You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒன்றாக பணிபுரிந்தாலும் 'உடன்பிறப்பு' என்பதை அறியாத சகோதரிகள் பல ஆண்டுகள் கழித்து உண்மை அறிந்த கதை
- எழுதியவர், பிபிசி உலக சேவை
- பதவி,
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஜூலியா டினெட்டி, கசாண்ட்ரா மேடிசன் ஆகியோரின் வாழ்க்கையில் பல ஒற்றுமைகள் இருந்தன. ஒரே மதுபான விடுதியில் பணியாற்றிய போது சந்தித்த இவர்கள் விரைவில் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். ஆனால் அந்த நேரத்தில், அவர்கள் உண்மையில் எவ்வளவு ஆழமாகப் பிணைக்கப்பட்டு இருந்தார்கள் என்பது அவர்களுக்கே தெரிந்திருக்கவில்லை.
இரு பெண்களும் 1990களில் அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் வளர்ந்தனர். அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை என்றாலும், அவர்கள் இருவரும் சுமார் 15 நிமிட பயண தூரத்தில்தான் வசித்து வந்தனர். இதில் மற்றுமோர் ஆச்சரியமான ஒற்றுமை என்னவெனில், அவர்கள் இருவருமே தத்தெடுக்கப்பட்டவர்கள்.
குழந்தையாக இருந்தபோது, கசாண்ட்ரா மேடிசன் அடிக்கடி தன்னைப் பெற்ற தாய் குறித்து நினைத்து, ஒரு நாள் அவரைச் சந்தித்தாக வேண்டுமெனக் கனவு கண்டார். தனது புன்னகையையோ அல்லது கண்களையோ தன்னைப் பெற்ற தாயிடம் இருந்து பெற்றாரா என்று அவர் சிந்தித்ததுண்டு. உயிரியல் ரீதியிலான தனது குடும்பம் முதலில் கரீபியனில் இருந்த டொமினிகன் குடியரசில் இருந்து வந்தவர்கள் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது.
"அவர்கள் மிகவும், மிகவும், மிகவும் ஏழைகளாக இருந்ததால், என்னைத் தத்துக் கொடுக்க முடிவு செய்தனர். என்னை வளர்க்கும் அளவுக்கு அவர்களிடம் வசதி இருக்கவில்லை," என்று மேடிசன் கூறினார்.
மேடிசன் ஓர் இளம் பெண்ணாக வளர்ந்தபோது, தனது உயிரியல் ரீதியான குடும்பத்தைக் கண்டுபிடிக்க கடுமையாக முயன்றார். ஆனால் அவரிடம் பிறப்புச் சான்றிதழ் இருக்கவில்லை. பல முயற்சிகள் செய்தும், அவரால் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தனது வேர்கள் மற்றும் மரபுடன் இணைந்திருக்கும் ஒரு வழியாக, 19 வயதில் மேடிசன் தனது கையில் டொமினிகன் குடியரசின் கொடியைப் பச்சை குத்திக்கொண்டார். "டொமினிகனாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையான விஷயம்" என்றார் மேடிசன்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மேடிசன் ஒரு மதுபான விடுதியில் பணிப்பெண்ணாக வேலை செய்யத் தொடங்கினார். அங்கு அவர் ஜூலியா டினெட்டியை சந்தித்தார். அவர் மேடிசன் தனது கையில் பச்சை குத்தியிருந்த டொமினிகன் குடியரசின் கொடியை கவனித்தார்.
ஆச்சரியமளிக்கும் விதமாக, டினெட்டியும் டொமினிகன் குடியரசின் கொடியைத் தனது முதுகில் பச்சை குத்தியிருந்தார். தானும் பிறந்த நாட்டை நினைவுகூரும் விதமாகத் தனது 22 வயதில் பச்சை குத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் மேலும் பேசிக் கொண்டிருந்தபோது, டினெட்டியும் மேடிசனும், அவர்கள் இருவருமே தத்தெடுக்கப்பட்டவர்கள் என்ற மற்றுமோர் அதிர்ச்சியூட்டும் ஒற்றுமையைக் கண்டுபிடித்தனர்.
"ஆம், நான் அங்கிருந்து தத்தெடுக்கப்பட்டவள்தான்' என்பது போல ஏதோ கூறினேன். அதற்கு அவர், 'அட, நானும் அங்கிருந்து தத்தெடுக்கப்பட்டவள்தான்' என்றார். அது என்னை ஆச்சரியத்தில் ஸ்தம்பிக்க வைத்தது," என்று நினைவு கூர்ந்தார் டினெட்டி.
இதற்குப் பிறகு, அவர்கள் இருவரும் ஒரே மாதிரி இருக்கிறார்களா என்று மற்றவர்களிடம் கேட்கத் தொடங்கினர். "நாங்கள் ஒரே மாதிரி இருப்பதாக நினைக்கிறீர்களா?' என்று கேட்போம். அதற்கு மற்றவர்கள், 'ஆமாம், நீங்கள் இருவரும் பார்க்க ஒன்று போலவே இருக்கிறீர்கள்' என்று பதிலளித்தனர்," என்று டினெட்டி நினைவு கூர்ந்தார்.
விரைவில், அந்த இரண்டு பெண்களும் தாங்கள் சகோதரிகள் என்று மற்றவர்களிடம் வேடிக்கையாகச் சொல்லத் தொடங்கினர். அவர்கள் இன்னும் ஒன்று போலத் தோற்றம் அளிப்பதற்காக, ஒரே மாதிரியான ஆடைகளை அணியலாம் என்றுகூட மேடிசன் பரிந்துரைத்தார்.
ஆரம்பத்தில், ஜூலியா டினெட்டியும் கசாண்ட்ரா மேடிசனும் தாங்கள் ஒரே மாதிரியாக இருப்பதாகவும், ஒருவேளை சகோதரிகளாக இருக்கலாம் எனவும் வேடிக்கையாகப் பேசிக்கொண்டனர். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு, தாங்கள் உண்மையாகவே உறவினர்களாக இருக்கக்கூடுமோ என்று இருவரும் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினர்.
அதைக் கண்டறிய, அவர்கள் தங்களுடைய தத்தெடுப்பு ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்த்தனர். இருப்பினும், அந்த ஆவணங்களில் அவர்கள் சகோதரிகள் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் வெவ்வேறு இடங்களில் பிறந்தவர்கள் என்றும், அவர்களைப் பெற்றெடுத்த தாய்மார்களின் குடும்பப் பெயர்கள்கூட வேறுபட்டவை என்றும் அந்த ஆவணங்கள் காட்டின.
சிறிது காலத்திற்குப் பிறகு, இரு பெண்களும் வேலைகளை மாற்றிக் கொண்டு ஒருவரையொருவர் விட்டு விலகிச் சென்றனர். டினெட்டி கனெக்டிகட்டில் தொடர்ந்து வசித்து வந்தார். மேடிசன் விர்ஜீனியாவுக்கு குடிபெயர்ந்தார். அப்போதும் அவர்கள் தொடர்பில் இருந்தனர் என்றாலும், முன்பு போல நெருக்கமாக இருக்கவில்லை.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, மேடிசனுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு டி.என்.ஏ பரிசோதனைக் கருவி கிடைத்தது. அந்தப் பரிசோதனையின் மூலம், அவர் தனது உறவினர்களில் ஒருவரைக் கண்டுபிடித்தார். அவரைப் பெற்றெடுத்த தாய் 2015இல் இறந்துவிட்டதாக அந்த உறவினர் அவரிடம் கூறினார்.
இந்தச் செய்தி மேடிசனை மிகவும் வருத்தமடையச் செய்தது. ஆனால் அவரது உறவினர், அவரைப் பெற்றெடுத்த தந்தை உள்பட, அவரது உயிரியல் ரீதியான குடும்பத்தின் பல உறுப்பினர்களுடன் அவரைச் சேர்த்து வைக்க உதவினார்.
மேடிசன் குழந்தையாக இருந்தபோது அவரது பெற்றோர் மிகவும் கடினமான காலத்தை கடந்து சென்றதாக அந்த உறவினர் விளக்கினார்.
பின்னர், மேடிசன் தனது உயிரியல்பூர்வமான தந்தையான அட்ரியானோ லூனா கொல்லாடோவுடன் தொலைபேசியில் பேசினார். அவர் தத்தெடுக்கப்பட்ட நேரத்தில் குடும்பம் அனுபவிக்க சிரமங்களைப் பற்றிய விவரங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருந்ததால், அவர்கள் மண் தரையில்தான் உறங்குவார்கள் என்று அவர் மேடிசனிடம் கூறினார்.
மேடிசனின் தாய் அவரைக் கருவுற்றிருந்த போது, அவருடைய அண்ணன் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். குடும்பம் பிழைத்து, தங்கள் சூழ்நிலையைச் சமாளிக்க மேடிசனை தத்துக் கொடுப்பதுதான் ஒரே வழி என்று அவருடைய தந்தை உணர்ந்தார்.
இந்த விஷயங்களை அறிந்த பிறகு, மேடிசன் டொமினிகன் குடியரசுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டார். அவர் விமான நிலையத்திற்கு வந்தபோது, அவரது குடும்பம் முழுமையாக அவருக்காகக் காத்திருந்தது. அவர்கள் அனைவரும் அவரது புகைப்படம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்திருந்தனர்.
மேடிசன் தனது தந்தையை நோக்கி ஓடிச் சென்றார். இருவரும் உணர்ச்சிப் பெருக்கில் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதனர்.
அந்தப் பயணம் மேடிசனுக்கு மிகவும் சிறப்பானதாக இருந்தது. ஆனால் அவர் வீடு திரும்பிய பிறகு, அவருடைய வாழ்வில் மற்றுமொரு ஆச்சரியமான திருப்பம் ஏற்பட்டது.
மோலி என்ற பெண் அவரைத் தொடர்பு கொண்டார். மோலி, சிறு வயது முதல் டினெட்டியின் உற்ற தோழியாக இருந்தார். தங்கள் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்காக, டினெட்டி மற்றும் மோலியின் பெற்றோர் அமெரிக்காவில் இருந்து டொமினிகன் குடியரசுக்கு ஒன்றாகப் பயணம் செய்ததாக அவர் கூறினார்.
தானும் மேடிசனும் உடன்பிறந்த சகோதரிகள் என்று மோலி நம்பினார். அவர்கள் இருவரின் பிறப்புச் சான்றிதழ்களிலும் தாயின் பெயர் ஒன்றாக இருந்ததுதான் அதற்குக் காரணம். இருப்பினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ பரிசோதனைகள், மோலியும் மேடிசனும் சகோதரிகள் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தின. அவர்கள் உறவினர்கள் மட்டுமே என்பது அதில் தெரிய வந்தது. பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டு இருந்த பெயர் தவறானது என்பதையும் அந்தப் பரிசோதனைகள் சுட்டிக்காட்டின.
அதேநேரம், மேடிசனின் உயிரியல்பூர்வமான தாயாருடைய புகைப்படம் மோலியிடம் இருந்தது. அவரது கூற்றுப்ப்டி, அந்தப் பெண் பார்ப்பதற்கு அச்சு அசலாக ஜூலியா டினெட்டியை போலவே இருந்தார்.
இதன் காரணமாக, உண்மையில் மேடிசனும் டினெட்டியுமே உண்மையான சகோதரிகளாக இருக்க வேண்டுமெறு மோலி உறுதியாக நம்பினார்.
கசாண்ட்ரா மேடிசன் பின்னர் தனது உயிரியல் தந்தையான அட்ரியானோ லூனா கொல்லாடோவுக்கு வீடியோ கால் செய்து, அவரும் அவரது தாயும் இவரன்றி வேறு குழந்தை எதையாவது தத்துக் கொடுத்தார்களா என்று கேட்டார்.
"யாரோ அவரது உற்சாகத்தைக் குலைத்துவிட்டதைப் போல் அவர் காணப்பட்டார்" என்று மேடிசன் நினைவு கூர்ந்தார். அதற்கு அவர் அமைதியாக, "ஆம், தத்துக் கொடுத்தோம்" என்று பதிலளித்ததாக மேடிசன் கூறினார். அதற்கு மேடிசன், "கடவுளே! இதை நீங்கள் என்னிடம் சொல்லவே இல்லையே" என்றார்.
இந்த அதிர்ச்சியூட்டும் உண்மையை அறிந்த பிறகு, மேடிசன் இனியும் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதை உணர்ந்தார். அவர் உடனடியாக மற்றொரு டி.என்.ஏ பரிசோதனைக் கருவியை வாங்கி, ஜூலியா டினெட்டியை சந்திக்க ஒரு பனிப்புயலில் எட்டு மணிநேரம் காரில் பயணம் செய்தார்.
பின்னர் அந்தச் சகோதரிகள் டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருந்தனர். முடிவுகள் வருவதற்குச் சுமார் இரண்டரை வாரங்கள் ஆனது. அந்தக் காத்திருப்பு அவர்கள் இருவருக்கும் உணர்ச்சிரீதியாக மிகவும் கடினமானதாக இருந்தது. டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் எப்படி வரப் போகின்றன என்பதைப் பற்றி அவர்கள் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்ததால், தங்கள் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் இருந்ததாக அவர்கள் கூறினர்.
இறுதியாக, பரிசோதனை முடிவுகள் வந்தன. டினெட்டி அந்தச் செய்தியைத் திறந்து பார்த்து உண்மையைக் கண்டுபிடித்தார். அதில் அவரும் மேடிசனும் உண்மையில் பிறவி சகோதரிகள் என்று இருந்தது.
"உண்மையாகவே இது நம்ப முடியாததாக இருந்தது. அவ்வளவு நாட்களாக நாங்கள் சகோதரிகளைப் போலவே பழகி வந்தும், இது எங்களுக்குத் தெரியாமலேயே இருந்தது," என்று டினெட்டி கூறினார்.
உண்மையை அறிந்ததும் மேடிசன் உணர்ச்சிவசப்பட்டு அழுதார், உடனடியாகத் தங்கள் தந்தையிடம் தெரிவித்தார். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து, கூடிய விரைவில் டினெட்டியை சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
விரைவில் அந்த இரு சகோதரிகளும் டொமினிகன் குடியரசுக்கு ஒன்றாகப் பயணம் செய்யத் திட்டமிட்டனர்.
அவர்கள் விமான நிலையத்தை அடைந்தபோது, அவர்களுடைய முழு குடும்பமும் மீண்டும் அவர்களுக்காகக் காத்திருந்தது. இந்த முறை, குடும்பத்தினர் இரு சகோதரிகளின் படங்களும் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்திருந்தனர்.
அவர்களுடைய தந்தை டினெட்டியை நோக்கிச் சென்று, அவரை இறுக்கமாகக் கட்டியணைத்து, "மி ஹிஜா" என்று கூறினார். அதன் பொருள், "என் மகள்" என்பதாகும்.
ஒன்று சேர்ந்த குடும்பமாகத் தாங்கள் மேற்கொண்ட முதல் பயணம் மகிழ்ச்சி, இசை மற்றும் நடனத்தால் நிறைந்து இருந்ததாக அந்த சகோதரிகள் கூறினர்.
தனது மகள்களை மீண்டும் சந்தித்ததுதான் கடவுள் தனக்கு அளித்த மிகப்பெரிய பரிசு என்று கொல்லாடோ கூறினார்.
"நான் உண்மையாகவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர்கள் என்னைச் சந்திக்க வரும் ஒவ்வொரு முறையும், என் இதயம் மகிழ்ச்சியால் நிரம்புகிறது. அனைத்து குடும்பங்களும் வரவேற்க வேண்டியதைப் போல, நாங்கள் அவர்களை அன்போடும் பாசத்தோடும் வரவேற்கிறோம்," என்று அவர் கூறினார்.
மேலும் அவர், "இதுவோர் அழகான கதை. இதுபோன்ற ஒரு கதையைச் சொல்லும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை," என்றும் கூறினார்.
இந்தக் கட்டுரை, பிபிசி உலக சேவையின் 'அவுட்லுக்' நிகழ்ச்சியின் ஓர் அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு