மும்பை இந்தியன்ஸை மீண்டும் வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ் - புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 சீசனின் 44வது போட்டியில் இன்று (மே 2) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முந்தைய போட்டியில் 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த சூப்பர் கிங்ஸ், இன்னொரு முறை மும்பைக்கு எதிராக மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இதன்மூலம் புள்ளிப் பட்டியலிலும் ஆறாவது இடத்துக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. நமன் திர் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார். அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இளம் வீரர் கார்த்திக் ஷர்மா ஆகியோர் அரைசதம் அடித்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் அசத்திய சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்கள் இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே கொடுத்து வில் ஜேக்ஸ் - ரியான் ரிக்கில்டன் இருவருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தினார் முகேஷ் சவுத்ரி.

அடுத்த ஓவரில் வில் ஜேக்ஸ் விக்கெட்டை வீழ்த்தி, மும்பையின் தடுமாற்றத்தைத் தொடங்கிவைத்தார் அன்ஷுல் கம்போஜ். ஜேக்ஸ் அடித்த பந்தை டீப் பாயின்ட் திசையில் டைவ் அடித்து சிறப்பாகப் பிடித்தார் அறிமுக வீரர் ராமகிருஷ்ணா கோஷ்.

இரண்டாவது விக்கெட்டுக்கு ரிக்கில்டன் மற்றும் நமன் திர் இருவரும் ஒரளவு நிலைத்து நின்று ஆடினார்கள். இந்தக் கூட்டணி 32 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரிக்கில்டன் விக்கெட்டை வீழ்த்தினார் நூர் அஹமது. ரிக்கில்டன் 37 ரன்கள் எடுத்தார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ஓரளவு அதிரடி காட்டினாலும் அவரால் பெரிய இன்னிங்ஸ் ஆட முடியவில்லை. 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த அவர், ராமகிருஷ்ணா கோஷ் பந்துவீச்சில் அவுட் ஆனார். ஐபிஎல் அரங்கில் கோஷ் வீழ்த்தும் முதல் விக்கெட் இது.

சூர்யகுமார் யாதவ் அவுட் ஆனதும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன் விகிதம் வெகுவாகக் குறைந்தது. மிடில் ஓவர்களில் சிஎஸ்கே ஸ்பின்னர்கள் சிறப்பாகப் பந்துவீசியதால், மும்பை இந்தியன்ஸ் பேட்டர்களால் பெரிதாக ரன் சேர்க்க முடியவில்லை.

பவர்பிளேவில் 57 ரன்கள் எடுத்திருந்த மும்பை இந்தியன்ஸ், மிடில் ஓவர்களில் (ஓவர்கள் 7-15) 63 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதாவது ஓவருக்கு 7 ரன் விகிதத்தில் மட்டுமே அவர்களால் அந்தக் கட்டத்தில் ரன் சேர்க்க முடிந்தது.

திலக் வர்மா 8 பந்துகள் சந்தித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியாவோ 23 பந்துகள் சந்தித்து 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். நமன் திர் மட்டும் ஒருபக்கம் நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 37 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த சீசனில் அவர் அடிக்கும் இரண்டாவது அரைசதம் இது.

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் பௌலர்களில் அதிகபட்சமாக அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

160 என்ற இலக்கை எதிர்நோக்கி ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாவது ஓவரிலேயே சஞ்சு சாம்சன் விக்கெட்டை இழந்தது. சாம்சன் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த உர்வில் பட்டேல் அதிரடியாக 2 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் விளாசினார். 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த அவர், அல்லா கசன்ஃபர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடும் அதிரடி காட்ட, பவர்பிளேவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் - கார்த்திக் ஷர்மா இருவரும் நிலைத்து நின்று விளையாடி சூப்பர் கிங்ஸுக்கு போட்டியை முடித்துக் கொடுத்தார்கள்.

ரகு ஷர்மாவின் லெக் ஸ்பின்னுக்கு எதிராக மட்டும் நிதானம் காட்டிய அவர்கள், மற்ற அனைத்து பௌலர்களுக்கு எதிராகவும் எளிதாக ரன் சேர்த்தார்கள். அவர்கள் சீராக ரன் சேர்த்துக்கொண்டே இருந்ததால், மும்பை இந்தியன்ஸால் எந்த கட்டத்திலும் நெருக்கடியை ஏற்படுத்த முடியவில்லை.

இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 75 பந்துகளில் 98 ரன்கள் எடுத்தது. 34 பந்துகளில் தன்னுடைய அரைசதத்தை நிறைவு செய்த ருதுராஜ் கெய்க்வாட், 48 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடர்ந்து 2வது போட்டியாக அவர் அரைசதம் அடித்திருக்கிறார்.

இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய இளம் வீரர் கார்த்திக் ஷர்மா, 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 4 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடித்தார். ஐபிஎல் தொடரில் அவர் அடிகும் முதல் அரைசதம் இது.

இந்த ஜோடியின் செயல்பாட்டால், 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளோடு, புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு முன்னேறியது.

போட்டி முடிந்ததும் பேசிய கார்த்திக் ஷர்மா, "நாங்கள் இந்த இலக்கை விரட்டிப் பிடித்து வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதைச் செய்து முடித்ததில் மகிழ்ச்சி. 'உனக்குத் தெரிந்த இயல்பான ஆட்டத்தை விளையாடு, வேறொன்றும் வேண்டாம்' என்று ருதுராஜ் கூறினார். ஆடுகளம் மெதுவாக இருந்தது, சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாகப் பந்து சற்று நின்று வந்தது. விளையாடிய அனைத்து ஷாட்களும் திருப்திகரமாக அமைந்தன." என்று கூறினார்.

டாஸில் என்ன நடந்தது?

டாஸ் வென்று பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, "நாங்கள் முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம். இது ஒரு நல்ல ஆடுகளமாகத் தெரிகிறது. கடந்த போட்டியில் நாங்கள் பேட்டிங் செய்த விதத்தை வைத்து, எங்கள் பேட்டர்கள் ரன்கள் குவிக்க மற்றொரு வாய்ப்பை வழங்க விரும்புகிறோம். நாங்கள் எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். அணியின் சூழல் நன்றாக உள்ளது, ஆனால் சவாலாகவும் இருந்துள்ளது. நாங்கள் போராட வேண்டும். இது பெருமைக்காக விளையாடுவதைப் பற்றியதுமாகும். ஒட்டுமொத்தமாகச் சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும்." என்று கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவே நினைத்தோம். ஆடுகளம் நன்றாகத் தெரிகிறது, சற்றே காய்ந்து காணப்படுகிறது. அதனால், ஆட்டத்தில் பெரிய மாற்றம் இருக்காது. கடந்த போட்டியில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. தன்னம்பிக்கையைப் பொறுத்தவரை அனைவரும் உச்சத்தில் உள்ளனர். எங்களது திட்டத்தில் உறுதியாக இருந்து, அதைச் சரியாகச் செய்தால் முடிவு தானாகவே வரும்." என்று கூறினார்.

பிளேயிங் லெவனில் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ்:

இந்தப் போட்டிக்கான சென்னை சூப்பர் அணியில் பிரஷாந்த் வீர் மற்றும் ராமகிருஷ்ணா கோஷ் இருவரும் அகீல் ஹொசைன் மற்றும் குர்ஜப்னீத் சிங் ஆகியோருக்குப் பதிலாக இடம்பிடித்தனர்.

பிளேயிங் லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), உர்வில் பட்டேல், டெவால் பிரெவிஸ், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், பிரஷாந்த் வீர், ராமகிருஷ்ணா கோஷ், அன்ஷுல் கம்போஜ், நூர் அஹமது, முகேஷ் சவுத்ரி

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: சர்ஃபராஸ் கான், மேத்யூ ஷார்ட், அகீல் ஹொசைன், குர்ஜன்ப்னீத் சிங், கார்த்திக் ஷர்மா.

மும்பை இந்தியன்ஸ்:

இந்தப் போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் கிரிஷ் பகத் மற்றும் ரகு ஷர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டதாக டாஸின்போது ஹர்திக் பாண்டியா தெரிவித்தார். லெக் ஸ்பின்னரான ரகு ஷர்மா மும்பை அணி பந்துவீசும்போது இம்பேக்ட் வீரராகக் களமிறக்கப்பட்டார்.

பிளேயிங் லெவன்: ரியான் ரிக்கில்டன் (விக்கெட் கீப்பர்), வில் ஜேக்ஸ், நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ராபின் மின்ஸ், கிரிஷ் பகத், டிரென்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா, அல்லா கசன்ஃபர்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ராஜ் பவா, ரகு ஷர்மா, மயாங்க் ராவத், ஷார்துல் தாக்கூர், அஷ்வனி குமார்.

முந்தைய போட்டியில் என்ன நடந்தது?

இந்த சீசனில் இதற்கு முன் இந்த இரு அணிகளும் ஏப்ரல் 23 அன்று மோதின. அந்தப் போட்டியில் 103 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்து 207 ரன்கள் எடுத்த சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸை 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது.

ஐபிஎல் வரலாற்றில் ரன் அடிப்படையில் சூப்பர் கிங்ஸின் மிகப் பெரிய வெற்றி இது. மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப் பெரிய தோல்வி இது.

சூப்பர் கிங்ஸின் மிகப் பெரிய வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கினார் சஞ்சு சாம்சன். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 54 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணி ஒரு நல்ல ஸ்கோரை எடுக்க உதவினார்.

தன்னுடைய இந்த சதம் மூலம் பல்வேறு சாதனைகள் படைத்தார் சாம்சன். மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஐபிஎல் சதம் அடித்த முதல் சிஎஸ்கே வீரர் இவர்தான். ஒரே சீசனில் 2 சதங்கள் அடிக்கும் முதல் விக்கெட் கீப்பர், இரண்டாவது சிஎஸ்கே வீரர் இவர்தான்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு