யுபிஐ: இனி எதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்? யார் செலுத்த வேண்டும், எது இலவசம்? 8 கேள்வி - பதில்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்திய தேசியக் கொடுப்பனவுக் கழகம் (NPCI) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நுகர்வோர் மத்தியிலும் வணிகர்கள் மத்தியிலும் பல கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்த கேள்விகளுக்கு என்பிசிஐ மற்றும் நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் பதில்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பின்படி, 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட தனிநபர்-வணிகர் (P2M) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக, ரூ.5,000 பரிவர்த்தனை செய்தால் 20 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். இந்தக் கட்டணம் அதிகபட்சமாக 300 ரூபாயைத் தாண்டாது. இந்தக் கட்டண முறை அக்டோபர் 15 முதல் செயல்பாட்டுக்கு வரும்.
கடந்த பத்து ஆண்டுகளாக மக்களின் பரிவர்த்தனைகளில் முக்கிய தாக்கத்தைச் செலுத்தி வரும் யுபிஐ பரிவர்த்தனைகள், சிறு, குறு வணிகர்கள் முதல் பெரும் தொழில்கள் வரை பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், யுபிஐ பரிவர்த்தனைகள் மீதான இந்தக் கட்டணங்கள் சாதாரண நுகர்வோரைப் பாதிக்காது என அரசு கூறி வருகிறது.

பட மூலாதாரம், NurPhoto via Getty Images
1. புதிய அறிவிப்பு யாருக்கு பொருந்தும்?
இந்தப் புதிய கட்டண விதிப்பு அறிவிப்பின்படி, தனிநபர் ஒருவர் மற்றொரு தனிநபருக்கு செய்யும் பரிவர்த்தனைகள் மீது எந்தத் தாக்கத்தையும் செலுத்தாது. அதாவது, அவற்றுக்கு கட்டணம் இல்லை. தனிநபர்களுக்கு இடையிலான பரிவர்த்தனை, அது எவ்வளவு தொகையாக இருந்தாலும் கட்டணமின்றியே இருக்கும்.
அதேநேரம், வணிகர்களுக்கு நுகர்வோர்கள் ரூ.2000 வரை செய்யும் பரிவர்த்தனைகளும், சிறு வணிகர்களுக்கு பூஜ்ஜிய எம்டிஆர் (zero MDR), அதாவது கட்டணமில்லா யுபிஐ பரிவர்த்தனைகளும் கட்டணமின்றியே தொடரும்.
"இதனால், நுகர்வோர் - வணிகர்கள் இடையே நடைபெறும் சுமார் 96% பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாது. மாறாக, 2,000 ரூபாய்க்கு மேல் நடைபெறும் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இத்தகைய கட்டணம் வணிகர்கள் மீது செயல்படுத்தப்படும்" என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எம்டிஆர் (MDR) என்பது அரசாங்கத்தாலோ அல்லது இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தாலோ (NPCI) வசூலிக்கப்படுவது அல்ல. மாறாக, இது வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை செயலி வழங்குநர்கள் (payment apps) உள்ளிட்டவற்றுக்கு இடையே பகிரப்படுகிறது.
"யுபிஐ அமைப்பின் செயல்பாட்டையும் அதன் தொடர்ச்சியான விரிவாக்கத்தையும் ஆதரிப்பதே இதன் நோக்கம்" என நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
2. எந்தெந்த பரிவர்த்தனைகள் கட்டணமின்றி தொடரும்?
தனிநபர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகள்: தனிபர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகள், அதாவது தனிநபர்கள் யுபிஐ மூலமாகப் பணம் பெற்றாலோ அல்லது அனுப்பினாலோ, அது எவ்வளவு தொகையாக இருந்தாலும் பரிவர்த்தனை கட்டணமோ, டிஜிட்டல் செயலிகள் விதிக்கும் கட்டணமோ அல்லது எந்தவித கட்டணமோ வசூலிக்கக் கூடாது, அவை கட்டணமின்றியே தொடரும்.
"எனவே, மொத்தப் பரிவர்த்தனை மதிப்பில் 70% பங்கைக் கொண்ட யுபிஐ பரிவர்த்தனைகள், எம்டிஆர் கட்டண முறைக்கு உட்படாது" என மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரூ.2,000 வரை வணிகர்களுக்கு செலுத்துதல்: ரூ.2,000 வரை நுகர்வோர் வணிகர்களுக்கு செலுத்தும் பரிவர்த்தனை கட்டணமின்றித் தொடரும். இத்தகைய பரிவர்த்தனைகளை யுபிஐ மூலம் மேற்கொள்ளும்போது எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியிருக்காது.
சிறு வணிகர்களுக்கான பரிவர்த்தனைகள்: யுபிஐ க்யூ.ஆர் குறியீடுகள் மூலம் மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை பணம் பெறும் தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட சிறு வணிகர்களுக்கு அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்படாது.
"இந்த நடைமுறை, தெருவோர வியாபாரிகள், அருகாமை கடைகள் மற்றும் பிற சிறு வணிகங்களுக்கு கூடுதல் பணப்பரிவர்த்தனைச் செலவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்" என நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3. எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்?
ரூ. 2,000க்கு மேலான வணிக பரிவர்த்தனைகள்: ரூ.2,000க்கு மேற்பட்ட, தனிநபரிடம் இருந்து வணிகருக்கான (P2M) பரிவர்த்தனைகளுக்கு மட்டும் 0.4% என்ற குறைந்தபட்ச கட்டணம் விதிக்கப்படும். இந்தக் கட்டணம், வங்கிகள், பணப்பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள் மற்றும் யுபிஐ செயலி வழங்குநர்கள் உள்ளிட்டவற்றுக்கு இடையே பகிரப்படும்.
ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைக்கான பரிவர்த்தனைகளில், இந்தக் கட்டணம் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ.300 என வரையறுக்கப்படும்.
அத்தியாவசிய துறை தொடர்பான பரிவர்த்தனைகள்: ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள், வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் மற்றும் குறைந்த லாப வரம்பில் இயங்கும் துறைகளில், ரூ. 2,000க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 என்ற நிலையான கட்டணம் விதிக்கப்படும்.
"இந்த நிலையான கட்டணம், முக்கியமான பொது சேவைகள் மற்றும் குறைந்த லாப வரம்பில் இயங்கும் வணிகங்களுக்கு ஏற்படும் செலவுகளை முன்கூட்டியே கணிக்க உதவும்" என நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மூலதனச் சந்தை பரிவர்த்தனைகள்: பரஸ்பர நிதிகள், பத்திரங்கள், பங்குத் தரகர்கள் மற்றும் பங்கு விற்பனையாளர்கள் தொடர்பான பணப் பரிவர்த்தனைகளுக்கு 0.02% கட்டணம் விதிக்கப்படும். இந்தக் கட்டணம் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ. 300 என வரையறுக்கப்படும்.
"இந்தக் குறைந்த கட்டண விகிதம், முறையான நிதிச் சந்தைகளில் சில்லறை முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான பங்கேற்பை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக" நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
4. இந்த கட்டணங்களை நுகர்வோர் செலுத்த வேண்டுமா?
எம்டிஆர் என்பது வணிகர்களுக்கான பணப் பரிவர்த்தனைச் சூழலில் விதிக்கப்படும் கட்டணம். யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படாது.
வணிகர்கள் இந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணமாக வசூலிக்காததை உறுதி செய்யுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யுபிஐ செயலி வழங்குநர்கள் எவ்வித கட்டணத்தையோ அல்லது மறைமுகக் கட்டணங்களை வசூலிப்பது வெளிப்படையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
அதாவது, தனிநபர்கள் தொடர்ந்து வரம்பற்ற கட்டணமில்லா பயன்பாட்டைப் பெறுவார்கள். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் வணிகர்களுக்கே பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மாதாந்திர ஒதுக்கீடு, பரிவர்த்தனை எண்ணிக்கை வரம்பு அல்லது படிநிலை அடிப்படையிலான உச்சவரம்பு என எந்தக் கட்டுப்பாடும் இருக்காது.
வங்கிகள் மற்றும் என்பிசிஐ நிர்ணயிக்கும் தினசரி பரிவர்த்தனை வரம்புகள், பரிவர்த்தனை வகையைப் பொறுத்து பொதுவாக ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும்.
5. இந்த அறிவிப்புகள் குறித்து அரசியல் கட்சிகள் கூறுவது என்ன?
பல்வேறு கட்சி தலைவர்களும் இந்த அறிவிப்பு குறித்துக் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
முக்கியமாக, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், "மோதி அரசு, யுபிஐ-க்கு கட்டணம் விதிப்பதற்கான வாய்ப்பை அமைதியாகத் திறந்துவிட்டுள்ளது. இனி ரூ. 2,000க்கு மேற்பட்ட வணிக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படலாம். இத்தகைய பரிவர்த்தனைகள் எண்ணிக்கையில் வெறும் 5% மட்டுமே இருந்தாலும், யுபிஐ-யின் மொத்தப் பரிவர்த்தனை மதிப்பில் கிட்டத்தட்ட 65% பங்கைக் கொண்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.
"வாடிக்கையாளர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று அரசு கூறுகிறது. ஆனால், கடைக்காரர்களிடம் விதிக்கப்படும் இந்தக் கட்டணத்தின் சுமை இறுதியில் எங்கிருந்து வரும்? அது பொருட்களின் விலையில் சேர்க்கப்பட்டு, நேரடியாக வாடிக்கையாளர்களின் பாக்கெட்டில் இருந்துதானே வரும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்தியாவின் பூஜ்ஜிய எம்.டி.ஆர் கொள்கையை அமெரிக்க பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் நீண்ட காலமாக எதிர்த்து வருவதாகவும், இப்போது, மோதி அரசு அதே திசையில் இந்தக் கொள்கையை மாற்றுவதற்கான பாதையைத் திறந்துவிட்டு இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தைப் போலவே, "சமரசம் செய்துகொண்ட பிரதமர் மோதி மீண்டும் ஒருமுறை அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிகிறார்" எனவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பதிவில், "இதனால் பொது மக்கள்தான் மறைமுகமாக பாதிக்கப்படுவார்கள். பெரு வணிகர்கள் ஒரு பரிமாற்றத்திற்கு அதிகபட்சமாக ரூ.300 வரை பரிவர்த்தனைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ள நிலையில், அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு லாபம் குறைவதை அனுமதிக்க மாட்டார்கள். மாறாக, பொருள்களின் விலைகளை உயர்த்தி, இந்தக் கட்டணத்தை மறைமுகமாக மக்கள் மீதுதான் சுமத்துவார்கள். ஏற்கெனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரம் இதனால் மேலும் அதிகரிக்கும்" எனக் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், @SRINIVASIYC
6. வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
புதிய அறிவிப்புகள் குறித்து சில வணிக சங்கங்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு வெளியிட்ட அறிக்கையில், "இந்த அறிவிப்பு சிறு-குறு வணிகர்களையும் நடுத்தர வர்க்கத்தினரையும் நிச்சயமாக பாதிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "75 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணப் பரிவர்த்தனைகளுக்கு ரூ.300 கட்டணம் வசூலிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டண விதிப்பு முற்றிலுமாக வணிகத்தின் மீதுதான் விதிக்கப்படுகிறது என்பதால், ஏற்கெனவே பலமுனை வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்கள் மீது மேன்மேலும் சுமை கூடும்" என்று கூறியுள்ளார்.
மேலும், "விலைவாசி உயர்வு நுகர்வோரை பெருமளவு பாதித்து வரும் நிலையில், யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் விதித்திருப்பது மேலும் வணிகர்களுக்கும் நுகர்வோருக்கும் பெரும் சுமை என்பதைக் கருத்தில் கொண்டும் விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கும்," என்று சுட்டிக் காட்டியுள்ள அவர், "பணப் பரிவர்த்தனை யுபிஐ கட்டணத்தை நிறுத்தி வைத்திட வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.
7. நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுமா?
கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் எனும் அமைப்பின் செயலாளரும் நுகர்வோர் ஆர்வலருமான கதிர்மதியோன் இது தொடர்பாகப் பேசியபோது, "எம்.டி.ஆர் கட்டணம் என்பது எப்போதும் வணிகர்கள் செலுத்தக்கூடிய கட்டணம்தான். ஆனால், ஏற்கெனவே கடன் அட்டை பயன்பாட்டின்போது வணிகர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் நுகர்வோர் மீதே சுமத்தப்படுகிறது. கூடுதல் தொகையை வழங்கவில்லை என்றால் கடன் அட்டை பரிவர்த்தனையை ஏற்க மாட்டோம் என வணிகர்கள் கூறிவிடுகின்றனர்" என்று குறிப்பிட்டார்.
இப்போது யுபிஐ கட்டணத்திலும் இதுதான் நடக்கும் எனத் தான் கருதுவதாகவும், "இது யுபிஐ பயன்படுத்துவதற்கான ஊக்கத்தைக் குறைக்கலாம். வணிகர்கள் நுகர்வோரை பணமாகத் தருமாறு கூறலாம்" என்றும் கூறினார்.
அவரது கூற்றுப்படி, "பணத்தைப் பயன்படுத்தும்போது போலி நோட்டுகள், அதைப் பாதுகாப்பாக வைத்திருந்து வங்கியில் செலுத்துதல் போன்ற சிரமங்கள் இருப்பதால், சில வணிகர்கள் இந்தக் கட்டணத்தை ஏற்றுக்கொள்ளலாம். மறைமுகமாக நுகர்வோர் மீது பணத்தை வணிகர்கள் வசூலிக்கலாம், விலை உயர்வு போன்ற நீண்ட கால தாக்கங்களும் ஏற்படலாம்."

8. மத்திய அரசு கூறுவது என்ன?
"சாதாரண வாடிக்கையாளர்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. எம்.டி.ஆர் என்பது அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளில் வணிகர்களிடம் மட்டும் விதிக்கப்படும் கட்டணம். இது யுபிஐ பணப் பரிவர்த்தனைச் சூழலின் செயல்பாட்டுக்கு ஆதரவளிக்கிறது" என பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த விளக்கப் படத்தைப் பகிர்ந்து, "யுபிஐ கட்டணம் குறித்து மக்களிடையே அச்சம் உருவாக்கப்படுவதாகவும்", "பிரசாரத்தைவிட உண்மைக்கு முன்னுரிமை" தரப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான வணிகப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாது எனத் தெரிவித்துள்ள நிதித்துறை அமைச்சகம், "இக்கட்டணம் சுமார் 4% வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது, சுமார் 96% வணிகப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாது. ஏனெனில், அவை ரூ. 2,000க்கும் குறைவான பரிவர்த்தனைகளாக இருக்கும் அல்லது சிறு வணிகர்களுக்கான கட்டணமில்லா முறையின் கீழ் வரும். எனவே, இந்த நடைமுறை தனிநபர்கள், குறுந்தொழில்கள் மற்றும் சிறு வணிகங்களைப் பாதுகாப்பதுடன், அதிக மதிப்புள்ள வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட கட்டணத்தை அறிமுகப்படுத்துகிறது" என்றும் கூறியுள்ளது.
மேலும், சிறு வணிகர்களிடையே யுபிஐ பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக தனி நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் இந்தக் கட்டணம் மூலம் வசூலிக்கப்படும் மொத்தத் தொகையில் 5% இந்த நிதிக்கு ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, யுபிஐ-யை அதிக அளவில் ஏற்றுக்கொள்ளுதல், தொடர்ந்து பயன்படுத்துவதை ஊக்குவித்தல் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சூழலில் சிறு வணிகங்களின் பங்கேற்பை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், "கட்டணங்கள் மற்றும் தீர்வுகள் அமைப்புச் சட்டம் 2007-ன் கீழ், இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொருந்தக்கூடிய கட்டண விகிதங்கள், செயல்பாட்டு ஏற்பாடுகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து யுபிஐ வழிகாட்டுக் குழு விரிவாக ஆலோசித்ததைத் தொடர்ந்து இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. தனிநபர்களுக்கான பணப் பரிவர்த்தனைகளை இலவசமாக வைத்திருப்பதுடன், சிறு வணிகர்களைப் பாதுகாத்து, யுபிஐ-யின் நீண்டகால நிலைத்தன்மையை வலுப்படுத்துவதே இந்த நடைமுறையின் நோக்கம்" எனவும் கூறியுள்ளது.
கூடுதலாக, "அதிக மதிப்புள்ள வணிகப் பரிவர்த்தனைகளில் இருந்து கிடைக்கும் வருவாய், வங்கிகள், பணப் பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள் மற்றும் யுபிஐ செயலி வழங்குநர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தை ஒட்டிய பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பணப் பரிவர்த்தனை உள்கட்டமைப்பை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் உதவும். நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 32வது அறிக்கையில் வலியுறுத்தப்பட்ட நிலையான வருவாய் ஆதாரத்தின் முக்கியத்துவம் குறித்த பரிந்துரைக்கும் இந்த நடைமுறை ஒத்துப் போகிறது" என்றும் நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































