தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக தவெக சார்பில் ஜேசிடி பிரபாகர் போட்டியிடுகிறார்.
தமிழக முதல்வர் விஜயுடன் ராகுல் காந்தி சேர்ந்திருந்த வீடியோ, புகைப்படம் இன்ஸ்டாகிராமில் முடக்கப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கிரிஷ் சோடங்கர் விமர்சித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து சொல்லாமல் காங்கிரஸ் விலகியதா என்பதற்கு, செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார்.
திருப்பத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்த தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டார்.
அமைச்சர் கீர்த்தனா வெற்றி சான்றிதழை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்ததால் சட்டப்பேரவையில் இன்று உறுப்பினராக பதவி ஏற்கவில்லை. பின்னர் சான்றிதழை காண்பித்து பதவியேற்றார்.
போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அனுப்பப்பட்ட இரானின் முன்மொழிவை, "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அதிபர் டிரம்ப் விவரித்துள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராக ராஜேஷ்குமார் நியமனம்
பட மூலாதாரம், MLARajeshkumar
படக்குறிப்பு, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார்
17வது தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக்கொண்ட நிலையில், ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் சட்டமன்ற தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
அதன்படி காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவராக கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
துணைத்தலைவராக குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினர் தாரகை கத்பர்ட், தலைமை கொறடாவாக மேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் விஸ்வநாதன் ஆகிகோய் நியமனம்.
இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை அறிவித்தார்.
வைகோவுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு
பட மூலாதாரம், MDMK
படக்குறிப்பு, பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளநிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
திமுக தலைவர் ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.
அண்ணாநகரில் உள்ள வைகோவின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜயை திருச்சி மக்களவை உறுப்பினரும் மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ வரவெற்றார்.
பின்னர் வைகோவை சந்தித்து அவருடன் சிறிது நேரம் உரையாற்றினார் முதலமைச்சர் விஜய்.
பின்னர் அன்புமணியை அவரது இல்லத்துக்கு சென்று விஜய் சந்தித்தார்.
தமிழக முதல்வர் விஜய் - ஸ்டாலின் சந்திப்பு
தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்தார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டுக்கு வந்த விஜயை, உதயநிதி ஸ்டாலின் வரவேற்று ஆரத்தழுவினார்.
திமுக - அதிமுக என சுமார் அறுபது ஆண்டுகளாக மாறி மாறி நீடித்த தமிழ்நாட்டு அரசியல் ஆதிக்கத்தை உடைத்து ஆட்சிக்கு வந்துள்ளார் விஜய்.
விஜய் நேற்று முதல்வராக பதவியேற்றுக்கொண்ட நிலையில், இன்று சட்டப்பேரவையில் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தவெகவின் ஜேசிடி பிரபாகர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ரவிசங்கர் ஆகியோரின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் விஜய் கலந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்டாலினை சந்திக்க அவரது இல்லத்துக்கு விஜய் சென்றார்.
எம்எல்ஏவாக பதவியேற்ற கீர்த்தனா
காணொளிக் குறிப்பு, எம்எல்ஏவாக பதவியேற்ற கீர்த்தனா
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தற்காலிக சபாநாயகர் கருப்பையா முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலாவதாக முதலமைச்சர் விஜய் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்நிலையில், சிவகாசி எம்எல்ஏவும் அமைச்சருமான கீர்த்தனா தான் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்ததால் முதலில் பதவியேற்கவில்லை. பின்னர் சான்றிதழை காண்பித்து பதவியேற்றுக்கொண்டார்.
சபாநாயகர் பதவிக்கு தவெக சார்பில் ஜேசிடி பிரபாகர் போட்டி
பட மூலாதாரம், TN DIPR
தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக தவெக சார்பில் ஜேசிடி பிரபாகர் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் அவர் வழங்கினார். அப்போது முதலமைச்சர் விஜயும் உடனிருந்தார்.
ஜேசிடி பிரபாகர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஆவார்.
சபாநாயகர் பதவிக்கு போட்டி இருந்தால் நாளை (மே 12) குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலை தற்காலிக சபாநாயகர் கருப்பையா நடத்துவார்.
ஜேசிடி பிரபாகர் முன்பு அதிமுக சார்பாக எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
விஜய் - ராகுல் வீடியோ, படம் இன்ஸ்டாவில் முடக்கமா? கிரிஷ் புகார்
பட மூலாதாரம், rahulgandhi/Instagram
தமிழக முதல்வர் விஜயுடன் ராகுல் காந்தி சேர்ந்திருந்த வீடியோ, புகைப்படம் இன்ஸ்டாகிராமில் முடக்கப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கிரிஷ் சோடங்கர் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தன் எக்ஸ் பக்கத்தில், “பதவியேற்பு வீடியோக்களை முடக்கும் (block) அளவுக்கு தவெக-காங்கிரஸ் கூட்டணி மீது மோதி மிகுந்த அச்சத்தில் உள்ளாரா?
விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட ராகுல் காந்தியின் ரீல் மற்றும் அவர் விஜயுடன் இருந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பிளாக் செய்துள்ளது. இந்த பொது ஜனநாயக நிகழ்ச்சி குறித்த என்னுடைய பதிவும் நீக்கப்பட்டுள்ளது. " என தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Girish Chodankar/Instagram
படக்குறிப்பு, கிரிஷ் சோடங்கர்
"அந்த வீடியோ ஒரு மணிநேரத்தில் 12 மில்லியன் பார்வைகளை பெற்றிருந்தது. அப்புகைப்படம் கட்டுப்பாடு செயல்படுத்தப்படுவதற்கு முன்பாக 46 மில்லியன் பேரை சென்றடைந்திருந்தது.
அரசியலமைப்பு ரீதியான பதவியேற்பு நிகழ்ச்சியின் காட்சிகளில் அப்படி என்னதான் ஆபத்து உள்ளது?
இது, இணையவெளியில் எதிர்க்கட்சிகளின் குரல்கள் மீது மேற்கொள்ளப்படும் பாரபட்சமான தணிக்கை மற்றும் ஒடுக்குமுறை குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது.” என பதிவிட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து சொல்லாமல் விலகினோமா? - செல்வப்பெருந்தகை பதில்
காணொளிக் குறிப்பு, திமுக கூட்டணியில் இருந்து சொல்லாமல் விலகினோமா? - செல்வப்பெருந்தகை பதில்
திமுக கூட்டணியில் இருந்து சொல்லாமல் காங்கிரஸ் விலகியதா என்பதற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார்.
ஒரு வாக்கில் வென்ற தவெக எம்எல்ஏ - வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
பட மூலாதாரம், TN Assembly
படக்குறிப்பு, தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி
திருப்பத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்த தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டார்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சீனிவாச சேதுபதி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், சீனிவாச சேதுபதி எம்எல்ஏவாக பதவியேற்க தடை விதிக்கக் கோரி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பெரியகருப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதிக்கு உரிய வாக்குகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்குத் தவறுதலாக அனுப்பப்பட்டிருப்பது ஒரு அசாதாரணமான சூழ்நிலை என்று வாதிட்டதாக ‘லைவ் லா’ செய்தி தெரிவிக்கிறது.
பெரியகருப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இளங்கோ, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் திரும்பி வந்துவிட்டதாகவும், ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் சென்று சேர்ந்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்ததாக ‘பார் அண்ட் பெஞ்ச்’ செய்தி தெரிவிக்கிறது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தங்களின் பங்கு முடிந்துவிட்டதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைக்கு வெற்றி சான்றிதழை எடுத்து வராத அமைச்சர் கீர்த்தனா
பட மூலாதாரம், TN Assembly
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தற்காலிக சபாநாயகர் கருப்பையா முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
முதலாவதாக முதலமைச்சர் விஜய் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இந்நிலையில், சிவகாசி எம்எல்ஏவும் அமைச்சருமான கீர்த்தனா தான் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்ததால் சட்டப்பேரவையில் இன்று உறுப்பினராக பதவி ஏற்கவில்லை.
காணொளிக் குறிப்பு, வெற்றி சான்றிதழை எடுத்து வராததால் பதவியேற்காமல் திரும்பி சென்ற அமைச்சர் கீர்த்தனா
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற விஜய்
காணொளிக் குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற விஜய்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது
பட மூலாதாரம், TN Assembly
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் கூட்டம் தொடங்கியது. முதலமைச்சர் விஜய் கோட்-சூட் அணிந்து அமர்ந்துள்ளார்.
விஜய் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து, அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். தற்போது மற்ற எம்எல்ஏக்களும் பதவியேற்று வருகின்றனர்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி இருவரும் எதிரெதிரே அமர்ந்துள்ளனர்.
பதவியேற்கும்போது திமுக எம்எல்ஏவும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் விஜய்க்கு வணக்கம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், TN Assembly
இரான் முன்மொழிவு பற்றி டிரம்ப் என்ன கூறினார்?
பட மூலாதாரம், Mandel Ngan/AFP via Getty Images
போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அனுப்பப்பட்ட இரானின் முன்மொழிவை, "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விவரித்துள்ளார்.
தன்னுடைய ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் டொனால்ட் டிரம்ப், "இரானின் 'பிரதிநிதிகள்' என்று சொல்லப்படுபவர்களின் பதிலை நான் இப்போதுதான் படித்தேன். அது எனக்குப் பிடிக்கவில்லை, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று பதிவிட்டுள்ளார்.
இரான் அரசுடன் தொடர்புடைய செய்தி நிறுவனமான தஸ்னிம், பாகிஸ்தான் வழியாக இரான் ஒரு முன்மொழிவை அனுப்பியதாகத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராகச் செயல்படுகிறது. அந்த முன்மொழிவில், அனைத்து முனைகளிலும் உடனடியாகப் போர் நிறுத்தம், அமெரிக்கக் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருதல், மற்றும் இரான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படாது என்பதற்கான உத்தரவாதங்கள் ஆகியவை அடங்கியிருந்தன.
முன்னதாக, இரான் அனுப்பிய முன்மொழிவு உண்மையானது மற்றும் நேர்மறையானது என்று ஒரு அதிகாரப்பூர்வ இரானிய வட்டாரம் அல் ஜசீரா தொலைக்காட்சிக்குத் தெரிவித்திருந்தது.
தற்போது இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது, ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வணக்கம் நேயர்களே!
பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்பது நந்தினி வெள்ளைச்சாமி. இன்று (மே 11) தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய முக்கிய நிகழ்வுகள், அரசியல் மற்றும் செய்திகளை இந்த பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.