ரஷ்யா தடைகள் மசோதாவை நிறைவேற்றிய அமெரிக்கா: இந்தியா மீது 100% வரை வரி விதிக்க வழி

பட மூலாதாரம், Getty Images
ரஷ்யா மீது தடைகள் விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை 262-159 என்ற வாக்குகள் அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதா மூலம், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் ஐந்து நாடுகள் மீது 100% வரை வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துக்கு அதிகாரம் கிடைக்கும்.
இந்த நாடுகளில் இந்தியாவும் அடங்கும். அதிகாரப்பூர்வமாக, இந்த மசோதா '2026-ஆம் ஆண்டின் லிண்ட்சே கிரஹாம் ரஷ்யா மற்றும் இரான் மீது தடைகள் விதிக்கும் சட்டம்' என்று அழைக்கப்படுகிறது.
சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளும் இந்த நடவடிக்கையின் கீழ் இலக்காகக் கூடும்.
இந்த மசோதாவுக்கு ஏற்கெனவே அமெரிக்க செனட் பெரும்பான்மை வாக்குகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, அதிபர் டொனால்ட் டிரம்பின் கையெழுத்துக்காக மசோதா அனுப்பப்படும்.
எனினும், ரஷ்யா மீது தடைகள் விதிக்கும் இந்த மசோதா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப்பை கட்டாயப்படுத்தவில்லை.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி கொள்முதலைக் குறைப்பதற்காக அமெரிக்காவின் பல ஐரோப்பிய கூட்டாளி நாடுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அந்த நாடுகளுக்கு இந்த மசோதா குறிப்பிடத்தக்க சலுகைகளையும் வழங்குகிறது.
ரஷ்யா மீது தடைகள் விதிக்கும் இந்த மசோதாவுக்கு ஆதரவளிப்பதில் முக்கியப் பங்கு வகித்த அமெரிக்க செனட்டர் ஜீன் ஷஹீன், "இன்று ஒரு முக்கியமான நாள். புதினுக்கு நாடாளுமன்றம் தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது," என்றார்.
இந்த மசோதா, இந்தியாவும் அமெரிக்காவும் ஆரம்பகட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் எண்ணெயின் அளவையும் அதிகரித்துள்ளது.
தேசிய நலன் கருதி, தடைகளில் இருந்து விலக்கு அளிக்கும் அதிகாரத்தையும் இந்தச் சட்டம் அதிபருக்கு வழங்குகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் பதில்
இந்த மசோதாவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை பதிலளித்தது.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்யா மற்றும் இரான் மீது தடைகள் விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டதை இந்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். பலமுறை கூறியுள்ளபடி, 140 கோடி மக்களின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது. சந்தை நிலவரம் மற்றும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் விநியோகத்தைப் பொறுத்து இந்தியா தொடர்ந்து அதனை உறுதி செய்யும்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், "கடந்த சில மாதங்களாக அமெரிக்க அரசின் பல்வேறு பிரதிநிதிகளுடன் இந்த விவகாரம் உயர்மட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா இருதரப்பு உறவுகள் மட்டுமல்லாமல், சர்வதேச எரிசக்திச் சந்தையிலும் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை இந்தியா தெளிவாக எடுத்துரைத்துள்ளது. தனது வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக இருப்பதையும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்த முன்னேற்றங்களின் தாக்கத்தை எதிர்கொள்ள இந்திய வர்த்தக மற்றும் தொழில் அமைப்புகளுடன் அரசு நெருக்கமாக இணைந்து செயல்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு அதிகரிக்கும் சவால்கள்
டெல்லியைச் சேர்ந்த உலகளாவிய வர்த்தக ஆய்வு முன்முயற்சி அமைப்பின் இயக்குநர் அஜய் ஸ்ரீவஸ்தவா, இந்த மசோதா இந்தியாவுக்கான சவால்களை அதிகரிக்கும் எனக் கூறுகிறார்.
எக்ஸ் தளத்தில் அவர் எழுதிய பதிவில், "2025-26 நிதியாண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 30.3 சதவீதமாக இருந்தது. மொத்தம் 134.7 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் இறக்குமதியில், 40.8 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெய் ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்டது. 2026 ஜூலை மாதத்தில் மட்டும், இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு பாதிக்கும் அதிகமாக இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
"140 கோடி மக்களுக்கு மலிவான மற்றும் அணுகக்கூடிய எரிசக்தியை உறுதி செய்வதற்காகவே இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது. போரை தீவிரப்படுத்துவதற்காக அல்ல. இந்தக் கொள்முதல்கள் ரஷ்ய எண்ணெய் உலகச் சந்தையில் தொடர்ந்து கிடைக்க உதவியதோடு, சர்வதேச அளவில் விநியோகத்தையும் விலைகளையும் நிலையாக வைத்திருக்கவும் பங்களித்துள்ளன" என்றும் அவர் கூறியுள்ளார்.
"100 சதவீதம் வரை வரி விதிப்பது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதே நேரத்தில் அமெரிக்க நுகர்வோருக்கான செலவுகளையும் உயர்த்தலாம். மேலும், முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்க அதிபருக்கு அசாதாரண அதிகாரத்தையும் வழங்கும். ரஷ்ய எண்ணெய் தொடர்பான இந்த வரிகள், சமநிலையற்ற நிபந்தனைகளைக் கொண்டதாகக் கூறப்படும் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவை கையெழுத்திடச் செய்வதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் மற்றொரு அழுத்த நடவடிக்கையாகவும் இருக்கலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டம் அமலுக்கு வரும் தேதிக்கு முந்தைய 12 மாதங்களில், ரஷ்ய கச்சா எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவை அதிக அளவில் இறக்குமதி செய்த முதல் ஐந்து நாடுகள் மற்றும் சட்டம் அமலுக்கு வந்த 30 நாட்கள் கடந்த பின்னரும் ரஷ்ய எண்ணெயை புதிதாக வாங்கிய நாடுகளே இந்த வரிகளின் முக்கிய இலக்காக இருக்கும்.
மேலும், ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தவிர்க்க ரஷ்யாவுக்கு உதவும் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் நாடுகளும் 100 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
எனினும், ரஷ்யாவிலிருந்து இயற்கை எரிவாயு இறக்குமதியை கணிசமாகக் குறைத்த நாடுகள் அல்லது ரஷ்யாவின் மொத்த எரிவாயு ஏற்றுமதியில் 15 சதவீதத்திற்கும் குறைவாக இறக்குமதி செய்யும் நாடுகள் இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு பெறும்.

பட மூலாதாரம், Getty Images
மசோதாவுக்கு எதிர்ப்பும் எழுந்தது
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் முதல் 10 நாடுகளையும் இந்த மசோதாவில் சேர்க்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டெனி ஹோயர் ஒரு திருத்தத்தை முன்வைத்தார். அந்தப் பட்டியலில் சீனா, இந்தியா, துருக்கி, அசர்பைஜான், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், மசோதாவின் இறுதி வடிவத்தில் அந்தத் திருத்தம் இடம்பெறவில்லை.
மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, ஹோயர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "இன்று நாடாளுமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா என்ன செய்ய முடியும், என்ன செய்யத் தயாராக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. யுக்ரேனின் வெற்றியையும் ரஷ்யாவின் தோல்வியையும் உறுதி செய்ய, இந்த மசோதாவில் அதிபர் விரைவாக கையெழுத்திட வேண்டும்" என்று தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானுக்கு எதிராக நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 11 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியது.
அதற்கு முன்பு, இந்தியா ரஷ்ய எண்ணெய் கொள்முதலைக் குறைத்திருந்தது. இதன் விளைவாக, 2025 டிசம்பரில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 38 மாதங்களில் இல்லாத குறைந்த அளவை எட்டியது.
இந்தியா-ரஷ்யா வர்த்தக உறவுகளை விமர்சித்து வந்த லிண்ட்ஸே கிரஹாம் இந்த மசோதாவுடன் தொடர்புடைய முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார். அவர் இந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி திடீரென உயிரிழந்தார். பின்னர், ஆகஸ்ட் 7-ஆம் தேதி இந்த மசோதா அமெரிக்க செனட்டில் 86-11 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.
எலிசபெத் வாரன், பெர்னி சாண்டர்ஸ் உள்ளிட்ட சில முக்கிய ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும், ராண்ட் பால் உள்ளிட்ட சில குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த மசோதா அதிபருக்கு மிகப் பரந்த அதிகாரங்களை வழங்கும் என்றும், அதன் விளைவாக விதிக்கப்படும் வரிகளின் சுமை அமெரிக்க மக்கள்மீது விழக்கூடும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
மேலும், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள்மீதும் வரிகளை விதிக்கும் அதிகாரத்தை அதிபருக்கு மேலும் விரிவுபடுத்தும் என்ற அச்சத்தையும் பல நாடாளு உறுப்பினர்கள் வெளிப்படுத்தினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































