பாக்கெட்டில் வெங்காயம் இருந்தால் சுட்டெரிக்கும் வெயில் உங்களை ஒன்றும் செய்யாதா? அமைச்சர் யோசனையும் அறிவியல் உண்மையும்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வெங்காயத்தை தங்கள் பைகளில் வைத்துக் கொள்ளுமாறு அவர் மக்களுக்கு அறிவுரை வழங்குவதைக் காண முடிகிறது.

இந்த கருத்தை தெரிவித்த பிறகு, ஜோதிராதித்ய சிந்தியா சமூக வலைதளங்களில் கேலிக்கு ஆளாகியுள்ளார். இந்தத் தாங்க முடியாத வெப்பத்திலிருந்து தப்பிக்க வெங்காயம் எப்படிப் பயன்படும் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்திற்கு 3 நாள் பயணம் மேற்கொண்டிருந்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஏப்ரல் 26 அன்று தனது குணா மக்களவைத் தொகுதியின் பிச்சோர் நகரில் ஒரு தாலுகா அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

அப்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "நீங்கள் ஒரு வெங்காயத்தை உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள், அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. நான் எனது காரில் ஏசி பயன்படுத்துவதில்லை, ஏசி இருக்கும் சூழலில் அமருவதும் இல்லை" என்றார்.

"மே-ஜூன் மாதங்களில் வெப்பநிலை 51 டிகிரி செல்சியஸாக இருந்தாலும், நான் இப்படித்தான் இருக்கிறேன். யாராவது கேட்டால், இது சம்பலின் தோல் என்று சொல்வேன்," என்றும் அவர் கூறினார்.

ஏப்ரல் 26 அன்று பிச்சோரில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. அன்றைய தினம் அந்தப் பகுதியில் கடும் வெப்பம் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

கோடை வெப்பத்திலிருந்து உடலைப் பாதுகாக்க பாக்கெட்டில் வெங்காயத்தை வைத்திருப்பது பயன் தரும் என்றும், இது ஒரு வீட்டு வைத்தியம் என்றும் ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.

மேலும் பேசிய அவர், "நான் பார்ப்பதற்கு இளைஞராகத் தெரிந்தாலும், எனது எண்ணங்கள் பழைய காலத்து மனிதரைப் போன்றது. ஆயுர்வேதம் வளர்ந்து வருகிறது, அதை நாம் மறந்துவிடக் கூடாது." என்றார்.

ஜோதிராதித்ய சிந்தியா தனது சட்டைப்பையிலிருந்து ஒரு வெங்காயத்தைக் காட்டியபோது, கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு நபரும் தனது சட்டைப்பையிலிருந்து ஒரு வெங்காயத்தை அவருக்குக் காட்டினார்.

அவர் இது குறித்த வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். அதில், "இன்றைய நவீன யுகத்தில், அனைவரும் கையில் போனுடன் நடமாடுகிறார்கள்" என்று அவர் கூறியிருந்தார்.

இணையத்தில் மக்கள் இந்த வீடியோவை கேலி செய்து வருகின்றனர்.

ஜோதிராதித்ய சிந்தியா தனது அமைச்சகக் கூட்டங்களின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

அத்தகைய ஒரு பதிவில், ஏசி இருக்கும் சூழலில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றுக்கு ஒரு பயனர், "அவர் வெங்காயத்துடன் வெப்பத்தைத் தணிக்கத் தயாராகிறார்" என்று கிண்டலாக கமெண்ட் செய்துள்ளார்.

குந்தன் சிங் என்ற பயனர், "உங்களுக்கு 5 முதல் 10 கிலோ வெங்காயம் அனுப்பி வைக்கிறேன். தயவுசெய்து உங்களிடம் இருக்கும் ஏசியை எனது வீட்டிற்கு அனுப்பி விடுங்கள்." என்று கூறியுள்ளார்.

சைலேந்திர சிங் என்ற பயனர், "எங்கள் வீட்டில் 2 கிலோ வெங்காயம் உள்ளது, இந்த 45 டிகிரி வெப்பத்திலும் நான் ஜம்மு காஷ்மீரில் இருப்பது போல உணர்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை பதிவாகி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பையில் வெங்காயத்தை வைத்திருப்பது போன்ற விஷயங்கள் உங்களை கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்காது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

பகல்நேர வெப்பநிலை அதிகரிக்கும் போது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், இல்லையெனில் வெப்பத்தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் ரமணய்யா பிபிசியிடம் கூறுகையில், பாக்கெட்டில் வெங்காயத்தை வைத்திருப்பதற்கும் வெயிலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார். வெயில் உடலை எல்லாப் பக்கங்களிலிருந்தும் பாதிக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது, வியர்வை மூலம் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைகிறது. எனவே, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீர் குடிக்காமல் இருப்பது சிறுநீரகக் கற்கள் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

பாக்கெட்டில் வெங்காயம் வைத்திருப்பதால், வெயிலின் தாக்கம் குறையும் என்ற கூற்று தவறானது என்று யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவர்களும் கூறுகின்றனர்.

ஹோமியோபதி மருத்துவர் ஷகுப்தா பிபிசியிடம் கூறுகையில், "கிராமப்புறங்களில் இது போன்ற பல நம்பிக்கைகள் உள்ளன. பாக்கெட்டில் வெங்காயத்தை வைத்திருப்பது வெயிலில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லை. கோடைக்காலத்தில் சூரிய வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க மருத்துவர் அளிக்கும் அறிவுரைகளைப் பின்பற்றுவது முக்கியம்." என்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒரு தாயால் செய்ய முடியாத உதவியைக் கூட வெங்காயம் செய்யும் என்ற ஒரு பழமொழி உண்டு, ஆனால் அது சமையலுக்கு மட்டுமே பயன்படும், கோடை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்கு அல்ல. கோடையில் தோல் கருகாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக நீர்ச்சத்து குறைபாட்டைத் தவிர்க்க அதிக அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்" என்றார்.

யுனானி மருத்துவர் தஸ்னீம் பிபிசியிடம் கூறுகையில், "யுனானி மருத்துவத்தில், சளி மற்றும் காய்ச்சலால் ஏற்படும் இருமலைக் குணப்படுத்த வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது. இது சளியுடன் கூடிய இருமலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், பாக்கெட்டில் வெங்காயத்தை வைத்திருப்பது வெப்பத்தைக் குறைக்கும் என்பது ஒரு தவறான கருத்தாகும்" என்றார்.

வெப்ப அலை என்றால் என்ன?

ஒரு பகுதியில் நிலவும் வெப்பநிலை, வானிலை ஆய்வுத் துறையால் குறிப்பிடப்பட்ட வெப்பநிலையை விட அதிகரித்து, சில நாட்களுக்கு அப்படியே நீடித்தால், அது 'வெப்ப அலை' என்று அழைக்கப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, 40 டிகிரி செல்சியஸிற்கு மேல் வெப்பநிலை உயர்ந்து, சுமார் 5 நாட்களுக்கு நீடிப்பது 'வெப்ப அலை' ஆகும்.

வெப்ப அலைகள் மனிதர்கள் உட்பட பல விலங்குகளையும் பாதிக்கின்றன. இவை நீர்ச்சத்து குறைபாடு, சோர்வு, பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, வாந்தி மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்.

அதிகப்படியான வெப்பநிலை காரணமாக இதய நோய் உள்ளவர்களுக்கு பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

சூரிய வெப்பத்தால் தோல் கருகி இருந்தால் என்ன செய்வது?

பகலில் கடும் வெயில் காரணமாக ஒருவருக்கு வெப்பத்தாக்கம் ஏற்பட்டால், அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது மிகவும் முக்கியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

யாருக்காவது சூரிய வெப்பத்தால் தோல் கருகி இருந்தால் , அந்தப் பகுதியை குளிர்ந்த நீரால் சுத்தம் செய்யவும், நிழலான அல்லது காற்றோட்டமான இடத்திற்குச் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சூரிய வெப்பத்தால் தோல் பாதிப்பு ஏற்பட்டவர்களை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மருத்துவர் ரமணய்யா கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு