மூன்று நாட்களாக தேடப்படும் தமிழர்களின் உடல்கள் - மத்தியப் பிரதேச படகு விபத்தில் என்ன நடந்தது?

    • எழுதியவர், ப. சிவசங்கர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

எச்சரிக்கை: இக்கட்டுரையில் உள்ள சில விவரிப்புகள் சங்கடம் தரலாம்.

மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மூவர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 2 பேர் உடல்கள் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் அருகே நர்மதா ஆற்றில் அமைந்துள்ள பர்கி அணை நீர்த்தேக்கத்தில், கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 30) மாலை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் பலர் உயிரிழந்தனர், பலியானவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேரும் அடங்குவர் . நீரில் மூழ்கிய சிலரது உடல்கள் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில் பலரது உடல்கள் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்தவர் காமராஜ் (38) . இவர் மத்திய பிரதேசத்தில் மத்திய அரசு பணியில் உள்ளார்.

திருப்பூர் தாராபுரத்தை சேர்ந்த அவரது உறவினர் சௌபாக்கியம் தனது இரண்டு பிள்ளைகளோடு மத்திய பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை காமராஜ் (38) அவரது மனைவி கார்குழலி(36) , அவரது மகன்கள் தமிழ் வேந்தன்(6) புவிதரன்(10) மற்றும் காமராஜின் உறவினர் சௌபாக்கியம்(42) அவரது மகன் மயூரன் (8), மகள் இனியா(12) என ஏழு பேர் உட்பட 40 பேர் படகு சவாரி சென்று உள்ளனர்.

படகு கவிழ்ந்து எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் படகில் பயணித்த காமராஜ் அவரது மனைவி கார்குழலி அவரது இளைய மகன் தமிழ் வேந்தன் மற்றும் அவரது உறவினர் சௌபாக்கியம், அவரது மகன் மயூரான் ஆகிய ஐந்து பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதில் காமராஜ் மூத்த மகன் புவிதரன் மற்றும் சௌபாக்கியத்தின் மகள் இனியா ஆகிய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

தேடுதல் பணியில் மீட்புக்குழு

தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் அதில் கார்குழலி மற்றும் செளபாக்கியம் ஆகியோரது உடல்கள் மட்டுமே முதலில் மீட்கப்பட்டன.

அவரது உடல்கள் சனிக்கிழமை (மே 2) இரவு திருச்சி கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் உயிரிழந்த காமராஜ், தமிழ்வேந்தன், மயூரன் ஆகியோரது உடல்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் கடந்த 3 நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற தேடுதல் பணிக்குப் பின் சிறுவன் தமிழ் வேந்தன் உடல் மீட்கப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என காமராஜின் உறவினர் விஷ்ணுதேவன் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் விபத்து நடந்த இடத்தில் உடல்களை அடையாளம் காணும் பணியில் இருந்த விஷ்ணுதேவனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. அப்போது பேசிய அவர் கடந்த 3 நாட்களாக பேரிடர் மீட்புப்படையினர் ஓய்வின்றி உடல்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

"மூன்று நாட்களாக உடல்கள் தண்ணீரில் இருப்பதால் சிலரது உடல்கள் உப்பிய நிலையில் மிதந்து வருவதை மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர், அவ்வாறே இன்று (மே2) மாலை சுமார் 7.00 மணியளவில் காமராஜின் இளைய மகன் தமிழ்வேந்தன் உடல் மீட்கப்பட்டுள்ளது"என்று அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட மீட்புப்படையினர் இருட்டும் வரை தேடுதல் பணியில் ஈடுபடுகின்றனர், இருட்டிய பின் மறுநாள் காலை தேடுதல் பணியை தொடர்கின்றனர் என்று குறிப்பிட்ட அவர் காமராஜ் மற்றும் மயூரன் உடல்கள் எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்தை நம்மிடம் வெளிப்படுத்தினார்.

'தமிழ்நாட்டிற்கு வருவதாக இருந்தவருக்கு நேர்ந்த சோகம்'

மத்திய பிரதேசத்தில் 15 ஆண்டுகளாக மத்திய அரசு பணியில் இருந்தவர், இடமாறுதலில் தமிழ்நாடு வருவதாக இருந்தது ஆனால் அவரது உடலே இன்னும் கிடைக்கவில்லை என்றார் காமராஜின் நண்பர் பாலகுரு.

விமானத்தில் வரும் கார்குழலி மற்றும் செளபாக்கியம் உடல்களை பெறுவதற்கு திருச்சியில் காத்திருந்தவரிடம் பிபிசி தமிழ் சார்பாக பேசினோம். அபோது அவர் தெரிவிக்கையில். "ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே தமிழ்நாடு வரும் காமராஜ், அடுத்த சில மாதங்களில் பதவி உயர்வுடன் தமிழ்நாடு வர இருப்பதாக இருந்தது. ஆனால் அதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்று விட்டது" என்று தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்து மீட்கப்பட்ட இருவரது உடல்களை திருச்சி கொண்டு வருவதே சவாலாக இருந்ததாக குறிப்பிட்ட அவர் "காமராஜ் பணியாற்றும் இடத்தில் உள்ள தொழிற்சங்க நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு இருவரது உடல்கள் விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், " மோசமான வானிலை காரணமாக திருச்சிக்கு வந்து சேரவேண்டிய விமானம் விசாகப்பட்டினத்தில் தரையிறங்கி இருப்பதாக குறிப்பிட்ட அவர், உடல்களை பெறும் வரை காத்திருப்போம்" என்று கூறினார்

அரசு தரப்பில் சொல்வது என்ன?

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருப்பதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்களை மீட்டு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.

அதே போல திருச்சி மக்களவை உறுப்பினர் துரை வைகோ திருச்சி வரும் உடல்களை அவரவர் இருப்பிடத்திற்கு கொண்டு செல்ல வாகனங்களை ஏற்படுத்தித் தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்.

மத்திய பிரதேசத்தில் நடைபெறும் மீட்புப்பணி தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணனை பிபிசி தமிழ் சார்பாக தொடர்பு கொண்டோம்.

மீட்கப்பட்ட இருவரது உடல்கள் இன்று ( மே 2) இரவு திருச்சி வந்துவிடும் , மேலும் ஒரு சிறுவன் மீட்கப்பட்டதாக தெரிவித்த அவர் மீதமிருப்போர் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக கூறினார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல ஆணையர் ஆசிஷ்குமார் மத்தியப் பிரதேச மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு