'பெண் கைது, குடும்ப எதிர்ப்பு' - இஸ்லாம் மதத்தைத் தழுவிய உத்தரப் பிரதேச நபரின் வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

தனது தனிநபர் சுதந்திரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று கோரி ஆயுஷ் மாலிக் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

பட மூலாதாரம், Advocate Umar Khalid

படக்குறிப்பு, தனது தனிநபர் சுதந்திரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று கோரி ஆயுஷ் மாலிக் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த மருந்து வணிகரான ஆயுஷ் மாலிக் தொடர்பான வழக்கில், அவர் தனது விருப்பத்தின்பேரிலேயே இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் புதன்கிழமை கருத்து தெரிவித்துள்ளது.

ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்த நீதிமன்றம், அவரது தனிப்பட்ட சுதந்திரத்தை மீட்டளித்துள்ளது.

ஆயுஷ் மாலிக் வயது வந்தவர் என்றும், தனது வாழ்க்கை தொடர்பான முடிவுகளை அவரே எடுக்கும் திறன் கொண்டவர் என்றும் நீதிபதி சந்தீப் ஜெயின் தெரிவித்தார்.

சட்ட உதவி அமைப்பான 'குடிமை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சங்கம்'(ஏபிசிஆர்), ஆயுஷ் மாலிக்கிற்குச் சட்ட உதவியை வழங்கியிருந்தது.

2014-ஆம் ஆண்டு தன் விருப்பத்தின்பேரில் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாகவும், அந்த முடிவில் எந்தவித அழுத்தமோ, மிரட்டலோ, தேவையில்லாத செல்வாக்கோ அல்லது தூண்டுதலோ இல்லை என நீதிமன்றத்தில் ஆயுஷ் கூறினார்.

'ஆயுஷ் வயது வந்தவர் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அவர் விரும்பும் மதத்தைப் பின்பற்றவும், விரும்பும் நபரைத் திருமணம் செய்யவும் அவருக்கு உரிமை உண்டு. இதில் அரசோ அல்லது வேறு யாரோ தலையிட முடியாது என நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக' ஏபிசிஆருடன் தொடர்புடைய நதீம் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், ஆயுஷின் தந்தை தேவராஜ் மாலிக் அளித்த புகாரின் அடிப்படையில், "சதித்திட்டமிட்டு மதமாற்றம் செய்தது" என்ற குற்றச்சாட்டின் கீழ், ஆயுஷின் மனைவி என கூறப்படும் சாந்த்னி குரேஷி மற்றும் மாமனார் இஸ்லாம் குரேஷியை ஷாம்லி காவல்துறை கைது செய்திருந்தது.

அதன்பிறகு, ஜூன் மாத இறுதியில், ஆயுஷ் மாலிக் பூஜை செய்வதாகத் தோன்றும் ஒரு காணொளி வெளியாகியது.

அலகாபாத் உயர்நீதிமன்றம் என்ன கூறியது?

ஆயுஷ் மாலிக் தனது விருப்பத்தின்பேரில் இஸ்லாம் மதத்தைத் தழுவி, "முகம்மது அலி" என்ற பெயரை எடுத்துக்கொண்டதாகக் கூறுகிறார்.

பட மூலாதாரம், AYUSH Malik Social Media

படக்குறிப்பு, ஆயுஷ் மாலிக் தனது விருப்பத்தின்பேரில் இஸ்லாம் மதத்தைத் தழுவி, "முகம்மது அலி" என்ற பெயரை எடுத்துக்கொண்டதாகக் கூறுகிறார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஆயுஷ் மாலிக் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது புதன்கிழமை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

2014-ஆம் ஆண்டு தன் விருப்பத்தின்பேரில் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக நீதிமன்றத்தில் ஆயுஷ் கூறினார்

மேலும், சாந்த்னி குரேஷியைத் திருமணம் செய்ய விருப்பம் இருப்பதாகவும் கூறினார். வயது வந்த ஒருவருக்கு, தனது மனச்சாட்சிக்கேற்ப மதத்தைத் தேர்ந்தெடுக்கவும், தனது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யவும் அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்குகிறது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

ஆயுஷின் தனிநபர் சுதந்திரத்தைத் தொடர்ந்து கட்டுப்படுத்துவதற்கான எந்தச் சட்ட அடிப்படையும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது. அவர் விரும்பும் இடத்தில் வசிக்கவும், தாம் தேர்ந்தெடுத்த நபருடன் வாழவும், விரும்பும் மதத்தைப் பின்பற்றவும், திருமணம் தொடர்பான முடிவுகளை சட்டப்படி எடுக்கவும் சுதந்திரம் உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு உள்ளூர் செய்தியாளர் பங்கஜ் குமாரிடம் தொலைபேசியில் பேசிய ஆயுஷ் மாலிக்கின் தந்தை தேவராஜ் மாலிக் நீதிமன்ற உத்தரவை மதிப்போம் என்று கூறினார். ''போலீஸாரை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், போலீஸார் எப்போதாவது ஒருமுறைதான் வந்து செல்வார்கள்" என்றார் அவர்.

இந்த மனு தாக்கல் செய்யப்பட்டபோது பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் தொலைபேசி வாயிலாக பேசிய ஆயுஷ், "எனது மதச் சுதந்திரத்தை நீதிமன்றத்தின் மூலம் பெற விரும்புகிறேன். அதனால்தான் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன். என் குரல் கேட்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கூறியிருந்தார்.

தீர்ப்புக்குப் பிறகு, ஆயுஷ் மாலிக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உமர் காலித், பிபிசி நியூஸ் ஹிந்தியிடம், "இஸ்லாம் மதத்தைத் தழுவியது தொடர்பாக தனது நிலைப்பாட்டை ஆயுஷ் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தினார். சில அதிகாரிகள் உதவியுடன் அவரது தந்தை அவரை வீட்டில் அடைத்து வைத்திருந்தார். 30 முதல் 35 நாட்களுக்குப் பிறகே அவரது கடையில் அமர அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை" என்றார்.

"ஆயுஷை விடுவிக்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் தீர்ப்பு. இனி அவர் காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதில்லை. அவர் விரும்பிய இடத்துக்குச் செல்லலாம், விரும்பிய மதத்தைப் பின்பற்றலாம், விரும்பும் நபரைத் திருமணம் செய்யலாம்" என்றும் அவர் கூறினார்.

ஆயுஷ் மாலிக்கின் மனைவி என கூறப்படும் சாந்த்னி குரேஷி கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசிய வழக்கறிஞர் உமர் காலித், "அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" என்றார்.

பூஜை காணொளி குறித்து அவர் கூறியது என்ன?

பூஜை செய்வதுடன், இந்து மதத்திற்குத் திரும்புவதாகக் கூறும் ஆயுஷ் மாலிக்கினுடையது என கூறப்படும் வைரல் காணொளி.

பட மூலாதாரம், Viral Video Screengrab

படக்குறிப்பு, பூஜை செய்வதுடன், இந்து மதத்திற்குத் திரும்புவதாகக் கூறும் ஆயுஷ் மாலிக்கினுடையது என கூறப்படும் வைரல் காணொளி.

ஜூன் மாதத்தில், ஆயுஷ் மாலிக் பூஜை செய்வதாகக் காட்டப்படும் ஒரு காணொளி வெளியாகியது.

அந்தக் காணொளியில் அவர் மீண்டும் இந்து மதத்தை ஏற்றுக்கொள்ளப் போவதாகக் கூறியிருந்தார்.

அந்தக் காணொளி உண்மையானது என ஆயுஷின் தந்தை தேவராஜ் மாலிக் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் தெரிவித்திருந்தார். எனினும், ஷாம்லி காவல் கண்காணிப்பாளர் நரேந்திர பிரதாப் சிங், அதுகுறித்து தமக்குத் தகவல் இல்லை என்று கூறியிருந்தார்.

இந்து மதத்திற்குத் திரும்புவதாகக் கூறப்படும் அந்த வைரல் காணொளி குறித்து ஆயுஷ் கூறுகையில், "உணர்ச்சி ரீதியான அழுத்தத்தின் கீழ் அந்தக் காணொளியை என்னிடம் பதிவு செய்ய வைத்தனர். நான் என் தாயை மிகவும் நேசிக்கிறேன். அவரது உயிரை காரணம் காட்டி, இந்து மதத்திற்குத் திரும்புவதாக ஒரு காணொளி வெளியிட என்னை கட்டாயப்படுத்தினர்" என்றார்.

தீர்ப்புக்கு முன்பு பிபிசியிடம் பேசிய ஆயுஷ், "என் தனிப்பட்ட மதச் சுதந்திரத்தை நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. சட்டத்தின் மூலம் என் உரிமையைப் பெற விரும்புகிறேன்" என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கின் பின்னணி என்ன?

தந்தை தேவராஜ் மாலிக்குடன் ஆயுஷ் மாலிக் இடம்பெற்றதாகக் கூறப்படும் காணொளி.

பட மூலாதாரம், Viral Video Screengrab

படக்குறிப்பு, தந்தை தேவராஜ் மாலிக்குடன் ஆயுஷ் மாலிக் இடம்பெற்றதாகக் கூறப்படும் காணொளி.

ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மருந்து வணிகரின் மகனான ஆயுஷ் மாலிக், இஸ்லாம் மதத்திற்கு மாறியிருந்தார். பின்னர் தனது மனைவி என கூறப்படும் பெண்னும், மாமனார் என சொல்லப்படுபவரும் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசியிருந்தார்.

ஜூன் 6-ஆம் தேதி, ஆயுஷ் மாலிக் எனப்படும் முகம்மது அலியின் தந்தை தேவராஜ் மாலிக் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

அதன்பிறகு, "சதித்திட்டம் தீட்டி மதமாற்றம் செய்தனர்" என்ற குற்றச்சாட்டின் கீழ், அவரது மனைவி எனக் கூறப்படும் சாந்த்னி குரேஷி மற்றும் மாமனார் இஸ்லாம் குரேஷி கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில், ஆயுஷ் மாலிக் எனப்படும் முகம்மது அலியின் மனைவி சாந்த்னி குரேஷி மற்றும் பெயர் குறிப்பிடப்பட்ட ஒன்பது பேர், மற்றும் அடையாளம் தெரியாத ஒருவரும் குற்றம்சாட்டப்பட்டவர்களாக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதில் சாந்த்னியின் குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு மெளலவியும் குற்றஞ்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கைப் பற்றி ஊடகங்களிடம் பேசிய ஷாம்லி காவல் கண்காணிப்பாளர் நரேந்திர பிரதாப் சிங், "சுமார் 30 வயதான ஆயுஷ் மாலிக் ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை தேவராஜ் மாலிக் ஷாம்லி நகரின் முக்கிய மருந்து வணிகர்களில் ஒருவர். அவர் ஷாம்லி மருந்து வணிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். நான்கு குழந்தைகளில் ஒரே மகனும் இளையவரும் ஆயுஷ்தான்" என்றார்.

காவல் கண்காணிப்பாளரின் கூற்றுப்படி சொத்தை அபகரிக்கும் நோக்கில் திட்டமிட்டு சாந்த்னி குரேஷி தனது மகனை வலையில் சிக்கவைத்து மதமாற்றம் செய்ததாக தேவராஜ் மாலிக் தனது புகாரில் கூறியுள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஆயுஷ் எனப்படும் முகம்மது அலி, "என் பெயரில் எந்தச் சொத்தும் இல்லை. சொத்துகளை என் சகோதரிகளுக்கும் என் தாயாருக்கும் அளிக்குமாறு என் தந்தையின் கூறியுள்ளேன். இந்த விவகாரத்தில் சொத்தை ஒரு பிரச்னையாக மாற்ற வேண்டாம்" என்று தெரிவித்திருந்தார்.

ஆயுஷ் மாலிக் எனப்படும் முகம்மது அலியின் மாமனார் என கூறப்படும் இஸ்லாம் குரேஷியை காவல்துறை கைது செய்திருந்தது.

பட மூலாதாரம், Paras Jain

படக்குறிப்பு, இஸ்லாம் குரேஷியை காவல்துறை கைது செய்திருந்தது.

தந்தை தேவராஜ் மாலிக்கின் குற்றச்சாட்டுகள்

தேவராஜ் மாலிக் பிபிசியிடம், "என் மகன் மதம் மாறியிருப்பது இந்த ஆண்டு பிப்ரவரியில்தான் எனக்குத் தெரியவந்தது. அவர் மீண்டும் இந்துமதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பலமுறை கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர் சம்மதிக்கவில்லை. ஒரு சதித்திட்டத்தின் மூலம் அவர் வலையில் சிக்கவைக்கப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டார்" என்றார்.

மதமாற்றம் குறித்து தனது குடும்பத்தின் எதிர்வினை பற்றி ஆயுஷ் மாலிக் கூறுகையில், "என் குடும்பத்தினர் அதிருப்தியில் உள்ளனர். 'இந்துவாக இருந்து எங்களுடன் வாழ வேண்டும்' என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நான் அவர்களிடம், 'நான் உங்களுடையவன்தான். அதற்காக இந்துவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. என் புதிய மத அடையாளத்துடனும் நான் வாழ முடியும்' என்று சொல்கிறேன்" என்றார்.

மேலும், தனது மகனுக்கும் சாந்த்னி குரேஷிக்கும் இடையிலான நிக்காஹ் (திருமண) ஆவணம் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போலியாக தயாரிக்கப்பட்டதாகவும் தேவராஜ் மாலிக் குற்றம்சாட்டியிருந்தார்.

அந்த நிக்காஹ் ஆவணத்தை காவல்துறை தற்போது ஆய்வு செய்து வருகிறது. அதே நேரத்தில், அந்த நிக்காஹ் தனது விருப்பத்தின் பேரிலேயே நடைபெற்றது என்று ஆயுஷ் மாலிக் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு