உத்தர பிரதேசம்: 100 ஆண்டுகள் பழைய மசூதி அரசால் இடிக்கப்பட்டதா? ஆவணங்கள் கூறுவது என்ன?

காவல்துறையினர் தடுப்புகளை (barricades) அமைத்துள்ள அந்த இடத்தில் முன்பு ஒரு மசூதி இருந்தது, இப்போது அங்கு இடிபாடுகள் மட்டுமே உள்ளன.
படக்குறிப்பு, இந்தப் புகைப்படத்தில், காவல்துறையினர் தடுப்புகளை அமைத்துள்ள இடத்தில் முன்பு ஒரு மசூதி இருந்தது, இப்போது அங்கு இடிபாடுகள் மட்டுமே உள்ளன.
    • எழுதியவர், நைலா கவாஜா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

"இது பழமையான மசூதி. எனது தாத்தா அங்கு தொழுகை நடத்தியதைப் பார்த்திருக்கிறேன். எனது தந்தையும் அங்கு தொழுகை நடத்தியதைப் பார்த்திருக்கிறேன். நானும் அங்கு சென்றிருக்கிறேன். இன்றும்கூட சில நேரங்களில் அங்கு சென்று தொழுகை நடத்துகிறோம். வெள்ளிக்கிழமை தொழுகையைக்கூட அங்கு நடத்தியிருக்கிறோம்."

சஹாரன்பூர் ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டியுள்ள பகுதியில் வசித்து வருகிறார் ஷரீஃப் அகமது. இதே ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இருந்த பழைய மசூதி ஒன்றை, 2026 செப்டம்பர் 5ஆம் தேதி நிர்வாகம் இடித்துத் தரைமட்டமாக்கியது.

இந்த மசூதி 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது என்று முஸ்லிம் தரப்பு கூறுகிறது. ஆனால், அரசுக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடம் அது என்றும், அதை அகற்றுவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் நிர்வாகம் கூறுகிறது.

ஆனால், ஷரீஃப் அகமதுவின் இந்து அண்டை வீட்டுக்காரரான அமித் டாண்டன் கூறுகையில், "இங்கு மிகவும் தவறான ஒரு விஷயம் நடந்திருக்கிறது. இதை நாங்களும் உணர்கிறோம். இவர்கள் எங்கள் குடும்ப உறுப்பினர்களைப் போன்றவர்கள். நாங்கள் இதற்கு எதிரானவர்கள்" என்றார்.

மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அந்த இடத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தத் தடுப்புகளைத் தாண்டிச் செல்ல எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

நடந்தது என்ன?

சஹாரன்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த இந்த மசூதி தொடர்பான சர்ச்சை, பஜ்ரங் தளத்தின் முன்னாள் மாநில அமைப்பாளர் விகாஸ் தியாகி அளித்த புகாரையடுத்து தொடங்கியது.

இதையடுத்து, 2025 மார்ச் 24ஆம் தேதி உத்தர பிரதேச பொதுக் கட்டடங்கள் சட்டத்தின் கீழ் நகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீண்ட விசாரணைக்குப் பிறகு, 2026 ஜூலை 17ஆம் தேதி அந்த மசூதி சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாக நகர மாஜிஸ்திரேட் அறிவித்து, அதை அங்கிருந்து அகற்ற உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மசூதி தரப்பு மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சுமார் ஒன்றரை மாதம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, செப்டம்பர் 2ஆம் தேதி மாவட்ட நீதிபதி நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து, நகர மாஜிஸ்திரேட்டின் உத்தரவை உறுதி செய்தது.

ஆனால், இங்குதான் மிகப்பெரிய கேள்வி எழுகிறது: மசூதியை இடிக்க வேண்டுமென நீதிமன்றம் தெளிவான உத்தரவைப் பிறப்பித்ததா? அல்லது அந்த நிலத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்பட்டதா?

இந்தக் கேள்வியில் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அது தொடர்பான நோட்டீஸ்களை புரிந்துகொள்வதற்காகப் பல்வேறு வழக்கறிஞர்களிடம் பேசினோம்.

இந்த வழக்கில் தொடர்புடைய மூத்த வழக்கறிஞர் பர்வேஸ் ஜப்பார் கூறுகையில், "இது வெளியேற்றுவதற்கான உத்தரவுதான், இடிப்பதற்கான உத்தரவு அல்ல. ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளிலேயே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு என்ன அவசரம்?" என்றார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மசூதி மீதான சர்ச்சை, பஜ்ரங் தளம் அமைப்பின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் விகாஸ் தியாகி அளித்த புகாரின் அடிப்படையில்தான் தொடங்கியது.
படக்குறிப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மசூதி மீதான சர்ச்சை, பஜ்ரங் தளம் அமைப்பின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் விகாஸ் தியாகி அளித்த புகாரின் அடிப்படையில்தான் தொடங்கியது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மேலும் அவர், "நோட்டீஸ் வழங்கப்பட்ட பிறகு சட்ட நடைமுறை முழுவதும் பின்பற்றப்பட்டிருந்தால், எங்களுக்கு மேலும் 18 நாட்கள் அவகாசம் இருந்தது. அந்தக் கால அவகாசம் எங்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்" என்றார்.

நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பார்க்கும்போது, அது அடிப்படையில் வெளியேற்றுவதற்கான உத்தரவு என்றும், நோட்டீஸ் வழங்கப்பட்டு 30 நாட்கள் நிறைவடைவதற்கு முன்பே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, மசூதியின் பராமரிப்பாளரான தன்வீர் அகமது கூறுகையில், "எங்களை வெளியேற்ற வேண்டுமெனில், அவர்கள் முழு நடவடிக்கையையும் காணொளியாகப் பதிவு செய்திருக்கலாம். அங்கு ஒரு ஜெனரேட்டர் இருந்தது, குர்ஆன் பிரதிகள் இருந்தன, தொழுகை விரிப்புகள் இருந்தன. இப்படியாக இன்னும் அங்கு ஏராளமான பொருட்கள் இருந்தன. அனைத்தையும் எடுத்துச் சென்றிருப்போம்" என்றார்.

வழக்கறிஞர் நௌஷாத் அலி கூறுகையில், "30 நாட்களுக்குப் பிறகு அவர்கள் வெளியேற்ற நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் அதற்கு முன்பாக வெளியேற்றுவதற்கான நடைமுறையை அவர்கள் முழுமையாக முடிக்கவில்லை. நேரடியாகச் சென்று இருபுற வாயில்களையும் மூடினர், முழு வளாகத்தையும் சீல் வைத்து, கட்டடத்தை இடித்தனர்" என்றார்.

நௌஷாத் அலி, வழக்கறிஞர்
படக்குறிப்பு, நௌஷாத் அலி, வழக்கறிஞர்

நிர்வாகம் தரப்பில் கூறப்படுவது என்ன?

எங்கள் கேள்விகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் சென்றோம். இந்த விவகாரம் தொடர்பாக சஹாரன்பூர் டிஐஜி ஏற்கெனவே ஊடகங்களிடம் அறிக்கை அளித்துள்ளதாகவும், இந்த வழக்கு தற்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.

சஹாரன்பூர் டிஐஜி அபிஷேக் சிங், செப்டம்பர் 5ஆம் தேதி ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "நடவடிக்கை எடுக்கும்போது அனைத்து சட்ட விதிமுறைகளும் நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அரசு நிலத்தில் சட்டவிரோதமாக இந்தக் கட்டடம் கட்டப்பட்டதாக நகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கருதியது. மேலும், மசூதி நிர்வாகக் குழு தாக்கல் செய்த மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டது" என்று கூறியிருந்தார்.

