ஆச்சர்யம் தந்த சிஎஸ்கே முடிவு: நெருக்கடியை சமாளிப்பதில் மும்பையை விஞ்சி சாதித்தது எப்படி?

    • எழுதியவர், பாபா அபராஜித்
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் இரண்டாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியிருக்கிறது. அதுவும் இரண்டுமே பெரிய வெற்றிகள். வான்கடேவில் 103 ரன் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே, சேப்பாக்கத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியிருக்கிறது. மும்பை இந்தியன்ஸை 159 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி, அந்த இலக்கை 18.1 ஓவர்களிலேயே எட்டிவிட்டது சிஎஸ்கே அணி.

இந்தப் போட்டி ஆடப்பட்ட ஆடுகளம், போட்டியில் கண்டிப்பாக தாக்கம் ஏற்படுத்தியது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான அந்தப் பகல் போட்டியைத் தவிர்த்து, இதுவரை இந்த சீசனில் சேப்பாக்கத்தில் நடந்த போட்டிகள் பேட்டிங்குக்கு சாதகமான 'flat' ஆடுகளங்களில் தான் ஆடப்பட்டிருக்கின்றன.

ஆனால், இந்த ஆடுகளம் அப்படி இருக்கவில்லை. இது இரட்டைத்தன்மை கொண்டதாக இருந்தது. ஒருசில பந்துகள் அவ்வளவாக மேலே எழும்பவேயில்லை. அதேசமயம் ஒருசில பௌலர்கள் பந்துவீசியபோது நல்ல பவுன்சையும் பார்க்க முடிந்தது. ஆடுகளத்தின் இந்தத் தன்மையால் மும்பை இந்தியன்ஸ் பேட்டர்கள் ரொம்பவே தடுமாறினார்கள் என்பதை மறுக்க முடியாது.

என்னதான் ஆடுகளம் ஒருபக்கம் சவால் கொடுத்தாலும், மும்பை அணியின் செயல்பாடுமே எதிர்பார்க்காத ஒன்றாகத்தான் இருந்தது. அவர்களின் முகத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு ஆடுவதன் பொறுப்பும், அது ஏற்படுத்தும் நெருக்கடியும் தெரிகிறது. முடிவுகள் அவர்கள் எதிர்பார்த்தது போல் கிடைக்காததால் அது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்போது அவர்களின் சீசனே கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இதற்கு மேல் அவர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது மிகமிக கடினமான ஒன்று.

இந்தப் போட்டிக்கான முன்னோட்டத்தில் நான் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தேன். இந்த இரு அணிகளின் வெற்றிக்கும் கேப்டன்களின் செயல்பாடு மிகவும் முக்கியம் என்று. அதற்கு ஏற்ப ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக முன்னின்று ஒரு அரைசதம் அடித்து, அணியை வெற்றி பெறவைத்து ஆட்ட நாயகன் ஆகிவிட்டார். அதேசமயம் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் தடுமாற (23 பந்துகளில் 18 ரன்கள்) மும்பை இந்தியன்ஸும் கடுமையாகத் தடுமாறியது.

அணியின் மற்ற வீரர்களை விடவுமே ஹர்திக் பன்மடங்கு அதிக நெருக்கடியை உணர்கிறார் என்று நினைக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஆனதில் இருந்தே அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறார். அதீத எதிர்பார்ப்புகள் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. அதுமட்டுமல்லாமல், நிறைய விமர்சனங்களையும் அவர் சந்தித்திருக்கிறார். அவற்றையெல்லாம் சமாளித்து சிறப்பாக செயல்படுவது கடினம் தான். ஆனால், அது முடிவுகளில் பெருமளவு பிரதிபலிக்கிறது. அவரும் சரி, அவர் அணியும் சரி, நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.

தொடர்ந்துகொண்டே இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அந்தத் தடுமாற்றம், முதல் இன்னிங்ஸில் சூப்பர் கிங்ஸ் பௌலர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கான காரணமாக அமைந்துவிட்டது. நூர் அஹமது, ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் தங்கள் சிறந்த பந்துவீச்சைத் தொடர, தன் முதல் போட்டியிலேயே நல்ல பங்களிப்பைக் கொடுத்தார் ராமகிருஷ்ணா கோஷ். அந்த கூட்டணியின் சிறப்பான பந்துவீச்சு சேஸிங்கை எளிதாக்க, தற்போது 8 புள்ளிகளோடு ஆறாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்தப் போட்டியில் நான் ரசித்த சென்னை சூப்பர் கிங்ஸின் செயல்பாடுகள் சிலவற்றைப் பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

ஆச்சர்யம் தந்த சிஎஸ்கே முடிவு

இந்த ஆட்டம் தொடங்கியபோது அகீல் ஹொசைன் இல்லாதது எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. அவர் நிச்சயம் அணியில் இருக்க வேண்டிய வீரர், அதனால் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

போட்டிக்கு இடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை பந்துவீச்சு பயிற்சியாளர் ஶ்ரீதரன் ஶ்ரீராமிடம் அகீல் ஹொசைன் சேர்க்கப்படாதது குறித்து வர்ணனையாளர் கேடி மார்டின் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஶ்ரீதரன் ஶ்ரீராம், சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்திருந்தால் அந்த லெவனில் அகீல் ஹொசைன் இருந்திருப்பார் என்று கூறினார். அவர் கூறியதை வைத்துப் பார்க்கும்போது, அவர்கள் பிரஷாந்த் வீரிடம் பேட்டிங்கை அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

பிரஷாந்த் வீர் பௌலிங் செய்யக்கூடிய பேட்டராகவும், அகீல் ஹொசைன் ஓரளவு பேட் செய்யக்கூடிய பௌலராகவுமே சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தால் பார்க்கப்படுகிறார்கள் என்று கருதுகிறேன். ஷிவம் துபே மட்டுமே அணியின் ஒரு இடது கை பேட்டராக இருப்பதால், அவர்கள் பிரஷாந்த் வீரை பிரதானப்படுத்துகிறார்கள். அதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

அகீல் ஹொசைன் இல்லை என்ற ஆச்சர்யம் ஒருபக்கம் இருந்தாலும், சிஎஸ்கே பௌலர்கள் இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். அகீல் ஹொசைனின் பங்களிப்பு தேவைப்படாத நிலையை ஏற்படுத்தினார்கள். முகேஷ் சவுத்ரி மற்றும் அன்ஷுல் கம்போஜ் இருவரும் தொடக்க ஓவர்களில் எதிரணிக்கு நன்கு நெருக்கடி ஏற்படுத்தினார்கள். வில் ஜேக்ஸ் விக்கெட்டை வீழ்த்த ராமகிருஷ்ணா கோஷ் பிடித்த அந்த அட்டகாசமான கேட்ச், அணிக்கு நல்ல உத்வேகம் கொடுத்தது. பின்னர் மிடில் ஓவர்களில் மிகச் சிக்கனமாகப் பந்துவீசி மும்பை இந்தியன்ஸுக்கு நெருக்கடி ஏற்படுத்தினார்கள்.

டெத் ஓவர்களிலும் மும்பை அணியால் தங்கள் ரன் வேகத்தை அதிகரிக்க முடியாதபடி சிஎஸ்கே பௌலர்கள் பார்த்துக்கொண்டார்கள். சிஎஸ்கே பௌலர்கள் வான்கடேவில் காட்டியதைப் போலவே ஒரு முழுமையான செயல்பாட்டை இந்த ஆட்டத்தில் கொடுத்தார்கள். அகீல் ஹொசைன் இல்லாமலேயே!

மிடில் ஓவர்களில் அசத்திய நூர் அஹமது & ஓவர்டன்

என்னதான் முதல் விக்கெட்டுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் பவர்பிளேவில் ஓரளவு நல்ல ஸ்கோர் (57/1) எடுத்திருந்தாலும், மிடில் ஓவர்களில் சிஎஸ்கே பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. மும்பை இந்தியன்ஸ் பேட்டர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தனர். அது அவர்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

அந்தக் கட்டத்தில் நூர் அஹமது மிகச் சிறப்பாகப் பந்துவீசி 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அது மும்பை இந்தியன்ஸுக்கு பின்னடைவாக அமைந்தது. தொடர்ந்து சரியான லென்த்தில், சரியான வேகத்தில் அவர் பந்துவீசினார். அதுமட்டுமல்லாமல் லெக் ஸ்பின், கூக்ளி இரண்டையும் தொடர்ச்சியாக கலந்து அவர் பந்துவீசினார். அதனால், மும்பை பேட்டர்களால் அவர் வீசிய பந்துகளை சரியாகக் கணித்து விளையாட முடியவில்லை. நூர் வீசிய லெக் ஸ்பின்னை சரியாகக் கணிக்காமல், திலக் வர்மா அந்தப் பந்தை மடக்கி அடித்தார். அவர் அதை கூக்ளி என்று நினைத்து அப்படி அடித்து அவுட்டானார்.

அவர் மட்டுமல்லாது அந்தக் கட்டத்தில் பந்துவீசிய ராமகிருஷ்ணா கோஷ் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோரும் பெரும் தாக்கம் ஏற்படுத்தினார்கள். குறிப்பாக ஓவர்டனின் பந்துவீச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் சேப்பாக்கத்துக்கே ஏற்ற ஒரு பௌலராக இருக்கிறார். உயரமான அவரால் பந்தை நன்கு பவுன்ஸ் செய்ய முடிகிறது. நல்ல வேகத்தையும் உருவாக்குகிறார். சரியான லென்த்களில் பந்துவீசுகிறார்.

தன் பந்துகளுக்கு ஏற்ப சரியான ஃபீல்ட் வைத்துக்கொள்கிறார். தேவையான நேரத்தில் சரியான வேரியேஷன்களைப் பயன்படுத்துகிறார். வெறுமனே வேரியேஷன் காட்டவேண்டும் என்பதற்காக அநாவசியமாக எதையும் முயற்சி செய்வதில்லை. அவர் எதையும் சிக்கலாக்காமல் எளிமையாக வைத்துக்கொள்கிறார். அதனால் தான் அவர் பந்துவீச்சு எனக்குப் பிடித்திருக்கிறது.

இந்தப் போட்டியிலும் அப்படியான பந்துவீச்சின் மூலம் மும்பை பேட்டர்களுக்கு சவால் கொடுத்தார். ஹர்திக் பாண்டியாவால் ஓவர்டன் பந்துகளைக் கணிக்கக் கூட முடியவில்லை. 4 ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட். இந்தப் போட்டியில் பந்துவீசிய 12 பந்துவீச்சாளர்களில் மிகவும் சிக்கனமாகப் பந்துவீசியது இவர்தான்.

தொடர்ந்து கலக்கும் கம்போஜ்

அன்ஷுல் கம்போஜ் இந்த சீசனில் மிகச் சிறப்பாகப் பந்துவீசிக் கொண்டிருக்கிறார். இந்தப் போட்டியில் 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் அவர், இப்போது இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக 17 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.

அவருக்கு ஒருசில வேரியேஷன்களே இருக்கின்றன. ஆனால், அவற்றை சரியாகப் பயன்படுத்துகிறார். அது மிகவும் அற்புதமான விஷயம். டெத் ஓவர்களில் சரியான தருணங்களில் அவர் யார்க்கர்களை வீசுகிறார். பவர்பிளேவில் பந்தின் 'சீம்'-ஐ நன்கு பயன்படுத்துகிறார். அதை நன்கு அடிப்பதால், அவருக்கு நல்ல 'சீம் மூவ்மென்ட்' கிடைக்கிறது. அதுவும் பவர்பிளேவில் தாக்கம் ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமல்லாமல் அவர் டெத் ஓவர்களில் சரியான திட்டங்களோடு வருகிறார். சில பேட்டர்களுக்கு இப்படியான ஃபீல்ட் தான் வைக்கப்போகிறேன் என்று முடிவு செய்து வைக்கிறார். அதற்கு ஏற்ப சரியான பந்துகளையும் வீசுகிறார். வைட் லைன் யார்க்கர்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்துகிறார். அதேசமயம், அரவுண்ட் தி ஸ்டம்ப் வந்து, ஸ்டம்ப் லைன் யார்க்கர்களும் வீசி ஏமாற்றுகிறார். குறிப்பாக இவற்றையெல்லாம் சரியான தருணங்களில் அவர் பயன்படுத்துகிறார். இது இந்த சீசன் முழுவதுமே அவருக்குக் கைகொடுத்திருக்கிறது.

இந்தப் போட்டியில் அவர் ராபின் மின்ஸ் விக்கெட்டை வீழ்த்தியது அப்படித்தான். முந்தைய பந்து பவுண்டரி போனதுமே, தன் லென்த்தை மாற்றினார். 'இந்த ஆடுகளத்தில் புதிய பேட்டருக்கு லென்த்தில் பிட்ச் செய்தாலே, ஆடுகளத்தின் 'மாறும் பவுன்ஸ்' (variable bounce) தன்மையால் விக்கெட் கிடைக்கும்' என்று நம்பி அடுத்த பந்தை அப்படி வீசினார். அவர் அப்படி சிந்தித்துப் பந்துவீசியது அந்த விக்கெட்டைப் பெற்றுக்கொடுத்தது. அவருடைய கிரிக்கெட் அறிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு, அனைத்து பகுதிகளிலும் பந்துவீசக்கூடிய ஒரு பௌலர் கிடைத்துவிட்டார்.

பேட்டிங்கில் துளிர்த்திருக்கும் நம்பிக்கை

160 என்ற இலக்கு ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டத்துக்கு ஏற்ற ஒன்று. குஜராத்துக்கு எதிரான போட்டியில் தான் இந்த சீசனில் தன் முதல் அரைசதத்தை அவர் நிறைவு செய்திருந்தார். அதைத் தொடர்வதற்கான நல்ல வாய்ப்பாக இந்தப் போட்டி அமைந்தது. அவரும் அதை சரியாகப் பிடித்துக்கொண்டார். அவரது இந்த இன்னிங்ஸ் நன்கு கட்டமைக்கப்பட்ட ஒன்று. எந்தவொரு ரிஸ்க்கும் எடுக்காமல், சரியான ஷாட்களை, சரியான பௌலர்களைத் தேர்ந்தெடுத்து ஆடினார். அல்லா கசன்ஃபர், கிரிஷ் பகத் போன்ற பௌலர்களை இலக்கு வைத்து அதிரடி காட்டினார். சாம்சன் முன்கூட்டியே அவுட் ஆகியிருந்த நிலையில், பொறுப்பை எடுத்துக்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டார். பழைய ருதுராஜ் கெய்க்வாட் அப்படியே கண்களுக்குத் தெரிகிறார்.

சிஎஸ்கே பேட்டிங்கில் இந்தப் போட்டியில் இன்னொரு பெரிய நம்பிக்கை - கார்த்திக் ஷர்மா. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தத் தொடரில் களமிறங்கிய அவர் தன்னுடைய முதல் ஐபிஎல் அரைசதத்தை நிறைவு செய்திருக்கிறார். மும்பை போன்ற ஒரு அணிக்கு எதிராக சேஸிங்கில் வந்திருக்கும் இந்த அரைசதம் அவர் மீதான நெருக்கடியைக் குறைத்து நம்பிக்கையை அதிகரிக்கும்.

சொல்லபோனால் இந்தப் போட்டியில் நம்பர் 4 இடத்தில் கார்த்திக் ஷர்மாவை களமிறக்கிய முடிவே எனக்குப் பிடித்திருந்தது. அவர் சுழற்பந்துவீச்சாளர்களை நன்கு எதிர்கொள்கிறார் என்பதற்காக அப்படியொரு நகர்வை செய்தார்கள். அது கைகொடுத்திருக்கிறது. அவர் கால்களை நன்கு நகர்த்தி விளையாடுகிறார். ரகு ஷர்மா மெதுவாகப் பந்துவீசியபோது, இறங்கி வந்து நேரே ஒரு பவுண்டரி அடித்தார். அதுவே, அல்லா கசன்ஃபர் பந்துவீசியபோது அப்படிச் செய்யவில்லை. கசன்ஃபர் பந்தை அவ்வளவாக தூக்கிப் போடமாட்டார் என்பதைப் புரிந்துகொண்டு, 'பேக்ஃபூட்டில்' ஆடினார். அவரது அந்த ஆட்டம் சிறப்பாக இருந்தது. இப்போது பிரெவிஸ், துபே ஆகியோருக்குப் பிறகு, இன்னொரு ஸ்பின் ஹிட்டர் சூப்பர் கிங்ஸுக்குக் கிடைத்திருக்கிறார்.

(கட்டுரையாளர் பாபா அபராஜித் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர். 2012ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். தற்போது கேரளா அணிக்காக விளையாடிவரும் அவர் வர்ணனையாளராகவும் செயல்படுகிறார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு