இரான் போரால் கோடிகளில் லாபம் பார்க்கும் 4 துறைகள் எவை?

    • எழுதியவர், ஆர்ச்சி மிட்செல்
    • பதவி, வணிக செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரானில் நடைபெற்று வரும் அமெரிக்க-இஸ்ரேல் போரினால் உலகெங்கிலும் உள்ள குடும்பங்கள் பாதிப்புகளைச் சந்தித்து வரும் வேளையில், சில நிறுவனங்களோ அதற்கு நேர்மாறாக பெருமளவிலான லாபங்களை ஈட்டி வருகின்றன.

இந்த போரால் உருவான நிச்சயமற்ற தன்மையும், இரான் ஹோர்மூஸ் நீரிணையை முடக்கியதும், வாழ்க்கைச் செலவுகளை அதிகரித்தது.

இதனால், நிறுவனங்கள், குடும்பங்கள் மற்றும் அரசாங்கங்களின் நிதிநிலை கடுமையாகப் பாதித்துள்ளது.

ஆனால், இந்தச் சூழலில் சில நிறுவனங்கள் பெரும் நிதி ஆதாயம் கண்டுள்ளன. குறிப்பாக, போர் சூழ்நிலைகளில் அதிக லாபம் காணும் துறைகள் அல்லது எரிசக்தி விலைகளின் ஏற்றத் தாழ்வால் பயன் பெறும் நிறுவனங்கள் அதிக அளவிலான வருவாயை கண்டுள்ளன

மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், பில்லியன் கணக்கில் லாபம் ஈட்டும் சில துறைகள் மற்றும் நிறுவனங்கள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.

1. எண்ணெய் மற்றும் எரிவாயு

இந்தப் போரின் மிகப்பெரிய பொருளாதாரத் தாக்கம் என்பது எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்திருப்பதாகும். உலகில் வர்த்தகமாகும் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், பிப்ரவரி இறுதியில் இருந்து அந்தப் பகுதியின் போக்குவரத்து செயல்பாடுகள் பெருமளவில் முடங்கின.

இதன் விளைவாக எரிசக்தி சந்தைகளில் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. இதனால் உலகின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் சில பயனடைந்துள்ளன.

குறிப்பாக, விலை மாற்றங்களை பயன்படுத்தி வர்த்தகம் செய்யும் ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்களே அதிக பலன் பெற்றுள்ளன. எரிசக்தி விலைகளின் திடீர் மாற்றங்கள் அவர்களின் லாபத்தை அதிகரித்தது.

பிபி நிறுவனத்தின் லாபம் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இரட்டிப்பாக அதிகரித்து 3.2 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

ஷெல் நிறுவனம் தனது முதல் காலாண்டு லாபம் 6.92 பில்லியன் டாலராக உயர்ந்ததாகத் தெரிவித்தது, இது ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகளை விட அதிகமாகும்.

மற்றொரு சர்வதேச நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ் எண்ணெய் மற்றும் எரிசக்தி சந்தைகளில் நிலவிய நிலையற்ற தன்மையின் காரணமாக, 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதன் லாபம் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அதிகரித்து 5.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.

அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான எக்ஸான்மொபில் மற்றும் செவ்ரான் ஆகியவற்றின் வருவாய், மத்திய கிழக்கில் ஏற்பட்ட விநியோகத் தடையால் கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் சரிவைச் சந்தித்தது.

இருப்பினும், இவை இரண்டும் ஆய்வாளர்களின் கணிப்புகளை விட கூடுதல் லாபம் ஈட்டியுள்ளன. போர் தொடங்கிய போது இருந்ததை விட எண்ணெய் விலை இன்னும் கணிசமாக அதிகமாக இருப்பதால், இந்த ஆண்டின் அடுத்து வரும் மாதங்களில் தங்களின் லாபம் மேலும் வளரும் என்று அவை எதிர்பார்க்கின்றன.

2. பெரிய வங்கிகள்

இரான் போரின் போது மிகப்பெரிய வங்கிகள் சிலவற்றின் லாபமும் அதிகரித்துள்ளது.

ஜேபி மோர்கன் வங்கியின் வர்த்தகப் பிரிவு, 2026-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 11.6 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், அந்த வங்கி தனது வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய காலாண்டு லாபத்தை பதிவு செய்துள்ளது.

ஜேபி மோர்கன் உட்பட பாங்க் ஆஃப் அமெரிக்கா, மோர்கன் ஸ்டான்லி, சிட்டிகுரூப், கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் வெல்ஸ் ஃபார்கோ ஆகிய "பிக் சிக்ஸ்" வங்கிகளின் லாபம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கணிசமாக உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, இந்த வங்கிகள் 2026-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 47.7 அமெரிக்க டாலர் லாபத்தை ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

வெல்த் கிளப் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு உத்தி நிபுணர் சுசன்னா ஸ்ட்ரீட்டர், "அதிகப்படியான வர்த்தக நடவடிக்கைகள் முதலீட்டு வங்கிகளுக்கு, குறிப்பாக மோர்கன் ஸ்டான்லி மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் ஆகியவற்றுக்கு பெரும் பலனை அளித்துள்ளன" என்றார்.

அபாயம் அதிகம் உள்ள பங்குகள் மற்றும் பத்திரங்களைக் கைவிட்ட முதலீட்டாளர்கள், பாதுகாப்பானதாகக் கருதப்படும் சொத்துக்களில் தங்கள் பணத்தை முதலீடு செய்ய ஆர்வம் காட்டியதால், வால் ஸ்ட்ரீட்டின் முன்னணி வங்கிகளில் வர்த்தகச் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.

நிதிச் சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மையைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட முதலீட்டாளர்கள் முயன்றதும் வர்த்தக நடவடிக்கைகளின் உயர்வுக்கு ஒரு காரணமாக அமைந்தது.

"போரினால் சந்தையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் வர்த்தகத்தை வெகுவாக அதிகரித்துள்ளன. போர் மேலும் தீவிரமடையலாம் என்ற அச்சத்தில் சில முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றனர், அதே நேரத்தில் மற்றவர்கள் சரிவின் போது பங்குகளை வாங்கினர். இது சந்தை மீண்டும் மீட்சியடைவதற்கான உந்துதலை அளித்தது." என்கிறார் சுசன்னா ஸ்ட்ரீட்டர்.

3. பாதுகாப்புத் துறை

எந்தவொரு மோதலிலும் உடனடிப் பலன் பெறும் துறைகளில் பாதுகாப்புத் துறையும் ஒன்று என ஆர்எஸ்எம் யுகே நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் எமிலி சாவிச் கூறுகிறார்.

பிபிசியிடம் பேசிய அவர், "இந்தப் போர், வான்வழி பாதுகாப்பு திறன்களில் உள்ள குறைபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இதனால், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள், ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் முதலீடுகள் வேகமடைந்துள்ளன," என தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் முக்கியத்துவத்தை இந்தப் போர் காட்டியுள்ளதுடன், ஆயுத கையிருப்புகளை மீண்டும் நிரப்ப வேண்டிய தேவையையும் அரசுகளுக்கு உருவாக்கியுள்ளது. இதனால் பாதுகாப்பு உபகரணங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

எஃப்-35 போர் விமானத்தின் பாகங்கள் உள்ளிட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் பிஏஇ சிஸ்டம்ஸ் நிறுவனம், இந்த ஆண்டு விற்பனை மற்றும் லாபத்தில் மிகச்சிறப்பான வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக வர்த்தக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் அதிகரித்து வரும் "பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்" அரசாங்கங்களின் பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்கச் செய்துள்ளதாகவும், இது நிறுவனத்திற்கு "ஆதரவான ஒரு சூழலை" உருவாக்கியுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனங்களான லாக்ஹீட் மார்ட்டின், போயிங், நார்த்ரோப் க்ரம்மன் ஆகிய மூன்றும், 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில் தங்களுக்குக் கிடைத்துள்ள ஆர்டர்களின் எண்ணிக்கை சாதனை அளவில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளன.

இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்த பாதுகாப்பு நிறுவனங்களின் பங்குகள், மார்ச் மாத நடுப்பகுதியிலிருந்து சரிவைச் சந்தித்துள்ளன. இத்துறை அதன் உண்மையான மதிப்பை விட அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளதோ என்ற அச்சமே இதற்கு காரணமாகும்.

4. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

இந்த மோதலானது புதைபடிவ எரிபொருட்களை மட்டுமே சார்ந்திருப்பதைத் தவிர்த்து, பிற ஆதாரங்களுக்கு மாற வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளதாக ஸ்ட்ரீட்டர் கூறுகிறார்.

இது "புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் மீதான ஆர்வத்தை வேகப்படுத்தியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவில் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் "மேலும் எண்ணெய் தோண்டுங்கள்" என்ற முழக்கத்தை டிரம்ப் நிர்வாகம் பிரபலப்படுத்திய போதிலும், அங்கு இந்த ஆர்வம் அதிகரித்துள்ளது.

எதிர்கால அதிர்ச்சிகளைத் தாங்கும் திறனுக்கும் நிலைத்தன்மைக்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மீதான முதலீடு மிகவும் முக்கியமானது என்ற எண்ணத்தைப் போர் ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ட்ரீட்டர் கூறினார்.

இதனால் பலனடைந்த நிறுவனங்களில் ஒன்று புளோரிடாவைச் சேர்ந்த 'நெக்ஸ்ட் எரா எனர்ஜி' ஆகும். முதலீட்டாளர்கள் அதன் திட்டங்களில் ஆர்வம் காட்டியதால், இந்த ஆண்டில் இதுவரை அதன் பங்குகள் 17 சதவீதம் உயர்ந்துள்ளன.

டென்மார்க்கின் காற்றாலை மின்சக்தி நிறுவனங்களான வெஸ்டாஸ், ஆர்ஸ்டெட் ஆகியவையும் லாபம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. இரான் போரின் தாக்கம் எவ்வாறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களுக்கும் ஊக்கமளிக்கிறது என்பதை இது காட்டுகிறது.

பிரிட்டனில், இந்தப் போர் சோலார் பேனல்கள் மற்றும் ஹீட் பம்ப்களின் விற்பனையில் ஒரு "பெரிய மாற்றத்தை" ஏற்படுத்தியுள்ளதாகவும், பிப்ரவரி இறுதி முதல் சோலார் பேனல் விற்பனை 50% அதிகரித்துள்ளதாகவும் ஆக்டோபஸ் எனர்ஜி நிறுவனம் சமீபத்தில் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் விலையேற்றம் மின்சார வாகனங்களுக்கான தேவையையும் அதிகரித்துள்ளது, குறிப்பாகச் சீன உற்பத்தியாளர்கள் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு