'தனி அணியா.. தவெக அணியா?' - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரளும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்?

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுள்ள நிலையில், அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவர் இன்னமும் தேர்வாகவில்லை. இது அதிமுகவில் பிளவை குறிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், "பொதுச்செயலாளர் என்பவர் வெற்றியைத் தேடித் தர வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தொடர் தோல்விகள் மட்டுமே கிடைத்து வருகின்றன. இதனை ஆராயாமல் இரு குழுக்களாக பிரிந்துவிட்டனர்" என்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 47 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று மூன்றாம் இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டது.

கடந்த தேர்தலில் இரண்டாம் இடம் பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரிசையில் அமர்ந்த அதிமுக, இந்தமுறை மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டதால் அக்கட்சியினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தனியாக ஆலோசனை நடத்தி வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்தநிலையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றபின், அதிமுகவில் தனித்தனியே சட்டப்பேரவை குழுத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஓ.எஸ்.மணியன் தலைமையிலான எம்.எல்.ஏக்களும், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏக்களும் தனித்தனியே தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் அளித்தது பல ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளது.

அதிமுகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் யார் என்பது இன்னமும் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்படவில்லை.

அதிமுகவில் என்ன நடக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்றி நடக்கும் சந்திப்புகள் உணர்த்துவது என்ன?

சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

அதிமுக உயர்மட்டத்தில் காணப்படும் அதிருப்தி, சட்டப்பேரவையின் முதல்நாளிலும் வெளிப்பட்டது. புதிதாக வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்வு திங்கள்கிழமையன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் மட்டுமே எடப்பாடி பழனிசாமியுடன் வந்தனர். எஸ்.பி.வேலுமணி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர்.

சட்டப்பேரவையில் பதவியேற்க வந்த சி.வி.சண்முகம் பதவியேற்பில் பங்கெடுக்காமல் பாதியிலேயே திரும்பிவிட்டார். பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக அவர் பெயர் அழைக்கப்பட்டும் பங்கேற்கவில்லை. பின்னர் பேரவைத் தலைவர் அறையில் சி.வி.சண்முகம் பதவியேற்றார்.

தற்காலிக சபாநாயகரிடம் ஓ.எஸ்.மணியன் தலைமையிலான அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கடிதம் ஒன்றை அளித்தனர். அ.தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க வேண்டும் எனக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதுதொடர்பாக சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

பின்னர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏக்கள் தனியாக தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை அளித்தனர்.

"சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கையெழுத்து பெற்றுள்ளார்" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் துரை கருணா.

"அதேநேரம், அதிக எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்கள் எஸ்.பி.வேலுமணி தரப்பில் உள்ளதால் அவரை சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்வு செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் கூறுகின்றனர்." எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய துரை கருணா, "எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள், தனி அணியாக செயல்படப் போகிறார்களா அல்லது த.வெ.கவுக்கு ஆதரவு தெரிவிக்கப்போகிறார்களா? என்பது விரைவில் தெரிந்துவிடும்" என்கிறார்.

கடந்த மூன்று நாட்களாக இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டாலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தரப்பில் இதுகுறித்து வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

'இரு குழுக்களாக பிரிந்துவிட்டனர்' - வைகைச்செல்வன்

அ.தி.மு.கவில் பிளவு ஏற்பட்டிருப்பதாக வெளியாகும் தகவல்கள் குறித்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனிடம் பிபிசி தமிழ் பேசியது.

"பொதுச்செயலாளர் என்பவர் வெற்றியைத் தேடித் தர வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை. கட்சிக்கு தொடர் தோல்விகள் மட்டுமே கிடைத்து வருகின்றது" எனக் கூறினார்.

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்துப் பேசிய அவர், "தேர்தலில் ஏன் தோல்வி அடைந்தோம் என்பதை ஆராய வேண்டும். ஆனால், அதைவிடுத்து இரு குழுக்களாக பிரிந்துவிட்டனர்" என்கிறார்.

"இவ்விரு குழுக்களும் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை போகப் போகத் தான் பார்க்க வேண்டும்" எனவும் வைகைச்செல்வன் தெரிவித்தார்.

"முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான சட்டப்பேரவை உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே?" என்றோம்.

"அதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. வெற்றியைத் தேடித் தராமல் தொடர் தேர்தல் தோல்வி என்பது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சோர்வு மனப்பான்மையை ஏற்படுத்தியுள்ளது" எனத் தெரிவித்தார்.

"கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சோர்வைப் போக்க வேண்டிய பொறுப்பு பொதுச்செயலாளருக்கு இருக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான திட்டத்தை அவர் முன்வைக்க வேண்டும்" எனவும் வைகைச் செல்வன் குறிப்பிட்டார்.

"அ.தி.மு,க இரு அணிகளாக பிரிந்திருப்பதால் தலைமை மாற்றத்துக்கான சாத்தியம் உள்ளதா?" எனக் கேட்டபோது, "அது போகப் போகத் தான் தெரியும். எதிர்ப்பாளர்கள் வலுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களை அழைத்துப் பேசி சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்" என்கிறார்.

"அதற்கான திட்டத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைக்க வேண்டும். அதை செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.

அ.தி.மு.கவில் தலைமை மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் துரை கருணா.

'நல்ல முடிவை எடுப்பார்கள்'

பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏவும் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளருமான மகேஸ்வரி, "ஒவ்வொருவருக்கும் சில வருத்தங்களும் கருத்து வேறுபாடுகளும் இருக்கவே செய்யும். மாறுபட்ட கருத்துகள் வருவது இயல்பான ஒன்று தான்" என்கிறார்.

தங்களின் உள்ளக்குமுறலை சிலர் வெளிப்படுத்தி வருவதாகக் கூறும் மகேஸ்வரி, "ஒருகட்டத்தில் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிடும்" என விளக்கம் அளித்தார்.

எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் த.வெ.கவுக்கு ஆதரவு கொடுக்கப் போவதாக வெளியாகும் செய்திகள் குறித்துக் கேட்டபோது, "இந்தக் காலகட்டத்தில் என்ன முடிவெடுத்தால் கட்சிக்கும் மக்களுக்கும் நல்லதாக இருக்குமோ அப்படியொரு முடிவை எடுப்பார்கள்" என்று மட்டும் தெரிவித்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு