ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடர் வெற்றி: இந்தியாவுக்கு கிடைத்த 4 நம்பிக்கைகளும் தொடரும் கவலையும் என்ன?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர் வெற்றி: இந்தியாவுக்கு கிடைத்த 4 நம்பிக்கைகளும் தொடரும் கவலையும் என்ன?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியை இந்திய அணி வென்றது. டெல்லியில் நடந்த இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்கள் என்ற இலக்கை 14.5 ஓவர்களில் எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ஷ்ரேயாஸ் ஐயரின் அணி.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த சர்வதேச டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றியிருக்கிறது. மேலும், இந்திய மண்ணில் ஒரு கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரின் முதல் தொடர் வெற்றியாக அமைந்திருக்கிறது.

முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியின் முதல் ஓவரையே மெய்டனாக வீசி சிறப்பாகத் தொடங்கினார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா.

அவரது வேரியேஷன்கள் ஆப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஹிம் ஜத்ரானுக்கு பெரும் சவாலாக அமைந்தன. முதல் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற நிலையில், குட் லென்த்தில் பிட்சான இரண்டாவது பந்து ஸ்டம்ப் லைனில் வந்தது. மூன்றாவது பந்தை பேக் ஆஃப் லென்த்தில் பிட்ச் செய்தார் பும்ரா. போகப் போக அடுத்த மூன்று பந்துகளும் பேட்டரை நெருங்கியே பிட்ச் ஆகின.

ஜஸ்ப்ரித் பும்ராவின் வேகப்பந்து வீச்சு

பட மூலாதாரம், Sajjad HUSSAIN / AFP via Getty Images

பும்ராவின் இந்த அசத்தலான முதல் ஓவர் ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்படுத்தியது.

இரண்டாவது ஓவரில் குர்பாஸின் விக்கெட்டையும் பறித்தது. அர்ஷ்தீப் வீசிய அந்த ஓவரின் முதல் இரு பந்துகளுமே டாட் பால்களாகின. முதல் 8 பந்துகளில் ரன்களே இல்லை. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போன அந்த ஓவரின் 2வது பந்தை அடிக்காமல் விட்ட ரஹ்மானுல்லா குர்பாஸ், மூன்றாவது பந்தில் முழு வீச்சோடு பெரிய ஷாட் ஆட, பந்து மிட் ஆன் ஃபீல்டரிம் கேட்சானது.

பும்ராவின் தாக்கம் இந்த விக்கெட்டில் மட்டுமல்ல, அர்ஷ்தீப்பின் ஒட்டுமொத்த செயல்பாட்டிலுமே பிரதிபலிக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஜூலை மாதம் நடந்த தொடர்களில் விக்கெட் வீழ்த்தவும், சிக்கனமாகப் பந்துவீசவும் தடுமாறிய அர்ஷ்தீப், இந்தத் தொடரின் இரண்டு போட்டிகளிலுமே சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். இந்தத் தொடரின் முதல் போட்டியில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், இந்த ஆட்டத்திலும் 3வது பந்திலேயே இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் ஏற்படுத்திக்கொடுத்தார்.

முதல் விக்கெட்டை சீக்கிரம் இழந்துவிட்ட ஆப்கானிஸ்தான் அணி 2வது விக்கெட்டுக்கு 6.4 ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்தது. அதில் கேப்டன் இப்ராஹிம் ஜத்ரான் தான் பெரும்பகுதி ரன்களை ஸ்கோர் செய்தார். என்னதான் பும்ராவின் முதல் ஓவரை மெய்டனாக்கினாலும், அவரது அடுத்த ஓவரை சிறப்பாகக் கையாண்டார் ஜத்ரான். அந்த ஓவரின் முதல் இரு பந்துகளையுமே அவர் பவுண்டரியாக்கினார். முதல் பவுண்டரி மிட் ஆன் திசைக்கும், அடுத்த பவுண்டரி மிட் விக்கெட் திசைக்கும் சென்றன.

ஆப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஹிம் ஜத்ரான்

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மேலும், அர்ஷ்தீப் வீசிய அடுத்த ஓவரிலும் 2வது மற்றும் 3வது பந்தை பவுண்டரிகளாக்கினார். பவர்பிளேவின் கடைசி இரு ஓவர்களில் ஷ்ரேயாஸ் ஐயர் அக்‌ஷர் படேல் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோரைப் பயன்படுத்தினார். ஆனால், அதையும் ஜத்ரான் சிறப்பாகவே கையாண்டார். அந்த இரு பந்துகளிலுமே தலா 1 பவுண்டரி அடித்தார் அவர். அதன் காரணமாக 41/1 என பவர்பிளேவை முடித்தது ஆப்கானிஸ்தான்.

பவர்பிளேவுக்குப் பின் மீண்டும் அந்த அணி சரிவை சந்திக்கத் தொடங்கியது. 7வது, 8வது ஓவர்களில் அந்த அணியின் ரன்ரேட் சரிந்தது. 9வது ஓவரில் அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் நித்திஷ் குமார் ரெட்டி. தன் ஸ்பெல்லின் முதல் பந்திலேயே ஜத்ரானின் மிகமுக்கிய விக்கெட்டை அவர் வீழ்த்தினார். 37 ரன்கள் எடுத்து வெளியேறினார் ஜத்ரான்.

அந்த விக்கெட்டுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணி பெரும் சரிவை சந்தித்தது. செதுக்குல்லா அடல் (12 ரன்கள்), குல்பதின் நைப் (10 ரன்கள்), அஸ்மதுல்லா ஓமர்சாய் (11 ரன்கள்) ஆகியோர் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியாமல் விரைவில் வெளியேறினார்கள். ஓரளவு சிறப்பாக விளையாடிய தர்விஷ் ரஸூல் 15 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 14.1 ஓவர்களில் 100/6 என்ற மோசமான நிலையில் இருந்தது ஆப்கானிஸ்தான்.

மிகவும் மோசமான நிலையில் இருந்த ஆப்கானிஸ்தான் அணியை முன்னாள் கேப்டன் மொகம்மது நபி, ரஷீத் கான் ஆகியோர் ஓரளவு கரைசேர்த்தார்கள். நபி 14 பந்துகளில் 20 ரன்களும், ரஷீத் கான் 16 பந்துகளில் 28 ரன்களும் எடுத்தனர். அதனால் 159/8 என ஆப்கானிஸ்தானின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

3 விக்கெட்டுகளை வீழ்த்திய நித்திஷ் குமார் ரெட்டி.

பட மூலாதாரம், Sajjad HUSSAIN / AFP via Getty Images

இந்திய அணி சார்பில் ஆல்ரவுண்டர் நித்திஷ் குமார் ரெட்டி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தத் தொடரில் இந்திய அணி பெரிதாக எதிர்பார்த்த விஷயங்களில் ஒன்று நித்திஷ் குமார் ரெட்டியின் பந்துவீச்சு. வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக அவருடைய வளர்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிர்வாகத்துக்கு இந்தப் போட்டி நம்பிக்கை கொடுப்பதாக அமைந்திருக்கிறது. முதல் போட்டியில் 2 ஓவர்கள் மட்டுமே வீசி 30 ரன்கள் கொடுத்திருந்த நித்திஷின் இந்த எழுச்சி இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்ல விஷயம்.

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா - சஞ்சு சாம்சன் இணை நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்திய அணி வெற்றி பெற்றதும் சைகை செய்யும் திலக் வர்மா (இடது). இஷான் கிஷானை எதிரணி வீரர்கள் வாழ்த்துகின்றனர்

பட மூலாதாரம், Sajjad HUSSAIN / AFP via Getty Images

முதல் 4 ஓவர்கள் நிதானம் காட்டிக்கொண்டிருந்த சாம்சன் 5வது ஓவரில் தன் வேகத்தைக் கூட்டினார். அந்த ஓவரில் 3 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் விளாசினார். அதிலிருந்து ஆப்கானிஸ்தான் மீண்டு வருவதற்குள் 6வது ஓவரில் இன்னும் ஒரு படி மேலே சென்றார் அவர். மொகமது நபி வீசிய அந்த ஓவரில் 4 பந்துகளை சந்தித்த சாம்சன், தலா 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 20 ரன்கள் எடுத்தார். அபிஷேக் அந்த ஓவரில் ஏற்கெனவே ஒரு சிக்ஸர் அடித்திருக்க, அந்த ஓவரில் 27 ரன்கள் எடுக்கப்பட்டன. 82/0 என்ற அட்டகாசமான ஸ்கோரோடு இந்தியாவின் பவர்பிளே முடிவுக்கு வந்தது.

ரஷீத் கான் வீசிய 7வது ஓவரில் ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் அடித்து தன் அரைசதத்தை நிறைவு செய்தார். முதல் 10 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவர், அடுத்த 10 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடக்கம். ஆனால், அவரின் அதிரடியும், அபிஷேக் ஷர்மாவின் அதிரடியும் அந்த ஓவரே முடிவுக்கு வந்தன. சிறப்பான தொடக்கம் கொடுத்த இரு இந்திய ஓப்பனர்களையும் அந்த ஓவரில் வெளியேற்றினார் ரஷீத் கான். அபிஷேக் ஷர்மா செதிகுல்ல அடல் வசமும், சாம்சன் நபியிடமும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்கள்.

சஞ்சு சாம்சன்

பட மூலாதாரம், Sajjad HUSSAIN / AFP via Getty Images

கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை உறுதி செய்தனர். இஷான் கிஷன் 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.

இந்தப் போட்டி இந்திய அணிக்கு பல நம்பிக்கைகளை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. சஞ்சு சாம்சன் மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்திருப்பது, பும்ரா தொடர்ந்து சீரான செயல்பாட்டை வெளிப்படுத்துவது, அர்ஷ்தீப் மீண்டும் தன் சிறந்த செயல்பாட்டை கொடுப்பது, நித்திஷ் குமார் ரெட்டி தன் பந்துவீச்சால் அசத்தியது நிச்சயம் அணியின் நிர்வாகத்துக்கு நம்பிக்கை தருவதாக அமையும்.

அதேசமயம், வீரர்களின் ஃபிட்னஸ் இந்தியாவுக்குப் பிரச்னையாக இருந்து வருகிறது. ஏற்கெனவே பலமுறை நித்திஷ் காயத்தால் அவதிப்பட்டு இப்போதுதான் அணிக்குத் திரும்பியிருக்கிறார். இந்நிலையில், வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடவில்லை. இது இந்திய அணி கவனம் செலுத்தவேண்டிய ஒரு பகுதி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு