You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் - நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் அறிவுறுத்தல்
த.வெ.க. தலைவர் விஜயை தமிழ்நாட்டின் முதலமைச்சராக நியமிப்பதற்கான உத்தரவை பொறுப்பு ஆளுநர் அர்லேகர் வழங்கினார்.
விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவை அடுத்து , தவெக ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை எம்எல்ஏக்கள் (120) ஆதரவு கிடைத்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்தார் தவெக தலைவர் விஜய்.
ஆளுநருடனான சந்திப்பின் போது விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவு கடிதத்தை விஜய் வழங்கினார். பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்துள்ளதால் ஆட்சியமைக்க விஜய் உரிமை கோரினார்.
சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் தலைவர்களும் உடன் இருந்தனர்.
"நம்பிக்கை வாக்கெடுப்பு"
இதன் பின்னர் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், "சி. ஜோசப் விஜய் அவர்களைத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நியமித்து, அமைச்சரவையை அமைக்குமாறு" ஆளுநர் அழைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழா நாளை (மே 10ம் தேதி) காலை 10 மணிக்கு நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் என்றும், இதன் பின்னர் மே 13ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சட்டமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கோருமாறு விஜயை ஆளுநர் அறிவுறுத்தியதாகவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு
முன்னதாக பெரும்பான்மை ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளை த.வெ.க. முன்னெடுத்து வந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு இன்று அறிவிக்கப்பட்டது.
தவெகவுக்கு ஆதரவு அளித்தற்கான கடிதத்தை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தவெக பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் வழங்கினார்.
ஆதரவுக் கடிதத்தைப் பெற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக என அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.
அதோடு, "ஜனநாயகம் காக்கப்படும் , மக்களின் ஆதரவுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் உருவாகிறார்" என்று தெரிவித்தார்.
ஆதரவுக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது என்ன?
த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து கட்சித் தலைவர் திருமாவளவன் பெயரில் வழங்கப்பட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடிதத்தில், "அக்கட்சியின் 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்பாக, தமிழ்நாட்டில் அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்திற்காக ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.
இந்த ஆதரவு நிபந்தனையற்றது எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆதரவானது, அன்று தமிழ்நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டு மக்களுக்கு நிலையான மற்றும் ஜனநாயக ஆட்சியை உறுதி செய்யும் நலன் கருதி வழங்கப்படுகிறது எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
'குடியரசுத் தலைவர் ஆட்சி வராமல் தடுக்கவே ஆதரவு' - திருமாவளவன்
தவெக-வுக்கு ஆதரவுக் கடிதம் வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன், மக்கள் நலக்கூட்டணி உருவான காலத்தில் இருந்து கொள்கை அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். அதன்படி அரசியல் நெருக்கடி உருவாகியுள்ள சூழலில் இடதுசாரிக் கட்சிகளும் விசிக-வும் தவெக-வை ஆதரித்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
"அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதாலும் தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க விசிக நிலைபாடு தடையாக இருந்துவிடக் கூடாது என்ற எண்ணத்திலும் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்" என்று அவர் கூறினார்.
எனவே தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து விசிக ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்வதாகவும்" குறிப்பிட்டார். "அரசியல் கட்சிக்கென இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி இந்த முடிவை எடுத்துள்ளோம். இதனால் எங்கள் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை" என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அதோடு, "தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முறைப்படி எங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளோம், அதை அவரும் ஏற்றுக்கொண்டார்" எனவும் அவர் தெரிவித்தார்.
தவெக ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களைவிடக் கூடுதலாகவே தற்போது அவர்களிடம் உள்ளது. எனவே "ஆளுநர் விஜயை ஆட்சியமைக்க அழைத்து ஜனநாயகத்தை காக்க வேண்டும், குதிரை பேரம் நடப்பதற்கு இடம் கொடுக்கக் கூடாது" என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஐயுஎம்எல் விஜய்க்கு ஆதரவு
இதனிடையே த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து ஐயுஎம்எல் கட்சியும் கடிதம் வழங்கியுள்ளது. அந்தக் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள 2 எம்எல்ஏக்களான சையத் ஃபரூக் பாஷா, ஏ.எம்.ஷாஜஹான் ஆகியோர் பெயரில் வழங்கப்பட்டுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் நிலையான, மதச்சார்பற்ற ஜனநாயக அரசு அமையும் நோக்குடன் ஜோசப் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
பெரும்பான்மை ஆதரவை எட்டியது த.வெ.க.
விடுதலைச் சிறுத்தைகள், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சி பெரும்பான்மைக்குத் தேவையானதைவிட கூடுதலான எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெற்றுள்ளது.
த.வெ.க. 108 தொகுதிகளில் வென்ற நிலையிலும், விஜய் 2 தொகுதிகளில் வென்றதால் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 107 ஆக உள்ளது. இது தவிர காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் 2, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 மற்றும் ஐயூஎம்எல் 2 என 120 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.
மு.க.ஸ்டாலின் அறிக்கை
இவற்றுக்கு இடையே தமிழ்நாட்டில் அமையவுள்ள புதிய அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த அவர், "தமிழ்நாட்டில் இன்னொரு தேர்தலுக்கு வழிவகுக்கக் கூடாது என, நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, தவெக-வுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்று கூட்டணி தோழர்கள் அறிவித்ததை வரவேற்பதாக" தெரிவித்துள்ளார்.
"கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே நாளில் நன்றி சொல்ல அண்ணா அறிவாலயம்கூட வராமல் திமுக உடனான உறவை காங்கிரஸ் முறித்துக்கொண்ட வேளையில், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் திமுகவுடன் கைகோர்த்துப் போராடுவோம் என்று கூறிய இடதுசாரிகள் உள்ளிட்ட மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் நன்றி" என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும்,"அமையவுள்ள புதிய அரசு, மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்" என்றும் ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
'தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்' - எடப்பாடி பழனிசாமி
முன்னதாக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பதிவில், "நடந்து முடிந்த 17வது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
'தவெக வெளியிட்ட காணொளி ஏஐ ஆக இருக்கலாம்' - டிடிவி தினகரன்
முன்னதாக, அமமுக எம்.எல்.ஏ காமராஜ் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் ஆர்லேகரை சந்தித்த பிறகு இன்று (மே 9) காலை மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய டிடிவி தினகரன், "எம்.எல்.ஏ காமராஜ் கடிதம் வழங்கியதாக வெளியான வீடியோவை எடுத்தது யார்? எங்கே எடுக்கப்பட்டது?' என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால் தேவைப்படும் என்பதற்காக நாங்கள் கடிதத்தை வழங்கினோம். நகல் கடிதத்தை வழங்கிய தவெக-வினர் அசல் கடிதத்தை வழங்காதது ஏன்? அசல் கடிதம் எங்கே உள்ளது? என்னுடைய ஒப்புதலுடன் தான் கடிதம் வழங்கினார்கள் என்றால் அதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்" என்றார்
தவெக-வினர் வெளியிட்ட காணொளி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தினகரன், "அந்தக் காணொளியின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்" என்றார். "காணொளியை வெளியிட்டவர்கள், அசல் கடிதத்தை ஏன் வழங்க மறுக்கிறார்கள். அந்த வீடியோ உண்மை எனக் கூறிவிட முடியாது, ஏஐ ஆகக்கூட இருக்கலாம். அது மோசடி வீடியோ என ஆளுநரிடம் கூறிவிட்டோம். நான் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கினேன் என அந்தக் கடிதத்தில் தவறாகக் குறிப்பிட்டுள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.
"குதிரை பேரம் செய்வதற்காகத் தான் இதைச் செய்துள்ளனர்" எனக் குற்றம் சாட்டும் தினகரன், இதன் பின்னணியில் "விஜய்தான் இருந்திருப்பார்" என்றும் தெரிவித்தார். மேலும், "வழக்கறிஞருடன் ஆலோசித்து புகார் அளிப்பது பற்றி முடிவெடுப்போம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
'அதிமுகவை ஆட்சியில் அமர்த்த பின்வாசல் வழியாக நடவடிக்கை' - எம்.ஏ.பேபி குற்றச்சாட்டு
அதிமுக தலைமையிலான அரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக திமுக தங்களிடம் பேசியதாக சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அதிமுகவை ஆட்சியில் அமர்த்த பாஜக முயன்றதாக மதுரையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மீண்டும் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் புதிய கட்சிக்கு ஆதரவாக மக்களின் தீர்ப்பு வந்துள்ளது. தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 இடங்கள் கிடைத்துள்ளன. விஜய் எவ்வாறு பெரும்பான்மையை நிரூபிக்கப் போகிறார் என ஆளுநர் கேட்கிறார். அது அவரின் பணி அல்ல. ஆளுநருக்கு எதிராக சிபிஎம் போராட்டம் நடத்தியது, அறிக்கை வெளியிட்டது.
டெல்லியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் மக்கள் தீர்ப்புக்கு எதிராகச் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பாஜக உடன் கூட்டணியில் உள்ள அதிமுக தலைமையிலான அரசை பின்வாசல் வழியாக அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் எனவும் அதற்கு எங்களுடைய எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்றும் ஆளுநருக்கு தெரிவிக்க முடிவு செய்தோம்" என்றார்.
"ஆளுநர்தான் குதிரை பேரத்துக்கான விவாதத்தை தொடங்கியுள்ளார்" எனக் குற்றம் சாட்டிய பேபி, "விசிக இன்று 11 மணியளவில் ஆதரவுக் கடிதம் வழங்க வேண்டியிருந்தது. ஆனால் ஏனோ அது இன்னும் நடக்கவில்லை. சிபிஎம் எடுத்துள்ள முடிவு ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை திமுக தலைமையிடமும் தெரிவிக்க உள்ளோம்.
எந்தச் சூழலில் இந்த ஆதரவுக் கடிதத்தை வழங்கினோம் என்பதைத் தெரிவிக்க இடதுசாரிக் கட்சிகளின் மாநில தலைவர்கள் திமுக தலைமைக்கு நேரில் சென்று விளக்கம் அளிக்கவுள்ளனர். நாங்கள் குதிரை பேரத்துக்கு எதிராக உள்ளோம். இந்த விவாதத்தை ஆளுநர்தான் உருவாக்கியுள்ளார். தனிப்பெரும் கட்சியை அவர் அழைத்திருந்தால் இந்தப் பிரச்னை எழுந்திருக்காது" என்றும் தெரிவித்தார்.
'விஜய்க்கு பின்னால் இருந்து முட்டுக்கட்டை போடுகிறார்கள்' - தமிழிசை சௌந்தரராஜன்
முன்னதாக, தவெக பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் பதவியேற்பு விழா தள்ளிப் போய்க் கொண்டிருந்த சூழலில் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "ஆளுநர் மற்றும் பாஜக மீது பழி சுமத்துவது சரியில்லை" எனத் தெரிவித்தார்.
அப்போது, விஜய் மூன்றுமுறை ஆளுநரைச் சென்று சந்தித்ததைக் குறிப்பிட்டுப் பேசிய தமிழசை சௌந்தரராஜன், "ஒவ்வொரு முறையும் எண்ணிக்கை இல்லாமல் சென்றுவிட்டு, ஆளுநர் மீது பழிபோடுவது நியாயமில்லை. தமிழக முதலமைச்சர் (மு.க.ஸ்டாலின்) தனிப்பெரும் கட்சியை அழைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுப் பின்னால் இருந்து முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறார். வெளித் தோற்றத்தில் விஜயை ஆதரிப்பதாகக் கூறிவிட்டு பின்னால் முட்டுக்கட்டை போடுகிறார்கள்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கம்யூனிஸ்ட்கள் ஆதரவு தெரிவித்துவிட்டு மத்தியில் இருந்து பாஜக அழுத்தம் தருவதாகக் கூறுவதிலும் உண்மையில்லை. அரசியல் சுயலாபத்திற்காக முடிவுகளை எடுத்துவிட்டு பாஜகவை பழி சொல்வது எந்த விதத்திலும் நியாயமில்லை.
காங்கிரஸ் கட்சி திமுக உடனான உறவை முறித்துக் கொண்டு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருகிறார்கள் என்ற எண்ணிக்கை இல்லாமல் ஹைதராபாத் சென்றிருக்கிறார்கள். எல்லோரும் சுய நலத்திற்காக தங்களின் அரசியல் நகர்வைச் செய்துவிட்டு, ஆளுநர் மீதோ பாஜக மீதோ பழியைச் சுமத்துவது சரியல்ல" என்று தெரிவித்தார்.
முதல்முறையாக ஆளுநரைச் சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "விஜய் தரப்பு கொடுத்த ஆதரவுக் கடிதத்தில் காமராஜ் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த கடிதம் இருந்ததாக செய்தி வந்தது. அது போலியான கடிதம். ஒன்று இது மோசடியாக இருக்க வேண்டும் அல்லது குதிரை பேரமாக இருக்க வேண்டும். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளேன். காமராஜை நீண்ட நேரம் தொடர்புகொள்ள முயன்றபோதும் அவரிடம் பேச முடியவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காமராஜ் ஆதரவுக் கடிதம் எழுதியதாகக் கூறப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. அந்தக் காணொளியின் உண்மைத்தன்மையை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
இதைத் தொடர்ந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட அமமுக எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் உடன் மே 8ஆம் தேதி நள்ளிரவில் ஆளுநரை மீண்டும் சந்தித்தார் டிடிவி தினகரன். அப்போது ஆளுநர் அலுவலகத்திலிருந்து தங்களைத் தொடர்புகொண்டு அந்தக் கடிதம் உண்மைதானா எனக் கேட்டதாக தினகரன் தெரிவித்திருந்தார். அதோடு கடிதம் தொடர்பான செய்தி வந்ததும் அமமுக எம்.எல்.ஏ காமராஜ் பதற்றமடைந்து தன்னைச் சந்திக்க வந்ததாகவும் தினகரன் குறிப்பிட்டார்.
'காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம்'
"தவெக தரப்பில் வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்பட்டதாகக் கூறி எஸ்.காமராஜ் பெயரிலான கடிதத்தின் நகல் என ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மோசடியான செயல். அதன் அசலை ஆளுநர் கேட்டபோது கொண்டு வருகிறோம் எனக் கூறிவிட்டு வந்துள்ளனர்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளிக்க உள்ளோம். இதுவரை ஆதரவு கொடுத்த அனைத்து தரப்பையும் விசாரிக்க வேண்டும். ஆளுநரிடம் மீண்டும் புகார் அளிப்பேன்," என செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய காமராஜ், "நான் புதுச்சேரியில் தங்கியிருந்தேன். ஆளுநர் மாளிகையில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்கள். 6 மணிக்கு ஆளுநர் அலுவலகத்தில் இருந்து செயலாளர் பேசினார். தொலைக்காட்சியில் செய்தி வந்ததால் உடனடியாக வழக்கறிஞரைச் சந்தித்து ஆலோசித்தேன். ஆளுநரை நேரில் சந்தித்து விளக்குமாறு வழக்கறிஞர் கூறினார். புதுச்சேரியில் இருந்து நேரடியாக கிளம்பி சென்னை வந்தேன்" எனத் தெரிவித்தார்.
'இதுபோன்ற குதிரை பேரத்தைக் கண்டதில்லை' - திமுக எம்பி வில்சன்
அமமுக எம்.எல்.ஏ எஸ்.காமராஜின் பெயரில் ஆளுநரிடம் தவெக கடிதம் கொடுத்ததாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு எழுப்பிய செய்தியை மேற்கோள்காட்டி திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தனது எக்ஸ் பதிவில், "தமிழ்நாடு பல ஆண்டுகளில் இதுபோன்ற குதிரை பேரத்தைக் கண்டதில்லை" என விமர்சித்துள்ளார்.
அந்தப் பதிவில், "தமிழ்நாட்டு அரசியலில் மாற்றம் கொண்டு வரப் போகிறோம் என அவர்கள் கூறியதை இப்போது புரிந்து கொள்கிறேன். பதவி ஏற்பதற்கு முன்பாகவே இது அனைத்தும் நடக்கிறது," எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக முடிவெடுப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் அதன் தலைவர் திருமாவளவன் தலைமையில் மே 8ஆம் தேதி மாலை இணைய வழியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இன்று அறிவிக்கப்படும் என விசிக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்தச் சூழலில் நேற்றிரவு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.
இதற்கு மத்தியில் விசிக-வின் பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, இது திருமா காலம்-இனி, உயர்வோம் மேலும் மேலும்!" எனத் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், இன்று(மே 9) வி.சி.க-வின் நிபந்தனையற்ற ஆதரவு த.வெ.க.வுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு