இந்தியா - பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் மோதல்: 10-வது பிரிவைச் சுட்டிக்காட்டி இரு நாடுகளும் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் கடலில் மோதிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
இந்திய கடற்படை தனது பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் "ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில்" ஈடுபட்டதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் கடும் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் சம்பவம் எங்கு நடந்தது, எந்த வகையான கப்பல்கள் மோதிக்கொண்டன என்பது குறித்து தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
எனினும், இந்தச் சம்பவம் சர்வதேச கடற்பரப்பில் நடந்ததாக வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், 1991-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கையெழுத்தான முக்கிய ஒப்பந்தத்தின் 10-வது பிரிவை இந்தச் சம்பவம் நேரடியாக மீறுவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகம் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
வெளியுறவு அமைச்சகம் கூறியது என்ன?
பாகிஸ்தான் உயர் ஆணையத்தின் பொறுப்பு அதிகாரியை வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைத்து விளக்கம் கேட்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"கடலில் இந்திய கடற்படைப் பிரிவுடன் மோதலுக்கு வழிவகுத்த பாகிஸ்தான் கடற்படைப் பிரிவுகளின் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறையற்ற நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"சர்வதேச கடற்பரப்பில் நடந்த இந்தச் சம்பவத்தால் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும், பாகிஸ்தான் கடற்படைக் கப்பலின் நடவடிக்கை, 1991 ஏப்ரலில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கையெழுத்தான 'ராணுவப் பயிற்சிகள், போர் நடவடிக்கைகள் மற்றும் படையினரின் நகர்வுகள் குறித்த முன்கூட்டிய அறிவிப்பு தொடர்பான ஒப்பந்தத்தின்' 10-வது பிரிவை நேரடியாக மீறுவதாகும்" என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், "இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து ராணுவப் பிரிவுகளும் மேற்கொள்ள வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புடைய ஒப்பந்தங்களின் விதிகளை மதிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு அந்நாட்டின் பொறுப்பு அதிகாரியிடம் அறிவுறுத்தப்பட்டது" என்று அமைச்சகம் கூறியுள்ளது.
"இதேபோன்ற எதிர்ப்பை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் பதிவு செய்யுமாறு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் பொறுப்பு அதிகாரிக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பதில்
இந்த விவகாரம் தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையத்தின் பொறுப்பு அதிகாரியை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அழைத்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் கடற்படை தனது சீஸ்பார்க்-2026 பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, இந்தியக் கப்பல் பாகிஸ்தான் கடற்படைக் கப்பலுக்கு மிக அருகில் வந்து ஆத்திரமூட்டும் வகையில் இயக்கப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இரு கப்பல்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. இந்தச் சம்பவம் சர்வதேச சட்டத்தையும், ராணுவப் பயிற்சிகள், போர் நடவடிக்கைகள் மற்றும் படையினரின் நகர்வுகள் குறித்து முன்கூட்டியே அறிவிப்பது தொடர்பாக 1991-ஆம் ஆண்டு இரு நாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் கடுமையாக மீறுவதாகவும், பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
"இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாகக் கண்டிக்கிறது என்பதை இந்திய அரசிடம் தெரிவிக்குமாறு பொறுப்பு அதிகாரியிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது" என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"சர்வதேச சட்டம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை, குறிப்பாக கடலில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான ஒப்பந்தங்களின் விதிகளை இந்தியா கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றும் இந்தியத் தரப்பிடம் வலியுறுத்தப்பட்டதாக அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையத்தின் பொறுப்பு அதிகாரி, இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இதேபோன்ற எதிர்ப்பைப் பதிவு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் எங்கு, எப்படி நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
ராய்ட்டர்ஸ், ஏஎன்ஐ மற்றும் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனங்கள் அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிட்ட தகவல்களின்படி, செவ்வாய்க்கிழமை மாலை வடக்கு அரபிக்கடலில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக் கப்பலை நோக்கி பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் வேகமாக வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இரு கப்பல்களும் மோதிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முதல் பதற்றமான சம்பவம் இதுவாகும்.
இந்தச் சம்பவத்தில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதை இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், இது இரு நாடுகளுக்கும் இடையே 1991-ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தை நேரடியாக மீறுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம் என்ன சொல்கிறது?
ராணுவப் பயிற்சிகள், போர் நடவடிக்கைகள் மற்றும் படையினரின் நகர்வுகள் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது தொடர்பான விதிகள் குறித்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1991 ஏப்ரலில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
இரு நாடுகளும் ராணுவப் பயிற்சிகள் அல்லது படையினரின் நகர்வுகளை மேற்கொள்ளும்போது, அவற்றால் அவசரமான சூழல் எதுவும் ஏற்படாமல் தடுப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளின் தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படைகள் ஒன்றுக்கொன்று அருகில் ராணுவப் பயிற்சிகளை நடத்தக் கூடாது.
15 பிரிவுகளைக் கொண்ட இந்த ஒப்பந்தத்தின் 10-வது பிரிவை மீறியதாகவே இந்தக் கப்பல் மோதல் சம்பவத்தை இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச கடற்பரப்பில் விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, இரு நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒன்றுக்கொன்று குறைந்தது மூன்று கடல் மைல் தொலைவில் இருக்க வேண்டும் என்று 10-வது பிரிவு கூறுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் தற்போது மிகவும் குறைந்த நிலையில் உள்ளன. இரு நாடுகளிலும் தற்போது உயர் ஆணையர்கள் இல்லை. அதற்குப் பதிலாக, இரு நாடுகளின் உயர் ஆணையங்களிலும் பொறுப்பு அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































