தமிழ்நாடு கைடன்ஸ் நிறுவனத்தில் என்ன நடக்கிறது? ஊழியர்கள் வெளியேற்றம், முதலீட்டு ரகசியங்கள் கசிந்ததாக எழுந்த சர்ச்சை

பட மூலாதாரம், Keerthana4VNR/X
- எழுதியவர், யாழினியன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
தமிழ்நாட்டின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் கைடன்ஸ் (Guidance Tamil Nadu) நிறுவனத்தில் பெருமளவில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், ஆந்திர பிரதேசத்திற்கு முதலீடு தொடர்பான ரகசியத் தகவல்கள் கசிந்ததாகவும் வெளியான உறுதி செய்யப்படாத ஊடகச் செய்திகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்நிறுவனம் அவற்றை மறுத்து விளக்கமளித்துள்ளது.
கைடன்ஸ் நிறுவனத்தில் 2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பெருமளவில் ஊழியர்கள் ராஜிநாமா செய்யவில்லை என்று தெரிவித்துள்ள அந்த நிறுவனம், ஊழியர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக, உயர்கல்வி, சிறந்த வேலைவாய்ப்புகள், இடமாற்றம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாகப் பணியில் இருந்து விலகுவது இயல்பான ஒன்று என்று கூறியுள்ளது.
மேலும், பிற நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைத் தேடிச் செல்லும் ஊழியர்களின் தொழில்முறை விருப்பங்களைத் தாங்கள் மதிப்பதாகவும் கைடன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தொடர்ந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பமான மாநிலமாக இருந்து வருவதாகவும், முதலீடுகளை ஈர்ப்பதில் அண்டை மாநிலங்களுடன் ஆரோக்கியமான போட்டி நிலவுவதாகவும் அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திர அமைச்சரின் பதிவும் அமைச்சர் கீர்த்தனாவின் பதிலும்
இந்த சர்ச்சைகளுக்கு நடுவே ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் வெள்ளிக்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில், "ஆந்திர பிரதேசத்தின் மிக ரகசியமான முதலீட்டு உத்தி கசிந்துவிட்டது. அது, 'முதலீட்டாளர்களுக்கு அன்றைய தினமே பதிலளிப்பதுதான்.' தாராளமாக நீங்களும் இதைப் பின்பற்றலாம்!" எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில், "விரைவான பதில்கள் நல்லதுதான். ஆனால், அதைவிட வேகமான செயல்பாடு? இன்னும் சிறப்பு! தமிழ்நாடு, இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள வெற்றி முதலீடு மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான மாநாடு 2026ஐ நடத்தத் தயாராகி வருகிறது!"
"எங்களது நோக்கம் தெளிவானது: முதலீட்டு உறுதிமொழிகள், அவற்றைச் செயல்படுத்துவதற்கான இலக்குகள், களத்தில் தொடங்கப்படும் திட்டங்கள் மற்றும் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள். முதலமைச்சர் ஜோசப் விஜயின் தலைமையில், முதலீட்டு உறுதிமொழிகளை உறுதியான செயல்பாடுகளாக மாற்றி, களத்தில் கண்கூடான முடிவுகளை எட்டுவதில் கவனம் செலுத்தி வருகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
என்ன சர்ச்சை?

பட மூலாதாரம், www.investingintamilnadu.com
கடந்த சில நாட்களாக கைடன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், சிலர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் பல்வேறு ஊடகங்களில் உறுதி செய்யப்படாத செய்திகள் வெளியாகின.
அதேபோல, நிறுவனத்தில் பணியாற்றிய சிலர் ஆந்திர பிரதேச அரசுக்கு முதலீடு தொடர்பான ரகசியத் தகவல்களை வழங்கியதாகவும், அவர்களில் 3 பேர் ஆந்திர பிரதேசத்தின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பில் பணியில் சேர்ந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும், கைடன்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகியவர்கள் ஆந்திர பிரதேசம் மட்டுமின்றி, கர்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்புகளிலும் பணியில் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், பெரும்பாலான ஊழியர்கள் ஜூன் மாதமே பணியில் இருந்து விலகியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுக்கு 29.06.2026 அன்றே பணிவிடுவிப்புக் கடிதம் (Relieving Letter) வழங்கப்பட்டதாகவும், தற்போது அவர்கள் தங்களது அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலங்களில் பணியாற்றுவதைத் தவறாகச் சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்ட கைடன்ஸ் நிறுவனத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட ஊழியர்கள், திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திர பிரதேசத்திற்குச் செல்வதற்குத் தற்போதைய அரசின் தொழில்துறைக் கொள்கைகளும் அணுகுமுறையுமே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கைடன்ஸ் நிறுவனத்தின் வரலாறு என்ன?
தமிழ்நாட்டுக்கு வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், 1992ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கைடன்ஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்களுக்கு வழிகாட்டுவது, முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, தொழில் தொடங்குவதற்கான அனுமதிகளைப் பெறுவதில் உதவுவது, நிலம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்ட பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்கிறது.
தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டுக் கொள்கைகளை உலக அளவில் எடுத்துச் செல்வதிலும், சர்வதேச நிறுவனங்களை மாநிலத்துக்கு அழைத்து வருவதிலும் இந்த அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதற்காகப் பல்வேறு முதலீட்டாளர் சந்திப்புகள், உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள் உள்ளிட்ட நிகழ்வுகளையும் தமிழ்நாடு அரசு நடத்தியுள்ளது.

பட மூலாதாரம், TRB Rajaa/X
அரசியல் கட்சிகள் விமர்சனம்
கைடன்ஸ் விவகாரம் தொடர்பாக, கடந்த திமுக ஆட்சியின் தொழில்துறை முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கைடன்ஸ் நிறுவனம் வெளியிட்ட விளக்கத்தைச் சுட்டிக்காட்டியுள்ள டி.ஆர்.பி. ராஜா, பெருமளவில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக வெளியான செய்திகளுக்கும், பெருமளவில் ஊழியர்கள் தாமாக முன்வந்து ராஜிநாமா செய்ததாகக் கூறுவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"கைடன்ஸ் நிறுவனத்தின் விளக்கத்தில் பெருமளவிலான ராஜிநாமாக்கள் நடைபெறவில்லை என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊடக செய்திகளில் பெருமளவிலான பணிநீக்கங்கள் குறித்துப் பேசப்பட்டதாக" அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டு வளர்ச்சிக்காகப் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த அதிகாரிகளைக் கொண்ட நிறுவனத்தை அரசியல் சர்ச்சைக்குள் இழுப்பது வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசுகள் மாறினாலும், கைடன்ஸ் ஊழியர்கள் அரசியல் சார்பின்றித் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் டி.ஆர்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது சமூக ஊடக பதிவில், "முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாத ஒப்பந்த அடிப்படையிலான நடுத்தர நிலை ஊழியர்கள் சிலரால் ஒரு மாநிலத்தின் முதலீட்டு வளர்ச்சியையே தீர்மானிக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலீடுகள் தொடர்பான முடிவுகளில் கைடன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, தொழில்துறைச் செயலர், தொழில்துறை அமைச்சர், முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பு, அமைச்சரவை ஆகியவற்றுக்கு முக்கியப் பொறுப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மாநிலத்தில் முதலீடு செய்வதா அல்லது வேறு மாநிலத்திற்குச் செல்வதா என்பதை நிறுவனங்கள் முடிவு செய்யும்போது, அந்த மாநிலத்தின் கொள்கைகள், உள்கட்டமைப்பு, சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், TNDIPR
ரகசிய தகவல்கள் இருக்கின்றனவா? முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கூறுவது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி. சிவகாமி, மாநில அரசின் பல்வேறு துறைகளில் ரகசியமாகப் பராமரிக்கப்பட வேண்டிய ஆவணங்களும் தகவல்களும் இருப்பதாகக் கூறுகிறார். இதற்கு அவர் நிதிநிலை அறிக்கையை உதாரணமாகக் குறிப்பிடுகிறார்.
நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவுள்ள முக்கியமான சலுகைகள் மற்றும் சீர்திருத்தங்கள் முன்கூட்டியே வெளியானால், மற்ற மாநிலங்கள் அதைவிடக் கூடுதலான சலுகைகளை அறிவித்து முதலீட்டாளர்களைத் தங்கள் மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார் அவர்.
அதேபோன்று, தொழில்துறையிலும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகைகள், நிலத்தின் விலை, இலவச நிலம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், இத்தகைய தகவல்கள் மற்ற மாநிலங்களுக்குச் சென்றால் முதலீடுகளை ஈர்ப்பதில் போட்டி ஏற்படலாம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
கைடன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுவோர் அரசுப் பணியாளர்கள் அல்லாதிருந்தாலும், ரகசியத் தகவல்களைப் பாதுகாப்பதற்கான சட்டப் பொறுப்புகள் அவர்களுக்கும் இருப்பதாக சிவகாமி கூறுகிறார்.
"அவர்களுக்கு அலுவலக ரகசியக் காப்புச் சட்டம் (Official Secrets Act), தகவல் தொழில்நுட்பச் சட்டம் (Information Technology Act) உள்ளிட்ட சட்டங்களின் கீழ் பொருந்தக்கூடிய கடமைகள் உள்ளன. அத்தகைய தகவல்களை அனுமதியின்றிப் பிறருக்குப் பகிர்ந்திருந்தால் அது சட்டப்படி குற்றமாக இருக்கலாம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, மற்றொரு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான தனவேல், கைடன்ஸ் ஊழியர்கள் வேறு மாநிலங்களில் பணியில் சேர்ந்திருப்பதை மட்டும் வைத்து அவர்கள் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்ததாகக் கருத முடியாது என்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது முதல் ஆட்சிக் காலத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தீவிரமாகச் செயல்பட்டதாகவும், அப்போது ஸ்ரீ சிட்டி (Sri City) உள்ளிட்ட தொழில் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்ததாகவும் கூறுகிறார்.
அந்தக் காலகட்டத்தில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகப் பெரிய அளவிலான சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், தற்போதும் அதேபோன்ற முயற்சிகள் ஆந்திர பிரதேசத்தில் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
தமிழ்நாட்டிலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், முதலீடுகள் வேறு மாநிலங்களுக்குச் செல்கின்றன என்றால் அதற்கான காரணங்களைத் தொழில் கொள்கைகள், சலுகைகள், முதலீட்டுச் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

முதலீட்டாளர்களுடன் முக்கியமான பேச்சுவார்த்தைகளை அமைச்சர்கள், தொழில்துறைச் செயலர் மற்றும் மூத்த அதிகாரிகள் நேரடியாக மேற்கொள்வார்கள் என்றும், அத்தகைய முடிவுகள் சில நடுத்தர நிலை ஊழியர்களின் தகவல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.
மற்ற மாநிலங்களின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்புகளில் பணியாற்றுவதற்காக ஊழியர்கள் செல்வது இயல்பான வேலைவாய்ப்பு நகர்வுதான் என்றும், அவர்கள் தங்களது முந்தைய அனுபவத்தைப் பயன்படுத்தி அதே நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றலாம் என்றும் அவர் விளக்குகிறார். எனவே, வேறு மாநிலங்களில் பணியில் சேர்ந்திருப்பதை மட்டும் வைத்து அவர்களை உளவாளிகள் என்றோ, தமிழ்நாட்டுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் என்றோ முத்திரை குத்த முடியாது என்றார்.
மேலும், தகவல் கசிவு குறித்துச் சந்தேகம் இருந்தால் அரசு முறையான விசாரணை நடத்தி, அதில் தொடர்புடையவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும், இதுவரை விசாரணை முடிவுகள் எதுவும் பொதுவில் வெளியிடப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
முதலீட்டாளர் மாநாடு: தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி
இதற்கிடையே, தமிழ்நாடு அரசு வரும் நவம்பர் 25ஆம் தேதி 2வது வெற்றி முதலீடு மற்றும் திட்டச் செயலாக்க மாநாட்டை நடத்தவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. முதலீட்டு உறுதிமொழிகளை நடைமுறைத் திட்டங்களாக மாற்றுவதையும், தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த மாநாட்டின் தேவை குறித்து பாஜக மூத்த தலைவரும் தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து தொழில் முதலீடுகள் வேறு மாநிலங்களுக்குச் செல்வதாகச் செய்திகள் வெளியாகும் நிலையில், மீண்டும் ஒரு முதலீட்டாளர் மாநாடு நடத்துவதால் என்ன பயன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய முதலீடுகளை ஈர்ப்பதைவிட ஏற்கெனவே உள்ள தொழில் நிறுவனங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்கு தமிழ்நாடு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இதுவரை அறிவிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் எத்தனை உண்மையான தொழிற்சாலைகளாகவும் வேலைவாய்ப்புகளாகவும் மாறியுள்ளன என்பதை அரசு விளக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை பிபிசி தமிழ் தொடர்புகொள்ள முயன்றபோது அவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. கைடன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான தீபக் ஜேக்கப்பையும் தொடர்புகொள்ளவும் பிபிசி தமிழ் முயன்றது. ஆனால் அவரும் பதிலளிக்கவில்லை.
தமிழ்நாடு தொழில்துறைச் செயலர் விஜயகுமார், பிபிசி தமிழின் கேள்விகளைப் பெற்றுக்கொண்டு, தற்போது பயணத்தில் இருப்பதால் பயணம் முடிந்து திரும்பியதும் பதிலளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து பதில்கள் கிடைத்தவுடன் இந்தச் செய்தியில் அவை சேர்க்கப்படும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































