You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நேரலை, சட்டப்பேரவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்பு

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

  • தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் கூட்டம் தொடங்கியது. புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்று வருகின்றனர்.
  • திமுக கூட்டணியில் இருந்து சொல்லாமல் காங்கிரஸ் விலகியதா என்பதற்கு, செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார்.
  • திருப்பத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்த தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டார்.
  • அமைச்சர் கீர்த்தனா வெற்றி சான்றிதழை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்ததால் சட்டப்பேரவையில் இன்று உறுப்பினராக பதவி ஏற்கவில்லை.
  • போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அனுப்பப்பட்ட இரானின் முன்மொழிவை, "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அதிபர் டிரம்ப் விவரித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. "வாழ்த்துகள்பா" - விஜய்க்கு பிரேமலதா வாழ்த்து

  2. திமுக கூட்டணியில் இருந்து சொல்லாமல் விலகினோமா? - செல்வப்பெருந்தகை பதில்

    திமுக கூட்டணியில் இருந்து சொல்லாமல் காங்கிரஸ் விலகியதா என்பதற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார்.

  3. ஒரு வாக்கில் வென்ற தவெக எம்எல்ஏ - வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

    திருப்பத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்த தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டார்.

    நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சீனிவாச சேதுபதி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், சீனிவாச சேதுபதி எம்எல்ஏவாக பதவியேற்க தடை விதிக்கக் கோரி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பெரியகருப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதிக்கு உரிய வாக்குகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்குத் தவறுதலாக அனுப்பப்பட்டிருப்பது ஒரு அசாதாரணமான சூழ்நிலை என்று வாதிட்டதாக ‘லைவ் லா’ செய்தி தெரிவிக்கிறது.

    பெரியகருப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இளங்கோ, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் திரும்பி வந்துவிட்டதாகவும், ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் சென்று சேர்ந்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் கூறியிருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்ததாக ‘பார் அண்ட் பெஞ்ச்’ செய்தி தெரிவிக்கிறது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தங்களின் பங்கு முடிந்துவிட்டதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  4. எம்எல்ஏவாக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற தருணம்

    எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக கே.பழனிசாமி பதவியேற்ற காட்சி இது.

  5. எம்எல்ஏவாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின்

  6. சட்டப்பேரவைக்கு வெற்றி சான்றிதழை எடுத்து வராத அமைச்சர் கீர்த்தனா

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தற்காலிக சபாநாயகர் கருப்பையா முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

    முதலாவதாக முதலமைச்சர் விஜய் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர்.

    இந்நிலையில், சிவகாசி எம்எல்ஏவும் அமைச்சருமான கீர்த்தனா தான் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்ததால் சட்டப்பேரவையில் இன்று உறுப்பினராக பதவி ஏற்கவில்லை.

  7. தமிழ்நாடு சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற விஜய்

  8. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் கூட்டம் தொடங்கியது. முதலமைச்சர் விஜய் கோட்-சூட் அணிந்து அமர்ந்துள்ளார்.

    விஜய் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து, அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். தற்போது மற்ற எம்எல்ஏக்களும் பதவியேற்று வருகின்றனர்.

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி இருவரும் எதிரெதிரே அமர்ந்துள்ளனர்.

    பதவியேற்கும்போது திமுக எம்எல்ஏவும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் விஜய்க்கு வணக்கம் தெரிவித்தார்.

  9. இரான் முன்மொழிவு பற்றி டிரம்ப் என்ன கூறினார்?

    போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அனுப்பப்பட்ட இரானின் முன்மொழிவை, "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விவரித்துள்ளார்.

    தன்னுடைய ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் டொனால்ட் டிரம்ப், "இரானின் 'பிரதிநிதிகள்' என்று சொல்லப்படுபவர்களின் பதிலை நான் இப்போதுதான் படித்தேன். அது எனக்குப் பிடிக்கவில்லை, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று பதிவிட்டுள்ளார்.

    இரான் அரசுடன் தொடர்புடைய செய்தி நிறுவனமான தஸ்னிம், பாகிஸ்தான் வழியாக இரான் ஒரு முன்மொழிவை அனுப்பியதாகத் தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராகச் செயல்படுகிறது. அந்த முன்மொழிவில், அனைத்து முனைகளிலும் உடனடியாகப் போர் நிறுத்தம், அமெரிக்கக் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருதல், மற்றும் இரான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படாது என்பதற்கான உத்தரவாதங்கள் ஆகியவை அடங்கியிருந்தன.

    முன்னதாக, இரான் அனுப்பிய முன்மொழிவு உண்மையானது மற்றும் நேர்மறையானது என்று ஒரு அதிகாரப்பூர்வ இரானிய வட்டாரம் அல் ஜசீரா தொலைக்காட்சிக்குத் தெரிவித்திருந்தது.

    தற்போது இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது, ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  10. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்பது நந்தினி வெள்ளைச்சாமி. இன்று (மே 11) தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய முக்கிய நிகழ்வுகள், அரசியல் மற்றும் செய்திகளை இந்த பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.