சமையல் எண்ணெய், உரம், தங்கம் பற்றி மோதி கூறியவை இந்தியர்களுக்கான எச்சரிக்கையா?

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

வரும் நாட்களில் இந்தியா கடுமையான எண்ணெய் நெருக்கடியைச் சந்திக்க வாய்ப்புள்ளதா? இரான் போர் இந்தியா மீது கவலையளிக்கக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்துமா?

சவாலான நாட்களுக்கு இந்திய மக்கள் தயாராக வேண்டுமா? சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது இந்த நெருக்கடி குறித்து பிரதமர் நரேந்திர மோதி ஏன் மௌனம் காத்தார்?

ஞாயிற்றுக்கிழமையன்று செகந்திராபாத்தில் பிரதமர் மோதி ஆற்றிய உரைக்குப் பிறகு, நிபுணர்கள், தலைவர்கள் மற்றும் சாமானிய மக்களிடையே இந்த விவாதம் தொடங்கியது.

பிரதமர் மோதியின் உரை முடிந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு, போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இரான் அனுப்பிய முன்மொழிவை "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விவரித்தார்.

இதன் பொருள், தற்போது இரான் போர் தொடர்பாக நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. இது உலகப் பொருளாதாரம் (இந்தியா உட்பட) மற்றும் பங்குச் சந்தைக்கு நல்ல செய்தியல்ல.

பிரதமரின் உரை எவ்வாறு விவாதிக்கப்படுகிறது?

தனது உரையில், ஓர் ஆண்டு காலத்திற்குப் பெட்ரோல் மற்றும் டீசலைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறும், சமையல் எண்ணெய்க் பயன்பாட்டைக் குறைக்குமாறும் இந்தியர்களைப் பிரதமர் மோதி வலியுறுத்தினார்.

மேலும், இந்தக் காலகட்டத்தில் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

பாரதிய ஜனதா கட்சியின் பல தலைவர்கள் பிரதமரின் உரையைப் பகிர்ந்து அவரது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினர். சில நிபுணர்கள், பிரதமரின் உரையை ஆய்வு செய்து, கடினமான காலங்களுக்குத் தயாராகுமாறு இந்தியாவை வலியுறுத்தினர்.

அதே நேரத்தில், இரான் போரினால் உருவான சூழ்நிலையைச் சரியாகக் கையாள அரசு தவறிவிட்டதாகவும், இந்த நெருக்கடியைச் சமாளிக்கும் பொறுப்பைப் பொதுமக்கள் மீது சுமத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

சமூக ஊடகங்களிலும் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. சிலர் பிரதமரின் கூற்றை ஏற்றுக்கொண்டாலும், மற்றவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலின் போது இந்த நெருக்கடி ஏன் பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்புகின்றனர்

பிரதமர் மோதி என்ன கூறினார்? அதன் பொருள் என்ன, மற்றும் அவரது கூற்றுக்காக அவர் எதிர்க்கட்சிகளிடமிருந்து ஏன் விமர்சனங்களைச் சந்திக்கிறார்?

'பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைக்கவும்'

இரான் போரைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைத்துவிட்டு, பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை அதிகரிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

"இந்தியாவிடம் பெரிய வளம் இல்லை. நாம் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவை மற்ற நாடுகளிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. போர் காரணமாக, உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் உரங்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. அவை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளன. அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது என்பது செய்தித்தாள்களில் வெளியாகிறது" என்றார் மோதி.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் செல்லும் கடல் வழிப்பாதையான ஹோர்மூஸ் நீரிணை வழியாக நடக்கும் கப்பல் போக்குவரத்தை, இரான் போர் பாதித்துள்ளது.

இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிசக்தி தேவைகளுக்கும் ஹோர்மூஸ் நீரிணை வழியாக வரும் விநியோகத்தையே இந்தியா பெரிதும் சார்ந்துள்ளது.

இரான் போர் உலகளவில் எண்ணெய் விலை உயர வழிவகுத்துள்ளது. இந்தியா தனது எண்ணெய் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிக அளவிலான எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

நிபுணர்களின் கருத்துப்படி, ''கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், உரங்கள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஆகியவற்றின் விலைகள் இந்தப் போரினால் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விஷயத்தில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்''.

மின்னணு பொருட்கள் மற்றும் விமானப் பயணங்களும் விலை உயரக்கூடும்.

தி ஹிந்து நாளிதழின் அரசியல் ஆசிரியர் நிஸ்துலா ஹெப்பர், "மத்திய கிழக்கின் நெருக்கடியின் தாக்கம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் அளித்த விளக்கத்தை தொடர்ந்து இந்த உரை வந்துள்ளது. இனி எப்போதும் போல இயல்பாக இருக்க முடியாது என்பதையும், விநியோகச் சங்கிலியில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதையும் இது தெளிவாகக் காட்டுகிறது. இந்தியா தயாராக இருக்க வேண்டும், இனி வரும் காலம் கடினமானதாகவும் அதிர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருக்கலாம்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுக் குழுவின் (பிபிஏசி) தரவுப்படி, 2025-26 நிதியாண்டில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிக்காக இந்தியா 144 பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது.

ஹோர்மூஸ் நீரிணை முற்றுகை நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 110 அல்லது 120 டாலராக நீடித்தால், பணவீக்கம் உயரும், நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் மற்றும் ஒட்டுமொத்தமாகப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால், பிரதமரின் கூற்று ''இந்தியாவிற்கான ஒரு எச்சரிக்கையாக அமைகிறது'' என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தங்கம் வாங்க வேண்டாம் என்று ஏன் கூறப்பட்டது?

தனது உரையில், ஒரு வருட காலத்திற்குத் தங்கம் வாங்க வேண்டாம் என்றும் பிரதமர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

"தங்கம் வாங்குவது என்பது அதிகளவிலான அந்நியச் செலாவணியைச் செலவழிக்கும் மற்றொரு விஷயமாகும். நாட்டின் நலன் கருதி, ஒரு வருட காலத்திற்கு வீட்டில் ஏதேனும் விசேஷங்கள் நடந்தாலும் தங்க நகைகள் வாங்க மாட்டோம் என்று நாம் முடிவெடுக்க வேண்டும்" என்றார்.

இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இரண்டையுமே அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. எனவே, அவற்றை வாங்குவதற்கு அதிக அந்நியச் செலாவணி (பொதுவாக டாலர்கள்) தேவைப்படும்.

இது ரூபாயின் மதிப்பை வலுவிழக்கச் செய்து, இந்தியப் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது அதிக பணவீக்கத்திற்கு வழிவகுக்கக்கூடும்.

அந்நியச் செலாவணி இருப்பு குறையும் போது, அரசாங்கம் இரண்டு நிலைகளில் கவலை கொள்கிறது.

ஒன்று கச்சா எண்ணெய் இறக்குமதி, மற்றொன்று தங்கம் இறக்குமதி. இதனால் தான் பிரதமர் தனது உரையில் கச்சா எண்ணெயுடன் சேர்த்து தங்கம் வாங்குவதற்கு எதிராக அறிவுறுத்தியுள்ளார் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அரசாங்கத் தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் தங்க இறக்குமதி 51.4 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டது, இது 2023 இல் 45.54 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது 2024-25 இல் 13.7 சதவீத உயர்வாகும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, 2026 மே 9 நிலவரப்படி இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு சுமார் 690.6 பில்லியன் டாலர்களாக இருந்தது.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் அன்ஷுமன் திவாரி எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், "ஒரு வருடத்திற்குத் தங்கம் வாங்க வேண்டாம் என்ற பிரதமர் மோதியின் வேண்டுகோளுக்குப் பின்னால் ஒரு பெரிய செய்தி மறைந்துள்ளது . அது ரூபாயைக் காப்பாற்றுங்கள் என்பதுதான். அந்நியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிப்பதற்கான ஆரம்பகட்ட எச்சரிக்கையாக இது தெரிகிறது, ஏனென்றால் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு கூடுதல் டாலரும் ரூபாயை மேலும் பலவீனப்படுத்தும். இந்தியாவில் தங்கத்திற்குப் பெரும் தேவை உள்ளது. கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிகப்பெரிய இறக்குமதிப் பொருள் தங்கமாகும். 2026 நிதியாண்டில் தங்க இறக்குமதி சுமார் 72 பில்லியன் டாலர் என்ற சாதனையை எட்டியது. இது 2025 நிதியாண்டை விட சுமார் 24% அதிகமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நிபுணர்களின் கூற்றுப்படி, தங்கம் குறித்த பிரதமர் மோதியின் செய்தி, டாலர் இருப்பைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம், தேவையற்ற இறக்குமதிகளைக் குறைத்தல் மற்றும் இரான் போரினால் ஏற்படும் நீண்டகால அழுத்தங்களுக்குப் பொதுமக்களை மனதளவில் தயார்படுத்துதல் ஆகியவற்றிற்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளிப்பதைக் காட்டுகிறது.

வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கூறப்பட்டது ஏன்?

வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை குறித்தும் பிரதமர் மோதி குறிப்பிட்டுள்ளார்.

வீட்டிலிருந்தே வேலை செய்தல் மற்றும் ஆன்லைன் கூட்டங்கள் போன்ற சேவைகளை மீண்டும் தொடங்குவது காலத்தின் கட்டாயம் என்று அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோதியின் இந்த கருத்து பெட்ரோல் மற்றும் டீசல் பொருளாதாரத்தோடு தொடர்புடையது.

ஏனெனில், இதன் மூலம் எரிபொருள் நுகர்வு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையே பயணம் செய்வது குறைவதால், மின்சாரம் மற்றும் எண்ணெய் நுகர்வு குறைந்து சேமிப்பு ஏற்படும்.

சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்குமாறு கூறப்பட்டது ஏன்?

பிரதமர் நரேந்திர மோதி கூறுகையில், "சமையல் எண்ணெய்க்கும் இதே நிலைதான். அதன் இறக்குமதிக்கு பெருமளவு அந்நியச் செலாவணி செலவிடப்பட வேண்டியுள்ளது. ஒவ்வொரு வேளை உணவிலும் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்தால், அதுவும் ஒரு தேசபக்திச் செயலாகும். இது நாட்டிற்கும் உடலுக்கும் நன்மை பயக்கும். இது நாட்டின் கருவூலத்தின் ஆரோக்கியத்தையும், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்" என்றார்.

சமையல் எண்ணெயை இறக்குமதி செய்யும் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

இந்தியா பாமாயில், சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை இறக்குமதி செய்கிறது.

அரசுத் தரவுகளின்படி, இந்தியா தனது மொத்த சமையல் எண்ணெய் (உண்ணக்கூடிய எண்ணெய்) தேவையில் சுமார் 55% முதல் 60% வரை இறக்குமதி செய்கிறது.

உரங்களைப் பற்றி என்ன கூறப்பட்டது?

ரசாயன உரங்கள் மீதான சார்ந்திருப்பைக் குறைக்குமாறு நாட்டின் விவசாயிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோதி வேண்டுகோள் விடுத்தார். உலகின் மிகப்பெரிய உர நுகர்வோர்களில் இந்தியாவும் ஒன்றாகும்.

யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் அவற்றின் மூலப்பொருட்களின் பெரும்பகுதியை இந்தியா இறக்குமதி செய்கிறது.

இவை இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் விலைகளுடன் தொடர்புடையவை.

இதன் பொருள் என்னவென்றால், மத்திய கிழக்கு நெருக்கடியால் எண்ணெய், எரிவாயு மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றின் விலை உயர்ந்தால், உரங்களின் விலையும் அதிகரிக்கும் என்பதுதான்.

இந்தியாவில், அரசாங்கம் அதிக மானியம் வழங்குவதால் விவசாயிகள் உரங்களை மலிவான விலையில் வாங்குகிறார்கள். எனவே, உரங்களின் விலை உயர்ந்தால், அரசாங்கத்தின் மானியச் செலவு கணிசமாக அதிகரிக்கும்.

ஆதரவும் விமர்சனமும்

பிரதமர் மோதியின் இந்த உரைக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது தோல்வியின் சாட்சி என்றும், இப்போது எதை வாங்க வேண்டும், எதை வாங்கக்கூடாது என்று பொதுமக்களிடம் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில், "நேற்று மோதி மக்களைத் தியாகம் செய்யச் சொன்னார். தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடுகளுக்குச் செல்லாதீர்கள், பெட்ரோலை குறைவாகப் பயன்படுத்துங்கள், உரம் மற்றும் சமையல் எண்ணெயை குறைவாகப் பயன்படுத்துங்கள், மெட்ரோவில் பயணம் செய்யுங்கள், வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள். இவை உபதேசங்கள் அல்ல, தோல்வியின் ஆதாரங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "12 ஆண்டுகளில் நாடு எத்தகைய நிலையை எட்டியுள்ளது என்றால், பொதுமக்கள் எதை வாங்க வேண்டும், எதை வாங்கக்கூடாது, எங்கு செல்ல வேண்டும், எங்கு செல்லக்கூடாது என்று சொல்ல வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறையும், அவர்கள் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிப்பதற்காகப் பொதுமக்கள் மீது சுமையை ஏற்றிவிடுகிறார்கள்." என்று எழுதியுள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் சுகாசினி ஹைதர், "தேர்தல்கள் முடிந்துவிட்டன, இதன் மூலம் பிரதமர் மோதி மக்களிடம் எரிபொருளைச் சேமிக்கக் கேட்டுக்கொண்டார் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார். ஆனால் அவரோ ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஸ்வீடன், நெதர்லாந்து, நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

"இந்த உலகளாவிய நெருக்கடி நேரத்தில், மோதி நாட்டு மக்களுக்கு தொலைநோக்கு பார்வையுடன் கூடிய வேண்டுகோளை விடுத்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டில் சிக்கனம், வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவித்தல் மற்றும் ரசாயன உரங்களுக்குப் பதிலாக இயற்கை விவசாயத்தைப் பின்பற்றுதல் போன்ற அவரது அழைப்பு இந்தியாவைத் தற்சார்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு கொண்ட நாடாக மாற்றுவதற்கான தெளிவான வரைபடமாகும். உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் நாட்டை ஒரு நிலையான, வலுவான மற்றும் முன்னணி தேசமாக நிலைநிறுத்துவதில் இது தீர்க்கமானதாக இருக்கும்" என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு