இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ந்தாலும் பணத்தாள்களின் முக்கியத்துவம் நீடிப்பது ஏன்?

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி தற்போது 176 பில்லியன் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் வைத்துள்ளது.

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

படக்குறிப்பு, ரிசர்வ் வங்கி தற்போது 176 பில்லியன் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் வைத்துள்ளது.
    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, இந்திய செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

ஒவ்வோர் ஆண்டும் அதிகமான இந்தியர்கள் தட்டி, ஸ்கேன் செய்து, ஸ்வைப் செய்து பணம் செலுத்துகின்றனர். அதே நேரத்தில், ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் மேலும் அதிகமான காகிதப் பணத்தையும் கையிருப்பில் வைத்துக் கொள்கின்றனர்.

இந்திய ரிசர்வ் வங்கி தற்போது 176 பில்லியன் பணத் தாள்களைப் புழக்கத்தில் வைத்துள்ளது. ஆண்டுதோறும் ஆறு பண மதிப்பீடுகளில் 28 முதல் 30 பில்லியன் புதிய நோட்டுகளை அச்சிடுகிறது, சுமார் 21 பில்லியன் பழைய நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுகிறது. இது மிகப்பெரிய நிர்வாக மற்றும் விநியோக நடவடிக்கை.

ஆனால், ஒருங்கிணைந்த செலுத்துதல் இடைமுகம் (United Payments Interface – யுபிஐ) வழியிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளொன்றுக்கு ஒரு பில்லியன் என்ற அளவை நோக்கி வேகமாக உயர்ந்து வருகிறது. அப்படி இருந்தும்கூட, நாட்டின் பொருளாதாரத்தில் புழக்கத்தில் உள்ள பணத்தின் அளவும் தொடர்ந்து கணிசமான வேகத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

"டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்ததன் காரணமாக தனிப்பட்ட பரிவர்த்தனைகளில் பணத்தின் பங்கு குறைந்து கொண்டிருந்தாலும், புழக்கத்தில் உள்ள நாணயத்தின் அளவு தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தில் அதிகரித்து வருகிறது. இந்த இரு போக்குகளின் இணைவு, எதிர்காலத் தேவையைக் கணிப்பதைக் கடினமாக்குகிறது. அதனால் உற்பத்தி மற்றும் விநியோகத் திறனைத் திட்டமிடுவது சிக்கலாகிறது," என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஷிரிஷ் சந்திர முர்மூ கடந்த மாதம் ஜகார்த்தாவில் நடந்த மத்திய வங்கியாளர்கள் மாநாட்டில் உரையாற்றும்போது கூறினார்.

அவர் இதை "பண முரண்பாடு" (Cash Paradox) என்று குறிப்பிட்டார். ஆனால் "புழக்கத்தில் உள்ள நாணயம்" என்றால் என்ன?

அது பொது மக்களும் வணிக நிறுவனங்களும் வைத்திருக்கும் அனைத்து பணத் தாள்கள் மற்றும் நாணயங்களின் மொத்த மதிப்பு. அவை செலவிடப்பட்டாலும் சரி, சேமித்து வைக்கப்பட்டிருந்தாலும் சரி. இந்தியாவில் பணம் நான்கு முக்கிய வழிகளின் மூலம் மக்களைச் சென்றடைகிறது.

ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்கள், வங்கி கிளைகள், 2,50,000க்கும் அதிகமான ஏடிஎம்கள் மற்றும் பண விநியோக இயந்திரங்கள், மற்றும் கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் அடிப்படை வங்கி சேவைகளை வழங்கும் கோடிக்கணக்கான "வணிக பிரதிநிதிகள்" ஆகிய வழிகளில் சென்றடைகிறது.

எந்த அளவுகோலின்படி பார்த்தாலும் இது மிகப்பெரிய பணக் கையிருப்பு. ஒப்பீட்டிற்காகச் சொன்னால், கடந்த ஆண்டின் இறுதியில் சுமார் 56 பில்லியன் அமெரிக்க டாலர் நோட்டுகளும் 30 பில்லியன் யூரோ பணத் தாள்களும் புழக்கத்தில் இருந்ததாக முர்மூ கூறினார்.

ஆனால் இந்த ஒப்பீட்டிற்கு ஒரு முக்கிய வரம்பு உள்ளது. இந்தியாவில் குறைந்த மதிப்புடைய நோட்டுகளின் விகிதம் அதிகமாக இருப்பதால், அதே மதிப்பிலான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அதிக எண்ணிக்கையிலான நோட்டுகள் தேவைப்படுகின்றன என்பதே ரிசர்வ் வங்கியின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு ஒரு காரணம்.

இந்தியாவில் சிறிய அளவிலான நன்கொடைகளுக்கு ரொக்கம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

பட மூலாதாரம், LightRocket via Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் சிறிய அளவிலான நன்கொடைகளுக்கு ரொக்கம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தியர்கள் இன்னும் பணத்தைப் பயன்படுத்துகின்றனர் என்பது புதிரல்ல. அனிருத் தாகட், மெஹ்மெட் ஒஸ்மென், புஷ்பா திரிவேதி ஆகியோரின் புதிய ஆய்வுப்படி, 2019ஆம் ஆண்டில்கூட 94% பரிவர்த்தனைகள் பண அடிப்படையிலேயே நடைபெற்றன. ஆனால் அன்றாட செலுத்துதல் பரிவர்த்தனைகளில் பணத்தின் பங்கு குறைந்து கொண்டிருக்கும் அதே வேளையில் மொத்தமாகப் பணம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மையான புதிராக உள்ளது.

"பண முரண்பாடு உலகளவில் ஆராயப்பட்டுள்ளது. ஆனால் பணமும் பணத் தாளற்ற பரிவர்த்தனைகளும் மிகப்பெரிய அளவில் இணைந்து காணப்படுவதால், இந்தியா இதற்கான தனித்துவமான மற்றும் புதிய ஆய்வு எடுத்துக்காட்டாக உள்ளதாக," இந்தியர்களின் பரிவர்த்தனை நடத்தை குறித்து ஆய்வு செய்யும் பொருளாதார நிபுணர் தாகட் பிபிசியிடம் கூறினார்.

கடந்த 2007-08 உலக நிதி நெருக்கடிக்குப் பிறகு, டிஜிட்டல் செலுத்துதல்களுடன் சேர்ந்து பணத்தின் அளவும் அதிகரிக்கும் இந்தப் போக்கு குறிப்பாக வலுவடைந்து இருப்பதாக அவர் கூறுகிறார். சர்வதேச பரிவர்த்தனைகள் வங்கி மேற்கொண்ட ஆய்வுகளும் உலகம் முழுவதும் இதே மாதிரியான போக்கைக் காட்டுகின்றன.

தாகட்டின் விளக்கப்படி, நாணயத்திற்கு இன்னனும் மூன்று முக்கியப் பணிகள் உள்ளன: செலுத்துதலுக்கான சாதனமாகச் செயல்படுவது, மதிப்பைச் சேமிக்கும் வடிவமாக இருப்பது, பேரிடர் அல்லது நெருக்கடி காலங்களுக்கு எதிரான பாதுகாப்பாக இருப்பது. செயலிகள் இதில் முதல் பணியையே செய்கின்றன. அதனால், டிஜிட்டல் செலுத்துதல்களின் வளர்ச்சி மட்டுமே பணத் தேவையின் முழுக் கதையையும் விளக்க முடியாது.

2016-ஆம் ஆண்டில் இந்தியாவின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, நாட்டின் மொத்த பண மதிப்பில் 86 சதவீதத்தை ஒரே இரவில் செல்லாததாக மாற்றியது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, கடந்த 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, நாட்டின் மொத்த பண மதிப்பில் 86 சதவிகிதத்தை ஒரே இரவில் செல்லாததாக மாற்றியது.

ஃப்ளோரிடா மாகாணப் பல்கலைக் கழகத்தின் டேவிட் ஹம்ப்ரே, இணை ஆய்வாளர் தனை கியானரோங்குடன் இணைந்து 14 பொருளாதாரங்களில் பணப் பயன்பாட்டை ஆய்வு செய்துள்ளார். மக்களிடம் எவ்வளவு பணம் கையிருப்பாக இருக்கும் என்பதை நிர்ணயிக்கும் பல காரணிகளில் ஒன்றுதான் டிஜிட்டல் பரிவர்த்தனைப் பயன்பாடு என்றும் அவர் கூறுகிறார்.

இதனால் மற்றொரு கேள்வி எழுகிறது: இந்தியாவில் குடும்பங்கள் அவசரத் தேவைகளுக்காக, பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக, அல்லது தங்கம் போன்ற சொத்துகளை வாங்குவதற்காக வங்கி அமைப்புக்கு வெளியே அதிக ரொக்கத்தை வைத்திருக்கிறார்களா?

அதே நேரத்தில், முக்கிய ரிசர்வ் நாணயங்களுக்கு மிகவும் பொருத்தமான மற்றொரு காரணத்தையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். பண வளர்ச்சியின் பெரும்பகுதி, அந்த நாணயத்தை வெளியிட்ட நாட்டுக்குள் அல்லாமல் வெளிநாடுகளில் வைத்திருக்கும் அல்லது பயன்படுத்தப்படும் பணத்தாள்களில் இருந்து வரலாம்.

இதற்கு அமெரிக்கா சிறந்த எடுத்துக்காட்டு. 50 மற்றும் 100 டாலர் உயர்மதிப்பு நோட்டுகள் வெளிநாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் "சாதாரண உள்நாட்டு சட்டபூர்வ பணப் பரிவர்த்தனைகளில் அவை அரிதாகவே காணப்படுகின்றன" என்று ஹம்ப்ரே கூறுகிறார்.

அமெரிக்க மத்திய வங்கி, வெளிநாடுகளில் இருந்து பயன்பாட்டுக்குத் தகுதியற்ற அமெரிக்க நோட்டுகளை பெற்று, அவற்றுக்குப் பதிலாக புதிய நோட்டுகளை மீண்டும் திருப்பி வழங்குகிறது. பயன்பாட்டுக்குத் தகுதியற்ற அந்த நோட்டுகளின் மதிப்பில் பெரும்பகுதி 50 மற்றும் 100 டாலர் நோட்டுகள்.

இதனால் அன்றாட செலவினங்களின் ஒரு குறியீடாகக் கருதப்படும் உள்நாட்டு ஏ.டி.எம்-களில் இருந்து எடுக்கப்படும் ரொக்கத்தின் மதிப்பு (குறிப்பாக 20 டாலர் நோட்டுகளில், 5 டாலர் மற்றும் 10 டாலர்கள்) சமீபத்தில் குறைந்த போதிலும், புழக்கத்தில் உள்ள அமெரிக்க நாணயத்தின் மொத்த மதிப்பு தொடர்ந்து உயர்வதாக ஃபெடரல் ரிசர்வ் ஏன் சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது என்று அவர் கூறுகிறார்.

ஐரோப்பிய மத்திய வங்கி (இசிபி), 2016-இல் சுமார் ஒரு டிரில்லியன் யூரோவாக இருந்த புழக்கத்தில் உள்ள யூரோ நோட்டுகளின் மதிப்பு இந்த ஆண்டில் 1.6 டிரில்லியன் யூரோவாக உயர்ந்திருப்பதைக் கண்டுள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ஐரோப்பிய மத்திய வங்கி (இசிபி), 2016இல் சுமார் ஒரு டிரில்லியன் யூரோவாக இருந்த புழக்கத்தில் உள்ள யூரோ நோட்டுகளின் மதிப்பு இந்த ஆண்டில் 1.6 டிரில்லியன் யூரோவாக உயர்ந்திருப்பதைக் கண்டுள்ளது.

பணப் பொருளாதாரத்தின் வெளிப்படையாகத் தெரியாத ஒரு பக்கமும் உள்ளது. பதிவு செய்யப்படாத பணப் பரிவர்த்தனைகளை அதிகமாக நம்பியிருக்கும் சட்டவிரோத உள்நாட்டு நடவடிக்கைகளின் மதிப்பு உயர்வதும், பதிவு செய்யப்பட்ட செலவினங்களைவிட நாணய வளர்ச்சி வேகமாக இருக்க ஒரு காரணம் என்று ஹம்ப்ரேயின் ஆய்வு கூறுகிறது. இது குறிப்பாக இந்தியாவுக்கு பொருத்தமானதாக இருக்கலாம்.

இந்தியாவில் சொத்துப் பரிவர்த்தனைகளில் ரொக்கமாகப் பணம் செலுத்துவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அதற்குக் காரணம், முத்திரைத் தீர்வை மற்றும் அரசால் நிர்ணயிக்கப்படும் "சர்க்கிள் ரேட்" மதிப்புகள் (கைட்லைன் வேல்யு) சந்தை விலைகளைவிடக் குறைவாக இருக்கக்கூடும். இதனால், வாங்குபவர்களும் விற்பவர்களும் சொத்தின் உண்மையான விலையைவிடக் குறைவாகப் பதிவு செய்து, மீதித் தொகையைப் பணமாகச் செலுத்துவதற்கான ஊக்கத்தைப் பெறுகின்றனர்.

கடந்த 2016இல் நாட்டின் ரொக்கத்தில் 86% மதிப்பை ஒரே இரவில் செல்லாததாக்கிய பண மதிப்பிழப்பு நடவடிக்கை கருப்புப் பண கையிருப்பைத் தாக்கியிருந்தாலும், அதன் ஓட்டத்தைப் பெரிதாக பாதிக்கவில்லை என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், பல தசாப்தங்களாக நிலச் சந்தையில் முதலீடு செய்யப்பட்ட கருப்புப் பணத்தின் அளவு குறித்த நம்பகமான மதிப்பீடு இதுவரை ஏன் உருவாகவில்லை என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது.

அதோடு, "உராய்வற்ற உளவியல்" எனக் கூறக்கூடிய ஓர் அம்சமும் உள்ளது. டிஜிட்டல் செலுத்துதல்கள், பணத்தைக் கையளிக்கும்போது ஏற்படும் "செலுத்தும் வலி" உணர்வை நீக்கி, அதற்குப் பதிலாக திருப்தியூட்டும் ஓர் அறிவிப்பு ஒலியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதைப் பல ஆய்வுகள், குறிப்பாக நுகர்வோர் ஆராய்ச்சி இதழில் (Journal of Consumer Research) சமீபத்தில் வெளியான ஆய்வுகள் காட்டுகின்றன என்று தாகட் கூறுகிறார்.

கோட்பாட்டின்படி, இது ரொக்கத்திற்கான தேவையை மேலும் குறைக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை என்பதே வேறு ஏதோவொன்று ரொக்கத்தின் தேவையைத் தக்க வைத்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அது செலவிடும் பயம் மட்டுமல்ல, டிஜிட்டல் அமைப்புகள் செயலிழந்தால் என்ன ஆகும் என்ற அச்சமும்தான்.

550 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் யுபிஐ டிஜிட்டல் கட்டண அமைப்பைப் பயன்படுத்துகின்றனர்.

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

படக்குறிப்பு, 550 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் யுபிஐ டிஜிட்டல் கட்டண அமைப்பைப் பயன்படுத்துகின்றனர்

இந்த அம்சத்தில், இந்தியாவின் கதை ஐரோப்பாவின் கதையுடன் ஒத்துப் போகிறது. ஐரோப்பிய மத்திய வங்கி (இசிபி) புழக்கத்தில் உள்ள யூரோ நோட்டுகள் 2016இல் சுமார் ஒரு டிரில்லியன் யூரோவில் இருந்து இந்த ஆண்டு 1.6 டிரில்லியன் யூரோவாக உயர்ந்துள்ளதைக் கண்டுள்ளது.

பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படும் நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருந்தாலும், குடும்பங்கள் சேமிப்பாக வைத்திருக்கும் ரொக்கத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக இசிபி-யின் தலைமைப் பொருளாதார நிபுணரான பிலிப் லேன், இந்த ஆண்டு அயர்லாந்தில் நடந்த கோடைக்கால மாநாட்டில் கூறினார். இது, ஜகார்த்தாவில் முர்மூ குறிப்பிட்ட கருத்துடன் முழுமையாக ஒத்துப் போகிறது.

பணத்தைச் சேமிப்பாக வீடுகளில் முடக்கி வைப்பது, யூரோ நாணயப் புழக்கப் பகுதிக்கு வெளியேயும் யூரோவுக்கான தேவை அதிகரிப்பது ஆகிய காரணங்களால் ஏற்படும் முரண்பாட்டை, "பணத் தாள்களின் முரண்பாடு" என்று ஐரோப்பிய மத்திய வங்கி கடந்த 2021ஆம் ஆண்டு நடத்திய தனது ஆய்வில் குறிப்பிட்டிருந்தது. கார்க் பல்கலைக் கழகக் கல்லூரியின் பேராசிரியரான ஆலிவ் மெக்கார்த்தி, இதற்கு இதுதான் காரணம் என்று சுட்டிக்காட்டுகிறார்.

மின்தடை, சைபர் தாக்குதல் அல்லது போர் போன்ற அவசர நிலைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான அளவில் மட்டும் வீட்டில் குறைந்தபட்ச பணத்தை வைத்திருக்குமாறு ஆஸ்திரியா, பின்லாந்து, ஜெர்மனி, ஸ்வீடன், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் அரசுகள் தங்களது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. இதனால், வளமான ஜனநாயக நாடுகளில் இருப்பதைப் போலவே இந்தியாவிலும், நல்ல காலங்களுக்காக அல்லாமல் மோசமான காலங்களுக்கான முக்கிய உட்கட்டமைப்பாகப் பணம் மீண்டும் நிலைநிறுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.

இந்தியாவில் 2,50,000-க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மற்றும் பண விநியோக இயந்திரங்கள் மூலம் ரூபாய் நோட்டுகளும் நாணயங்களும் விநியோகிக்கப்படுகின்றன.

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் 2,50,000க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்-கள் மற்றும் பண விநியோக இயந்திரங்கள் மூலம் ரூபாய் நோட்டுகளும் நாணயங்களும் விநியோகிக்கப்படுகின்றன.

பணத்தை அதிகம் சார்ந்திருப்பவர்கள் யார் என்பதை மெக்கார்த்தி நேரடியாகக் குறிப்பிடுகிறார்: முதியவர்கள், கிராமப்புற ஏழைகள், குடும்ப வன்முறையில் இருந்து தங்களைப் பாதுகாப்பதற்காகத் தங்கள் பரிவர்த்தனைகளை மறைக்க வேண்டியவர்கள் மற்றும் பணம் என்றால் என்ன என்பதைப் புதிதாகக் கற்றுக் கொண்டிருக்கும் குழந்தைகள். மேலும், "சில நுகர்வோர் தனியுரிமை மற்றும் வசதியின் காரணமாக ரொக்கத்தையே விரும்புகின்றனர்," என்று அவர் என்னிடம் கூறினார்.

இந்திய ரிசர்வ் வங்கிக்கு இதுவொரு சிக்கலான வரவுசெலவு திட்டமிடல் சவாலை உருவாக்குகிறது. உலகின் மிக வெற்றிகரமான உடனடி பரிவர்த்தனை வலையமைப்பை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அது தனது சொந்த காகித ஆலைகள், நான்கு பணத்தாள் அச்சகங்கள் மற்றும் மை உற்பத்தி நிலையங்களையும் இயக்குகிறது. இது முழுமையான தன்னிறைவு கொண்ட விநியோகச் சங்கிலி.

பணத்தை நிர்வகிப்பதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், டிஜிட்டல் கட்டணங்களை ஊக்குவிப்பதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதில் ரிசர்வ் வங்கி கடினமான தேர்வைச் சந்திப்பதாக தாகட் கூறுகிறார். குறிப்பாக, பத்து ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழியப்பட்ட 10 மற்றும் 20 ரூபாய் பாலிமர் நோட்டுகளுக்கான சோதனைகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில் இந்த கடினமான தேர்வை சந்திக்கிறது. (பாலிமர் நோட்டுகள் காகித நோட்டுகளைவிட அதிக காலம் நீடிக்கும் தன்மை கொண்டவை என்பதால் பழைய நோட்டுகளை மாற்றும் செலவையும் அவசியத்தையும் குறைக்கக்கூடும்.)

முர்மூ, நம்பகமான பண விநியோகத்தை "நாணய இறையாண்மையின்" ஒரு பகுதியாக விவரித்தார். தெற்காசியா முழுவதும் ரூபாய் அதிகாரபூர்வமற்ற முறையில் பயன்படுத்தப்படுவது, இந்தியா தனது நாணய உற்பத்தி அமைப்பைத் தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டிய மற்றொரு காரணமாக உள்ளதாக தாகட் கூறுகிறார். இது முழு பிராந்தியத்திற்கும் அதிர்வு தணிப்பானாகச் செயல்படுகிறது என்கிறார் அவர்.

"புதிய டிஜிட்டல் செலுத்துதல் மாற்றுகள் வந்திருந்தாலும், பணப் புழக்கத்தைத் தொடர்ந்து பராமரிப்பதற்கான வலுவான காரணங்கள் ரிசர்வ் வங்கிக்கு உள்ளன," என்று தாகட் கூறுகிறார்.

செய்திகளில் வெளியான தகவலின்படி யுபிஐ சிறிய அளவிலான பரிவர்த்தனைகளுக்குக்கூட கட்டணங்களை விதிக்கத் தொடங்கினால், ரொக்கம் சேமிப்பு வழிமுறையாக மட்டுமின்றி வணிகப் பரிவர்த்தனைகளிலும் மீண்டும் தனது பங்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.

கொள்கை வகுப்போருக்கான பாடம் தெளிவானதாக இருப்பதோடு சற்றே பணிவையும் தருகிறது: டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பணத்தை காலாவதியாக்கவில்லை. மாற்றப்படுகின்ற ஒரு தொழில்நுட்பமாக அல்லாமல், யாரும் கைவிட விரும்பாத ஒரு காப்புறுதி ஏற்பாடாகவே பணம் தொடர்ந்து இருந்து வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு