'சாம்சன் அதிரடி' - சிஎஸ்கே 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது எப்படி?

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 சீசனின் 48வது போட்டியில் இன்று (மே 5) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸை எதிர்கொண்டது. டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. காயத்திலிருந்து மீண்ட லுங்கி எங்கிடி மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. அகீல் ஹொசைன் மற்றும் குர்ஜப்னீத் சிங் இருவரும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர்.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே பௌலர்களில் நூர் அஹமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த இலக்கை சேஸ் செய்த சிஎஸ்கே 17.3 ஓவர்களில் வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார்.

சிஎஸ்கே சிறப்பான பந்துவீச்சு

இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். அகீல் ஹொசைன் மற்றும் முகேஷ் சவுத்ரி இருவரும் தங்கள் முதல் ஸ்பெல்லில் மிகவும் சிக்கனமாகப் பந்துவீசினார்கள். பவர்பிளேவில் அதிகம் ரன் எடுக்க முடியாத காரணத்தால் டெல்லி ஓப்பனர்கள் கே.எல்.ராகுல், பதும் நிசன்கா இருவரும் நெருக்கடியை உணர்ந்தார்கள். அதன் காரணமாக பெரிய ஷாட்கள் அடிக்க முயற்சி செய்து அவர்கள் தங்கள் விக்கெட்டுகளை இழந்தார்கள்.

15 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்த நிசன்கா, முகேஷ் சவுத்ரி வீசிய 4வது ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். 6வது ஓவரின் முதல் பந்தில் கே.எல்.ராகுலும் அதேபோல் அவுட் ஆனார். அவர் 13 பந்துகளில் 12 ரன்களே எடுத்தார். இப்படி அடுத்தடுத்த விக்கெட்டுகளின் காரணமாக பவர்பிளேவில் 2 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் மட்டுமே எடுத்தது கேபிட்டல்ஸ்.

மிடில் ஓவர்களில் நூர் அஹமது பந்துவீச வந்ததும் டெல்லியின் தடுமாற்றம் மேலும் அதிகமானது. அதனால், அந்த அணி சீரான இடைவெளியில் தொடர்ந்து அவர்கள் விக்கெட்டுகளை இழந்தார்கள். நித்திஷ் ராணா 15 ரன்கள், கருண் நாயர் 13 ரன்கள், கேப்டன் அக்‌ஷர் பட்டேல் 2 ரன்கள் என ஒவ்வொரு பேட்டரும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தார்கள்.

11வது ஓவரின் முடிவில் 69 ரன்கள் எடுத்திருந்த கேபிட்டல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. அதனால் சமீர் ரிஸ்வி இம்பேக்ட் வீரராகக் களமிறக்கப்பட்டார். அவர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உடன் இணைந்து 6வது விக்கெட்டுக்கு ஒரு பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்தார்கள். அவர்கள் ஆரம்பத்தில் நிதானமாக ஆடிவிட்டு, டெத் ஓவர்களில் சற்று வேகம் கூட்டினார்கள். இந்தக் கூட்டணி 47 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தது. 31 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஓவர்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு களமிறங்கிய அஷுதோஷ் ஷர்மா, கடைசி கட்டத்தில் சமீர் ரிஸ்வியோடு இணைந்து அதிரடி காட்டினார். அதனால், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. சமீர் ரிஸ்வி 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சிஎஸ்கே பௌலர்களில் அதிகபட்சமாக நூர் அஹமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

சாம்சன் அதிரடியில் சிஎஸ்கே வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இந்தப் போட்டியில் சிறந்த தொடக்கம் கிடைக்கவில்லை. நான்காவது ஓவரில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், லுங்கி எங்கிடியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்துகள் சந்தித்து 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து வந்த உர்வில் பட்டேல் அதிரடியாகத் தன் இன்னிங்ஸைத் தொடங்கினார். ஆனால், 17 ரன்கள் எடுத்திருந்த அவரை வெளியேற்றினார் அக்‌ஷர் பட்டேல்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபக்கம் நிதானமாக இன்னிங்ஸைக் கட்டமைத்தார் சஞ்சு சாம்சன். மூன்றாவது விக்கெட்டுக்கு இளம் வீரர் கார்த்திக் ஷர்மாவுடன் சேர்ந்து அவர் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்துவிட்டு, மெல்ல ரன்ரேட்டை அதிகப்படுத்தினார்கள்.

இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து தன் அதிரடியை வெளிப்படுத்தினார். எங்கிடி, ஸ்டார்க் மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகியோருக்கு எதிராக நிதானமாக ஆடிய அவர், குல்தீப் யாதவ் மற்றும் நடராஜன் ஆகியோரின் பந்துவீச்சை குறிவைத்து அடித்தார்.

7வது ஓவர் முடிந்தபோது 17 பந்துகளில் 15 ரன்கள் அடித்திருந்தார் சாம்சன். அப்போதுவரை அவர் 1 சிக்ஸர் மட்டும்தான் அடித்திருந்தார். குல்தீப் எட்டாவது ஓவரை வீசியபோது ஒரு சிக்ஸர் அடித்தார், நடராஜன் 9வது ஓவரை வீசியபோது 2 பவுண்டரிகள் அடித்தார். 10வது ஓவரில் அவர் 1 பந்தைத்தான் சந்தித்தார். 11வது ஓவரில் அக்‌ஷருக்கு எதிராக அதிரடி காட்டவில்லை. 12வது ஓவரை குல்தீப் வீசியபோது 2 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரி அடித்தார் சாம்சன். இப்படியாக அவர் 32 பந்துகளில் தன் அரைசதத்தை நிறைவு செய்தார்.

அந்த அரைசதம் கடந்த பிறகு தான் அனைத்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் தன் வேகத்தை அதிகப்படுத்தினார் சாம்சன். இறுதியில் 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் எடுத்து தன் அணியின் வெற்றியை உறுதி செய்தார். கார்த்திக் ஷர்மா 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த பார்ட்னர்ஷிப் 3வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுக்க, 17.3 ஓவர்களில் இலக்கை எட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். இது இந்த சீசனில் சிஎஸ்கே பெறும் ஐந்தாவது வெற்றி.

பிளேயிங் லெவனில் யார்?

டெல்லி கேபிட்டல்ஸ்

இந்தப் போட்டிக்கான கேபிட்டல்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் காயமடைந்து சில போட்டிகளில் ஆடாமல் இருந்த லுங்கி எங்கிடி, கைல் ஜேமீசனுக்குப் பதில் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். சமீர் ரிஸ்விக்குப் பதில் கருண் நாயர் அணியில் சேர்க்கப்பட்டார்.

பிளேயிங் லெவன்: கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), பதும் நிசன்கா, நிதிஷ் ராணா, கருண் நாயர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்‌ஷர் பட்டேல் (கேப்டன்), அஷுதோஷ் ஷர்மா, மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், லுங்கி எங்கிடி, டி.நடராஜன்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: விப்ராஜ் நிகம், சமீர் ரிஸ்வி, அபிஷேக் பொரெல், டேவிட் மில்லர், ஆகிப் நபி.

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தப் போட்டிக்கான சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டதாக டாஸில் தெரிவித்தார் கெய்க்வாட். அகீல் ஹொசைன் மற்றும் குர்ஜன்ப்னீத் சிங் ஆகியோர் இந்தப் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பெற்றார்கள். கடந்த போட்டியில் ராமகிருஷ்ணா கோஷ் காயமடைந்து இந்த சீசனில் இருந்தே விலகினார்.

பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), உர்வில் பட்டேல், கார்த்திக் ஷர்மா, டெவால் பிரெவிஸ், ஜேமி ஓவர்டன், அகீல் ஹொசைன், நூர் அஹமது, அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சவுத்ரி, குர்ஜன்ப்னீத் சிங்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஷிவம் துபே, பிரஷாந்த் வீர், மேத்யூ ஷார்ட், சர்ஃபராஸ் கான், ஆகாஷ் மத்வால்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு