் இயற்கையான உரையாடல்களை நம்பியே வீடியோக்களை எடுக்கும் வலேலி, தனது கண்ணாடியில் உள்ள ஒளியின் காரணமாகத் தான் வீடியோ எடுப்பதை மக்கள் பெரும்பாலும் அறிவார்கள் என்று கூறினார். அதோடு, சரியான நேரத்தில் அவர்களைச் சந்திக்க முடிந்தால், படப்பிடிப்பு முடிந்த பிறகு, தான் அவர்களைப் பதிவு செய்திருப்பதை அவர்களுக்குத் தெரிவிக்க முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு அயர்லாந்தில், பொது இடங்களில் ஒருவரை ரகசியமாக வீடியோ எடுப்பதுகூட சட்டபூர்வமானதே. ஏனெனில், பொது இடங்களில் இருப்பவர்களுக்கு தனியுரிமை மீதான நியாயமான எதிர்பார்ப்பு என்பது இருப்பதில்லை.

அந்த வீடியோ பதிவு துன்புறுத்துவதாகவோ, பின்தொடர்வதாகவோ, பாலியல் சீண்டல் நோக்கத்திலோ அல்லது தனியுரிமைக்கான நியாயமான எதிர்பார்ப்பு இருக்கும் சூழ்நிலைகளிலோ இருந்தால் மட்டுமே அது சட்டவிரோதமாகும்.

"ஒருவருடன் 30 விநாடிகள் உரையாடுவது தவறில்லை" என்று வலேலி கூறுகிறார். "தொழில்நுட்பத்தின் காரணமாக நாம் மனித உரையாடல்களை இழந்து வருகிறோம் என்று நான் நினைக்கிறேன். அதை மீண்டும் கொண்டு வர நான் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முயல்கிறேன்."

"மக்கள் முரட்டுத்தனமாகவும், தரக் குறைவாகவும் நடந்துகொண்டால்" மெட்டா கண்ணாடிகளைத் தடை செய்வதன் பின்னணியில் உள்ள காரணத்தைத் தன்னால் புரிந்துகொள்ள முடிவதாக வலேலி கூறுகிறார். ஆனால் வீடியோ எடுப்பதன் பின்னணியில் உள்ள நோக்கமே முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்மார்ட் கண்ணாடிகள், ஏஐ, தொழில்நுட்பம், பெண்கள்
படக்குறிப்பு, இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் மூலம் கைகளைப் பயன்படுத்தாமலேயே ஃபோன் பேசவும், பாட்டு கேட்கவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கவும் முடியும்.

மேலும், "நான் இதைச் செய்வது மக்களுக்குத் தெரியும், ஆனால் மற்றவர்கள் போலி அல்லது ட்ரோல் (troll) கணக்குகளில் இதைச் செய்கிறார்கள். புதிதாக என்ன கண்டுபிடிக்கப்பட்டாலும், மக்கள் அதைத் தவறான காரணங்களுக்காகப் பயன்படுத்தவே செய்வார்கள்," என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வலேலி, தான் எந்த எதிர்ப்பையும் சந்திக்கவில்லை என்று கூறினாலும், கண்ணாடிகளைப் பயன்படுத்தி வீடியோ எடுப்பவர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே உரசல் அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த டிசம்பரில், நியூயார்க் சப்வே ரயிலில் ஒரு நபர் அணிந்திருந்த மெட்டா கண்ணாடியை ஒரு பெண் இரண்டாக உடைத்த சம்பவத்திற்குப் பிறகு, மக்கள் அந்தப் பெண்ணை பாராட்டினார்கள். கடந்த ஜூலை மாதம், ஸ்காட்லாந்தில் பொது மக்களை ரகசியமாக வீடியோ எடுத்த ஒரு டிக்டோக்கர் மீது வந்த புகாரையடுத்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.

தங்கள் நிறுவனத்தின் தடையைக் குறிப்பிட்டுப் பேசிய வெதர்ஸ்பூன்ஸ் செய்தித் தொடர்பாளர், ஸ்மார்ட் கண்ணாடிகள் "ரகசிய கண்காணிப்புக்கு வழிவகுப்பதன் மூலம் பொது அறிவை மீறுவதாக" கூறினார். அதேபோல, காமிக் கான் நார்தர்ன் அயர்லாந்து நிகழ்வை நடத்தும் மோனோபோலி ஈவென்ட்ஸ் நிறுவனமும், ரகசிய வீடியோ பதிவுகள் குறித்த கவலைகள் காரணமாகத் தங்களது நிகழ்வுகளில் இந்தக் கண்ணாடிகளை அணிவதைத் தடை செய்துள்ளது.

இதற்கிடையில், பெண்களை அணுகி அவர்களின் கைபேசி எண்ணைக் கேட்பதும், அவர்களைக் கவரும் வார்த்தைகளைக் கூறி அவர்களின் எதிர்வினைகளை வீடியோ எடுப்பதுமான டிக்டோக் வீடியோக்கள் '#howtogetagirlfriend' என்ற ஹேஷ்டேக்குடன் அடிக்கடி பதிவிடப்பட்டு, ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெறுகின்றன.

ஸ்மார்ட் கண்ணாடிகள், ஏஐ, தொழில்நுட்பம், பெண்கள்
படக்குறிப்பு, இந்தக் கண்ணாடிகளால் தனியுரிமைக்குப் பாதிப்பு ஏற்படுமென பெண்ணுரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

துன்புறுத்தல் குறித்த கவலைகள்

பெண்கள் வள மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பெண்கள் துறை பிரதிநிதியான எலைன் க்ரோரி கூறுகையில், இந்தக் கண்ணாடிகள் எப்போது, ​​எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகவும், இது ஒப்புதல் தொடர்பான சிக்கல்களுக்கு வழிவகுப்பதாகவும் கூறுகிறார்.

"தற்போது, நீங்கள் ஒரு கேமரா அல்லது மொபைலில் வீடியோ எடுத்தால், நான் அதைப் பார்த்துவிட்டு விலகிச் சென்றுவிடுவேன். ஆனால், ஒரு ஏஐ கேமராவால் நீங்கள் படம் பிடிக்கப்படுவது உங்களுக்குத் தெரியாமலேயே போகலாம்" என்றார்.

'அப்-ஸ்கர்ட்டிங்' (upskirting - அனுமதியின்றி பெண்களின் ஆடைகளுக்குக் கீழே புகைப்படம் எடுப்பது) போன்ற சட்டவிரோதமான செயல்களுக்கும் இந்தக் கண்ணாடிகள் பயன்படுத்தப்படுவதாகக் கவலைகள் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

வீடியோக்களை நீக்குமாறு மக்கள் சமூக ஊடகங்களிடம் முறையிடலாம் என்றும், சில இடங்கள் 'சூழ்நிலைக்கு ஏற்ப' தடை அறிவிப்புப் பலகைகளை வைத்துள்ளதாகவும் க்ரோரி கூறினார். ஆனால் சட்டங்கள் இன்னும் இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லை என்று அவர் கருதுகிறார்.

"ஒரு நபரை வீதியிலோ, பேருந்திலோ, வகுப்பறையிலோ வீடியோ எடுத்தால், அவருக்கு எந்த சட்டபூர்வத் தீர்வும் கிடைக்காது," என்கிறார் அவர்.

நீதித்துறை இதுகுறித்துக் கூறுகையில், மெட்டா கண்ணாடிகளை ஒழுங்குபடுத்துவது தங்கள் துறை சார்ந்த குறிப்பிட்ட விஷயமல்ல என்றாலும், இந்தக் கண்ணாடிகளின் பயன்பாடு "குற்றவியல் வரம்பைத் தாண்டும் நடத்தையை" உள்ளடக்கியிருந்தால், பாலியல் சீண்டலின் ஒரு வடிவமான 'அப்-ஸ்கர்ட்டிங்' போன்ற தற்போதுள்ள குற்றவியல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் கண்ணாடிகள், ஏஐ, தொழில்நுட்பம், பெண்கள்
படக்குறிப்பு, பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்தக் கண்ணாடிகள் மிகவும் பயனுள்ளவை என்கிறார் ஜெஃப் மெக்கான்வில்லே.

மெட்டா கண்ணாடிகளின் நன்மைகள்

பெல்ஃபாஸ்டில் உள்ள தனது கடையில் மெட்டா கண்ணாடிகளை விற்பனை செய்யும் கண் மருத்துவ நிபுணரான ஜெஃப் மெக்கான்வில்லேவுக்கு இதன் "தவறான பயன்பாடு" குறித்துக் கவலைகள் இருந்தாலும், இந்தத் தொழில்நுட்பத்தில் பல நன்மைகளும் உள்ளதாகக் கூறுகிறார்.

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நாளிதழ்களையும் பெயர்ப் பலகைகளையும் படிக்க அனுமதிக்கும் 'டெக்ஸ்ட் டூ ஸ்பீச்' (எழுத்துகளைப் படித்துக் காட்டும்) அம்சத்தைத் தனது நோயாளிகள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"பார்வைக் குறைபாடுள்ள எனது முதிய நோயாளிகளுக்கு, இது மிகவும் பயனுள்ள ஓர் அம்சம். இவை அற்புதமானவை."

மெட்டா விடுத்துள்ள ஓர் அறிக்கையில், இந்தக் கண்ணாடிகள் "பார்வைக் குறைபாடு அல்லது செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு முக்கியமான புதிய தொழில்நுட்பத்தை வழங்குகின்றன. மக்கள் இந்தத் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் கட்டுப்படுத்துவது ஒரு பெரிய பின்னடைவாக அமையும்" என்று தெரிவித்துள்ளது.

"இயற்கையாகவே சில இடங்களில் வீடியோ எடுக்கப்படக் கூடாது, அது நியாயமானதும்கூட. ஆனால் அதற்கான விதிகள் அனைவருக்கும் சீராக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்."

சமீபத்திய ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சியில், இன்ஸ்டாகிராமின் தலைவர் ஆடம் மொஸேரி கூறுகையில், "மக்களைத் தவறாகப் பயன்படுத்தும் வகையிலும், அவர்களைத் துன்புறுத்தும் வகையிலும்" யாராவது காணொளிகளைப் பதிவிட்டால், "நாங்கள் அந்தக் காணொளிகளைத் தளத்தில் இருந்து நீக்கி விடுவோம்" என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு