5 மாதங்களாக கரையே பார்க்காமல் படகில் வாழ்ந்த தமிழக மீனவர்கள் - ஓமனில் சிக்கியது எப்படி?

- எழுதியவர், யாழ் இனியன்
- பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள், கன்னியாகுமரியைச் சேர்ந்த நான்கு பேர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர், ஓமனில் வேலைக்குச் சென்று விசா காலாவதியானதால் ஐந்து மாதங்களுக்கும் மேலாக கரைக்கு வராமல் படகிலேயே வாழ்ந்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் ஓமன் சென்ற இவர்களுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், வேலைக்கான விசா கிடைக்காத நிலையில், சுற்றுலா விசாவும் காலாவதியானதால் அவர்கள் சட்டவிரோதமாகத் தங்கியவர்களாக மாறினர்.
இப்போது இந்திய தூதரகத்தின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு, ஓமனில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், விசா காலாவதியானதற்கான அபராதம் செலுத்த வேண்டியிருப்பதால் அவர்களால் உடனடியாக இந்தியா திரும்ப முடியாத நிலை உள்ளது.
ஓமன் அழைத்துச் சென்ற முகவர்
சிரில் ராபின் ஜார்ஜ், அந்தோணி பிச்சையா அலெக்ஸ் ரவி, அந்தோணி பிச்சை சாரோன் ஜோசவா, தாமஸ் அருள், மாரியப்பன் ஜெட்லி ஆகிய ஐந்து மீனவர்களையும் கன்னியாகுமரியைச் சேர்ந்த பெத்தாலிஸ் என்ற முகவர் அணுகியுள்ளார்.
ஓமனில் ஒருவரிடம் வேலை இருப்பதாகக் கூறிய அவர், விசா மற்றும் விமானப் பயணத்திற்காக அவர்கள் எந்தப் பணமும் செலுத்தத் தேவையில்லை என்றும், மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
பெத்தாலிஸும் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் என்பதுடன், அந்த மீனவர்களுக்கு அவரை நன்கு தெரியும் என்பதால் அவரது வார்த்தைகளை அவர்கள் நம்பியுள்ளனர்.
வேலைக்கான விசா குறித்து அவர்கள் கேட்டபோது, முதலில் சுற்றுலா விசாவில் ஓமன் செல்லலாம் என்றும், அங்கு சென்ற பிறகு அந்த விசாவை வேலைக்கான விசாவாக மாற்றிவிடலாம் என்றும் பெத்தாலிஸ் கூறியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஐந்து பேரும் ஜனவரி 19ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஓமன் புறப்பட்டனர்.
'கரைக்கு வந்தால் கைது'
ஓமன் சென்ற மீனவர்கள், மஸ்கட்டில் இருந்து சுமார் 550 கி.மீ. தெற்கே அமைந்துள்ள துறைமுக நகரமான டுக்மில் இருந்து மீன்பிடிப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். ஓமன் சென்ற முதல் ஒரு மாதம் வரை பெரிய பிரச்னை எதுவும் இல்லை என்று கூறும் மீனவர்கள், அதன் பிறகு வேலைக்கான விசா குறித்து முகவரிடம் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
விசா விரைவில் வந்துவிடும் என்றும், கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர்களிடம் கூறப்பட்டுள்ளது. ஆனால், பிப்ரவரி 19ஆம் தேதி அவர்களின் சுற்றுலா விசா காலாவதியானது. பிப்ரவரி 20ஆம் தேதி முதல் செல்லுபடியாகும் எந்த விசாவும் இல்லாமல் அவர்கள் ஓமனில் இருந்துள்ளனர்.
கரைக்கு வந்தால் ஓமன் காவல்துறையால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டதால், அவர்கள் மீன்பிடிக்கச் சென்ற அதே படகில் தொடர்ந்து தங்கியுள்ளனர். அவர்கள் சாப்பிடுவதும், தூங்குவதும், அன்றாடத் தேவைகளைச் செய்வதும் அந்தப் படகிலேயேதான்.
இந்திய மீனவர்களின் உரிமைகளுக்காகச் செயல்படும் இன்ஃபிடெட் அமைப்பின் நிறுவனர் ஜஸ்டின் ஆண்டனி, மீனவர்கள் எதிர்கொண்ட அச்சம் குறித்துப் பேசியபோது, "ஓமன் காவல்துறையினரால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தால் மீனவர்கள் கரைக்கு வரவில்லை. ஜூலை மாதம் வரை படகிலேயே தூங்கி, சாப்பிட்டு, அனைத்து வேலைகளையும் செய்தனர். பிடித்த மீன்களை கரையில் இறக்குவதற்காகச் செல்லும்போதுகூட எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்திலேயே இருந்தனர்" என்று நிலைமையை விவரித்தார்.

பட மூலாதாரம், Getty Images
வேலை இல்லை, சம்பளமும் இல்லை
ஜூலை மாதத்திற்குப் பிறகு, ஓமன் காவல்துறையினரின் கவனத்திற்குச் செல்லாமல் ஒருவழியாக கரைக்கு வந்த மீனவர்கள், அங்கு வசித்து வந்த தமிழர்களின் உதவியை நாடியுள்ளனர். அங்கிருந்து தங்களது முதலாளியைத் தொடர்புகொண்டு இந்தியா திரும்புவதற்கு உதவுமாறு கேட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்குத் தேவையான உதவி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் முதலாளியின் மேலாளர், மீனவர்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், இந்தியா செல்வதற்கான விமானச் சீட்டு அவர்களிடம் இல்லை.
இதுகுறித்து மீனவர்கள் கேள்வி எழுப்பியபோது, அந்த மேலாளர் அங்கிருந்து சென்றுவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இதையடுத்து, அவர்கள் மீண்டும் தமிழர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கே திரும்பியுள்ளனர்.
இந்திய தூதரகம் தலையிட்டது
இந்த நிலையில், மீனவர்களில் ஒருவரான ராபின் ஜார்ஜ், தாங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து ஜஸ்டின் ஆண்டனியிடம் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அவர் உடனடியாக இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, மீனவர்களின் நிலை குறித்து தகவல் அளித்துள்ளார். அவர்களை இந்தியாவுக்கு மீண்டும் அழைத்து வர உதவுமாறும் கேட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, இந்திய தூதரக அதிகாரிகள் ஐந்து மீனவர்களையும் மீட்டு, தற்போது அவர்களை நிவாரண முகாமில் தங்க வைத்துள்ளனர்.
இருப்பினும், ஓமனில் விசா காலாவதியான பிறகு தங்கி இருந்ததற்கான அபராதம் இருப்பதால், அவர்களின் இந்திய பயணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images
'ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான்'
மீனவர்கள் ஓமன் சென்ற பிறகு கடந்த ஏழு மாதங்களாக அவர்களது குடும்பங்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. ராபின் ஜார்ஜின் மனைவி அந்தோணியம்மாள், தனது கணவர்தான் குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரமாக இருந்ததாகக் கூறுகிறார்.
அவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மகன் சேலத்தில் பிசியோதெரபி படித்து வருகிறார். மூத்த மகள் கன்னியாகுமரியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இளைய மகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
"எனக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள். எல்லோரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். என் கணவர்தான் குடும்பத்திற்கு வருமானம் ஈட்டித் தந்தார். குழந்தைகளின் படிப்புச் செலவுகளைச் சமாளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர் ஓமன் சென்றார். ஆனால், இப்போது அவரே அங்கு சிரமப்படுகிறார்," என்று கூறினார் அந்தோணியம்மாள்.
"நாங்கள் இப்போது ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பிடுகிறோம். மிகவும் கஷ்டப்படுகிறோம். என் கணவரை இந்தியாவுக்கு அழைத்து வர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."
ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், மூன்று மாதங்களுக்கு மட்டும் சுமார் 30,000 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், ஓமனில் விசா காலாவதியானதற்காக 1.25 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டதாகவும், அந்தத் தொகையைச் செலுத்த முடியாததால் தனது கணவரால் இந்தியா திரும்ப முடியவில்லை என்றும் அந்தோணியம்மாள் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
'கடனை அடைக்கச் சென்றவர் இப்போது திரும்ப முடியவில்லை'
மற்றொரு மீனவரான அந்தோணி பிச்சையின் மனைவி மேரி சூஜாவும் குடும்பத்தின் நிலை குறித்துக் கவலை தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் அவர், சுமார் 90 வயதான தனது மாமியாரையும் கவனித்து வருகிறார். குடும்பத்தின் மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட தேவைகளுக்காகக் கடன் ஏற்பட்டதால், அதை அடைப்பதற்காகவே தனது கணவர் ஓமன் சென்றதாக மேரி சூஜா கூறுகிறார்.
"எனக்கு உடல்நிலை சரியில்லை. மருந்துகள் எடுத்துக் கொண்டு இருக்கிறேன். சுமார் 90 வயதான என் மாமியாரையும் பார்த்துக்கொள்ள வேண்டும். எங்கள் உடல்நிலை மற்றும் குடும்பச் சூழ்நிலை காரணமாக கடன் ஏற்பட்டது. அந்தக் கடனை அடைப்பதற்காகத்தான் என் கணவர் ஓமன் சென்றார்."
"இப்போது அவர் திரும்பி வர முடியாததால், 25 மற்றும் 20 வயதுடைய என் இரு மகன்களும் மீன் பிடிக்கச் சென்று குடும்பத்தின் அன்றாடச் செலவுகளைக் கவனித்து வருகின்றனர்" என்றார் மேரி சூஜா.
அபராதத்தை ரத்து செய்ய பேச்சுவார்த்தை
மீனவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது. ஓமன் அதிகாரிகளிடம், மீனவர்களின் விசா காலாவதியானதற்கான அபராதத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஓமன் அதிகாரிகளால் விசா காலாவதியானதற்கான அபராதம் ரத்து செய்யப்பட்டவுடன், இந்த ஐந்து மீனவர்களும் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் இந்திய தூதரகத்தைச் சேர்ந்த சுமித் குமார் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
மீட்புப் பணிகள் தீவிரம்
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் பொது மற்றும் மீன்வளத் துறைகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர் நலத்துறை இயக்குநரகம் மூலம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும், மீனவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பிபிசி தமிழிடம் பேசிய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப், "இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே பொது மற்றும் மீன்வளத் துறைகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம். புலம்பெயர் தமிழர் நலத்துறை இயக்குநரகம் மூலம் வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இந்த விவகாரத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
ஐந்து மீனவர்களும் தற்போது நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தாலும், அவர்களின் விசா அபராதம் ரத்து செய்யப்படுவதும், அதன் பிறகு அவர்கள் இந்தியா திரும்புவதும் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் முக்கியமாக உள்ளது.
பல மாதங்களாக குடும்பத்தினரைப் பிரிந்து இருக்கும் மீனவர்களின் குடும்பங்கள், அவர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பில் உள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































