எராட்டோஸ்தனீஸ்: வெறும் ஒரு குச்சியை வைத்து பூமியை அளந்த கிரேக்க அறிஞர்

எராட்டோஸ்தனீஸ்: ஒரு குச்சியால் பூமியின் அளவை அளந்த கிரேக்க அறிஞர்
    • எழுதியவர், எடிசன் வெய்கா
    • பதவி, பிபிசி நியூஸ் பிரேசிலுக்காக ஸ்லோவேனியாவில் இருந்து
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

நிலவியல் முதல் வானியல் வரை அறிவியல் பெரிதும் முன்னேறிய இன்றைய காலத்திலும், பூமி உருண்டையானது என்பதை நம்ப மறுக்கும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் கிமு 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைரீனை சேர்ந்த கிரேக்க அறிஞர் எராட்டோஸ்தனீஸ் (கிமு 276–194), ஒரு குச்சியை மட்டுமே பயன்படுத்தி பூமியின் கோள வடிவம் குறித்து ஏற்கெனவே நிலவிய கருத்தை கணித ரீதியாகச் சோதித்ததுடன், பூமியின் சுற்றளவையும் குறிப்பிடத்தக்க துல்லியத்துடன் கணக்கிட்டார்.

எராட்டோஸ்தனீஸின் கணக்கீட்டுக்கு அடிப்படையாக இருந்தது கோடை கதிர் திருப்பம் (Summer Solstice) என்ற முக்கியமான ஒரு வானியல் நிகழ்வு. அதாவது, பூமியின் துருவங்களில் ஒன்று சூரியனை நோக்கி அதிகபட்சமாகச் சாய்ந்திருக்கும் நாள்.

அலெக்சாண்ட்ரியா நூலகத்தின் இயக்குநராகப் பணியாற்றியபோது, எகிப்தின் தெற்குப் பகுதியிலுள்ள சயீன் நகரத்தில் (இன்றைய அஸ்வான்), கோடைக் கதிர் திருப்ப நாளில் நண்பகல் நேரத்தில் சூரியன் தரைக்கு முற்றிலும் செங்குத்தாக, அதாவது உச்சியில் (zenith) இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஓர் அறிவியல் கையெழுத்துப் பிரதியை எராட்டோஸ்தனீஸ் கண்டார். அப்போது சூரிய ஒளி ஒரு கிணற்றின் அடிப்பகுதியை நேரடியாகச் சென்றடையும் அளவுக்கு செங்குத்தாக இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுவே அவருக்குள் ஒரு புதிய சிந்தனையை உருவாக்கியது.

அதே நாளில் நண்பகல் நேரத்தில் வேறொரு இடத்தில் சூரிய ஒளி எந்தக் கோணத்தில் விழுகிறது என்பதை அளந்து, அந்த இரண்டு இடங்களுக்கும் இடையிலான தூரத்தைத் தெரிந்துகொண்டால், பூமியின் முழு சுற்றளவையும் கணக்கிட முடியும் என்பதை அவர் உணர்ந்தார். இதற்கு அடிப்படையான முக்கோணவியல் கணக்கீடு மட்டுமே தேவைப்பட்டது.

இரு நகரங்களுக்கு இடையிலான தூரத்தைக் கணக்கிடுதல்

இதற்காக முதலில் சயீனுக்கும் அலெக்சாண்ட்ரியாவுக்கும் இடையிலான தூரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். அந்தக் காலத்தில் வழக்கமாகப் பயன்படுத்தப்பட்ட முறையையே எராட்டோஸ்தனீஸ் முதலில் பின்பற்றினார். நீண்ட தூரங்களை ஒரே சீரான அடிகளுடன் நடந்து அளவிடுவதற்குப் பயிற்சி பெற்ற பயண அளவையர்களை அவர் பணியில் அமர்த்தினார்.

ஆனால் அதற்கு முன்பே, இந்த தூரத்தைக் கணிதத்தின் மூலம் கணக்கிட முடியுமா என்று அவர் சிந்தித்தார்.

"ஒட்டகங்கள் சயீனில் இருந்து அலெக்சாண்ட்ரியாவுக்கு செல்ல எடுத்துக் கொள்ளும் நேரத்தை வைத்து அந்த இரண்டு நகரங்களுக்கும் இடையிலான தூரத்தைக் கண்டறிய அவர் முயன்றார். ஆனால் அந்த முறையில் போதிய துல்லியம் கிடைக்காததால் அதைக் கைவிட்டார்," என்று மெக்கன்சி பிரஸ்பிடீரியன் பல்கலைக் கழகத்தின் (UPM) நிலவியலாளர் லியாண்ட்ரோ சாலெஸ் எஸ்டெவ்ஸ் கூறுகிறார்.

பயண அளவையர்களை நியமிக்க எராட்டோஸ்தனீஸ் எகிப்திய அரசின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டியிருந்ததாகவும் எஸ்டெவ்ஸ் குறிப்பிடுகிறார். இரண்டு நகரங்களுக்கும் இடையிலான நேர்கோட்டுத் தொலைவு சுமார் 800 கி.மீ. இன்றைய சாலை வழியில் குறைந்தபட்ச தூரம் 1,011 கி.மீ. இந்த தூரத்தை நடந்தே கடக்க சுமார் 204 மணிநேரம்.

அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தூர அளவீட்டு அலகான ஸ்டேடியம் (stadium) ஒன்றின் நீளம் 157 மீட்டருக்கும் சற்று அதிகம். அதன் அடிப்படையில் சயீனுக்கும் அலெக்சாண்ட்ரியாவுக்கும் இடையிலான தூரம் 5,040 ஸ்டேடியம் எனக் கணக்கிடப்பட்டது.

எராட்டோஸ்தனீஸ்: ஒரு குச்சியால் பூமியின் அளவை அளந்த கிரேக்க அறிஞர்

பட மூலாதாரம், Fine Art Images/Heritage Images/Getty Images

படக்குறிப்பு, கடந்த 1876இல் எரிக்கப்பட்ட அலெக்சாண்ட்ரியாவின் நூலகத்தைக் காட்டும் ஓவியம்

ஒரு குச்சியும் அதன் நிழலும்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கோடை கதிர்திருப்ப நாளில் அலெக்சாண்ட்ரியாவில் எராட்டோஸ்தனீஸ் ஒரு குச்சியைத் தரையில் செங்குத்தாக நட்டார். நண்பகல் நேரத்தில் அந்தக் குச்சி தரையில் ஏற்படுத்திய நிழலின் நீளத்தை அளவிடுவதே அவரது நோக்கம். அதன் மூலம் சூரிய ஒளி எந்தக் கோணத்தில் பூமியைத் தாக்குகிறது என்பதைக் கணக்கிட முடியும்.

அவர் பெற்ற கோணம் 7.2 டிகிரி. அதாவது, பூமியின் முழு சுற்றளவான 360 டிகிரியை 50-ஆல் வகுத்தால் கிடைக்கும் கோணம்.

அந்தக் காலத்திலேயே அறியப்பட்டிருந்த முக்கோணவியல் முறையைப் பயன்படுத்தி, சயீனுக்கும் அலெக்சாண்ட்ரியாவுக்கும் இடையிலான தூரத்தை 50-ஆல் பெருக்கினால் பூமியின் முழு சுற்றளவைப் பெற முடியும்.

எராட்டோஸ்தனீஸ் கணக்கிட்ட மதிப்பு 39,750 கிலோமீட்டர். இன்றைய அளவீட்டின்படி பூமியின் சுற்றளவு 40,075 கிலோமீட்டர். அதாவது, சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட அவரது கணக்கீடு இன்றைய அளவீட்டுக்கு மிக அருகில் இருந்தது.

பூமியின் ஆரத்தையும் அவர் கணக்கிட்டார். அவர் பெற்ற மதிப்பு 6,366 கிலோமீட்டர். இன்றைய கணக்கீட்டின்படி பூமியின் ஆரம் 6,371 கிலோமீட்டர்.

"எராட்டோஸ்தனீஸ் பூமியின் ஆரத்தையும் மிகுந்த துல்லியத்துடன் கணக்கிட்டார். அவர் பெற்ற மதிப்பு 6,366 கிலோமீட்டர்" என்கிறார் எஸ்டெவ்ஸ்.

எராட்டோஸ்தனீஸ்: ஒரு குச்சியால் பூமியின் அளவை அளந்த கிரேக்க அறிஞர்

பட மூலாதாரம், Getty Images

யார் இந்த எராட்டோஸ்தனீஸ்?

எராட்டோஸ்தனீஸ் பண்டைய கிரேக்க உலகின் முக்கியமான அறிஞர்களில் ஒருவர். அந்தக் காலத்தில் "அறிஞர்" என்பது இன்று வெவ்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள பல அறிவுத் துறைகளில் தேர்ச்சி பெற்ற ஒருவரைக் குறிக்கும். அதனால், அவர் பொதுவாக தத்துவவாதியாக வகைப்படுத்தப்பட்டாலும், கணிதவியலாளர், இலக்கண அறிஞர், கவிஞர், நிலவியலாளர், நூலகர், வானியலாளர் எனப் பல துறைகளிலும் பணியாற்றினார்.

அவர், வடக்கு ஆப்பிரிக்காவில், இன்றைய லிபியாவில் அமைந்திருந்த சைரீன் நகரில் பிறந்தார். அப்போது சைரீன் கிரேக்க உலகின் ஒரு பகுதியாக இருந்தது.

"பண்டைய கிரேக்கம் இன்றைய பொருளில் ஒரே நாடாக இருக்கவில்லை. அது பல நகர-அரசுகளைக் கொண்டிருந்தது. அவை ஒன்றுக்கொன்று சுதந்திரமாக இருந்தாலும், பொதுவான பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தன" என்கிறார் சாவ் பாலோ மாநில பல்கலைக் கழகத்தின் நிலவியலாளரும், ஆய்வாளருமான எலிசியூ சாவேரியோ ஸ்போசிட்டோ.

இதன் காரணமாக, அந்த நகர-அரசுகளுக்கு இடையே தொடர்பு வலையமைப்புகள் உருவாகின. மதம், மொழி, கலை, அரசியல் நடைமுறைகள் உள்ளிட்ட பலவற்றில் அவை ஒத்த பண்புகளைக் கொண்டிருந்தன. பண்டைய வரலாற்றுப் பதிவுகளின்படி, எராட்டோஸ்தனீஸ் இளம் வயதில் ஏதென்சுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அக்காலத்தின் முன்னணி தத்துவவாதிகளிடம் கல்வி பயின்றார். அங்கு அவரது அறிவுத் திறன் கவனத்தை ஈர்த்தது.

பின்னர் எகிப்தின் ஆட்சியாளரான மூன்றாம் தாலமி இயூர்கெட்டஸ் (கிமு 280–221), அவரை அலெக்சாண்ட்ரியாவுக்கு அழைத்து வர உத்தரவிட்டார். ஆரம்பத்தில் சக்தி வாய்ந்த தாலமி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசருக்குக் கல்வி கற்பிப்பதே அவரது பணியாக இருந்தது.

ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு, அக்கால அறிவுலகில் எந்த அறிவாளியின் கண்களையும் ஒளிரச் செய்யக்கூடிய ஒரு பதவி அவருக்குக் கிடைத்தது. அவர் அலெக்சாண்ட்ரியா நூலகத்தின் நூலகராகவும் இயக்குநராகவும் ஆனார். அது பண்டைய கிரேக்க உலகின் மிகப்பெரிய அறிவுக் களஞ்சியமாக இருந்தது.

அந்தப் பதவியில் இருந்தபோதுதான் அவரைப் புகழ்பெறச் செய்த இந்தச் சோதனைக்கான யோசனை உருவானது. ஆனால் அது அவரது ஒரே பங்களிப்பு இல்லை.

எராட்டோஸ்தனீஸ்: ஒரு குச்சியால் பூமியின் அளவை அளந்த கிரேக்க அறிஞர்

பட மூலாதாரம், PUBLIC DOMAIN

புவியியலின் தந்தை

மனித அறிவுத் துறையாக நிலவியலை நிறுவியவர்களில் எராட்டோஸ்தனீஸும் ஒருவர் என்று கருதப்படுகிறார். அவர் 'ஜியோகிராஃபிகா' (Geographica) என்ற நூலை எழுதினார். அதில் நிலவியல் துறைக்கான பல பதங்களையும் தனக்கென உருவாக்கிய சொற்களஞ்சியத்தையும் பயன்படுத்தினார்.

எராட்டோஸ்தனீஸின் பார்வையில், முதல் நிலவியலாளர் என்ற பெருமை கவிஞர் ஹோமருக்கே (கி.மு. 928 - 898) வழங்கப்பட வேண்டும். ஏனெனில், ஹோமரின் படைப்புகளில் காலநிலை மற்றும் நில அமைப்பு குறித்த பல விவரிப்புகள் இடம்பெற்றிருந்தன.

மூன்று தொகுதிகளாக எழுதப்பட்ட 'ஜியோகிராஃபிகா' நூலில் இருந்து பல பகுதிகளை அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த அறிஞர்கள் மேற்கோள் காட்டினர். அவர்களில் ரோமானிய இயற்கை வரலாற்று ஆசிரியரான காயுஸ் பிளினியஸ் செகுண்டஸ் (23–79), பொதுவாக பிளினி தி எல்டர் (Pliny the Elder) என்று அழைக்கப்படுபவர், குறிப்பிடத்தக்கவர்.

காலப்போக்கில் 'ஜியோகிராஃபிகா' முழுமையாகத் தொலைந்துவிட்டது. பிற நூல்களில் இடம்பெற்ற மேற்கோள்களின் மூலம் அதன் 155 பகுதிகள் மட்டுமே இன்று வரை அறியப்படுகின்றன.

"பூமி தட்டையானது என்ற மாதிரியை சில பண்டைய நாகரிகங்கள் பயன்படுத்தின. ஆனால் கிரேக்க அண்டவியல் சிந்தனையின் வழியாக கோள வடிவ பூமி குறித்த கருத்து பிற பகுதிகளுக்கும் பரவியது" என்று எஸ்டெவ்ஸ் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "பூமி தட்டையானது என்ற மாதிரியை சில பண்டைய நாகரிகங்கள் பயன்படுத்தின. ஆனால் கிரேக்க அண்டவியல் சிந்தனையின் வழியாக கோள வடிவ பூமி குறித்த கருத்து பிற பகுதிகளுக்கும் பரவியது" என்று எஸ்டெவ்ஸ் கூறுகிறார்.

பூமி தட்டையா? உருண்டையா?

சமகால ஆய்வாளர்களைப் பொறுத்தவரை, எராட்டோஸ்தனீஸின் கண்டுபிடிப்பில் முக்கியமான வேறொரு அம்சம் உள்ளது. அது, பூமி கோள வடிவமானது என்ற கருத்து அவருக்கு முன்பே நிலவியிருந்தது என்பதை அவரது சோதனை வெளிப்படுத்துகிறது.

ஏனெனில், ஒருவர் பூமியின் சுற்றளவை அளக்க நினைக்கிறார் என்றால், முதலில் அளப்பதற்கு ஒரு சுற்றளவு இருப்பதாக அவர் கருதியிருக்க வேண்டும்.

"எராட்டோஸ்தனீஸின் செயல்பாடுகள், பூமி உருண்டையானது என்ற கருத்து பண்டைய காலத்திலேயே இருந்ததைத் தெளிவாகக் காட்டுவதாக" 'அரை மணிநேரத்தில் வரலாறு' (História em Meia Hora) என்ற பாட்காஸ்டை நடத்தும் வரலாற்று ஆசிரியர் விட்டோர் சோரெஸ் கூறுகிறார்.

ஸ்போசிட்டோவின் கூற்றுப்படி, "இது சுவாரஸ்யமான கேள்வி. ஏனெனில் இதில் தத்துவம், கணிதம் இரண்டும் உள்ளன. தனது நோக்கத்தை அடைய அந்தப் பண்டைய அறிஞர் முக்கோணவியல் முறையைப் பயன்படுத்தினார். கிரேக்கர்கள் காலத்திலிருந்தே பூமி உருண்டையாக இருப்பதை நாம் அறிந்துள்ளோம்."

"கிரேக்கர்கள் கணிதத்தின் ஒரு பிரிவான வானியலை வளர்த்தபோது, கோள்களின் தோற்ற இயக்கத்தை விளக்குவதற்காக முப்பரிமாண மாதிரிகளை உருவாக்கினர். இது கிமு 4ஆம் நூற்றாண்டிலேயே நடந்தது."

எராட்டோஸ்தனீஸ் தவிர மேலும் பல அறிஞர்களையும் அவர் குறிப்பிடுகிறார். தத்துவவாதியும் வானியலாளருமான பொன்டஸின் ஹெரக்ளிடஸ் (கிமு 390–310), பூமி தனது சொந்த அச்சில் சுழல்கிறது என்ற கருத்தை முன்வைத்தார்.

வானியலாளரும் கணிதவியலாளருமான சாமோஸின் அரிஸ்டார்க்கஸ் (கிமு 310–230), பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்ற சூரிய மையக் கோட்பாட்டை முன்வைத்தார்.

"பண்டைய கிரேக்கத்தில் உருவாக்கப்பட்ட அண்டவியல் சிந்தனையில், நாம் இன்று அறிந்துள்ள பூமியின் கோள வடிவத்திற்கான ஆதாரங்களை முன்வைத்த முக்கியமான சிந்தனையாளர்கள் இருந்தனர்" என்கிறார் எஸ்டெவ்ஸ்.

கிரிகோர் ரீஷின் 'மார்கரிட்டா ஃபிலோசோஃபிகா' நூலின் 1535 பதிப்பில் இடம்பெற்ற ஒரு சித்திரம், இரண்டாம் நூற்றாண்டு வானியலாளர் தாலமி, அஸ்ட்ரோனோமியா என்ற தெய்வத்துடன் சேர்ந்து நட்சத்திரங்களை உற்றுநோக்குவதைப் போல சித்தரிக்கிறது.

பட மூலாதாரம், SSPL/Getty Images

படக்குறிப்பு, கிரிகோர் ரீஷின் 'மார்கரிட்டா ஃபிலோசோஃபிகா' நூலின் 1535 பதிப்பில் இடம்பெற்ற ஒரு சித்திரம், இரண்டாம் நூற்றாண்டு வானியலாளர் தாலமி, அஸ்ட்ரோனோமியா என்ற தெய்வத்துடன் சேர்ந்து நட்சத்திரங்களை உற்றுநோக்குவதைப் போல சித்தரிக்கிறது.

"பூமி தட்டையானது என்ற மாதிரியை சில பண்டைய நாகரிகங்கள் பயன்படுத்தின. ஆனால் கிரேக்க அண்டவியல் சிந்தனையின் வழியாக கோள வடிவ பூமி குறித்த கருத்து பிற பகுதிகளுக்கும் பரவியது. குறிப்பாக பித்தகோரஸ், அரிஸ்டாட்டில், தாலமி, எராட்டோஸ்தனீஸ் போன்ற சிந்தனையாளர்களின் தாக்கம் இதில் இருந்தது."

இந்த வகையில், எராட்டோஸ்தனீஸ் அறிவியலை இன்றும் பின்பற்றப்படும் அதே முறையில்தான் முன்னெடுத்தார்: அவருக்கு முன்பிருந்த ஆய்வுகளின் மீதான புதிய ஆய்வை உருவாக்கினார். அவரது விஷயத்தில் அதுவொரு குறிப்பிட்ட சோதனையின் மூலம் நிகழ்ந்தது.

"முன்னதாகவே கிரேக்க சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டிருந்த ஒரு கருத்தை அனுபவரீதியாகச் சோதிப்பதே அவரது சோதனையின் நோக்கம்" என்கிறார் மரன்யாவ் மாகாண பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும் ஆய்வாளருமான நிலவியலாளர் கிளாடியோ எடுவார்டோ டி காஸ்ட்ரோ.

அதே காலகட்டத்தில் சீனாவின் ஹான் வம்ச ஆட்சிக் காலத்திலும், 1:90,000 என்ற அளவீட்டில் உருவாக்கப்பட்ட வரைபடங்களும், இடங்களைக் குறிக்க செங்குத்து-கிடைமட்ட கட்ட அமைப்பைக் கொண்ட வரைபட முறையும் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"கிழக்கத்திய வரைபடவியல் குறித்த நமது அறிவு குறைவாக இருப்பதால், ஒரு கேள்வியை எழுப்பலாம். மேற்கத்திய நாடுகளில் பூமி குறித்த அறிவு வளர்ந்தபோது, கிழக்கத்திய அறிவும் அதற்கு அடிப்படையாக இருந்ததா? ஐரோப்பாவுக்கான பயணங்களில் கிழக்கத்தியவர்கள் இந்த வரைபடங்களைப் பெருமளவில் பயன்படுத்தி இருக்கலாம் அல்லவா?" என்கிறார் காஸ்ட்ரோ.

அல்லது, "கோள வடிவிலான பூமி குறித்த மேற்கத்திய வரைபடவியல், கிழக்கில் மிக வேகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்ததா?" என்ற கேள்வியையும் அவர் எழுப்புகிறார்.

வரலாற்றாசிரியர் சோரெஸை பொறுத்தவரை, தட்டை பூமி, உருண்டை பூமி குறித்த விவாதம் "அடிப்படையில் கதைகளுக்கு இடையிலான ஒரு போட்டி" என்பதால் சுவாரஸ்யமானது. ஏனெனில் இந்த விஷயத்தில் அறிவியல் அறிவு மிகவும் பழமையானது.

எராட்டோஸ்தனீஸ்: ஒரு குச்சியால் பூமியின் அளவை அளந்த கிரேக்க அறிஞர்

பட மூலாதாரம், Getty Images

நடுநிலைக் காலமும் 'தட்டை பூமி' புரளியும்

"நடுநிலைக் காலத்தில் தேவாலயம் பூமி தட்டையானது என்ற கருத்தைப் பரப்பியது என்று பலர் நம்புகின்றனர். ஆனால் அதுவொரு புரளி" என்கிறார் சோரெஸ்.

இதற்குக் கலைப் படைப்புகளையே ஆதாரமாகக் காட்ட முடியும் என்றும் அவர் கூறுகிறார். "மதத் தலைவர்கள் அல்லது தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெறும் பல்வேறு ஓவியங்களைப் பார்த்தால், அவர்களில் சிலர் கையில் உலகத்தைக் குறிக்கும் ஓர் உருண்டையை வைத்திருப்பதைக் காணலாம்."

'ஹிஸ்டோரியா எம் மேயா ஹோரா' பாட்காஸ்டின் திரைக்கதை எழுத்தாளர் விக்டர் அலெக்சாண்டர், அறிவியல் வரலாற்றாசிரியர் கிறிஸ்டின் கார்வுட் எழுதிய 'Flat Earth: The History of an Infamous Idea' என்ற நூலை மேற்கோள்காட்டுகிறார். அதன்படி, 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில், பாரம்பரிய சிந்தனையாளர்கள் மற்றும் தத்துவவாதிகள் நடுநிலைக் காலத்தின் உருவத்தை "களங்கப்படுத்த" முயன்றதாக கார்வுட் விளக்குகிறார். அதே நேரத்தில் பாரம்பரிய கிரேக்க-ரோமானிய காலத்தையும் நவீன காலத்தையும் உயர்த்திக் காட்டும் முயற்சியும் நடந்தது.

"நடுநிலைக் காலம் இருண்ட காலமாக இருந்தது என்று காட்டும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அந்தக் காலத்தில் பூமி தட்டையானது என்று மக்கள் நம்பினர் என்ற கருத்தும் சேர்க்கப்பட்டதாக" கூறுகிறார் அலெக்சாண்டர்.

"நவீன காலம் கலாசாரத்தையும் அறிவியலையும் மீட்டெடுத்த காலம் என்ற கருத்தை வலுப்படுத்துவதே அதன் நோக்கம்."

நிச்சயமாக, பூமி தட்டையானது என்று நம்பியவர்கள் பண்டைய காலத்திலும் நடுநிலைக் காலத்திலும் இருந்திருக்கலாம். வரலாற்று ஆசிரியர் சோரெஸ், சிந்தனையாளரும் கலைக் களஞ்சிய ஆசிரியருமான செவில்லின் இசிடோர் (Isidore of Seville, 560–636) என்பவரை உதாரணமாகக் குறிப்பிடுகிறார். பின்னர் கத்தோலிக்க திருச்சபையால் அவர் புனிதராகக் கருதப்பட்டார்.

"ஆனால் அத்தகைய சிந்தனையாளர்கள் அப்போது நிலவிய கருத்து ஒற்றுமையுடன் ஒப்பிடும்போது சிறுபான்மையினரே" என்கிறார் சோரெஸ்.

அவரது கூற்றுப்படி, "தனித்தனியாக இருந்த சில நிகழ்வுகளை எடுத்துக்கொண்டு ஒரு முழு காலகட்டத்திற்கும் அதை பொருத்திப் பார்ப்பதுதான் பிரச்னை. நவீன காலத்தில்கூட, முதல் கடற்பயணிகள் பூமியைச் சுற்றி வர முடிந்தபோது, பூமி தட்டையானது என்ற கோட்பாட்டால் நிலைத்திருக்க முடியவில்லை."

சூரியனின் நிலை மற்றும் இடங்களுக்கு இடையிலான தூரம் குறித்த எரடோஸ்தீனஸின் அறிவு, பூமியின் சுற்றளவைக் கணக்கிட அவருக்கு உதவியது.

பட மூலாதாரம், Encyclopaedia Britannica/UIG Via Getty Images

படக்குறிப்பு, சூரியனின் நிலை மற்றும் இடங்களுக்கு இடையிலான தூரம் குறித்த எரடோஸ்தீனஸின் அறிவு, பூமியின் சுற்றளவைக் கணக்கிட அவருக்கு உதவியது.

ஏன் தட்டையான வரைபடங்கள்?

இன்றும் அறிவியல் அறிவு அனைவருக்கும் முழுமையாகச் சென்றடையவில்லை என்றால், பண்டைய சமூகங்களில் அறிவு ஒரு சிறுபான்மையினரின், அதாவது அறிவுசார் உயரடுக்கின் வசம் இருந்திருப்பது ஆச்சரியமல்ல.

"பண்டைய சமூகங்கள் பொதுவாகவே ஆழமான சமூக அடுக்குகளைக் கொண்டிருந்தன. அறிவையும் கல்வியையும் அணுகும் உரிமை ஒரு சிறிய பகுதியினருக்கே கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது" என்கிறார் எஸ்டெவ்ஸ்.

"கிரேக்க சிந்தனையாளர்கள் உருவாக்கிய அறிவு பரவிய பகுதிகளில் பூமி கோள வடிவமானது என்ற கருத்து ஆதிக்கம் பெற்றது. மேலும், அவர்கள் முன்வைத்த அறிவியல் அடிப்படைகள் அடுத்தடுத்த காலங்களில் வந்த அறிவியலாளர்களுக்கு முக்கியமான ஆதாரமாக அமைந்தன" என்கிறார் அவர்.

அதே நேரத்தில், பண்டைய உலகின் பெரும்பகுதி அன்றாட விவசாய வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து இருந்ததாக நிலவியலாளர் காஸ்ட்ரோ சுட்டிக்காட்டுகிறார்.

"அந்தக் காலத்தில் மக்களின் தேவைகள் இயற்கையின் சுழற்சிகளோடும், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்கு ஏற்ற இடங்களோடும், வளங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகளோடும், அவற்றுக்கான போர்களோடும் தொடர்புடையவையாக இருந்தன" என்கிறார் அவர்.

"அந்தச் சூழலில், ஒரு நிலப்பரப்பில் நடந்து செல்வது பூமி தட்டையானது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. ஒருவர் அனுபவித்த உலகம் அதுவரை அவரது புரிதலின் எல்லையாக இருந்தது. இந்தப் பண்டைய உலகில், இடங்களை அடையாளம் காண்பதற்கான இன்றியமையாத கருவியான வரைபடவியல், உயிர் வாழத் தேவையான இடங்களையும் செல்ல வேண்டிய திசைகளையும் குறிக்கும் பணியையே செய்தது."

பூமி கோள வடிவமானது என்பது உண்மை. ஆனால் மனிதன் உருவாக்கிய வரைபடம் எப்போதும் தட்டையானதாகவே இருந்தது. இந்தப் பழங்கால வரைபடங்களில் சிலவற்றை இன்றும் மெசபொத்தேமியாவின் சுமேரிய, அசீரிய, பாபிலோனிய மக்களின் பதிவுகள் மூலம் அறிய முடிகிறது. ஆனால் கிழக்கத்திய மக்களின் பங்களிப்பையும் புறக்கணிக்க முடியாது என்கிறார் காஸ்ட்ரோ. மேற்கத்திய உலகுக்கும் முன்னதாகவே அவர்கள் துல்லியமான வரைபடங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும், அந்த அறிவு மேற்கத்திய உலகையும் பாதித்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

லூயிஸ் ஃபிகுயர் என்பவரால் 1866இல் செதுக்கப்பட்ட இந்த ஓவியம், கி.மு. 288இல் எகிப்தில் மன்னர் முதலாம் தாலமி சோட்டர் அலெக்சாண்டிரியாவின் மாபெரும் நூலகத்தை நிறுவியதைச் சித்தரிக்கிறது

பட மூலாதாரம், Leemage/Corbis via Getty Images

படக்குறிப்பு, லூயிஸ் ஃபிகுயர் என்பவரால் 1866இல் செதுக்கப்பட்ட இந்த ஓவியம், கி.மு. 288இல் எகிப்தில் மன்னர் முதலாம் தாலமி சோட்டர் அலெக்சாண்டிரியாவின் மாபெரும் நூலகத்தை நிறுவியதைச் சித்தரிக்கிறது

எல்லைகளை வரையறுப்பது, நீர்வளப் பாதுகாப்புப் பகுதிகளை அடையாளப்படுத்துவது, ராணுவ நோக்கங்கள் போன்றவற்றுக்காக இந்த வரைபடங்கள் பயன்படுத்தப்பட்டன.

"துரதிர்ஷ்டவசமாக, இந்த வரைபடங்களில் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. முதலாவதாக, அவை அன்றாடப் பயன்பாட்டில் இருந்த காரணத்தால்; இரண்டாவதாக, களிமண் போன்ற எளிதில் சேதமடையும் பொருட்களில் அவை உருவாக்கப்பட்டதால்" என்கிறார் காஸ்ட்ரோ.

எராட்டோஸ்தனீஸின் சோதனையையும் அக்காலத்தின் ஒட்டுமொத்த சூழலையும் பார்க்கும்போது, பண்டைய உலகம் பூமியின் கோள வடிவத்தை அறிந்திருந்தது என்று கூறுவதற்குப் போதுமான காரணங்கள் இருப்பதாக அவர் கருதுகிறார்.

ஆனால் அந்த அறிவு சிறிய குழுக்களுக்குள் மட்டுமே இருந்தது. "அந்த அறிவு, சமூகங்களின் அன்றாட வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் வாழ்வாதாரத்தைப் பெறுவதற்கு அதனால் அதிக பயன் இருக்கவில்லை. அதற்குத் தட்டையான பூமியை அடிப்படையாகக் கொண்ட வரைபடமே போதுமானதாக இருந்தது" என்றார் அவர்.

இன்றைய தட்டை பூமி ஆதரவாளர்கள் முன்வைக்கும் விவாதம், "அறிவியல் கருத்தொற்றுமையைப் பெருமளவில் மறுப்பதால்" தனித்துவம் பெறுவதாகக் கூறுகிறார் வரலாற்றுப் பேராசிரியரும் பாட்காஸ்ட் திரைக்கதை எழுத்தாளருமான விக்டர் அலெக்சாண்டர்.

இந்தக் கருத்துகளை உருவாக்குவதிலும் பரப்புவதிலும் சமூக ஊடகங்களின் செயல்பாடுகளும் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் கூறுகிறார்.

அவரது கூற்றின்படி, "இணையத்தின் மூலம் பூமி தட்டையானது என்று நம்புவோர் ஒருவரையொருவர் தொடர்புகொண்டு, அறிவியல் உண்மைகளைக் கடந்து செல்லும் உணர்வுபூர்வமான உறவுகளை உருவாக்கிக் கொள்ள முடிகிறது."

அதனால், "ஒருவர் பூமி உண்மையில் கோள வடிவமானது என்பதை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். அவர்களுடன் நெருக்கமான உறவை உருவாக்குவதற்கான முயற்சியும் தேவை. அந்த நேரத்தில் கேலி செய்வது மிகவும் வேடிக்கையானதாகத் தோன்றலாம்; ஆனால் அதைவிட இந்த அணுகுமுறை பயனுள்ளதாக இருக்கலாம்" என்றார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு