38 லட்சம் ஃபாலோயர்களுடன் பிரபலமாகி வரும் உணவுப் பாதுகாப்பு அதிகாரி - யார் இந்த துக்காராம் முண்டே?

முண்டே
படக்குறிப்பு, மே மாதம் மகாராஷ்டிராவின் உணவு ஆணையராகப் பொறுப்பேற்றது முதல் துக்காராம் முண்டே மேற்பார்வையில் ஆயிரக்கணக்கான சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவகங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
    • எழுதியவர், அர்ச்சனா சுக்லா & நியாஸ் ஃபரூக்கி
    • பதவி, பிபிசி நியூஸ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சமையலறை தரைகளில் கரப்பான் பூச்சிகள் ஓடுகின்றன. சுவர்களில் சிலந்தி வலைகள் படர்ந்துள்ளன. மூலைகளில் அழுகிய காய்கறிகள் கிடக்கின்றன. உணவு வைக்கும் மேசைகளிலும் பூச்சித் தொல்லைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இத்தகைய புகைப்படங்களைப் புறக்கணிப்பது கடினம்.

இவை மோசமான நிலையில் உள்ள உணவகத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் என்று ஒருவர் நினைக்கலாம். ஆனால், இத்தகைய புகைப்படங்களும் காணொளிகளும் மும்பையில் உள்ள உறுப்பினர்களுக்கு மட்டுமேயான ஒரு கிளப்பில் எடுக்கப்பட்டவை. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமாகவும், நாட்டின் பணக்கார மாநிலமான மகாராஷ்டிராவின் தலைநகரமாகவும் மும்பை உள்ளது.

மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (FDA), மாநிலம் முழுவதும் இருக்கும் உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் பிற உணவு நிறுவனங்களில் மே மாதம் முதல் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து, இதுபோன்ற பல்வேறு புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த நடவடிக்கையின் மையத்தில் இருப்பவர் 51 வயதான அரசு அதிகாரி துக்காராம் முண்டே. இவர் மகாராஷ்டிராவின் புதிய உணவு ஆணையராகப் பணிபுரிகிறார்.

மே மாதம் பொறுப்பேற்றதில் இருந்து, ஆயிரக்கணக்கான ஆய்வுகளை முண்டே மேற்பார்வையிட்டுள்ளார். ஒரு நிறுவனத்தின் அளவு, செல்வாக்கு அல்லது நற்பெயர் எதுவாக இருந்தாலும், உணவுப் பாதுகாப்புச் சட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டுமெனக் கூறுகிறார் அவர்.

பல விரைவு வர்த்தகக் கிடங்குகளின் உரிமங்களை அவரது துறை இடைநீக்கம் செய்துள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை மறைமுகமாக விளம்பரப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் விளம்பரங்களில் நடித்த பாலிவுட் பிரபலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

"இந்த நடவடிக்கைகள் பொது மக்களின் சுகாதார நலன் கருதியே எடுக்கப்படுகின்றன. விதிமீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்" என்று முண்டே பிபிசியிடம் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளால் முண்டே இந்தியா முழுவதும் அறியப்பட்ட முகமாக மாறியுள்ளார். அரசு அதிகாரி ஒருவர் இவ்வாறு பிரபலமாவது மிகவும் அரிது.

அவர் மேற்கொள்ளும் ஆய்வுகள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளின் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. ரீல்ஸ்களும் பாட்காஸ்ட்களும் அவரை எதிர்பாராத வகையில் ஒரு பிரபலமாக மாற்றியுள்ளன. ஆனால், அவர் மீது குவியும் இந்தக் கவனமும், கூடவே அடிக்கடி வரும் சர்ச்சைகளும் அவருக்குப் புதிதல்ல.

அவர் மேற்கொள்ளும் ஆய்வுகள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. ரீல்களும் பாட்காஸ்ட்களும் அவரை எதிர்பாராத வகையில் ஒரு பிரபலமாக மாற்றியுள்ளன.

பட மூலாதாரம், Food and Drug Administration, Maharashtra

படக்குறிப்பு, முண்டே தனது குழுவுடன் சோதனை நடத்தச் சென்ற சமையலறைகளில் ஒன்றின் புகைப்படம்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான முண்டே, இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். அவர் பணியில் சேர்ந்த ஆண்டுகளின் எண்ணிக்கையைவிட அதிக முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதை உறுதிப்படுத்த அவர் மறுத்துவிட்டார்.

"எனது பணியிட மாற்றங்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதை நிறுத்திவிட்டேன்" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். முண்டேவின் சமரசமற்ற அணுகுமுறைக்கு இந்தப் பணியிட மாற்றங்களே சான்று என்று அவரைப் பாராட்டுவோர் கருதுகின்றனர். ஆனால், மோதல் போக்கு கொண்ட அவரது அணுகுமுறை சக அதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் அவரை மோதலுக்குக் கொண்டு வந்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கடந்த பத்து ஆண்டுகளில், நாக்பூர் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றியபோது கொரோனா தொற்றுப் பரவலைக் கையாண்ட விதத்திற்காக முண்டே பாராட்டப்பட்டார். அதற்கு முன்பாக, மகாராஷ்டிராவின் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளில் நீர் பாதுகாப்புப் பணிகளில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் பாராட்டப்பட்டார்.

"கொரோனா தொற்று காலத்தில் அவர் நாக்பூரில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டபோது, அவருக்கு விடை கொடுக்க மக்கள் ஆயிரக்கணக்கில் அவரது வீட்டுக்கு வெளியே திரண்டனர். அவர் தனது காரை அடைவதற்கே ஒரு மணிநேரம் ஆனது" என்று முண்டேவின் வாழ்க்கை வரலாற்றை மராத்தி மொழியில் எழுதியுள்ள பத்திரிகையாளர் ஷஃபி பதான் கூறுகிறார்.

ஆனால், உணவுப் பாதுகாப்பு தொடர்பான அவரது அதிரடி நடவடிக்கைகள்தான் இதுவரை அவருக்கு அதிக கவனத்தைப் பெற்றுத் தந்துள்ளன.

இந்தியா முழுவதும் தெருவோர உணவுக் கடைகள் பிரபலமாக உள்ளன. ஆனால் அவற்றில் சுகாதாரத் தரங்களைப் பேணுவது ஒரு சவாலாகக் கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா முழுவதும் தெருவோர உணவுக் கடைகள் பிரபலமாக உள்ளன. ஆனால் அவற்றில் சுகாதாரத் தரங்களைப் பேணுவது ஒரு சவாலாகக் கருதப்படுகிறது.

இந்தியாவின் உணவுப் பாதுகாப்புப் பிரச்னை தீவிரமானது. ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள், இந்தப் பிரச்னை எந்த அளவுக்குப் பரவலாக உள்ளது என்பதற்கான ஒரு பார்வையை வழங்குகின்றன.

கடந்த 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பரிசோதிக்கப்பட்ட 2,23,808 உணவு மாதிரிகளில், கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு மாதிரிகள் "தரநிலைக்கு இணங்காதவை" என்று கண்டறியப்பட்டன. அதாவது, அந்த மாதிரிகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளவையாகவோ, தரம் குறைந்தவையாகவோ அல்லது தவறாக லேபிள் செய்யப்பட்டவையாகவோ இருந்தன.

அதற்குப் பதிலளிக்கும் வகையில், முண்டே வழக்கத்திற்கு மாறாகத் தீவிரமான அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஜூலை மாத இறுதிக்குள், அவரது துறை, மாநிலம் முழுவதும் 3,100க்கும் மேற்பட்ட ஆய்வுகளை நடத்தியிருந்தது. அதன் பின்னர் இந்த எண்ணிக்கை 4,000ஐ கடந்திருக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

சுமார் 300 உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டு இருப்பதாகவும், 1,000க்கும் மேற்பட்ட மேம்பாட்டு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் முண்டே கூறினார். புதிதாகத் தொடங்கப்பட்ட புகார் இணையதளத்திலும், அதன் முதல் மூன்று மாதங்களில் 16,000க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் முண்டே குறிப்பிட்டார்.

"இங்கு சுகாதாரமான நடைமுறைகள் எப்போதுமே ஒரு பிரச்னையாக இருந்து வருகிறது. அந்தப் பிரச்னையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருப்பதே முண்டே செய்துள்ள வித்தியாசமான விஷயம்" என்று இந்தியாவின் உணவு ஒழுங்குமுறை அமைப்பின் முன்னாள் தலைவர் பவன் அகர்வால் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தப் பிரச்னை வெளிப்படையாகத் தெரியத் தொடங்கி இருப்பதற்கு நுகர்வோர் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அகர்வால் குறிப்பிட்டார். இந்தியாவின் வழக்கமான நடைமுறையில், உணவுப் பாதுகாப்பு வழக்குகளும் நுகர்வோர் புகார்களும் ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் நீதிமன்றங்கள் வழியாக தீர்வை நோக்கி நகரப் பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால், தற்போது அமலாக்க நடவடிக்கைகள் பொதுவெளியில் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சமூக ஊடக நட்சத்திரமாக மாறியுள்ளார் - காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இந்த நடவடிக்கைகள் முண்டேவை சமூக ஊடகங்களிலும் பிரபலமாக்கியுள்ளன. தற்போது அவரை இன்ஸ்டாகிராமில் 3.8 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். எனினும், நுகர்வோர் அவரது நடவடிக்கைகளின் வேகத்தையும் வெளிப்படைத் தன்மையையும் வரவேற்பது போல, உணவுத் தொழில்துறையில் உள்ள பலர் இதை அவ்வளவாக வரவேற்கவில்லை.

அரசு அதிகாரி சட்டப்படி பின்பற்ற வேண்டிய நடைமுறையைத் தவிர்த்துச் செயல்படுவதாக உணவக உரிமையாளர்கள் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. அதேவேளையில், அவரது சில நடவடிக்கைகளை நீதிமன்றங்கள் "தன்னிச்சையானவை" என்று குறிப்பிட்டுள்ளன.

இந்தியாவின் உணவுப் பாதுகாப்புச் சட்டங்களின்படி, உரிமங்களை இடைநிறுத்தும் அல்லது ரத்து செய்யும் முன், விதிமீறல்களை சரிசெய்ய பொதுவாக நிறுவனங்களுக்கு அவகாசம் வழங்கப்படும். அவசரமான பொது சுகாதாரச் சூழ்நிலைகளில் மட்டுமே ஒழுங்குமுறை அமைப்புகள் உடனடியாக உரிமங்களை இடைநிறுத்த முடியும். ஆனால், அதற்கான காரணங்களை அவர்கள் பதிவு செய்ய வேண்டும்.

"விதிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயம் என்பதில் எந்த சமரசமும் இல்லை. ஆனால், பொதுவெளியில் பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்துவது, சிறிய நடைமுறை விதிமீறல்கள் அல்லது சரிசெய்யக் கூடிய பிரச்னைகளுக்காக உடனடியாக உரிமங்களை இடைநிறுத்துவது, நிர்வாக ரீதியான தவறுகளுக்குக் கடுமையான தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற அதிகாரத் துஷ்பிரயோக அணுகுமுறைகள், சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பீதியை ஏற்படுத்துகின்றன" என்று இந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்கத்தின் சட்டப் பிரிவு தலைவர் நிரஞ்சன் லக்ஷ்மண் ஷெட்டி கூறினார்.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த முண்டே, தனது சோதனைகள் சட்டபூர்வமானவை என்றும், மிகத் தீவிரமான விதிமீறல்கள் தொடர்பாக மட்டுமே உரிமங்கள் இடைநிறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

எனினும், சில நிறுவனங்கள், சிறிய விதிமீறல்களுக்காகவும், முதலில் எச்சரிக்கையோ அல்லது அவற்றைச் சரிசெய்வதற்கான வாய்ப்போ வழங்கப்படாமல் தங்கள் நிறுவனங்கள் மூடப்பட்டதாக வெளிப்டையாகக் கூறியுள்ளன.

இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சமூக ஊடக நட்சத்திரமாக மாறியுள்ளார் - காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

அவரது நடவடிக்கைகள் சட்டரீதியான சவால்களையும் எதிர்கொண்டுள்ளன. சில வழக்குகளில், நீதிமன்றங்கள் உரிம இடைநிறுத்த உத்தரவுகளை ரத்து செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளன. மேலும், ஒழுங்குமுறை அமைப்பின் அணுகுமுறையையும் விமர்சித்துள்ளன.

உதாரணமாக, ஆகஸ்ட் மாதம், மும்பை உயர் நீதிமன்றம் முண்டே தலைமையிலான துறைக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. சட்ட விதிகளின்படி 98% இணக்கமாக இருப்பதாக மறுஆய்வில் கண்டறியப்பட்ட பின்னரும், உரிமம் இடைநிறுத்தப்பட்ட நிலையிலேயே இருந்த இனிப்புக் கடை ஒன்றுக்கு இந்த இழப்பீட்டை வழங்க உத்தரவிடப்பட்டது.

ஒழுங்குமுறை அமைப்பின் நோக்கங்கள் "பாராட்டத்தக்கவை" என்று நீதிமன்றம் கூறியபோதிலும், அது "எல்லை மீறிச் சென்றுவிட்டதாகவும்" தெரிவித்தது. தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கும் அதே அளவிலான ஆய்வை அரசு நிறுவனங்களுக்கும் ஒழுங்குமுறை அமைப்பு மேற்கொள்கிறதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அந்த விமர்சனம் வெளியான மறுநாளே, முண்டேவின் குழு மாநில உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள உணவகங்களை ஆய்வு செய்து, விதிமீறல்களைச் சுட்டிக்காட்டியது. தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் அரசு நிறுவனங்களாக இருந்தாலும், விதிகள் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் என்பதற்கு இது சான்று என்று முண்டே கூறுகிறார்.

"உணவு வணிக நிறுவனங்களோ அல்லது நிறுவன நிர்வாகமோ ஏற்கெனவே உள்ள விதிமுறைகளைப் பின்பற்றியிருந்தால், அந்த நடவடிக்கைகளை நான் எடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது" என்று முண்டே பிபிசியிடம் தெரிவித்தார்.

வணிக நிறுவனங்களை மூடுவது தங்கள் நோக்கமல்ல என்றும், உணவின் பாதுகாப்பை உறுதி செய்வதே தங்கள் நோக்கம் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

"ஒவ்வோர் உரிமதாரரின் நிறுவனத்தையும் மூடுவதற்கோ அல்லது உரிமத்தை இடைநிறுத்துவதற்கோ நாங்கள் இங்கு வரவில்லை. உணவு பாதுகாப்பானதாகவும், தரம் குறைந்ததாக இல்லாமலும், தவறான பெயரில் அல்லது தவறான தகவல்களுடன் விற்பனை செய்யப்படாமலும், நுகர்வுக்குத் தகுதியானதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காகவே நாங்கள் இருக்கிறோம்" என்று கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது முண்டே தெரிவித்தார்.

இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சமூக ஊடக நட்சத்திரமாக மாறியுள்ளார் - காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் அதிக கவனத்தைப் பெற்றுள்ள உணவக ஆய்வுகள், அவரது பணியின் ஒரு பகுதி மட்டுமே. உணவைப் பொட்டலமிட நாளிதழ்களைப் பயன்படுத்துவதற்கும், செயற்கை நிறமிகளைப் பயன்படுத்துவதற்கும், தடை செய்யப்பட்ட செயற்கைப் பனீருக்கும் பால் இல்லாமல் தயாரிக்கப்படும் பனீருக்கு மாற்றான பொருட்களுக்கும் முண்டே தடை விதித்துள்ளார்.

தற்போது அவரது கவனம் பள்ளிகளை நோக்கித் திரும்பியுள்ளது. பள்ளி உணவகங்கள், விடுதி சமையலறைகள் மற்றும் மதிய உணவு வழங்குநர்கள் முறையான உரிமங்களைப் பெற வேண்டுமென அவரது துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் இருந்து 50 மீட்டர் தொலைவுக்குள் அதிக கொழுப்பு, சர்க்கரை அல்லது உப்பு கொண்ட உணவுகளை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முண்டே அடுத்த பணியிடத்திற்குச் சென்ற பிறகு என்ன நடக்கும் என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது. "முண்டேவின் நடவடிக்கைகள், உணவுப் பாதுகாப்பு குறித்து தொழில் நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. இது வரவேற்கத்தக்கது. ஆனால், இது நீடிக்கக் கூடியதாக இல்லை" என்று அகர்வால் கூறுகிறார்.

மேலும், ஒரு தனிப்பட்ட அதிகாரியைத் தாண்டியும் செயல்படும் வகையில் அமைப்புகளை உருவாக்குவதே சவால் என்று அவர் குறிப்பிடுகிறார். எனினும், தற்போது அதன் தாக்கம் தெருக்களில்கூட உணரப்படுகிறது.

மும்பையின் புறநகர்ப் பகுதியில் சாண்ட்விச் விற்பனை செய்யும் யுவராஜ் யாதவ், அச்சு மையில் உள்ள ரசாயனங்கள் உணவில் கசியக்கூடும் என்ற கவலைகள் இருந்தபோதிலும், முன்பு பயன்படுத்தப்பட்ட நாளிதழ்களையே சாண்ட்விச் பொட்டலமிடப் பயன்படுத்தி வந்ததாகக் கூறுகிறார். தடை குறித்துக் கேள்விப்பட்ட பிறகு, அவர் சமீபத்தில் கிரீஸ்ப்ரூஃப் பேப்பருக்கு மாறியுள்ளார்.

"நாளிதழ்களைப் பயன்படுத்தி உணவைப் பொட்டலமிடுவது உடல்நலத்திற்குக் கேடு என்பதால், அவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட பிறகு, சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் இதைப் பயன்படுத்தத் தொடங்கினோம்" என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு