You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோஹினூர் வைரம் 'தென்னிந்திய கோவிலில்' இருந்து முகலாயர் வசமாகி, பிரிட்டன் சென்றது எப்படி?
- எழுதியவர், ரேஹான் ஃபசல்
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
அது 1849ஆம் ஆண்டு, மார்ச் 29ஆம் தேதி.
பத்து வயதான மகாராஜா துலீப் சிங், கோட்டையின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஷீஷ் மஹாலுக்கு அழைத்து வரப்பட்டார்.
அவரது தந்தை, மகாராஜா ரஞ்சித் சிங், பத்து ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். அவரது தாயார், ராணி ஜிந்தன் கவுர், சில காலத்திற்கு முன்பு நகரத்திற்கு வெளியே இருந்த மற்றொரு அரண்மனைக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டிருந்தார்.
துலீப் சிங், சிவப்பு நிற அங்கிகள் மற்றும் தொப்பிகளை அணிந்திருந்த ஆங்கிலேய வீரர்களால் சூழப்பட்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து, ஒரு பொது விழாவில், தனது அரசவையில் எஞ்சியிருந்த தலைவர்களுக்கு முன்னால், பிரிட்டிஷ் அரசாங்கம் பல ஆண்டுகளாகக் காத்திருந்த ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டார்.
அடுத்த சில நிமிடங்களில், லாகூர் கோட்டையில் ஏற்றப்பட்டிருந்த சீக்கிய கால்சா கொடி இறக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கிழக்கிந்திய கம்பெனியின் கொடி ஏற்றப்பட்டது.
இதன் மூலம், கிழக்கிந்திய கம்பெனி சீக்கிய சாம்ராஜ்யத்தின் மீதான ஆதிக்கத்தைப் பெற்றது மட்டுமின்றி, உலகின் மிகவும் பிரபலமான கோஹினூர் வைரத்தையும் தன் வசமாக்கியது.
சிறிய கோழி முட்டை அளவுள்ள வைரம்
கோஹினூர் வைரம் அநேகமாக தென்னிந்திய கோவில் ஒன்றில் இருந்த சிலையின் கண்ணில் இருந்து துருக்கியர்களால் எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கோஹினூர்: உலகின் அதிக பழிச்சொல் பெற்ற வைரத்தின் கதை (Kohinoor: The Story of the World's Most Infamous Diamond) என்ற புத்தகத்தின் ஆசிரியர் வில்லியம் டால்ரிம்பிள் கூறுகையில், "கோஹினூர் பற்றிய முதல் அதிகாரபூர்வ குறிப்பு 1750-இல் பாரசீக வரலாற்றாசிரியர் முகமது மார்வி, நாதிர் ஷாவின் இந்திய படையெடுப்பு குறித்து எழுதிய விளக்கத்தில் காணப்படுகிறது. மார்வி தான் கோஹினூரை நேரில் பார்த்ததாக எழுதியுள்ளார்" என்கிறார்.
"அப்போது அது மயில் சிம்மாசனத்தின் மேல் பகுதியில் பதிக்கப்பட்டு இருந்தது, அந்த சிம்மாசனத்தை நாதிர் ஷா டெல்லியில் இருந்து கொள்ளையடித்து இரானுக்கு கொண்டு சென்றார். கோஹினூர் வைரம் ஒரு சிறிய கோழி முட்டையின் அளவில் இருந்தது. ஒருவேளை அதை விற்றால், அந்தப் பணத்தைக் கொண்டு முழு உலகுக்கும் இரண்டரை நாட்களுக்கு உணவளிக்க முடியும் என்று அப்போது கூறப்பட்டது."
"தக்த்-இ-தௌஸ் உருவாக்க தாஜ் மஹாலை கட்டுவதற்கான செலவைவிட இரண்டு மடங்கு அதிக செலவானது. பின்னர், நாதிர் ஷா தனது கையில் அணிந்து கொள்வதற்காக கோஹினூர் வைரம் அந்தச் சிம்மாசனத்தில் இருந்து அகற்றப்பட்டது."
டெல்லியில் பலரைப் படுகொலை செய்த நாதிர் ஷா
நாதிர் ஷா, தனது 1,50,000 வீரர்களுடன், கர்னால் அருகே முகலாய பேரரசர் முகமது ஷா ரங்கிலாவின் 10 லட்சம் வீரர்கள் கொண்ட படையைத் தோற்கடித்தார்.
டெல்லியை அடைந்ததும், நாதிர் ஷா வரலாற்றில் அரிதாக காணப்படக்கூடிய ஒரு படுகொலையை அரங்கேற்றினார்.
பிரபல வரலாற்று ஆசிரியர்களான சர் ஹெச்.எம். எலியட், ஜான் டாசன் ஆகியோர் தங்களது 'இந்தியாவின் சொந்த வரலாற்றாசிரியர்களால் கூறப்படும் இந்தியாவின் வரலாறு' (The History of India as Told by Its Own Historians) என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார்.
"நாதிர் ஷாவின் நாற்பதாயிரம் வீரர்கள் டெல்லிக்குள் நுழைந்த உடனேயே, தானியங்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. நாதிர் ஷாவின் வீரர்கள் பேரம் பேச முயன்றபோது, அவர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது, மக்கள் வீரர்களைத் தாக்கத் தொடங்கினர்."
நண்பகலுக்குள், தொள்ளாயிரம் பாரசீக வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு டெல்லி மக்கள் அனைவரையும் படுகொலை செய்ய நாதிர் ஷா உத்தரவிட்டார்.
இந்தப் படுகொலை காலை ஒன்பது மணிக்குத் தொடங்கியது. செங்கோட்டை, ஜமா மஸ்ஜித், தரீபா, சாந்தினி சௌக் ஆகிய பகுதிகளைச் சுற்றி அதிகப்படியான மக்கள் கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்தமாக முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
மற்றொரு வரலாற்றாசிரியர் வில்லெம் ப்ளூர் தனது 'நாதிர் ஷாவின் இந்திய போர்ப் பயணத்தின் புதிய உண்மைகள்' (New Facts of Nader Shah's India Campaign) என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார்.
"முகமது ஷாவின் தளபதி நிஜாமுல் முல்க், தலைப்பாகை அணியாமல் நாதிர் ஷா முன் சென்றார். அவரது கைகள் அவரது சொந்த தலைப்பாகையாலேயே பின்னால் கட்டப்பட்டிருந்தன. அவர் நாதிர் ஷாவின் முன்பாக மண்டியிட்டு, டெல்லி மக்களுக்குப் பதிலாகத் தன்னை பழிவாங்குமாறு கேட்டுக்கொண்டார்.
டெல்லியை விட்டு வெளியேறுவதற்கு முன் நூறு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் நாதிர் ஷா படுகொலையை நிறுத்தினார். அடுத்த சில நாட்களில், நிஜாமுல் முல்க் தனது நாட்டின் தலைநகரையே சூறையாடி அந்தப் பணத்தைத் திரும்பச் செலுத்தினார். சுருக்கமாகச் சொன்னால், "348 ஆண்டுகளாக முகலாயர்களால் திரட்டப்பட்ட செல்வம், ஒரு நொடியில் வேறொருவரின் சொத்தாக மாறியது."
நாதிர் ஷா கோஹினூரை கைப்பற்றியது எப்படி?
வில்லியம் டால்ரிம்பிள், அனிதா ஆனந்த் ஆகியோர் கோஹினூர் வைரத்தின் வரலாற்றை ஆராயக் கடினமாக உழைத்துள்ளனர்.
"முகலாய ரத்தின நிபுணர்களிடம் பேசுவதன் மூலம் எனது ஆராய்ச்சியைத் தொடங்கினேன்" என்று கூறும் டால்ரிம்பிள், "அவர்களில் பெரும்பாலோர் கோஹினூர் வரலாறு குறித்துப் பொதுவாக நிலவும் நம்பிக்கைகள் தவறானவை என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். நாதிர் ஷாவின் கைக்கு வந்த பிறகுதான் கோஹினூர் முதன்முதலில் பொது மக்களின் கவனத்திற்கு வந்தது." என்று குறிப்பிடுகிறார்.
முகமது ஷா தனது தலைப்பாகைக்குள் கோஹினூரை மறைத்து வைத்திருப்பதாக நூர் பாய் என்ற அரசவை நடனக் கலைஞர் நாதிர் ஷாவிடம் தெரிவித்ததாக தியோ மெட்கால்ஃப் எழுதுகிறார். இதைக் கேட்ட நாதிர் ஷா, முகமது ஷாவிடம், "நட்பின் அடையாளமாக நமது தலைப்பாகைகளை மாற்றிக்கொள்வோம்" எனக் கூறியுள்ளார்.
இப்படித்தான் கோஹினூர் நாதிர் ஷாவின் கைகளுக்கு வந்தது. அவர் முதன்முதலில் கோஹினூரை பார்த்தபோது முற்றிலும் திகைத்துப் போனார். அதற்கு அவர் 'கோஹினூர்' என்று பெயரிட்டார், அதன் பொருள் 'ஒளியின் மலை' என்பதாகும்.
பாரசீக வரலாற்றாசிரியர் முகமது காசிம் மார்வி, தனது 'ஆலம் ஆரா-இ-நாத்ரி' என்ற புத்தகத்தில், டெல்லியில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலைத் தருகிறார்.
அந்தப் புத்தகத்தில், "டெல்லியில் 57 நாட்கள் தங்கியிருந்த நாதிர் ஷா, 1739ஆம் ஆண்டு மே 16 அன்று தனது நாட்டிற்குப் புறப்பட்டார். தலைமுறைதலைமுறையாகச் சேர்க்கப்பட்ட முகலாயர்களின் அனைத்து செல்வங்களையும் அவர் எடுத்துச் சென்றார். கோஹினூர் மற்றும் தைமூரின் மாணிக்கம் பதிக்கப்பட்ட மயில் சிம்மாசனமே அவரது மிகப்பெரிய கொள்ளைப் பொருளாகும்" என்று மார்வி குறிப்பிட்டுள்ளார்.
கொள்ளையடிக்கப்பட்ட அனைத்தும் 700 யானைகள், 400 ஒட்டகங்கள் மற்றும் 17,000 குதிரைகள் மீது ஏற்றப்பட்டு இரானுக்கு அனுப்பப்பட்டன. முழு ராணுவமும் செனாப் பாலத்தைக் கடந்தபோது, ஒவ்வொரு வீரரும் சோதனையிடப்பட்டனர்.
தங்களது வைரங்களும் ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்படுமோ என்று அஞ்சிய பல வீரர்கள், அவற்றை நிலத்தில் புதைத்தனர். சிலர் பின்னர் நதிக்கரையில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் அவற்றை நதியிலும் வீசினர்.
1813-இல் மகாராஜா ரஞ்சித் சிங்கை அடைந்த கோஹினூர்
நாதிர் ஷாவிடம் இருந்த கோஹினூர் வைரம் நீண்ட காலம் அவரிடம் இருக்கவில்லை. அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அந்த வைரம் அவரது ஆப்கானிய மெய்க்காப்பாளரான அகமது ஷா அப்தாலியின் கைக்கு வந்தது. பல்வேறு கைகள் மாறிய பிறகு, அது 1813இல் மகாராஜா ரஞ்சித் சிங்கை வந்தடைந்தது.
இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள ஒரு குறிப்பில், "மகாராஜா ரஞ்சித் சிங் தீபாவளி, தசரா மற்றும் பிற முக்கிய பண்டிகைகளின் போது கோஹினூரை தனது கையில் அணிந்திருப்பார். ஒரு பிரிட்டிஷ் அதிகாரி அவரது அரசவைக்கு வரும்போதெல்லாம், அவருக்கு இந்த வைரம் பிரத்யேகமாகக் காட்டப்பட்டது. அவர் முல்தான், பெஷாவர் அல்லது பிற நகரங்களுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம், கோஹினூரும் அவருடன் சென்றது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஞ்சித் சிங் 1839-இல் காலமானார். கடுமையான அதிகாரப் போராட்டத்திற்குப் பிறகு, 1843-இல் ஐந்து வயதான துலீப் சிங் பஞ்சாபின் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
இருப்பினும், இரண்டாவது ஆங்கிலேய-சீக்கிய போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவரது ராஜ்ஜியமும் கோஹினூரும் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டன. துலீப் சிங் அவரது தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு, ஒரு ஆங்கிலேய தம்பதியுடன் வசிப்பதற்காக ஃபதேகர் கோட்டைக்கு அனுப்பப்பட்டார்.
கோஹினூரை பெற்றுக் கொள்வதற்காக டல்ஹவுசி பிரபு நேரில் லாகூர் சென்றார். அந்த வைரம் கருவூலத்தில் இருந்து அகற்றப்பட்டு டல்ஹவுசியின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.
அந்த நேரத்தில் அதன் எடை 190.3 காரட்டாக இருந்தது. டல்ஹவுசி பிரபு, கோஹினூரை 'மெடியா' என்ற கப்பல் மூலம் விக்டோரியா மகாராணிக்கு அனுப்ப முடிவு செய்தார். அந்தக் கப்பல் வழியில் பல சிரமங்களைச் சந்தித்தது.
சிக்கலில் மாட்டிக்கொண்ட கப்பல்
"கோஹினூர்: உலகின் அதிக பழிச்சொல் பெற்ற வைரத்தின் கதை" புத்தகத்தின் இணை ஆசிரியர் அனிதா ஆனந்த் விளக்குகையில், "கோஹினூர் கப்பலில் ஏற்றப்பட்டபோது, தாங்கள் எதை எடுத்துச் செல்கிறோம் என்பதுகூட அந்த ஊழியர்களுக்குத் தெரியாது. 'மெடியா' என்ற அந்த கப்பல் பிரிட்டன் நோக்கிப் புறப்பட்ட பிறகு, ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அதன் பிறகு சிலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதுடன், கப்பலில் காலரா நோய் பரவியது. மொரிஷியஸ் வரும் வரை கவலைப்பட வேண்டாம் என்று கேப்டன் ஊழியர்களிடம் கூறினார்" என்கிறார்.
அங்கே மருந்தும் உணவும் கிடைக்கும், எல்லாம் சரியாகிவிடும் என்று கேப்டன் கூறினார். ஆனால் கப்பல் மொரிஷியஸை அடையவிருந்த நிலையில், கப்பலில் இருப்பவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத செய்தி அங்கிருந்த மக்களை எட்டியது.
கப்பல் தங்கள் கரையின் அருகே வந்தால் பீரங்கிகளால் சுட்டுத் தகர்த்து விடுவோம் என்று மக்கள் மிரட்டினர். காலரா பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கப்பல் ஊழியர்கள், எப்படியாவது பிரிட்டனை அடைய வேண்டும் எனத் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
வழியில் அவர்கள் ஒரு மிகப்பெரிய புயலை எதிர்கொண்டனர், அது கப்பலை இரண்டாக உடைக்கும் அளவுக்குத் தீவிரமாக இருந்தது. அவர்கள் பிரிட்டனை சென்றடைந்த பிறகுதான், தாங்கள் கோஹினூரை ஏற்றி வந்ததையும், தாங்கள் இவ்வளவு துன்பங்களை அனுபவித்ததற்குக் காரணம் இதுவாக இருக்கலாம் என்றும் அவர்கள் கருதத் தொடங்கினர்.
லண்டனில் கோஹினூருக்கு கிடைத்த அமோக வரவேற்பு
கோஹினூர் லண்டனைச் சென்றடைந்தபோது, அது கிரிஸ்டல் பேலஸில் பிரிட்டிஷ் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அதுகுறித்து வில்லியம் டால்ரிம்பிள் கூறுகையில், "கோஹினூர் பிரிட்டனுக்கு கொண்டு வரப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அங்கு காட்சிப்படுத்தப்பட்டது. லண்டனில் இதற்கு முன் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கண்டதில்லை என்று தி டைம்ஸ் எழுதியது. கண்காட்சி தொடங்கியபோது, இடைவிடாமல் தூறல் இருந்தது.
கண்காட்சியின் வாயில்களுக்கு மக்கள் வந்தபோது, உள்ளே செல்வதற்காக மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த வைரம் கிழக்கில் பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரம் மற்றும் பிரிட்டனின் வளர்ந்து வரும் ராணுவ வலிமையின் அடையாளமாக மாறியது.
இதற்கிடையில், ஃபதேகர் கோட்டையில் வசித்து வந்த மகாராஜா துலீப் சிங், லண்டனில் விக்டோரியா மகாராணியைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தார். மகாராணியும் அதற்கு சம்மதித்தார். அங்கு, விக்டோரியா மகாராணியின் வசம் இருந்த கோஹினூர் வைரத்தை துலீப் சிங் அவருக்கு வழங்கினார்."
அனிதா ஆனந்த் விளக்குகையில், "தனது அரசாங்கம் ஒரு குழந்தைக்குச் செய்ததை நினைத்து விக்டோரியா மகாராணி எப்போதும் வருந்தினார்" என்கிறார்.
"அவர் துலீப் சிங் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். எனவே, அவர் நடத்தப்பட்ட விதம் அவருக்கு வருத்தத்தை அளித்தது. கோஹினூர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவரிடம் வந்திருந்தாலும், அவர் அப்போது வரை அதைப் பொதுவெளியில் அணியவில்லை.
துலீப் அதைப் பார்த்தால் தன்னைப் பற்றி என்ன நினைப்பாரோ என்று அவர் கவலைப்பட்டார். அந்த நேரத்தில் பிரான்ஸ் சேவர் விண்டர்ஹால்டர் என்ற ஒரு பிரபல ஓவியர் இருந்தார்."
தனது அரண்மனையில் காட்சிப்படுத்துவதற்காக, துலீப் சிங்கின் உருவப்படத்தை வரைந்து தருமாறு மகாராணி அவரிடம் கேட்டார். பக்கிங்ஹாம் அரண்மனையின் ஒயிட் டிராயிங் ரூமில் துலீப் சிங் ஒரு மேடையில் நின்றுகொண்டிருந்தபோது, கோஹினூர் வைரம் அடங்கிய பெட்டியைக் கொண்டு வருமாறு ஒரு வீரரை மகாராணி அழைத்தார்.
அவர் துலீப் சிங்கிடம், "நான் உனக்கு ஒன்றைக் காட்ட விரும்புகிறேன்" என்றார். துலீப் சிங் உடனே கோஹினூரை கண்டு அதைத் தனது கையில் எடுத்தார். அதை ஒரு ஜன்னல் அருகே கொண்டு சென்று சூரிய ஒளியில் ஆராய்ந்தார். அதற்குள் கோஹினூர் வைரம் வடிவம் மாற்றப்பட்டு, செதுக்கப்பட்டிருந்தது.
பஞ்சாப் மகாராஜாவாக இருந்தபோது துலீப் சிங் அணிந்திருந்த அதே கோஹினூர் அல்ல அது. சிறிது நேரம் கோஹினூரை உற்றுப் பார்த்த பிறகு, துலீப் சிங் மகாராணியிடம், "மகாராணி, இந்த வைரத்தை உங்களுக்கு வழங்குவதில் நான் பெருமை கொள்கிறேன்" என்றார்.
விக்டோரியா அந்த வைரத்தை அவரிடமிருந்து ஏற்றுக்கொண்டு, தனது மரணம் வரை அதைத் தொடர்ந்து அணிந்திருந்தார்.
தாயைச் சந்திக்க இந்தியா வந்த துலிப் சிங்
விக்டோரியாவுக்கு மிகவும் பிடித்தமானவராக இருந்தபோதிலும், சில ஆண்டுகளுக்குப் பிறகு, துலீப் சிங் தனது தாய் ஜிந்தன் கவுரை சந்திக்க இந்தியாவிற்கு செல்ல விருப்பம் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு அனுமதி அளித்தது.
ஜிந்தன் அப்போது நேபாளத்தில் வசித்து வந்தார். அவர் தனது மகனைச் சந்திப்பதற்காக கல்கத்தாவுக்கு அழைத்து வரப்பட்டார். அனிதா ஆனந்த் விளக்குகையில், "துலீப் ஏற்கெனவே அங்கு வந்து சேர்ந்திருந்தார். ராணி ஜிந்தன் கவுர் அவர் முன்பாக அழைத்து வரப்பட்டார். தான் இனி ஒருபோதும் அவரை விட்டுப் பிரியப் போவதில்லை என்று ஜிந்தன் கூறினார்."
அவர் எங்கு சென்றாலும் தானும் உடன் வருவதாகக் கூறினார். அதற்குள் ஜிந்தன் தனது பார்வையை இழந்திருந்தார். அவர் துலீப் சிங்கின் தலையைத் தடவிப் பார்த்தபோது, அவர் தனது தலைமுடியைக் கத்தரித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் துக்கத்தில் கதறினார்.
அதே நேரத்தில், அபினி போரில் பங்கேற்றுவிட்டு சில சீக்கிய வீரர்கள் சீனாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஜிந்தன் கல்கத்தாவுக்கு வந்திருப்பதை அறிந்த அவர்கள், ஜிந்தன் தனது மகன் துலீப்பை சந்தித்துக் கொண்டிருந்த ஸ்பென்ஸ் ஹோட்டலுக்கு விரைந்தனர்.
அவர்கள் "போலே சோ நிஹால், சத் ஸ்ரீ அகால்" என்று முழக்கமிடத் தொடங்கினர். இதனால் அச்சமடைந்த ஆங்கிலேயர்கள், தாயையும் மகனையும் ஒரு கப்பலில் ஏற்றி பிரிட்டனுக்கு அனுப்பி வைத்தனர்.
துலீப் சிங் படிப்படியாக விக்டோரியா மகாராணிக்கு எதிராக மாறினார். தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக அவர் கருதினார். தனது பழைய சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
அதைத் தொடர்ந்து, அவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார், ஆனால் ஏடன் நகருக்கு மேல் அவரால் முன்னேறிச் செல்ல முடியவில்லை.
கடந்த 1886-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி, அவரும் அவரது குடும்பத்தினரும் போர்ட் சயீத் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார், ஆனால் அவருக்குச் சொந்தமான அனைத்தும் பறிக்கப்பட்டன.
அக்டோபர் 21-ஆம் தேதி, 1893-ஆம் ஆண்டு, பாரிஸில் உள்ள ஒரு சாதாரண ஹோட்டலில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அப்போது அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அங்கு இல்லை. இத்துடன் மகாராஜா ரஞ்சித் சிங்கின் வம்சம் நிரந்தரமாக முடிவுக்கு வந்தது.
விக்டோரியா மகாராணியின் மரணத்திற்குப் பிறகு, அவரது மகன் ஏழாம் எட்வர்ட் மன்னர் தனது கிரீடத்தில் கோஹினூரை சேர்க்கவில்லை. இருப்பினும், அது அவரது மனைவி ராணி அலெக்ஸாண்ட்ரா மகாராணியின் கிரீடத்தில் சேர்க்கப்பட்டது.
கோஹினூரை தொடும் எந்தவொரு ஆணுக்கும் அழிவு ஏற்படும் என்ற மூடநம்பிக்கை பரவியது. இருப்பினும், பெண்கள் அதை அணிவதில் எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை.
பின்னர், மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் மனைவியான இளவரசி மேரியும் தனது கிரீடத்தின் மையத்தில் அதை அணிந்திருந்தார். இருப்பினும், இதற்குப் பிறகு இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது கிரீடத்தில் கோஹினூரை சேர்க்கவில்லை.
இன்று, உலகின் மிகவும் பிரபலமான வைரம் லண்டன் கோபுரத்தின் ரத்தின மாளிகையில் வைக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு