இந்தியாவில் குழந்தைப் பாலியல் துன்புறுத்தலை ஊக்குவிக்கும் விளம்பரங்களை தொடர்ந்து வெளியிடும் மெட்டா

கடந்த 10 மாதங்களில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான கட்டண விளம்பரங்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த பிரசாரக் குழுவினர் மேற்கொண்ட புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இயங்கிய, சிஎஸ்ஏஎம் உடனான 332 விளம்பரங்களைக் கண்டறிந்ததாக டெக் டிரான்ஸ்பரன்சி ப்ராஜெக்ட் (TTP) தெரிவித்துள்ளது.
    • எழுதியவர், திய்வா ஆர்யா
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தச் செய்தியில் வன்முறை குறித்த சித்தரிப்புகள் உள்ளன.

கடந்த 10 மாதங்களில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக படங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான கட்டண விளம்பரங்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளதாக, அமெரிக்காவை சேர்ந்த பிரசாரக் குழுவினர் மேற்கொண்ட புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இதில் இந்தியாவில் வெளியிடப்பட்ட பல விளம்பரங்களும் அடங்கும். இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக பொருட்களை (சிஎஸ்ஏஎம்) விளம்பரப்படுத்தும் அனைத்து விளம்பரங்களையும் உள்ளடக்கங்களையும் நீக்குமாறு இந்திய அரசு மெட்டா நிறுவனத்திற்கு உத்தரவிட்டு இரு மாதங்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் தளத்தில் இந்தியாவில் சிஎஸ்ஏஎம்-ஐ விளம்பரப்படுத்தும் கட்டண விளம்பரங்கள் இடம்பெற்றிருந்ததை பிபிசி ஐ நடத்திய புலனாய்வு கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வாஷிங்டனை சேர்ந்த டெக் டிரான்ஸ்பரன்சி ப்ராஜெக்ட் (TTP), பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் சிஎஸ்ஏஎம் இடம்பெற்ற 332 விளம்பரங்கள் வெளியானதைக் கண்டறிந்ததாக தெரிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை, அதாவது 274 விளம்பரங்கள், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டவை.

இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்து பிபிசி, மெட்டா நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோது, "உண்மையானதாக இருந்தாலும் அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதாக இருந்தாலும், குழந்தைகளைச் சுரண்டுவது உள்ளிட்ட எந்தவொரு துஷ்பிரயோகத்தையும், குழந்தைகளை ஆடையின்றி காட்டும் செயலிகளையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" எனத் தெரிவித்தனர்.

மேலும், "இந்தக் குற்றவாளிகள் பிடிபடாமல் தப்பிப்பதற்காகத் தங்கள் தந்திரங்களைத் தொடர்ந்து மாற்றிக் கொள்கிறார்கள். அதனால்தான் நாங்கள் எங்களுடைய கண்டறிதல் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம்" என்றும் கூறினர்.

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட டிடிபி அறிக்கைப்படி, ஐரோப்பிய அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட உண்மையான குழந்தைகளின் பல புகைப்படங்கள் இந்த விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டு, பின்னர் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றியமைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிடிபி தனது கண்டுபிடிப்புகள் குறித்து மெட்டா நிறுவனத்திற்குத் தெரிவித்த பிறகும், 12-க்கும் அதிகமான விளம்பரங்கள் மெட்டா தளங்களில் இடம்பெற்றதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்த விளம்பரங்களில் சுமார் கால் பகுதி, அதாவது 84 விளம்பரங்கள், இந்தியாவில் வெளியிடப்பட்டன. அவற்றில் 78 விளம்பரங்கள், சிஎஸ்ஏஎம்-ஐ அகற்றுவது தொடர்பாக இந்திய அரசு உத்தரவிட்ட பிறகும், மெட்டா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடன் அரசு சந்திப்பு நடத்திய பிறகும் வெளியிடப்பட்டவை.

பிபிசி நடத்திய விசாரணைக்குப் பிறகு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட பல இந்திய அமைப்புகள் இந்த விவகாரத்தை ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளன.

 புவன் ரிபு

பட மூலாதாரம், Bhuwan Ribhu

படக்குறிப்பு, பாலியல் சுரண்டலை ஊக்குவிப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது புகார் அளிக்குமாறு சமூக ஊடகத் தளங்களை இந்தியா கட்டாயப்படுத்த வேண்டுமென புவன் ரிபு விரும்புகிறார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தியாவில் சிஎஸ்ஏஎம்-ஐ பரப்புவது குற்றம். அதேவேளையில், மெட்டா நிறுவனத்தின் கொள்கைப்படி, குழந்தைகளை பாலியல் ரீதியாகச் சுரண்டும் அல்லது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கங்கள் விளம்பரங்களில் இடம்பெறக் கூடாது.

பிபிசி தனது விசாரணை குறித்து மெட்டா நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது, குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் நடந்திருக்கலாம் என்பது தெரிய வந்தால், தனது சட்டபூர்வ கடமைகளுக்கு இணங்க, அமெரிக்காவை சேர்ந்த காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையத்திற்கு (என்சிஎம்ஈசி - NCMEC) அதுகுறித்து தகவல் தெரிவிப்பதாக மெட்டா கூறியது.

என்சிஎம்இசி (NCMEC) என்பது இணையவழியில் குழந்தைகள் பாலியல் ரீதியாகச் சுரண்டப்படுவது தொடர்பான புகார்களைப் பெறும் உலகளாவிய மையப்படுத்தப்பட்ட அமைப்பு. ஆனால், இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் வகையில் செயல்படும் 250க்கும் மேற்பட்ட அமைப்புகளின் வலையமைப்பான 'ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ட்ரன்' அமைப்பின் நிறுவனர் புவன் ரிபு, இது மட்டும் போதுமானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

பிபிசியின் கண்டுபிடிப்புகளை மேற்கோள் காட்டி, ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ட்ரன் அமைப்பு இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக பொருட்களை விளம்பரப்படுத்துபவர்களை கட்டாயமாகப் புகாரளித்து, அவர்களை அடையாளம் காணும் வகையில் சமூக ஊடக தளங்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமென்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

அதோடு, "இந்தியாவின் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்களின்படி, குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்கள் குறித்து இந்திய சட்ட அமலாக்க அமைப்புகளிடம் சமூக ஊடக நிறுவனங்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் சமூக ஊடக நிறுவனங்கள் இந்திய சட்டங்களை வெளிப்படையாக மீறி வருவதாகவும்" ரிபு கூறினார்.

இந்தியாவில் குழந்தைகளை பாலியல்ரீதியாக துன்புறுத்துவதை ஊக்குவிக்கும் விளம்பரங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் மெட்டா

பட மூலாதாரம், Getty Images

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொறுப்புக்கூற வைப்பதை நோக்கமாகக் கொண்ட, லாப நோக்கமற்ற 'கேம்பெயின் ஃபார் அக்கவுன்டபிலிட்டி' அமைப்பின் ஆய்வு முயற்சியான டிடிபி, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகிய தளங்களில் சிஎஸ்ஏஎம் இடம்பெற்ற 332 விளம்பரங்களைக் கண்டறிந்ததாகத் தெரிவித்துள்ளது. அந்த அனைத்து விளம்பரங்கள் குறித்தும் என்சிஎம்ஈசி-க்கு தகவல் தெரிவித்து இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

டிடிபி-யின் கூற்றுப்படி, அவர்கள் கண்டறிந்த கிட்டத்தட்ட அனைத்து விளம்பரங்களும் ஒரு குழந்தையின் புகைப்படத்துடன் தொடங்குகின்றன. வீடியோ தொடரும்போது, அந்தப் புகைப்படம் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றியமைக்கப்பட்டு, அந்தக் குழந்தை வெளிப்படையான பாலியல் செயலில் ஈடுபடுவது போன்ற காட்சியாக மாற்றப்படுகிறது.

இந்தியாவில் வெளியான ஒரு விளம்பரத்தை டிடிபி இவ்வாறு விவரித்துள்ளது: "பதின்பருவத்திற்கு முந்தைய சிறுமியின் புகைப்படம், அவர் வெளிப்படையான பாலியல் செயலில் ஈடுபடுவது போன்று அனிமேஷன் செய்யப்பட்டிருந்தது. "

அதில், "எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. அனைத்து கதாபாத்திரங்களும் உண்மையான மனிதர்கள், மேலும் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உண்மையான ஆண்கள் பயன்படுத்தும் ஏஐ இதுதான்" என்று குரல் பதிவுடன் இடம்பெற்றிருந்தது. இந்த விளம்பரத்தை பிபிசி பார்க்கவில்லை.

டிடிபி-யின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு வார காலத்தில், இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு கணக்குகள் மூலம் இந்த விளம்பரம் பதிவிடப்பட்டது. ஜூலை மாதம், பிபிசியின் விசாரணைக்குப் பிறகு, மெட்டா தனது செயலிகளில் குழந்தைகள் சுரண்டப்படுவதை எதிர்த்துப் போராடுவது குறித்து தனது இணையதளத்தில் விரிவான பதிவை வெளியிட்டிருந்தது.

"எங்களது கொள்கைகளை மீறுவதாகக் கருதினால், எங்கள் தளங்களில் உள்ள யார் வேண்டுமானாலும் விளம்பரங்களைப் புகாரளிக்கலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மெட்டாவின் சொந்த புகார் அளிக்கும் முறையைப் பயன்படுத்தி விளம்பரங்களைப் புகாரளிக்க முயன்றதாக டிடிபி தெரிவித்துள்ளது. இந்தியாவில் வெளியான 84 விளம்பரங்களில் 55 விளம்பரங்களைத் தங்களால் புகாரளிக்க முடிந்ததாகவும் அது கூறியுள்ளது. விளம்பரங்கள் நேரலையில் இருக்கும்போது மட்டுமே அவற்றைப் புகாரளிக்கும் வசதியை மெட்டா வழங்குகிறது.

இவற்றில் 43 விளம்பரங்கள் குறித்து, "நாங்கள் ஆய்வு செய்தோம். இந்த விளம்பரம் எங்களுடைய விளம்பரத் தரநிலைகளுக்கு எதிரானதாக இல்லை" என்று பதில் கிடைத்ததாக டிடிபி தெரிவித்துள்ளது.

அத்துடன், 11 விளம்பரங்களைப் பொறுத்தவரை, அந்த உள்ளடக்கம் ஏற்கெனவே நீக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒரு விளம்பரம் குறித்து இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

11 விளம்பரங்களைப் பொறுத்தவரை, அந்த உள்ளடக்கம் ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒரு விளம்பரம் குறித்து இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜூலை மாதம், பிபிசியின் விசாரணைக்குப் பிறகு, மெட்டா நிறுவனம் தனது செயலிகளில் குழந்தைகள் சுரண்டலை எவ்வாறு எதிர்த்துப் போராடுகிறது என்பது குறித்து ஒரு விரிவான பதிவை வெளியிட்டிருந்தது.

இதுகுறித்து பிபிசி கருத்து கேட்டபோது, "எங்களிடம் வலுவான தடுப்பு நடவடிக்கைகள் உள்ளன. இதில் விதிமுறைகளை மீறும் விளம்பரங்களைத் தடுக்கும் அமைப்புகளும், ஆரம்பத்தில் ஏதேனும் தவறவிட்டுவிட்டால் அதைக் கண்டறிவதற்கான தொடர்ச்சியான கண்காணிப்பும் அடங்கும். அதனால்தான் எங்களிடம் புகாரளிக்கப்பட்ட பல விளம்பரங்கள் ஏற்கெனவே நீக்கப்பட்டிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை 200க்கும் குறைவான பார்வைகளைப் பெற்றிருந்தன. மேலும், மொத்த விளம்பரச் செலவு 5,000 டாலருக்கும் குறைவாக இருந்தது" என்று மெட்டா கூறியது.

மெட்டாவிடம் பதில் கேட்டபோது, தாங்கள் புகாரளித்த அனைத்து விளம்பரங்களும் நீக்கப்பட்டுவிட்டதாக டிடிபி தெரிவித்துள்ளது. பிபிசி நடத்திய விசாரணையின்போதும் இதேபோன்ற சம்பவம் நடந்ததாக டிடிபி கூறியுள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்ற ஒரு விளம்பரத்தை மெட்டாவின் புகார் அளிக்கும் முறையைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராமுக்கு பிபிசி புகாரளித்தபோது, அந்த விளம்பரத்தை அந்தத் தளம் நீக்கவில்லை.

பின்னர், இதுகுறித்து பிபிசி மெட்டாவிடம் விளக்கம் கேட்டபோது, பல விளம்பரங்கள் ஏற்கெனவே முடக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றைப் பதிவிட்ட கணக்குகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்தது.

பிபிசியின் கண்டுபிடிப்புகளுக்குப் பதிலளிக்கும் வகையில் கூடுதல் விளம்பரங்கள் நீக்கப்பட்டதாகவும், மேலும் பல கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், நிறுவனத்தின் கொள்கைகளை மீறும் பிற உள்ளடக்கங்களுக்கான இணைய முகவரிகள் (URL) தடுக்கப்பட்டதாகவும் மெட்டா தெரிவித்தது.

டிடிபி கண்டறிந்த 332 விளம்பரங்களில் பெரும்பாலானவை, ஏஐ மூலம் படங்கள் அல்லது வீடியோக்களை உருவாக்கும் செயலிகளுக்கு பயனர்களை அழைத்துச் சென்றதாகக் கூறியுள்ளது. இவற்றில் பெரும்பாலான செயலிகள் சீனாவை சேர்ந்த டெவலப்பர்களால் உருவாக்கப்பட்டவை.

குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக படங்களைப் பயன்படுத்தி இந்த செயலிகள் விளம்பரம் செய்யப்பட்டிருப்பது, அவற்றை சிஎஸ்ஏஎம் உருவாக்குவதற்கோ அல்லது பார்ப்பதற்கோ பயன்படுத்த முடியும் என்ற கருத்தை ஏற்படுத்துவதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான, ஒருவரின் ஒப்புதலின்றி உருவாக்கப்பட்ட நிர்வாண அல்லது பாலியல் ரீதியாக வெளிப்படையான படங்களை உருவாக்கும் நிர்வாணப்படுத்தும் செயலிகளை விளம்பரப்படுத்துவதைத் தடை செய்துள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி சைபர் காவல்துறை அதிகாரிகளில் ஒருவரும், தெலங்கானா மாநிலத்தின் சைபர் சொசைட்டி பியூரோவின் இயக்குநருமான ஷிகா கோயல், சிஎஸ்ஏஎம் தொடர்பான மிகப்பெரிய சவால்களில் ஒன்று, "பயனர்கள் ஒரு தளத்தில் இருந்து மற்றொரு தளத்திற்கு எளிதாக மாறிவிட முடிவதுதான். இதனால் அவர்களைப் பிடிப்பது கடினமாகிறது" என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

"சமூக ஊடக இடைத்தரகர்களுடன் அரசு மேற்கொள்ளும் சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் இந்த விவகாரம் கவனத்தில் கொள்ளப்பட்டு, அதற்கேற்ப அவர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் அவர் கூறினார்.

 ஷிகா கோயல்

பட மூலாதாரம், Shikha Goel

படக்குறிப்பு, வெவ்வேறு சமூக ஊடக தளங்களுக்கு இடையே எளிதாக மாற முடிவது, சிஎஸ்ஏஎம்-ஐ கையாள்வதை மேலும் கடினமாக்குவதாக ஷிகா கோயல் கூறுகிறார்.

பிபிசி நடத்திய புலனாய்வில் கண்டறியப்பட்ட விளம்பரங்களும் டெலிகிராம் என்ற மற்றொரு செயலிக்கு பயனர்களை அழைத்துச் சென்றன. அங்கு வெறும் 99 ரூபாய்க்கு உள்ளடக்கங்களை வாங்க முடிந்தது. சிஎஸ்ஏஎம்-ஐ கட்டுப்படுத்த தானியங்கி, மனித கண்காணிப்பு ஆகிய இரண்டையும் பயன்படுத்துவதாகவும், தனது தளத்தில் சிஎஸ்ஏஎம் பொதுவெளியில் பரவுவதை "கிட்டத்தட்ட முற்றிலும் ஒழித்து விட்டதாகவும்" அப்போது பிபிசியிடம் டெலிகிராம் கூறியது.

மெட்டா தளங்களில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதற்கு முன், அதன் கண்காணிப்பு தொழில்நுட்பத்தால் அவை முதலில் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன் ஆய்வு முறை பெரும்பாலும் தானியங்கி தொழில்நுட்பத்தைச் சார்ந்துள்ளது.

படங்கள், வீடியோக்கள், உரை, ஆடியோ ஆகியவற்றையும், விளம்பரம் யாரை இலக்காகக் கொண்டுள்ளது, அதிலுள்ள இணைப்புகள் பயனர்களை எங்கு அழைத்துச் செல்கின்றன என்பதையும் ஆய்வு செய்யும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. பிபிசியின் விசாரணைக்குப் பிறகு, "எந்தவொரு அமைப்பும் முழுமையானது அல்ல" என்றும், "தீவிரமாகச் செயல்படும் குற்றவாளிகள் எங்கள் விளம்பர அமைப்புகள் உள்ளிட்ட வழிகளில் தொடர்ந்து எங்கள் தளத்தைத் தவறாகப் பயன்படுத்த முயல்கின்றனர்" என்றும் மெட்டா தெரிவித்திருந்தது.

ஆனால், குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்ற பல விளம்பரங்கள் சீனாவிலுள்ள மெட்டாவின் சொந்த விளம்பர நிறுவனக் கூட்டணியைச் சேர்ந்தவர்களால் வெளியிடப்பட்டு இருந்ததை டிடிபி கண்டறிந்துள்ளது.

"மறுவிற்பனையாளர்கள்" (resellers) என்று அழைக்கப்படும் இந்தக் கூட்டாளர்கள், சீனாவை சேர்ந்த விளம்பரங்களின் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான விளம்பரங்களை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களுக்குக் கொண்டு வருகின்றனர். டிடிபி எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. தங்களது அறிக்கையின் கண்டுபிடிப்புகள் குறித்து மெட்டாவிடம் தெரிவித்த பிறகும் புதிய விளம்பரங்கள் தொடர்ந்து தோன்றியதாக டிடிபி தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் இந்தியாவில் வெளியான 11 விளம்பரங்கள் உள்ளிட்ட 17 விளம்பரங்களின் விவரங்களையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு