'தங்கம் வாங்க வேண்டாம்' என்று மக்களுக்கு பிரதமர் மோதி வேண்டுகோள் ஏன்?

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஞாயிற்றுக்கிழமை தெலங்கானா சென்ற பிரதமர் நரேந்திர மோதி, ஹைதராபாத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியொன்றில் சில வளர்ச்சி திட்டங்கள் குறித்து அறிவித்தார். அத்துடன், செகந்திராபாத்தில் நடைபெற்ற பேரணியிலும் அவர் பங்கேற்றார்.

செகந்திராபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய பிரதமர் மோதி, அந்நிய செலாவணியை சேமிக்க உதவுமாறு மக்களை கேட்டுக் கொண்டார். அதற்கான சில வழிகளையும் அவர் வழங்கினார்.

அப்போது, ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்றும் சமையல் எண்ணெயை குறைவாக பயன்படுத்துமாறும் மோதி கேட்டுக்கொண்டார்.

பிரதமரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தை பாதுகாக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக, பிரதமர் மோதி மக்களை பிரச்னையில் ஆழ்த்துவதாக காங்கிரஸ் தெரிவித்தது.

பேரணியில் பேசிய பிரதமர் மோதி, "விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு மத்தியில் நமது அண்டை பகுதியில் கடந்த இரு மாதங்களாக ஒரு பெரிய போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஒட்டுமொத்த உலகையும் பாதித்துள்ளது. இந்தியா அதனால் இன்னும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது." என்றார்.

"இந்தியாவிடம் மிகப்பெரிய எண்ணெய் கிணறுகள் இல்லை. பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு போன்றவற்றை நாம் இறக்குமதி செய்கிறோம், மற்ற நாடுகளில் இருந்து அவை நமக்கு பெரியளவில் தேவைப்படுகின்றன. போர் காரணமாக பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் உரங்களின் விலைகள் உலகம் முழுவதிலும் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளன. விண்ணை முட்டும் அளவுக்குக் கூட அவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன. அண்டை நாடுகளில் என்ன நடக்கின்றன என்பது செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளன."

"இரு மாதங்களாக தொடரும் போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கான தொடர் முயற்சிகளை இந்திய அரசு செய்துவருகிறது. மக்கள் மீது சுமை ஏற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, அரசு ஒட்டுமொத்த சுமையையும் தன் தோள்களில் சுமக்கிறது." என்றார்.

தங்கம் வாங்குவது குறித்து என்ன சொன்னார்?

விநியோக சங்கிலி குறித்து குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோதி, "விநியோக சங்கிலியில் நெருக்கடி நீடித்தால், நாங்கள் எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தாலும் பிரச்னைகள் அதிகரிக்கவே செய்யும். எனவே, நம் நாட்டை முதல்நிலையில் வைத்து நாம் அனைவரும் இணைந்து போராட வேண்டும். தேசபக்தி என்பது நாட்டுக்காக உயிரிழப்பதல்ல; நாட்டுக்காக வாழ்ந்து அதற்காக ஒருவர் தன் கடமையை நிறைவேற்றுவதும் தேசபக்தி தான்." என்றார்.

"சமையல் எண்ணெய்க்கும் இது பொருந்தும். அதனை இறக்குமதி செய்வதற்கு குறிப்பிடத்தக்க அளவு அந்நிய செலாவணி வேண்டும். ஒவ்வொரு வேளை உணவிலும் பயன்படுத்தும் எண்ணெயின் அளவை குறைப்பதும் தேசபக்தி தான். இது நாட்டுக்கும் நம் உடலுக்கும் சேவை செய்வதாகும். இதனால் நாட்டின் கருவூலத்தின் ஆரோக்கியமும் குடும்பத்தினரின் ஆரோக்கியமும் மேம்படும்."

அந்நிய செலாவணியை சேமிப்பது குறித்து பேசிய பிரதமர் மோதி, அதற்கான சாத்தியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

அவர் கூறுகையில், "அதிக அந்நிய செலாவணியை செலவழிக்கும் மற்றொன்று தங்கம் வாங்குவது. நெருக்கடியின்போது மக்கள் தங்கள் நாட்டு நலனுக்காக தங்கத்தை தானம் செய்த காலம் இருந்தது. இப்போது தானம் செய்வதற்கு தேவையில்லை, ஆனால் நாட்டு நலனுக்காக ஓராண்டு காலத்துக்கு வீட்டில் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடைபெற்றால், நாம் தங்க நகைகள் வாங்கக் கூடாது என முடிவு செய்ய வேண்டும்." என்றார்.

"நாம் தங்கம் வாங்கக் கூடாது. அந்நிய செலாவணியை சேமிக்க நமது தேசபக்தி நமக்கு சவால் விடுக்கிறது. நாம் அதை ஏற்றுக்கொண்டு, அந்நிய செலாவணியை சேமிக்க வேண்டும்."

காங்கிரஸ் கண்டனம்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இரான் - அமெரிக்கா போர் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்துவிட்டன என்றும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை எப்படி உறுதிசெய்வது என்பது குறித்து பிரதமர் மோதி இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

"இது மிகவும் அவமானகரமானது, பொறுப்பற்றது மற்றும் முற்றிலும் தார்மீகமற்றது. இந்த உலகளாவிய நெருக்கடியிலிருந்து நம் பொருளாதாரத்தை பாதுகாக்க அவசர திட்டத்தை தீட்டுவதற்கு பதிலாக, பிரதமர் சாமானிய மக்களை பிரச்னையில் ஆழ்த்துகிறார்." என வேணுகோபால் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"தேர்தல்களும் மற்றும் அற்ப அரசியலும் பிரதமருக்கு முதன்மையானதாக மாறும்போது, உடனடி பொருளாதார பேரழிவு ஏற்படுவதுதான் அதன் விளைவாக இருக்கும்."

"நம்மிடம் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கான அனைத்து தேவையான ஏற்பாடுகளையும் பிரதமர் மற்றும் அவரின் அரசாங்கம் எடுக்க வேண்டும். அவர்களின் மோசமான திட்டமிடுதலால் எந்தவொரு குடிமக்களும் இடர்களை சந்தித்துவிடக் கூடாது."

தங்கம் விலை உயர்வது ஏன்?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போருக்கு மத்தியில், பங்குச்சந்தை முதல் கச்சா எண்ணெய், தங்கம்-வெள்ளி மற்றும் ரூபாய் என எல்லாவற்றிலும் நிலையற்றதன்மை காணப்படுகிறது.

2025ம் ஆண்டிலேயே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது, அதன் விலை 60 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்தது.

தங்கம் விலை உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளன, ஆனால் அவையெல்லாம் ஒன்றோடொன்று தொடர்புடையவை.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல் மோதல்கள் உள்ளிட்ட புவிசார் ரீதியான அழுத்தங்கள் காரணமாக உலகளாவிய நிலையற்றத் தன்மை அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்கள் அபாயகரமான முதலீட்டு முடிவுகளை எடுக்காமல் பாரம்பரியமான சொத்துகளில் முதலீடு செய்கின்றனர். புவிசார் அழுத்தங்கள் டாலர் பயன்பாட்டையும் குறைத்து தங்கத்தை சார்ந்திருப்பதை அதிகரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் பங்குச் சந்தையில் சில பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளன. அதன் விளைவாக, முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலைமதிப்பு மிக்க உலோகங்களில் முதலீடு செய்கின்றனர். புவிசார் அழுத்தங்கள் காரணமாக தங்கம் விலைகள் சமீபத்தில் உயர்ந்தன.

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்தது. கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்தும் டிரம்ப் பேசியுள்ளார்.

மத்திய வங்கிகள் அதிகளவில் தங்கம் வாங்குவதும் அதன் விலை உயர்வுக்கான மிகப்பெரும் காரணங்களுள் ஒன்றாக உள்ளது. இந்த போக்கு 2022-ஆம் ஆண்டு முதல் நிலையாக வலுப்பெற்று, 2025ம் ஆண்டில் மேலும் அதிகரித்து தங்கம் விலையை சாதனை அளவுக்கு உந்தியது.

அமெரிக்க டாலரின் ஆதிக்கம் குறைந்துவருவதால், (சீனா, போலந்து, துருக்கி, இந்தியா, கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளின்) மத்திய வங்கிகள் தங்க கையிருப்பை அதிகரித்து வருகின்றன. இதுவும் தங்கம் விலையை பாதித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு