"தோனியின் பாணியில் சாம்சன்" - சிஎஸ்கேவுக்கு பிரகாசமாகும் பிளேஆஃப் வாய்ப்பு

    • எழுதியவர், வித்யுத் சிவராமகிருஷ்ணன்
    • பதவி, சிஎஸ்கே முன்னாள் வீரர்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் தங்களின் ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. பேட்டிங், பௌலிங் என இரு துறைகளிலும் டெல்லி கேபிட்டல்ஸை விட சிறப்பாகச் செயல்பட்டு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது சிஎஸ்கே.

பேட்டிங் செய்ய சற்றுக் கடினமாக இருந்த ஆடுகளத்தில் 155 ரன்கள் மட்டுமே எடுத்தது கேபிட்டல்ஸ். டாஸ் வென்று அவர்கள் பேட்டிங் எடுத்த முடிவு சற்று ஆச்சர்யமானது தான். அதிலும் குறிப்பாக முந்தைய தினம் மழை பெய்திருந்தபோது! ஆனால், ஆட்டத்தை முழுமையாகப் பார்த்த பிறகு, ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்த பிறகு அது அப்படியொன்றும் தவறான முடிவு இல்லை என்றே தோன்றுகிறது. என்ன, கேபிட்டல்ஸ் அணி சுமார் 20-25 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டது.

டெல்லியின் அந்தத் தடுமாற்றத்துக்கு ஆடுகளம் மட்டும் காரணம் அல்ல. சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு கட்டத்திலுமே அவர்கள் தாக்கம் ஏற்படுத்தினார்கள். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடும் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டார். பந்துவீச்சு மாற்றங்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தன. அவர் சிறப்பாக பேட்டிங் செய்யத் தொடங்கியிருப்பது கேப்டன்சியிலும் நேர்மறையான தாக்கம் ஏற்படுத்துகிறது என்று கருதுகிறேன். அவரது பேட்டிங் ஃபார்ம், கேப்டன்சி, அணியின் செயல்பாடு அனைத்தும் ஒரு நேர்கோட்டுக்கு வந்திருக்கின்றன.

அதேபோல், கார்த்திக் ஷர்மா (31 பந்துகளில் 41 ரன்கள்) ஆடிய விதமும் நம்பிக்கை கொடுப்பதாக இருந்தது. அணி நிர்வாகம் அந்த இளம் வீரர் மீது நம்பிக்கை வைத்ததோடு மட்டுமல்லாமல், அவரை சிறப்பாகவும் கையாண்டிருக்கிறார்கள். அதற்கான பலனாக கடந்த 2 போட்டிகளிலும் அவர் நல்ல செயல்பாடுகளைக் கொடுத்திருக்கிறார்.

ஆக, சூப்பர் கிங்ஸுக்கு பெரும்பாலான விஷயங்கள் சரியாக செயல்படத் தொடங்கியிருக்கின்றன. அதனால், அடுத்தடுத்து 2 வெற்றிகளைப் பெற்று தங்களின் பிளே ஆஃப் வாய்ப்பை சற்று பலப்படுத்தியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். கடைசி 7 போட்டிகளில் 5 வெற்றிகள் வந்திருக்கின்றன. அணியின் செயல்பாடு மாறத் தொடங்கியிருக்கிறது. சூப்பர் கிங்ஸுக்கும், மூன்றாவது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸுக்கும் தற்போது இருக்கும் வித்தியாசமே 2 புள்ளிகள் தான்.

இந்த மாற்றத்துக்குக் காரணமானவர்களில் முக்கியமான இரண்டு பேர் டெல்லிக்கு எதிரான இந்தப் போட்டியில் சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கும் வழிவகுத்திருக்கிறார்கள்: அகீல் ஹொசைன் & சஞ்சு சாம்சன்.

பந்துவீச்சில் அற்புதம் நிகழ்த்தும் அகீல்

அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. தற்போது, அவர்கள் அனைத்து சூழ்நிலைகளுக்கும் ஏற்ற ஒரு பௌலிங் யூனிட்டாகத் தெரிகிறார்கள். மும்பைக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் அகீல் ஹொசைன் ஆடவில்லை. அவர் தேவைப்படவில்லை. ஆனால், இந்த மெதுவாக ஆடுகளத்தில் அவரைக் களமிறக்கினார்கள். அவரும் மிகச் சிறப்பாகப் பந்துவீசி ஆரம்பத்திலேயே தாக்கம் ஏற்படுத்தினார்.

சொல்லப்போனால் அகீல் ஹொசைன் தான் இந்த சீசன் சிஎஸ்கே-வின் பயணத்தை வெற்றியின் பக்கம் திருப்பியவர் என்றே சொல்லலாம். அவர் ஆடத் தொடங்கிய பிறகுதான் பந்துவீச்சில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்பு பவர்பிளேவில் நிறைய ரன்கள் விட்டுக்கொடுத்துக்கொண்டிருந்த அணி தற்போது பவர்பிளேவில் ஆதிக்கம் செலுத்துகிறது. நன்கு பேட்டர்களுக்கு சவால் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அவர் விக்கெட்டுகளும் எடுக்கிறார்.

ஒரு உலகத்தர பௌலர் அவர். பல டி20 தொடர்களில் விளையாடியிருக்கிறார். பவர்பிளேவில் அவரால் பெரும் தாக்கம் ஏற்படுத்த முடிகிறது. பேட்டர் எப்படி ஆடினாலும், நான் என்னுடைய பலம் என்னவோ அதைச் செய்வேன் என்ற தெளிவு அவரிடம் இருக்கிறது. பவர்பிளேவில் பந்துவீசும்போது அந்தத் தெளிவு மிகவும் முக்கியம். அதேசமயம், வெறுமனே வேகமாக மட்டும் வீசாமல் பந்தை நன்கு திருப்புகிறார். அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்தப் போட்டியில் கூட கே.எல்.ராகுல் அவுட்டான பந்து அப்படித்தான் நின்று, திரும்பி வந்தது.

இன்னொரு வகையிலும் சூப்பர் கிங்ஸில் ஒரு முக்கிய மாற்றத்துக்கு வழிவகுத்திருக்கிறார்

அகீல் ஹொசைன்- நூர் அஹமதுவின் ஃபார்ம்.

இந்த சீசன் தொடக்கத்தில் நூர் அஹமது அவ்வளவு சிறப்பாகப் பந்துவீசவில்லை. வேக வேகமாகப் பந்துவீசிக்கொண்டிருந்தார். லைன், லென்த் எதுவும் சரியாக அமையவில்லை. அவர்தான் அணியின் முன்னணி ஸ்பின்னர் என்ற நெருக்கடியை அவர் உணர்ந்ததுபோல் இருந்தது. அவரால், தனியாகவோ முன்னணி ஸ்பின்னராகவோ இதற்கு முன்பும் கூட சோபிக்க முடிந்ததில்லை. ஆப்கானிஸ்தான் அணியிலும்கூட ரஷீத் கானுடன் பந்துவீசுவதால் அவரால் தாக்கம் ஏற்படுத்த முடிகிறது. ஆனால், இந்த ஐபிஎல் சீசன் தொடக்கத்தில் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

அதுவே அகீல் ஹொசைன் வந்ததில் இருந்து நூர் அஹமதுவின் செயல்பாடு மாறியிருக்கிறது. நெருக்கடி ஏதும் இல்லாமல் அவர் பந்துவீசுவது போல் தெரிகிறது. இப்போது தொடர்ச்சியாக போட்டிகளில் விக்கெட்டுகள் வீழ்த்திக்கொண்டிருக்கிறார்.

மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களிடம் கேப்டன்கள் எதிர்பார்ப்பது அதைத்தான். ரன்கள் அதிகம் கொடுத்தாலும் கூட விக்கெட்டுகள் வீழ்த்தவேண்டும். அதை கடந்த சில போட்டிகளாக நூர் செய்கிறார். ரன்கள் அதிகம் கொடுக்காமலும் கூட. நித்திஷ் ராணா, கருண் நாயர் என இரண்டு முன்னணி பேட்டர்களை தன்னுடைய அடுத்தடுத்து ஓவர்களில் வெளியேற்றி கேபிட்டல்ஸ் மிடில் ஆர்டரில் ஒரு பெரிய ஓட்டை ஏற்படச் செய்தார் நூர் அஹமது.

இந்த ஐபிஎல் சீசனில் ஸ்பின்னர்கள் பந்துவீச்சை பாரபட்சம் பார்க்காமல் பேட்டர்கள் அடிக்கிறார்கள். ஆனால், அப்படியிருக்கும்போது நூர் அஹமது மற்றும் அகீல் ஹொசைன் ஆகியோரின் இப்படியான செயல்பாடு ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.

தோனியின் பாணியில் சாம்சன்

சஞ்சு சாம்சன் - சூப்பர் கிங்ஸின் இந்த சீசனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இன்னொரு வீரர். அவர் பெரிய இன்னிங்ஸ் ஆடினாலே சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறுகிறது. தற்போது, டெல்லிக்கு எதிராக இன்னொரு ஆட்ட நாயகன் செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார் அவர்.

பேட்டிங் செய்வது கடினமாக இருந்த ஆடுகளத்தில் கடைசி வரை களத்தில் இருந்து (52 பந்துகளில் 87 ரன்கள்) சூப்பர் கிங்ஸை வெற்றி பெற வைத்திருக்கிறார். இந்தப் போட்டியில் அவர் காட்டியது மிகவும் புத்திசாலித்தனமான ஆட்டம். ஒருகட்டத்துக்கு மேல் கிரிக்கெட் என்பது கழுத்துக்கு மேல் ஆடப்படும் ஆட்டம் - அதாவது மூளையைப் பயன்படுத்துவது. சாம்சன் இந்தப் போட்டியில் அதை நன்கு பயன்படுத்தியிருக்கிறார்.

ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்துகொண்டு பவர்பிளேவில் விக்கெட்டைக் காப்பற்றுவதைப் பிரதானப்படுத்தினார் சாம்சன். அதன்பிறகு, தான் எந்த பௌலரை இலக்கு வைத்து ஆடவேண்டும் என்பதிலும் அவர் தெளிவாக இருந்தார். குல்தீப் யாதப் மற்றும் டி.நடராஜன் ஆகியோரின் பந்துவீசச்சைக் குறிவைத்து பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசினார். ஆனால், அதற்கு முன் லுங்கி எங்கிடி பந்துவீசும்போது அதை அவர் சீண்டவில்லை. மிகவும் சிறப்பாகக் கணக்கிட்டு ஆடப்பட்ட இன்னிங்ஸ் அது.

மஹேந்திர சிங் தோனியும் இதைப் பல ஆண்டுகள் செய்தார். ஆடுகளத்துக்கு ஏற்ப, அணியின், போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து ஆடுவதில் அவர் தேர்ந்தவர். அதைப் பல வருடங்கள் செய்திருக்கிறார். அதையே தான் தற்போது சாம்சனும் செய்துகொண்டிருக்கிறார்.

இதுதான் சாம்சனிடம் சமீபத்தில் வெளிப்படும் பெரிய மாற்றம். முன்னெல்லாம் சில போட்டிகளில் அதிரடியாக ஆடுவார். அவ்வளவுதான். அதன்பிறகு அப்படியே அந்த வேகம் குறைந்துவிடும். ஆனால், தற்போது சீரான செயல்பாட்டைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். மேலும், இதுபோன்ற போட்டிகளில் தன்னுடைய விக்கெட்டின் மதிப்பை உணர்ந்து கடைசி வரை தான் நின்று விளையாடுவது அவசியம் என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுகிறார். டி20 உலகக் கோப்பையில் இருந்தே அவர் வேறொரு வீரராகத் தெரிகிறார்.

அவர் இதற்கு முன்னும் இப்படியான செயல்பாட்டைக் காட்டியிருக்கிறார். ஆனால், அது சீராக வெளிப்பட்டதில்லை. இம்முறை அந்த முதிர்ச்சி நிறைந்த செயல்பாடுகளைத் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறது. சஞ்சு சாம்சன் - சூப்பர் கிங்ஸுக்கு தங்கம் போல் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். அணி நிர்வாகம் அவரை டிரேட் செய்தது ஐபிஎல் வரலாற்றின் மிகச் சிறந்த தருணங்களுள் ஒன்றாக இருக்கும்.

(இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000 அண்டர் 19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு