'100 வயதைக் கடந்தோர் 1 லட்சத்துக்கும் மேல்' - நீண்ட ஆயுளில் சாதனை படைக்கும் ஜப்பானுக்கு ஏன் கவலை?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், குருமி மோரி, டோக்கியோ செய்தியாளர் மற்றும் இஸே இசுமி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
ஜப்பானில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான நூற்றாண்டு வயதினர்கள் வாழும் நாடு ஜப்பான் ஆகும். தற்போது 107,677 பேர் 100 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். இவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள். கியோட்டோவைச் சேர்ந்த 114 வயதான கிஷிமோட்டோ ஃபுயோ, நாட்டின் மிக வயதான பெண்ணாகவும், குமாமோட்டோவைச் சேர்ந்த 112 வயதான கட்டோ ஹிகாரு மிக வயதான ஆணாகவும் பதிவாகியுள்ளனர்.
மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சர் கென்இச்சிரோ உயேனோ, "நீண்ட காலம் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் பலர் வாழ்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது" என்று கூறினார்.
அதேவேளையில், நீடித்த சமூகப் பாதுகாப்பு அமைப்பைத் தக்கவைத்துக் கொள்வதில் ஜப்பான் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் அவர் எச்சரித்தார்.
ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்குப் பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அவற்றில் ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கைமுறை முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தத் தீவு நாட்டின் பாரம்பரிய உணவுமுறை பெரும்பாலும் மீன், காய்கறிகள் மற்றும் அரிசியை அடிப்படையாகக் கொண்டது. மேலும், பல மேற்கத்திய உணவுமுறைகளுடன் ஒப்பிடும்போது இதில் நிறைவுற்ற கொழுப்புச் சத்து குறைவாக காணப்படுகிறது.
முதியவர்கள் வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்வதுடன், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர், மிதிவண்டி ஓட்டுகின்றனர் மற்றும் உடற்பயிற்சிகளிலும் ஈடுபடுகின்றனர்.
பல ஆண்டுகளாக ஜப்பான் முதியோர் அதிகம் கொண்ட சமூகமாக மாறி வருகிறது. இதன் காரணமாக, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அங்குக் குழந்தைகளுக்கான டயப்பர்களை விட முதியவர்களுக்கான டயப்பர்களின் விற்பனை அதிகமாக உள்ளது.
நிறுவனங்களும் முதியோர்களுக்காக புதிய தயாரிப்புகளை உருவாக்கி வருகின்றன. உடல் உறுப்புகளை இயக்குவதற்கு ஆதரவளிக்கும் மின் ஆற்றலால் இயங்கும் எக்ஸோஸ்கெலட்டன் மற்றும் குவியத்தை தானாகவே சரிசெய்து கொள்ளும் கண்ணாடிகள் ஆகியவை இதில் அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images
மக்கள்தொகையை நிலைநிறுத்திக் கொள்ள சராசரியாக ஒவ்வொரு பெண்ணும் 2.1 குழந்தைகளைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு ஜப்பானின் மொத்த மகப்பேறு விகிதம் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு குறைந்து 1.14 ஆக பதிவானது.
மக்கள்தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் தரவுகளின்படி, 2008-ஆம் ஆண்டு 128 மில்லியனாக இருந்த உச்ச மக்கள்தொகையிலிருந்து சுமார் 30 சதவீதம் குறைந்து, 2070-ஆம் ஆண்டளவில் ஜப்பானின் மொத்த மக்கள்தொகை 87 மில்லியனாகச் சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் மொத்த மக்கள்தொகையின் சுமார் 30 சதவீதமாக உள்ளனர். இந்த விகிதம் 2070-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 40 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் போக்கை ஜப்பானிய அதிகாரிகள் "இருப்பிற்கே அச்சுறுத்தலான நெருக்கடி" என வர்ணித்துள்ளனர். பிரதமர் சனாயே தாக்கிச்சி, மக்கள்தொகை சரிவை "அமைதியான அவசரநிலை" என்று விவரித்துள்ளார்.
2025-ஆம் ஆண்டில் ஜப்பானின் 47 மாகாணங்களில் இரண்டைத் தவிர அனைத்திலும் மக்கள்தொகை குறைந்தது. மேலும், இந்த வீழ்ச்சியின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இளைஞர்கள் அதிக குழந்தைகளைப் பெற ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு மானியங்களையும் ஆதரவுத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியிருந்தாலும், அவை பிறப்பு விகிதத்தை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தியதாகத் தெரியவில்லை.
குறைந்த திருமண விகிதம், அதிக பெண்கள் வேலைக்குச் செல்வது மற்றும் குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகள் அதிகரிப்பது என இதற்கான காரணங்கள் மிகவும் சிக்கலானவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சமீப காலங்களில் ஜப்பானுக்குள் குடியேற்றம் அதிகரித்திருந்தாலும், மொத்த மக்கள்தொகையில் வெளிநாட்டவர்கள் சுமார் 3 சதவீதம் மட்டுமே உள்ளனர். மேலும், அதிகளவிலான குடியேற்றத்தை ஏற்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Images
1963-ஆம் ஆண்டு ஜப்பான் தனது நூற்றாண்டு வயதினர்களுக்கான புள்ளிவிவரப் பதிவைத் தொடங்கியபோது, 100 வயதைக் கடந்தவர்கள் வெறும் 153 பேர் மட்டுமே இருந்தனர். அந்த எண்ணிக்கை 1981-இல் 1,000 ஆக உயர்ந்து, 1998-இல் 10,000 ஐ எட்டியது.
ஜப்பானின் வருடாந்திர "முதியோரை மதிக்கும் நாள்"பொதுவிடுமுறையை முன்னிட்டு இந்தப் புதிய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன. அந்த நாளில் 100 வயதை எட்டுபவர்களுக்கு அரசு தனிப்பட்ட வாழ்த்துக் கடிதத்தையும் பாரம்பரிய சாக்கே கோப்பையையும் வழங்கி கவுரவிக்கிறது.
இதேவேளையில், உலகளவில் வெளியிடப்படும் நூற்றாண்டு வயதினர்களின் எண்ணிக்கைகள் எவ்வளவு துல்லியமானவை என்ற கேள்வியையும் முந்தைய ஆய்வுகள் எழுப்பியுள்ளன. தரவு பிழைகள், நம்பகமற்ற பொதுப் பதிவுகள் மற்றும் காணாமல் போன பிறப்புச் சான்றிதழ்கள் போன்றவை அதிக வயது கொண்டவர்களின் எண்ணிக்கையை செயற்கையாக உயர்த்தக்கூடும் என்று அவை கூறுகின்றன.
2010-ஆம் ஆண்டு ஜப்பானில் குடும்பப் பதிவேடுகளை ஆய்வு செய்த அரசுத் தணிக்கையில், 100 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாகப் பதிவாகியிருந்த 230,000-க்கும் அதிகமானோர் எங்கிருக்கின்றனர் என்பதே தெரியாமல் இருந்தது கண்டறியப்பட்டது. அவர்களில் சிலர் பல தசாப்தங்களுக்கு முன்பே உயிரிழந்திருந்ததாகவும் தெரியவந்தது.
பதிவேடுகள் முறையாகப் பராமரிக்கப்படாததே இந்தப் பிழைகளுக்குக் காரணமாகக் கூறப்பட்டது. மேலும், சில குடும்பங்கள் முதிய உறவினர்களின் மரணத்தை அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல், அவர்களுக்கான ஓய்வூதியத் தொகையைத் தொடர்ந்து பெற முயன்றிருக்கலாம் என்ற சந்தேகங்களும் அப்போது எழுந்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