அதாவது, மசூதி இடிப்பு நடவடிக்கை நீதித்துறை மற்றும் நிர்வாக ரீதியான முந்தைய நடவடிக்கைகளுக்குப் பிறகே மேற்கொள்ளப்பட்டதாக நிர்வாகம் கூறுகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு வழிவகுத்த நீதிமன்ற உத்தரவில் வெளியேற்றம் மற்றும் இடிப்பு நடைமுறைகள் எவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தன என்ற கேள்வியை மசூதி தரப்பினர் எழுப்புகின்றனர்.

இதற்கான பதில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்குப் பிறகே தெரிய வரும்.

வரலாறு என்ன சொல்கிறது?

மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அதன் இடிபாடுகளை நிர்வாகம் விரைவாக அகற்றியது. தற்போது அந்த இடிபாடுகள் நகரத்திலிருந்து சிறிது தொலைவிலுள்ள அம்பாலா சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ளன.

இடிபாடுகளுக்கு இடையே மசூதியுடன் தொடர்புடைய சில பொருட்களும் காணப்பட்டன. தொழுகை விரிப்பு, தொப்பி, கிழிந்த சில பக்கங்கள், ஜெபமாலை, வெள்ளை குர்தா-பைஜாமா உள்ளிட்ட ஆடைகள் அங்கு இருந்தன. இவை மசூதியின் இமாம் அல்லது பராமரிப்பாளருக்குச் சொந்தமானவையாக இருக்கலாம்.

இடிபாடுகளில் கிடந்த சில செங்கற்களில் 1906, 1909, 1911, 1913 ஆகிய ஆண்டுகள் பொறிக்கப்பட்டிருந்தன.

மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் இடிபாடுகளும் நிர்வாகத்தால் விரைவாக அகற்றப்பட்டன.
படக்குறிப்பு, மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் இடிபாடுகளும் நிர்வாகத்தால் விரைவாக அகற்றப்பட்டன.

இடிபாடுகளுக்கு அருகே நின்றுகொண்டிருந்த உள்ளூரைச் சேர்ந்த ஒருவர், "இப்போது மசூதி இல்லை. குறைந்தபட்சம் அதன் எஞ்சிய பகுதிகளையாவது நாங்கள் சேகரித்துப் பாதுகாக்க விரும்புகிறோம். அவை பழைய செங்கற்களாக இருந்தாலும் பரவாயில்லை" என்றார்.

மற்றொருவர் கூறுகையில், "குர்ஆன் பிரதிகள் இடிபாடுகளிலேயே கிடந்தன. அவற்றை நாங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றோம். சிலவற்றை மயானத்தில் அடக்கம் செய்தோம்" என்றார்.

செங்கற்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டுகள், அவை 20ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தைச் சேர்ந்தவை என்பதைக் காட்டுவதாக உள்ளூர்வாசிகள் கருதுகின்றனர். ஆனால், செங்கற்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டுகளை மட்டும் வைத்து ஒரு மசூதியின் வயதைத் தீர்மானிக்க முடியுமா?

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் நதீம் ரிஸ்வி கூறுகையில், "அந்தக் காலகட்டத்தில் கட்டுமான ஆண்டு செங்கற்களில் குறிப்பிடப்படுவது வழக்கத்திற்கு மாறானதல்ல. ஆனால் இந்த எண்களை மட்டுமே வைத்து, அந்தக் காலத்திலேயே மசூதியும் கட்டப்பட்டதாக முடிவு செய்ய முடியாது" என்றார்.

அவரது கூற்றுப்படி, இந்த செங்கற்களைப் பயன்படுத்தி மசூதி பின்னர் கட்டப்பட்டிருக்கலாம். அல்லது, ஏற்கெனவே இருந்த பழைய கட்டடத்தில் இருந்து எடுக்கப்பட்ட செங்கற்கள் மீண்டும் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். ஒரு கட்டடத்தின் வயதைக் கண்டறிய, "செங்கற்களின் அளவு, அவற்றின் அமைப்பு மற்றும் அவற்றை இணைக்கும் சாந்து ஆகியவற்றை ஆய்வு செய்வது மிகவும் உதவியாக இருக்கும்" என்று பேராசிரியர் ரிஸ்வி விளக்குகிறார்.

மசூதி இருந்த இடத்தில் கிணறு போன்ற அமைப்பு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் (ASI) குழு அந்த இடத்தை ஆய்வு செய்தது. இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை அதிகாரி மனோஜ் யாதவ் கூறுகையில், "ஆய்வின்போது அங்கு லகோரி செங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் அளவு சுமார் 20 × 10 × 5 செ.மீ. அவற்றை இணைக்க சுண்ணாம்பு-சுர்க்கி போன்ற கலவைப் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இத்தகைய செங்கற்களும் சுண்ணாம்பு-சுர்க்கி கலவையும் இடைக்காலம் முதல் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை வடக்கு மற்றும் மத்திய கங்கைச் சமவெளி பகுதியில் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறுகிறார்.

பர்வேஸ் ஜப்பார், மூத்த வழக்கறிஞர்
படக்குறிப்பு, பர்வேஸ் ஜப்பார், மூத்த வழக்கறிஞர்

உள்ளூர்வாசிகள் கூறுவது என்ன?

முஸ்லிம் தரப்பு முன்வைக்கும் கூற்றுகளுக்கு அப்பால், மசூதியின் வயது மற்றும் அந்த நிலத்தின் உரிமை குறித்து அறிந்துகொள்ள உள்ளூர்வாசிகள், முன்னாள் குடியிருப்பாளர்கள் மற்றும் கிடைக்கக் கூடிய ஆவணங்களையும் ஆராய்ந்தோம். இந்த இடத்தின் வாய்வழி வரலாற்றைப் புரிந்துகொள்வதற்காக அப்பகுதியில் வசிக்கும் முதியவர்களிடம் குறிப்பாகப் பேசினோம்.

அதில் சிலர், இந்தக் கட்டடம் 1947ஆம் ஆண்டுக்கு முன்பே இருந்ததாகக் கூறுகின்றனர். இது முக்கியமான சட்டக் கேள்வியையும் எழுப்புகிறது. 1991ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டத்தின் பிரிவு 4(1)இன் படி, 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இருந்த வழிபாட்டுத் தலத்தின் மதத்தன்மை, அந்தத் தேதியில் இருந்ததைப் போலவே தொடர்ந்து இருக்க வேண்டும்.

ஆனால், இந்த விதி மட்டும் ஒரு வழிபாட்டுத் தலத்தின் நில உரிமை யாருக்கு என்பதையோ, அந்தக் கட்டடம் சட்டப்படி கட்டப்பட்டதா என்பதையோ, அரசு நிலத்தை ஒரு மத நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதா என்பதையோ தானாகத் தீர்மானிக்காது.

எனவே, இந்த வழக்கில் இரண்டு தனித்தனி கேள்விகள் உள்ளன:

முதலாவது: 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இந்த இடத்தில் மசூதி இருந்ததா?

இரண்டாவது: அந்த நிலத்தின் சட்டபூர்வ உரிமையாளர் யார்?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதிலைக் கண்டறிய, பழைய நில ஆவணங்களையும் ஆராய்ந்தோம். உள்ளூரைச் சேர்ந்த மூத்த குடியிருப்பாளர் ஆபித் கூறுகையில், "இந்த மசூதி நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. இங்கு நீதிமன்றம் இருந்த காலத்திற்கு முன்பிருந்தே, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே அது இருந்திருக்கிறது. இது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்து மசூதி" என்றார்.

அவரது இந்து அண்டை வீட்டுக்காரரான பவன் ராணா கூறுகையில், "அது சட்டவிரோதமானதாக இருந்தாலும், அதற்கென ஒரு நடைமுறை இருக்கிறது. அதை திடீரென இடித்திருக்கக் கூடாது. பலருடைய உணர்வுகள் அதனுடன் தொடர்புபட்டிருந்தன. இவ்வளவு பழமையான கட்டடம் இவ்வளவு வேகமாக இடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு எந்த சர்ச்சையும் இருப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை. ஒன்றரை மாதத்திற்குள் ஏன் முழு நடவடிக்கையும் திடீரென முடிக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது" என்றார்.

இதற்கிடையே, வழக்கறிஞர் நௌஷாத் அலி கூறுகையில், "அரசிடம் நில உரிமைக்கான எந்த ஆவணமும் இல்லை, இன்றும்கூட இல்லை. வருவாய்த் துறை ஆவணங்களில், கச்ரா எண் 539இல் நில உரிமையாளர்களாக வஹீத் கான், யாகூப் கான் ஆகியோரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே கச்ரா எண்ணில்தான் ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், மசூதி ஆகியவை இருப்பதாகக் கூறப்படுகிறது" என்றார்.

ஆனால், உத்தர பிரதேச அரசின் நில ஆவண இணையதளத்தில் நாங்கள் சரிபார்த்தபோது, கச்ரா எண் 539-க்கான பதிவு கிடைக்கவில்லை.

மற்ற அனைத்து விதிமுறைகளையும் மீறியே நகர மாஜிஸ்திரேட்டின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகச் சஹாரன்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மசூத் குற்றம்சாட்டியுள்ளார்.
படக்குறிப்பு, மற்ற அனைத்து விதிமுறைகளையும் மீறியே நகர மாஜிஸ்திரேட்டின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகச் சஹாரன்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மசூத் குற்றம்சாட்டியுள்ளார்.

1955இல் வக்ஃப் பதிவு; 1960இல் தபால் துறைக்கு குத்தகை

வழக்கறிஞர் நௌஷாத் அலி கூறுகையில், "பின்னர், 1955ஆம் ஆண்டு இது வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டது. ஒரு சொத்து சாதாரணமாக வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்படுவதில்லை. முழுமையான ஆய்வு நடத்தப்படும். அந்தச் சொத்து யாருக்குச் சொந்தமானது, யார் அதை வக்ஃப் செய்தார்கள் என்பதற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்படும்" என்றார்.

"இரண்டாவதாக, மத்திய அரசின் தபால் துறை 1960ஆம் ஆண்டு இந்தச் சொத்தில் இருந்த இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்தது. அங்கு ஒரு தபால் நிலையம் செயல்பட்டு வந்தது."

"மத்திய அரசுக்கும் மசூதிக்கும் இடையே முறையான குத்தகை ஒப்பந்தம் இருந்தது. அவர்கள் நில உரிமை ஆவணங்களைப் பார்த்த பிறகே குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். அந்த ஒப்பந்தம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது" என்றும் அவர் கூறினார்.

இந்தச் சொத்து வக்ஃப் செய்யப்பட்டதுடன் தொடர்புடைய பதிவுகள் அடங்கிய கிடைக்கக்கூடிய வக்ஃப் ஆவணங்களையும் நாங்கள் ஆய்வு செய்தோம். ஆனால், இங்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது: ஒரு சொத்து வக்ஃப் சொத்தாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது மட்டுமே, அதன் அசல் உரிமையை நிரூபிப்பதாகாது. எனவே, வக்ஃப் ஆவணங்களுடன், அசல் வருவாய்த் துறைப் பதிவுகள் மற்றும் நில உரிமை ஆவணங்களையும் ஆய்வு செய்வது முக்கியம்.

குரல் எழுப்பும் எதிர்க்கட்சித் தலைவர்கள்

இந்தச் சம்பவம் குறித்துப் பல அரசியல்வாதிகளும் கருத்து தெரிவித்துள்ளனர். கைரானா மக்களவைத் தொகுதி உறுப்பினர் இக்ரா ஹசன், முன்னாள் எம்.எல்.ஏ.வும் காங்கிரஸ் மாநிலத் தலைவருமான அஜய் ராய், சஹாரன்பூர் எம்.எல்.சி. ஷாநவாஸ் கான் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் செல்ல முயன்றபோது தங்களை வீட்டுக் காவலில் வைத்ததாகக் கூறுகின்றனர்.

இதற்கிடையே, சஹாரன்பூர் எம்.எல்.ஏ.வும் பாஜக தலைவருமான ராஜீவ் கும்பர், இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றதாகவும், அரசு நிலத்தில் கட்டப்பட்ட சட்டவிரோதக் கட்டடம் என நீதிமன்றம் கருதியதாகவும் கூறினார். நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் பின்பற்ற வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

மசூதி கமிட்டியின் கூற்றுப்படி, இந்த மசூதி நூறு ஆண்டுகள் பழமையானது மற்றும் இதன் நிலம் தனிநபர் உரிமையாளர்களுக்குச் சொந்தமானது. மேலும், இந்த மசூதி குறித்த விவரங்கள் வக்பு வாரிய பதிவேடுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
படக்குறிப்பு, மசூதி கமிட்டியின் கூற்றுப்படி, இந்த மசூதி நூறு ஆண்டுகள் பழமையானது மற்றும் இதன் நிலம் தனிநபர் உரிமையாளர்களுக்குச் சொந்தமானது. மேலும், இந்த மசூதி குறித்த விவரங்கள் வக்ஃப் வாரிய பதிவேடுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சஹாரன்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் இம்ரான் மசூத் கூறுகையில், "நகர மாஜிஸ்திரேட்டின் உத்தரவு அனைத்தையும் புறக்கணித்தே பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த விதிமுறைகளையும், சட்டங்களையும் அவர் பின்பற்றவில்லை" என்று குற்றம் சாட்டினார்.

"சம்பலில் என்ன நடந்தது? சம்பலில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அந்த ஐந்து பேரைக் கொன்றவர்கள் யார் என்பது இன்று வரை தெரியவில்லை. இது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் செய்யப்பட்டது. மசூதிகள், கோயில்கள் அல்லது வழிபாட்டுத் தலங்களை இதுபோன்று இடிப்பது எந்த வகையிலும் நியாயமானது அல்ல" என்றார்.

விடை கிடைக்காத கேள்விகள்

சஹாரன்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு காலத்தில் மசூதி இருந்த இடத்தில் தற்போது காலி இடமும் தடுப்புகளும் மட்டுமே உள்ளன.

அரசு நிலத்தில் அனுமதியின்றிக் கட்டப்பட்ட கட்டடம் என்பதால், சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி அது அகற்றப்பட்டதாக நிர்வாகம் கூறுகிறது.

மறுபுறம், 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மசூதி இது என்றும், அந்த நிலம் தனியாருக்குச் சொந்தமானது என்றும், வக்ஃப் ஆவணங்களிலும் அது பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் மசூதி நிர்வாகக் குழு கூறுகிறது.

இந்த இரு தரப்பு கூற்றுகளுக்கு இடையே சில முக்கியமான கேள்விகள் இன்னும் விடை காணாமல் உள்ளன.

  • கச்ரா எண் 539இல் உள்ள நிலத்தின் அசல் உரிமையாளர் யார்?
  • இந்த இடத்தில் 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி மசூதி இருந்ததா?
  • மசூதியின் வயது மற்றும் நிலத்தின் உரிமையை நிரூபிக்கும் மிகப் பழமையான ஆவணங்கள் எவை?
  • மிக முக்கியமாக, மசூதியை இடிப்பதற்கு முன் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட முழுமையான நடைமுறையையும் நிர்வாகம் பின்பற்றியதா?

இந்தக் கேள்விகளுக்கு இனி வெறும் தரப்புகளின் கூற்றுகள் மூலம் அல்ல; அசல் நில ஆவணங்கள், வக்ஃப் பதிவுகள், நிர்வாக உத்தரவுகள், விசாரணைகள் மற்றும் நீதிமன்ற விசாரணைகள் மூலமே பதில் கிடைக்க வேண்டும். தற்போது, உத்தர பிரதேச அரசிடம் பதில் கேட்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ரூ.6.41 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலிப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை 2026 அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு