You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

சி.வி. சண்முகம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை

தமிழ்நாட்டில் புதிய அரசு அமைக்க நடக்கும் முயற்சிகளுடன் இந்தியா, இலங்கை, உலகம், ஐபிஎல் மற்றும் விளையாட்டுச் செய்திகளை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தவெக தலைவரை முதலமைச்சராக பொறுப்பேற்க ஆளுநர் அழைப்பு

    தவெக தலைவர் பெரும்பான்மைக்கான ஆதரவு கடிதங்களை ஆளுநரிடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில் அவரை முதலமைச்சராக பொறுப்பேற்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்தார்.

    இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்.

    தவெக சட்டமன்றக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை தவெக தலைவர் விஜய் வழங்கினார் என்றும், மேலும் அவருக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தற்கான கடிதங்களை வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் சி ஜோசப் விஜயை தமிழ்நாடு முதலமைச்சராக தேர்வு செய்து ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.

    மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மே 13ம் தேதிக்குள் தனது பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டது.

    தமிழ்நாடு முதலமைச்சராக நாளை காலை 10 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவி பிரமாணம் செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  2. தவெகவுக்கு எந்தெந்த கட்சிகள் ஆதரவு.

    தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. ஆனால் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவை தவெக நாடியது.

    தவெகவுக்கு காங்கிரஸ் தங்கள் 5 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவை முதலில் உறுதிபடுத்திய நிலையில் , இடதுசாரி கட்சிகளான இந்தியக்கம்யூனிஸ்ட் (2) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2) தவெகவுக்கு ஆதரவுவழங்கியது.

    விசிக தங்களின் ஆதரவு நிலைபாட்டை இன்று தெரிவித்திருக்கும் நிலையில் அந்த கட்சியின் 2 சட்டப்பேரவை உறுப்பினர்களின் பலமும் தவெகவுக்கு கிடைத்துள்ளது.

    ஆளுநர் மேற்கொள்ளும் அரசு அமைப்புகளுக்கான அனைத்து செயல்பாடுகளுக்கு ஐயூஎம்எல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் (2) துணை நிற்போம் என்று அக்கட்சி தெரிவித்திருந்த நிலையில் இன்று தவெகவுக்கு நிபந்தனைகளற்ற ஆதரவு வழங்குவதாக அந்த கட்சியும் தெரிவித்துள்ளது.

    இதனால் தவெகவுக்கு 120 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ( திருச்சி கிழக்கு நீங்கலாக ) ஆதரவு கிடைத்துள்ளது.

  3. தவெகவுக்கு ஆதரவளித்தாலும் திமுக கூட்டணியில் தொடர்கிறோம்: திருமாவளவன்

    தவெகவுக்கு ஆதரவளித்தபின் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன், மக்கள் நலக்கூட்டணி உருவான காலத்திலிருந்து கொள்கை அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம் அதன்படி அரசியல் நெருக்கடி உருவாகியுள்ள சூழலில் இடதுசாரிகட்சிகளும் விசிகவும் தவெகவை ஆதரித்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

    அரசியல் நெருக்கடியை பயன்படுத்தி குடியரசுத்தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற நிலையிலும் தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க விசிக நிலைப்பாடு தடையாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்திலும் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் என்று அவர் கூறினார்.

    எனவே தவெக ஆட்சியமைக்க வெளியிலிருந்து விசிக ஆதரவு வழங்குவது என முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக்கூட்டணியில் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசியல் கட்சிக்கென இருக்கும் சுதந்திரத்தை பயன்படுத்தி இந்த முடிவை எடுத்துள்ளோம் இதனால் எங்கள் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

    தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முறைப்படி எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம், அதனை அவரும் ஏற்றுக்கொண்டார் என அவர் தெரிவித்தார்.

    தவெக ஆட்சியமைப்பதற்கான 118 இடங்கள் அவர்களிடம் உள்ளது எனவே ஆளுநர் விஜயை ஆட்சியமைக்க அழைத்து ஜனநாயகத்தை காக்க வேண்டும் குதிரை பேரம் நடப்பதற்கு இடம் கொடுக்க கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.

  4. புதிய அரசுக்கு ஸ்டாலின் மீண்டும் வாழ்த்து.

    தமிழ்நாட்டில் அமையவுள்ள புதிய அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

    இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த அவர், தமிழ்நாட்டில் இன்னொரு தேர்தலுக்கு வழிவகுக்கக் கூடாது என, நெருக்கடியான சிக்கலை தவிர்க்க, தவெகவுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்று அறிவித்ததை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

    கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரே நாளில் நன்றி சொல்ல அண்ணா அறிவாலயம் கூட வராமல் திமுகவுடனான உறவை காங்கிரஸ் கட்சி முறித்துக்கொண்ட வேளையில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் திமுகவுடன் கைகோர்த்து போராடுவோம் என்று சொன்ன இடதுசாரிகள் உள்ளிட்ட மற்ற கூட்டணிக்கட்சிகளுக்கும் நன்றி என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

    மேலும் அமையவுள்ள புதிய அரசு, மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

  5. சி.வி. சண்முகம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை

    அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மயிலம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒரு பகுதியினருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    இன்று காலை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்ட நிலையில், சி வி சண்முகம் தலைமையில் நடைபெறும் இந்த திடீர் ஆலோசனை கவனம் பெற்றுள்ளது.

  6. தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த விசிக

    தவெகவுக்கு ஆதரவு அளித்தற்கான கடிதத்ததை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தவெக பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனிடம் வழங்கினார்.

    ஆதரவு கடிதத்தை பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுன், காங்கிரஸ் , இடதுசாரிகள் மற்றும் விசிக என அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.

    ஜனநாயகம் காக்கப்படும் , மக்களின் ஆதரவுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் உருவாகிறார் என்று தெரிவித்தார்.

    விசிக வழங்கியுள்ள ஆதரவு கடிதத்தில் தவக தலைவர் ஆட்சியமைக்க விசிக ஆதரவளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மக்களால் தேர்தெடுக்கப்பட்ட நிலையான அரசு அமைய வேண்டும் என்ற விருப்பத்தோடு ஆதரவு வழங்குவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  7. "விஜய்க்கு பின்னால் இருந்து முட்டுக்கட்டை போடுகிறார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு

    தவெக பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் பதவியேற்பு விழா தள்ளிப்போகிறது. இந்தச் சூழலில் ஆளுநர் மற்றும் பாஜக மீது பழி சுமத்துவது சரியில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    விஜய் மூன்றுமுறை ஆளுநரைச் சென்று சந்தித்ததைக் குறிப்பிட்ட தமிழசை சௌந்தரராஜன், "ஒவ்வொரு முறையும் எண்ணிக்கை இல்லாமல் சென்றுவிட்டது ஆளுநர் மீது பழிபோடுவது நியாயமில்லை. தமிழக முதலமைச்சர் (மு.க.ஸ்டாலின்) தனிப்பெரும் கட்சியை அழைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு பின்னால் இருந்து முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். வெளித் தோற்றத்தில் விஜயை ஆதரிப்பதாகக் கூறிவிட்டு பின்னால் முட்டுக்கட்டை போடுகிறார்கள்." என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், "கம்யூனிஸ்டுகள் ஆதரவு தெரிவித்துவிட்டு மத்தியில் இருந்து பாஜக அழுத்தம் தருவதாகக் கூறுவதிலும் உண்மையில்லை. அரசியல் சுயலாபத்திற்காக முடிவுகளை எடுத்துவிட்டு பாஜகவை பழி சொல்வது எந்த விதத்திலும் நியாயமில்லை. காங்கிரஸ் கட்சி திமுக உடனான உறவை முறித்துக் கொண்டு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருகிறார்கள் என்ற எண்ணிக்கை இல்லாமல் ஹைதராபாத் சென்றிருக்கிறார்கள். எல்லோரும் சுய நலத்திற்காக தங்களின் அரசியல் நகர்வை செய்துவிட்டு ஆளுநர் மீதோ பாஜக மீதோ பழியை சுமத்துவது சரியல்ல."

  8. 'தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்' - எடப்பாடி பழனிசாமி

    தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெற முயற்சித்து வருகிறது.

    இந்தச் சூழலில் கூட்டணி கட்சிகள் ஆதரவு வழங்குவது மற்றும் மாற்று ஏற்பாடுகள் தொடர்பான பல்வேறு விவாதங்கள் இருந்து வருகின்றன.

    இந்தச் சூழலில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

  9. மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்ற சுவேந்து அதிகாரி

    மேற்கு வங்க முதலமைச்சராக பாஜகவின் சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    சுவேந்து அதிகாரி உடன் திலிப் கோஷ்ம் அக்னிமித்ரா பால், அசோக் கிர்தானியா, குதிராம் துடு மற்றும் நிஷித் பிரமானாயக் ஆகிய ஐந்து அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது.

    இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சுவேந்து அதிகாரி, "இது உண்மையில் மேற்கு வங்கத்துக்கு ஒரு வரலாற்றுத் தருணம். தொலைநோக்கு கொண்ட தலைவரான பிரதமர் மோதியை 'மகிழ்ச்சியின் நகரத்துக்கு' வரவேற்பது மகிழ்ச்சி மற்றும் பெருமைமிகு தருணம். சுதந்திரத்தில் இருந்து மேற்கு வங்கத்தில் முதல் பாஜக அரசு பதவியேற்கும் நிகழ்ச்சியை நாம் காண்கிறோம். நம்முடைய முன்னோடிகளின் கனவுகள் நனவாவதைக் காண்கிறோம்." எனத் தெரிவித்தார்.

  10. இரானுக்கு டிரம்பின் புதிய எச்சரிக்கை என்ன?

    தற்போதைய சூழ்நிலையில் முன்னேற்றம் இல்லையென்றால் 'ப்ராஜக்ட் ஃப்ரீட்ம ப்ளஸ்ஸை' தொடங்குவேன் என இரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்திற்கு இரான் விரைவில் பதிலளிக்கும் என நம்புவதாகவும் கூறினார். ஹோர்மூஸ் நீரிணையில் இரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

    "சூழ்நிலையில் முன்னேற்றமில்லை என்றால் நாம் வெவ்வேறு வழிகளைக் கையாள வேண்டும். பாகிஸ்தானின் கோரிக்கைக்கு இணங்க ப்ராஜக்ட் ஃப்ரீடமை நிறுத்தப்பட்டது. பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை என்றால் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்," என செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார் டிரம்ப்.

    இந்த முறை அது ப்ராஜக்ட் ஃப்ரீடம் ப்ளஸ் ஆக இருக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். ஹோர்மூஸ் நீரிணையில் நீக்கிய கப்பல்களை விடுவிக்க "ப்ராஜக்ட் ஃப்ரீடமை" டிரம்ப் தொடங்கியிருந்தார்.

  11. "இது போன்ற குதிரை பேரத்தைக் கண்டதில்லை" - திமுக எம்பி வில்சன்

    அமமுக எம்.எல்.ஏ எஸ்.காமராஜின் பெயரில் ஆளுநரிடம் தவெக கடிதம் கொடுத்ததாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு எழுப்பிய செய்தியை மேற்கோள்காட்டி திமுக மாநிலங்களவை உறுப்பினர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "தமிழ்நாடு பல ஆண்டுகளில் இது போன்ற குதிரை பேரத்தைக் கண்டதில்லை." எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் அந்தப் பதிவில், "தமிழ்நாட்டு அரசியலில் மாற்றம் கொண்டு வரப்போகிறோம் என அவர்கள் கூறியதை இப்போது புரிந்து கொள்கிறேன். பதவியேற்பதற்கு முன்பாகவே இது அனைத்தும் நடக்கிறது," எனத் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக எஸ்.காமராஜை தொடர்புகொள்ள முடியவில்லை என டிடிவி தினகரன் கூறிவந்த நிலையில் நள்ளிரவு எஸ்.காமராஜ் உடன் ஆளுநரை மீண்டும் சந்தித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காவல்துறையிலும் ஆளுநரிடத்திலும் புகார் அளிக்க இருக்கிறோம்." எனத் தெரிவித்தார்.

  12. ரஷ்யா - யுக்ரேன் இடையே 3 நாள் போர்நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு

    ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே மே 9 முதல் 11-ஆம் தேதி வரை போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இந்தப் போர் நிறுத்தத்தின்போது இரு நாடுகளும் 1,000 போர்க் கைதிகளைப் பரிமாறிக் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

    "ரஷ்யாவில் வெற்றி தின கொண்டாட்டம் உள்ளது. யுக்ரேனிலும் கொண்டாட்டம் உள்ளது. ஏனெனில் அவர்களும் இரண்டாம் உலகப் போரில் அங்கம் வகித்தனர்," என டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    "இந்தப் போர் நிறுத்தத்தின் போது சண்டையுடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தப்படும். எனது கோரிக்கைக்கு இணங்கியதற்கு அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் ஜெலென்ஸ்கி இருவருக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்." என்றும் அவர் தெரிவித்தாஸ்ர்.

    மேலும் தனது பதிவில், "நீண்ட, கொடிய மற்றும் கடினமான போரின் முடிவுக்கான தொடக்கமாக இது இருக்கும் என நம்புகிறேன். இரண்டாம் உலகப் போர் தொடங்கியதில் இருந்து நடைபெற்ற மிகப்பெரிய மோதல் இது. அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன." என்றும் குறிப்பிட்டார்.

  13. தவெக ஆதரவு: இன்று முடிவை அறிவிக்கும் விசிக

    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது முடிவை இன்று அறிவிக்க இருக்கிறது.

    பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் தவெகவிடம் இல்லாத நிலையில் பிற கட்சிகளிடம் ஆதரவு கோரியிருந்தது. காங்கிரஸ் கட்சி தவெக உடன் கூட்டணியில் இணைந்த நிலையில் அமைச்சரவையிலும் இடம்பெறுவோம் எனத் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்புகளைத் தொடர்ந்து இரு கட்சிகளும் தவெகவிற்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்குவதாக தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து அக்கட்சிகளின் அலுவலகங்களுக்கு விஜய் சென்று நன்றி தெரிவித்தார்.

    இந்தச் சூழலில் விசிகவிடமும் தவெக ஆதரவு கோரியுள்ள நிலையில் அக்கட்சியின் முடிவு இன்று அறிவிக்கப்பட உள்ளது. நேற்று மாலை விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் அக்கட்சியின் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

    அக்கூட்டத்தில் பகிரப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு முடிவு இன்று அறிவிக்கப்படும் என விசிக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  14. இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்

    இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லெஃடினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதனுடன் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளர் பொறுப்பையும் அவர் வகிப்பார்.

    தற்போது பொறுப்பில் இருக்கும் ஜெனரல் அனில் சவுகானின் பதவிக்காலம் மே 30-ஆம் தேதி உடன் முடிவடைவதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் எக்ஸ் தளப் பதிவு தெரிவிக்கிறது.

    இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரியான என்.எஸ்.ராஜா சுப்ரமணிக்கு சுமார் 40 ஆண்டுகால அனுபவம் இருக்கிறது. 2025-ஆம் ஆண்டிலிருந்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் ராணுவ ஆலோசகராக செயலாற்றி வருகிறார்.

    அதற்கு முன்னதாக துணை ராணுவ தளபதியாகவும், மத்திய கட்டளை மையத்தின் பொறுப்பிலும் இருந்துள்ளார். அதோடு வடக்கு மற்றும் மேற்கு ராணுவ நிலைகளிலும் முக்கியமான பொறுப்புகளில் இருந்துள்ளார்.

    வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மே 31-ஆம் தேதி முதல் இந்தப் பொறுப்பை அவர் ஏற்கிறார். தற்போது அவர் மேற்கு கடற்படை கட்டளை மையத்தின் தளபதியாக உள்ளார்.

  15. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலை பக்கத்தில் இன்று (மே 9) பிற்பகல் வரை செய்திகளை தொகுத்து வழங்குவது செய்தியாளர் மோகன்.

  16. 'அதிமுகவுக்கு திமுக ஆதரவளிக்க விரும்பியது' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர்

    அதிமுகவும் திமுகவும் இணைந்து ஆட்சியமைக்கப் போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க திமுக தங்களிடம் கோரியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பேபி தெரிவித்துள்ளார்.

    தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், “தவெகவுக்கு ஆதரவு அளிப்பதற்கு முன்பு எங்கள் தலைவர்கள் ஸ்டாலினுடன் பேசினர். அதிமுக அமைக்கும் அரசை திமுக ஆதரிக்கும் என்ற திட்டம் குறித்து திமுக தரப்பில் பேசப்பட்டது. அதனை நாங்களும் ஆதரிக்க வேண்டும் என திமுக விரும்பியது.

    அதிமுக இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. திமுகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நாங்கள் திமுக கூட்டணியில் இருந்தோம். இந்த சூழலில் தனிப்பெரும் கட்சிக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்” என்று கூறினார்.

  17. விஜய் சந்திப்புக்கு பிறகு பாலகிருஷ்ணன் பேசியது என்ன?

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை விஜய் சந்தித்த பிறகு அக்கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    ''இக்கட்டான நேரத்தில் பதவியேற்க ஆதரவு அளித்தமைக்கு என்றென்றைக்கும் நன்றியோடு இருப்பேன் என விஜய் கூறினார்'' என்று பாலகிருஷ்ணன் கூறினார்.

    ”மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்குவதாக தெரிவித்த விஜய், ஆட்சியில் குறை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், திருத்திக்கொள்கிறோம் என்று விஜய் கூறினார்'' என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

    ”எந்த சூழலில் தவெக ஆதரிக்கும் முடிவை எடுத்தோம் என்பதை ஸ்டாலினை சந்தித்து தெரிவிப்போம்'' என்று கூறிய பாலகிருஷ்ணன், ''மக்கள் பிரச்னைகளில் திமுக உடன் சேர்ந்து பணியாற்றுவோம் ” என்று தெரிவித்தார்.

  18. ஆதரவளித்த கட்சிகளோடு விஜய் சந்திப்பு

    தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்களை விஜய் நேரில் சென்று சந்தித்தார்.

    தவெகவுக்கு ஆதரவளித்ததற்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.

    ஆட்சியமைக்க உரிமைக்கோரி மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்த கையோடு ஆதரவளித்த கட்சித் தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்.

  19. மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்தார் விஜய்.

    தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை இடங்கள் அவசியம் என்பதை ஆளுநர் தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் இருக்கும் தவெகவை ஆதரிப்பதாக இடதுசாரிகளும் அறிவித்துள்ளனர்.

    அதே நேரத்தில் இடதுசாரிகள் எடுக்கும் முடிவில் உடன்படுவதாக திருமாவளவன் தெரிவித்தாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீராபாண்டியன் தெரிவித்தார். ஆனால் விசிக அதிகாரப்பூர்வமாக ஆதரவு நிலைபாட்டை அறிவிக்கவில்லை

    இந்த நிலையில் மூன்றாவது முறையாக தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

  20. 'புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக எடுக்க வேண்டும்' - ஸ்டாலின்

    ''அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி புதிய ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என திமுக தலைவர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ''தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி'' என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.