தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி'யையே மக்கள் விரும்புகின்றனர் என, விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தனிப் பெரும்பான்மை யாருக்கும் கிட்டாதவகையில் மக்கள் அளித்துள்ள இத்தீர்ப்பு மிகவும் நுட்பமான அரசியலை நமக்கு உணர்த்துகிறது. அதாவது, தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி'யையே மக்கள் விரும்புகின்றனர் என்பதே ஆகும். 2016 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவும் அழுத்தமாக முன்மொழிந்ததை, பத்தாண்டுகளுக்குப் பின்னர் தற்போது வெகுமக்கள் வழிமொழிந்துள்ளனர் என்றே நம்புகிறோம்.” என தெரிவித்துள்ளார்.
இந்த முடிவுகள் தனக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தாலும், அதிமுக தலைமையிலான “சாதிய- மதவாத சங் பரிவார் கூட்டணியை” மக்கள் வெகுவாகப் புறக்கணித்துள்ளனர் என்பது திமுக கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மதவழி சிறுபான்மையினருக்கும் இன்னபிற விளிம்புநிலை மக்களுக்கும் எதிரான சங் பரிவார் அரசியலைத் தமிழ் மண்ணில் வேரூன்றவிடக் கூடாது என்பதே எமது கூட்டணியின் முதன்மையான நோக்கமாக இருந்தது.
இத்தேர்தலில் எமது இலக்கு தமிழ் மண்ணில் மதசார்பின்மையைப் பாதுகாப்பதே ஆகும். ஆகவே, தவெகவை எமது எதிர்ப்பின் முதன்மை இலக்காக யாம் முன்னிறுத்தவில்லை. மாறாக, பாஜக, அதிமுக ஆகியவற்றை அம்பலப்படுத்துவதிலேயே தீவிரம் காட்டினோம். அதன்மூலம், அதிமுக -பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுக கூட்டணிக்கு மட்டுமின்றி தவெகவுக்கும் இயல்பாய் பிரிந்துபோனதை அறியமுடிகிறது.” என அவர் தெரிவித்துள்ளார்.