You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹாட்ரிக் வெற்றியுடன் சிஎஸ்கே ஓரிடம் முன்னேற்றம்: பிளேஆஃப் வாய்ப்பு என்ன?
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸுக்கு எதிராக நேற்று (மே 10) நடந்த ஐபிஎல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இந்த வெற்றி அந்த அணியை புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது. 11 போட்டிகளில் 6 வெற்றிகளோடு 12 புள்ளிகள் பெற்றிருக்கிறது சிஎஸ்கே. முதல் 8 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றிருந்த அந்த அணி தற்போது ஹாட்ரிக் வெற்றிகள் பெற்றிருக்கிறது.
இந்த வெற்றியின் இன்னொரு சிறப்பம்சம், 8 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் 180+ இலக்கை வெற்றிகரமாக எட்டியிருக்கிறது.
இந்த சிறப்புமிக்க வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தார் உர்வில் பட்டேல். 23 பந்துகள் மட்டுமே சந்தித்த அவர், 282.6 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 65 ரன்கள் விளாசினார். 13 பந்துகளில் அரைசதம் கடந்து ஐபிஎல் வரலாற்றின் அதிவேக அரைசதம் அடித்த ஜெய்ஸ்வாலின் சாதனையை அவர் சமன் செய்தார்.
கடைசி ஓவர் வரை பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டியின் பவர்பிளேவில் அவர் ஆடிய குறிப்பிட்ட 8 பந்துகள் சூப்பர் கிங்ஸின் இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியது.
ஏன் அந்த 8 பந்துகள், இந்த 8 ஆண்டுக்குப் பின் நடந்திருக்கும் சேஸ் சூப்பர் கிங்ஸ் சீசனில் தாக்கம் ஏற்படுத்தப் போகின்றன? பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் சூப்பர் கிங்ஸ் எங்கே இருக்கிறது? இனி என்ன நடந்தால் அவர்களால் அடுத்தகட்டத்துக்கு நகர முடியும்?
முடிவுக்கு வந்த 8 ஆண்டு சோதனை
ஏப்ரல் 25, 2018 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 205 ரன்கள் எடுக்க, அந்த இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். அதற்கு 2 வாரங்கள் முன்பு கூட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்து 202 ரன்கள் எடுக்க, அதையும் வெற்றிகரமாக சேஸ் செய்திருந்தது சிஎஸ்கே. ஆனால், அந்த மிகப்பெரிய இலக்குகளை அதன்பிறகு அவர்களால் சேஸ் செய்திட முடியவில்லை.
அன்று முதல் மே 9, 2026 வரை 14 முறை 180க்கும் அதிகமான இலக்கைத் துரத்தியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால், அவர்களால் அதில் ஒன்றைக் கூட வெற்றிகரமான சேஸாக மாற்ற முடியவில்லை. 14 தோல்விகள்.
கடந்த 8 ஆண்டுகளாக சூப்பர் கிங்ஸ் அணிக்கு 180+ சேஸ்கள் என்பது மிகப்பெரிய தலைவலியாகவே இருந்தது. முதலில் பேட்டிங் செய்யும்போது அநாயசமாக 200 ரன்கள் எடுத்த காலகட்டத்திலும் கூட அவர்களால் சேஸிங்கின்போது அதை செய்ய முடியவில்லை.
உதாரணமாக, அவர்கள் 5வது முறையாக கோப்பையை வென்ற 2023 சீசனில் கூட 180+ இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்ய முடியவில்லை. அந்த 2023 சீசனில், ஏப்ரல் 23ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 235 ரன்கள் குவித்தது சிஎஸ்கே. ஒருவாரம் கழித்து, ஏப்ரல் 30 - பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தது சூப்பர் கிங்ஸ்.
முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களைக் கடந்த இந்த 2 போட்டிகளுக்கு நடுவே, ஏப்ரல் 27ம் தேதி (2023) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராகவும் சிஎஸ்கே ஆடியது. முதலில் பேட்டிங் செய்த ராயல்ஸ் 202 ரன்கள் எடுக்க, அதை சேஸ் செய்த சூப்பர் கிங்ஸ் 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேஸிங் என்று வந்துவிட்டால் பிரச்னை தான்.
ஏன், இந்த சீசன் கூட சன்ரைசர்ஸுக்கு எதிரான சேஸில், நல்ல நிலையில் இருந்து வெற்றியைக் கோட்டை விட்டது சிஎஸ்கே. 195 என்ற இலக்கை சேஸ் செய்த சூப்பர் கிங்ஸின் ஸ்கோர் 10 ஓவர்கள் முடிவில் 111/3. கடைசி 10 ஓவர்களில் 84 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட்டுகள் இழந்தன. ஆனால், அந்த 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் மட்டுமே எடுத்தது சிஎஸ்கே.
அதேசமயம், வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் மறக்க முடியாத சிஎஸ்கே-வின் பல வெற்றிகள் இப்படி 180+ இலக்கை சேஸ் செய்து வந்தவையே. 2010 சீசனில் தரம்சாலாவில் பஞ்சாப்பை வீழ்த்தி, சூப்பர் கிங்ஸை அரையிறுதிக்கு எடுத்துச் சென்ற சந்தோஷத்தில் தோனி தன் முகத்தில் குத்திக் கொண்டாடிய அந்த ஆட்டத்தில், சிஎஸ்கே சேஸ் செய்த இலக்கு 193. அதேபோல், 2012 சீசனில் விராட் கோலியின் ஒற்றை ஓவரில் ஆல்பி மோர்கல் 28 ரன்கள் எடுத்து வெற்றி பெறவைத்த போது சூப்பர் கிங்ஸ் சேஸ் செய்த இலக்கு 206.
ஆனால், இப்படியொரு அணிதான் கடந்த 8 ஆண்டுகளில், எதிரணிகள் முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் எடுத்தாலே சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்துகொண்டிருந்தது. ரசிகர்களுமே எதிரணி 180+ எடுத்துவிட்டால் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். இது அந்த அணியின் நம்பிக்கையையுமே குலைப்பதாகத்தான் இருந்தது. இப்போது, அது மாறியிருக்கும்போது, ஒரு பெரிய ஸ்கோரை சேஸ் செய்திருக்கும்போது அது அணியின் நம்பிக்கையை பன்மடங்கு அதிகப்படுத்தும். அடுத்த முறை எதிரணி பெரிய ஸ்கோர் எடுத்தாலும், இந்தப் போட்டி ஒரு உத்வேகமாக கண்முன் வந்து நிற்கும்.
உர்வில் பட்டேல் ஆடிய அந்த 8 பந்துகள்
கடந்த சில ஆண்டுகளாக 180+ சேஸ்களை சூப்பர் கிங்ஸால் அரங்கேற்ற முடியாமல் போனதற்கு அவர்களின் ஆட்ட அணுகுமுறையும் ஒரு காரணம். வழக்கமான 'பாரம்பரிய' கிரிக்கெட் பாணியிலேயே அவர்கள் அணுகுவார்கள். அதேசமயம் ஒருசில அணிகள் பெரிய இலக்கை சேஸ் செய்யும்போது பவர்பிளே, மிடில் ஓவர் என அனைத்து கட்டத்திலுமே அதிரடி காட்டுவார்கள்.
ஆனால், சூப்பர் கிங்ஸ் பெரும்பாலான சேஸ்களை அப்படி அணுகியதில்லை. 'Taking the game deeper' என்ற அவர்களின் ஆஸ்தான திட்டம் இந்த பெரிய சேஸ்களின்போது உதவியதில்லை. ஆரம்பத்தில் ரன்ரேட் பெரிதாக இல்லாததால் தோனி, துபே போன்ற ஹிட்டர்களாலும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்ததில்லை.
இந்தப் போட்டியில் உர்வில் பட்டேல் மாற்றியது அதைத்தான். தொடக்கத்திலேயே இந்த வெற்றிகரமான சேஸுக்கு விதை போட்டுவிட்டார் அவர். பவர்பிளேவில் சன்ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளைப் போன்றெல்லாம் அதிரடியே காட்டிடாத சூப்பர் கிங்ஸ் இன்று பவர்பிளேவை வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தார் அவர்.
நேற்றைய போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி பவர்பிளேவில் 91 ரன்கள் விளாசியது. ஆனால், சூப்பர் கிங்ஸோ முதல் 6 ஓவர்களில் 97 ரன்கள் குவித்தது. இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸின் இரண்டாவது பெரிய பவர்பிளே ஸ்கோர் இதுதான். இதற்குக் காரனம் - உர்வில் ஆடிய அந்த குறிப்பிட்ட 8 பந்துகள்.
நான்காவது ஓவரில் சாம்சன் அவுட் ஆனதும் களமிறங்கிய உர்வில், அந்த ஓவரில் 1 பந்தை சந்தித்து 1 ரன் எடுத்தார். ஆவேஷ் கான் வீசிய அடுத்த ஓவரின் நான்காவது பந்தில் மீண்டும் ஸ்டிரைக்குக்கு வந்தார் உர்வில். அதன்பிறகு அவர் சந்தித்த 8 பந்துகளில் 41 ரன்கள் - 1 பவுண்டரி & 8 சிக்ஸர்கள். ஆவேஷ் கான் ஓவரில் தான் சந்தித்த 3 பந்துகளிலும் 3 சிக்ஸர்கள் விளாசிய உர்வில், திக்வேஷ் வீசிய அடுத்த ஓவரில் 5 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார்.
அந்த பவர்பிளே முடிந்தபோது சூப்பர் கிங்ஸ் வெற்றிக்குத் தேவைப்பட்ட ரன்ரேட் 7.64. அதுவே, 10வது ஓவரின் 2வது பந்தில் உர்வில் அவுட் ஆனபோது அந்த ரன்ரேட் 7.31 ஆக இருந்தது. அப்படியிருந்தும் கூட சூப்பர் கிங்ஸ் இந்தப் போட்டியைக் கடைசி வரை எடுத்துச் சென்றது. தனது வழக்கமான ஆட்ட முறையைக் கடைபிடித்து கடைசி ஓவர் வரை ஆட்டத்தை எடுத்துச் சென்றது அந்த அணி. ஒருவேளை உர்வில் அந்த 8 பந்துகளில் அப்படி அடிக்காமல் இருந்திருந்தால்? நிலை எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம். ஆனால், அந்த 8 பந்துகள் இந்த 8 ஆண்டு சோதனைக்கு ஒருவழியாக முட்டுக்கட்டை போட்டுவிட்டன. உர்வில் படேல் அதிவேக அரைசதம் அடித்ததும் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு துண்டுச்சீட்டை எடுத்து ரசிகர்களை நோக்கி காட்டினார். அதில், 'இது உங்களுக்காக, அப்பா' (This is for you, Papa) என்று எழுதப்பட்டிருந்தது.
பிளேஆஃப் வாய்ப்பு என்ன?
தற்போது 11 போட்டிகளில் விளையாடியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றிகள் பெற்றிருக்கிறது. ஐந்தில் தோற்றிருக்கிறது. 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்துக்கும் முன்னேறியிருக்கிறது. மீதமிருக்கும் 3 போட்டிகளையும் வென்றுவிட்டால் 18 புள்ளிகளோடு கம்பீரமாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடலாம்.
ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை பெரும்பாலும் லீக் சுற்றில் 16 புள்ளிகள் பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும். சூப்பர் கிங்ஸ் அணி மீதமிருக்கும் 3 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்றால் அந்த 16 என்ற இலக்கை எட்டிவிடும். ஆனால், இம்முறை 16 புள்ளிகள் எடுத்தாலே பிளே ஆஃப் சுற்றுக்கு நுழைந்துவிட முடியும் என்றும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது.
தற்போது புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆர்சிபி அணிக்கும், ஆறாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் 2 புள்ளிகள் தான். சிஎஸ்கே-வுக்கு கீழே இருக்கும் ராயல்ஸ் தங்களின் கடைசி 3 போட்டிகளை டெல்லி, லக்னௌ, மும்பை என கடைசி 3 இடங்களில் இருக்கும் அணிகளோடு விளையாடுகிறது. அதனால், அவர்களும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பிருக்கிறது. டாப் 6 இடங்களில் இருக்கும் பல அணிகள் 16 புள்ளிகளோ அதற்கு மேலோ பெற வாய்ப்புள்ளது. ஏழாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணியால் கூட அதிகபட்சமாக 17 புள்ளிகள் வரை எடுக்க முடியும்.
இதுவரை லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் என இரண்டு அணிகள் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக இழந்திருக்கின்றன. அதனால், இப்போதைக்கு எதையுமே உறுதியாகச் சொல்லிட முடியாது.
ஆனால், சிஎஸ்கே 3 போட்டிகளையுமே வென்றுவிட்டால் பிளே ஆஃப் சுற்று உறுதியாகக் கிடைத்துவிடும். ஏனெனில், சன்ரைசர்ஸ், ஆர்சிபி, டைட்டன்ஸ் போன்ற அணிகள் டாப் 5 இடங்களில் இருக்கும் அணிகளுக்கு எதிராக இன்னும் குறைந்தபட்சம் 2 போட்டிகளிலாவது ஆடவேண்டியிருக்கிறது. அதில் சன்ரைசர்ஸ் மற்றும் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக சூப்பர் கிங்ஸும் ஆடுகிறது. எனவே, அந்த 3 போட்டிகளில் வெல்வது சூப்பர் கிங்ஸின் புள்ளிகளை அதிகரிப்பதோடு, டாப் 5 இடங்களில் தற்போது இருக்கும் அணிகளிடமிருந்தும் புள்ளிகளை எடுத்துவிடும். அதனால், சிஎஸ்கே டாப் 2 இடங்களில் கூட முடிக்க முடியும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு