You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு முதலமைச்சரானால் விஜய் பெறப்போகும் சம்பளம் என்ன? - ஹெலிகாப்டர் பயணம் உள்ளிட்ட சலுகைகளின் விவரம்
தவெக கட்சியைத் துவக்கிய பின்பு, பல்வேறு மேடைகளில் விஜய் பேசும்போது, ''கரியரின் உச்சத்தில் இருக்கும்போது அதை விட்டு விட்டு'' மக்களுக்காக அரசியலுக்கு வந்திருப்பதாகப் பேசி வந்தார். தற்போது அவர் முதல்வராகப் பதவியேற்கவுள்ள நிலையில், அவருக்குக் கிடைக்கப் போகும் ஊதியம், பிற சலுகைகள் குறித்து அக்கட்சித் தொண்டர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக அரசுடைய பொதுத்துறையின் கீழுள்ள மனித வள மேம்பாட்டுத் துறையில் 13 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற துணை செயலாளர் ரவிச்சந்திரன் இது பற்றிய தகவல்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.
அவர் அளித்த தகவல்களின்படி, தமிழ்நாடு முதல்வருக்கு படிகள் உட்பட மாதாந்திர ஊதியமாக சுமார் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் வழங்கப்படுவதாக 2024ம் ஆண்டு திருத்தப்பட்ட அரசாணை குறிப்பிடுகிறது. இவை தவிர்த்து அரசு குடியிருப்பு, முதல்வருக்கான குண்டு துளைக்காத சிறப்பு வாகனங்கள், இசட் பிளஸ் அந்தஸ்து பாதுகாப்பு, குடும்ப மருத்துவக் காப்பீடு, தொலைத்தொடர்பு வசதிகள், பயண வசதிகள், வீட்டிலும் அலுவலகத்திலும் பணியாற்றுவதற்கான பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கான ஊதிய செலவுகளை தமிழக அரசே ஏற்கிறது. முதல்வருக்கு தனி ஹெலிகாப்டர் வழங்குவதுடன் விமானப் பயண செலவுகளையும் அரசே செலுத்துகிறது.
விஜய்க்கு இனி மாத ஊதியம் சுமார் ரூ.2 லட்சம்
சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருப்பதால், அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நிலையில், பிற கட்சிகளின் ஆதரவுடன் அவர் பெரும்பான்மையை நிரூபிப்பார் என்பதன் அடிப்படையில் அவர் முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.
விஜய், ஏற்கெனவே தனது கடைசி படம் ஜனநாயகன் என்று அறிவித்திருந்தார். முழுநேர அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், சினிமாவில் இருந்து அவருக்கு வரும் வருவாய் முற்றிலும் நின்று போவது உறுதியாகியுள்ளது. இதைத்தான் அவர் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் பலமுறை பேசியிருக்கிறார்.
''கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு வருகிறேன். வசதியான வாழ்க்கையை உதறிவிட்டு உங்களுக்காக வந்திருக்கிறேன், அத்தனை வலியையும் தாங்கிக்கொண்டு வருகிறேன், உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக வந்திருக்கிறேன் எனக்கு வாய்ப்பு கொடுங்கள்'' என்று பரப்புரை நிகழ்ச்சிகளில் விஜய் பேசியிருந்தார்.
அதேபோன்று விஜய் தனது வேட்பு மனுவில் தாக்கல் செய்த சொத்து விவரங்களில் தனது பெயரில் ரூ.404 கோடிக்கு அசையும் சொத்துகள் இருப்பதாகவும், அசையா சொத்துகளின் நடப்பு சந்தை மதிப்பு ரூ.220.15 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. வெளியில் ரூ.76 கோடிக்கு கடன் கொடுத்திருப்பதாகவும் விஜய் தனது வேட்பு மனுவில் தகவல் பதிவு செய்திருந்தார்.
முதல்வருக்காக ஒதுக்கப்படும் பங்களா
தமிழக முதல்வருக்கு கிரீன்வேஸ் சாலையில் அரசு பங்களா ஒதுக்கப்படுகிறது. இந்த வீட்டுக்கு வாடகை எதுவும் செலுத்தத் தேவையில்லை. பராமரிப்பு, மின்சாரம், தண்ணீர் கட்டணங்களை அரசே செலுத்திவிடும். ஆனால் கடந்த காலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி , மு.க.ஸ்டாலின் போன்ற முதல்வர்கள் தங்கள் சொந்த வீடுகளிலேயே தங்கியிருந்துள்ளனர். இருப்பினும் அந்த வீடு, முதல்வரின் இல்லம் என்ற பெயரிலேயே எப்போதும் பராமரிக்கப்படுகிறது.
இதர வசதிகள் குறித்து ரவிச்சந்திரன் அளித்த தகவல்களின்படி, முதல்வருக்கு குண்டு துளைக்காத கார் (Bulletproof car) உள்பட பிரத்யேக வாகன வசதி மற்றும் அதற்கான எரிபொருள், பராமரிப்புச் செலவுகள் அரசால் ஒதுக்கப்படுகிறது. முதல்வரின் வாகனங்களுக்கு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பெட்ரோல் அலவன்ஸ் வழங்கப்படுகிறது. முதல்வருக்கு 3 கார்கள் தரப்படும். ஓட்டுநருக்கான ஊதியத்தை அரசாங்கமே வழங்கும்.
மாநில அரசின் சார்பில் உயர் பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், மத்திய அரசின் சார்பில் இசட் பிளஸ் அந்தஸ்துள்ள பாதுகாப்பும் தமிழக முதல்வருக்கு வழங்கப்படும். வெளி மாநிலங்கள், வெளியூர்களுக்கு விமானங்களில் முதல்வர் செல்வதற்கு அரசே கட்டணம் செலுத்தும். அதற்கு படிவங்கள் முறைப்படி நிரப்பி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்தக் கட்டணம், பிற சாதாரண விமானப் பயணிகளைவிட, அதிகமாக இருக்கும் என்றும், அந்தத் தொகையைச் செலுத்திவிட்டு பின்பு அதை அரசிடம் (Reimbursement) பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் விளக்குகின்றனர். முதல்வர் பயணம் செய்வதற்குத் தனியாக ஒரு ஹெலிகாப்டர், விமானிகள் குழு ஆகியவற்றுக்கும், அதன் எரிபொருள் மற்றும் பராமரிப்புக்கும் அரசாங்கமே நிதி ஒதுக்கீடு செய்கிறது.
முழு அளவில் பாதுகாப்பு வழங்கப்படும்
தனியாருக்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டருக்கு தமிழக அரசே மாதாந்திர வாடகை செலுத்துகிறது. அந்த ஹெலிகாப்டரில் 8 பேர் வரை பயணம் செய்ய முடியும். முதல்வர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு விரிவான மருத்துவக் காப்பீடும் தனியாகவுள்ளது.
முதல்வரின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் (CMO) பணியாற்ற வீட்டுப் பணியாளர்கள் உள்பட பெரிய அளவிலான தனிப்படையினர் நியமிக்கப்படுகின்றனர்.
முதல்வருக்கான தனிப்பட்ட ஊதியம், படித்தொகை, செலவுகள் ஆகியவற்றை தமிழக அரசின் பொதுத்துறைதான் கவனித்துக் கொள்கிறது. பாதுகாப்புக்கு மாநில காவல்துறையினரும், அணிவகுப்பு வாகனத்தில் தனியாக பாதுகாப்புப் படையினரும் காவல்துறையால் நியமிக்கப்படுவார்கள்.
தகவல் தொடர்பு வசதிகளுக்கான படி, தொகுதிப்படி, பயணப்படி உள்ளிட்ட பல்வேறு இதர சலுகைகளும் பொதுத்துறையால் முதல்வருக்கு வழங்கப்படுகின்றன என்று விளக்கினார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு