கரையைக் கடக்கும் அக்வான் புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சமீபத்திய தகவல்கள்

பட மூலாதாரம், India Meteorological Department/X
வங்கக்கடலில் உருவான அக்வான் புயல், வடக்கு ஆந்திரப் பிரதேசம் – தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதியில் கோபால்பூர் அருகே கரையைக் கடந்து வருகிறது. புயலின் வெளிப்புற மழை மேகங்கள் ஏற்கெனவே நிலப்பகுதிக்குள் நுழைந்துள்ள நிலையில், அதன் மையம் கரையைக் கடக்கும் செயல்முறை நவம்பர் 20ஆம் தேதி முற்பகலில் நடைபெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் தீவிரப் புயல் நிலையிலிருந்து வலுவிழந்து புயலாக மாறியுள்ளது. நவம்பர் 20ஆம் தேதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தேசிய அறிக்கையின்படி, அது வடக்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது அதன் மையம் களிங்கப்பட்டினத்திலிருந்து கிழக்கே சுமார் 70 கி.மீ., ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து தெற்கே சுமார் 110 கி.மீ. தொலைவில் இருந்தது.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்; இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ. வரை அதிகரிக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் கரையைக் கடந்த பிறகு படிப்படியாக வலுவிழக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் கனமழை: ஸ்ரீகாகுளத்தில் 16 செ.மீ. பதிவு
அக்வான் புயலின் தாக்கத்தால் வடக்கு ஆந்திரப் பிரதேசத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
ஆந்திரப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக இயக்குநரும், நிகழ்நேர ஆளுமை அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியுமான பிரகர் ஜெயின் வெளியிட்ட தகவலின்படி, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இச்சாபுரம், கவிட்டி, சோம்பேட்டை, கஞ்சிலி, மந்தசா, பலாசா, வஜ்ரபுகொத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.
இச்சாபுரத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். கஞ்சிலி, கவிட்டியில் தலா 10 செ.மீ., பலாசாவில் 9.9 செ.மீ., சோம்பேட்டையில் 9.2 செ.மீ., வஜ்ரபுகொத்தூரில் 4.9 செ.மீ. மழை பதிவானதாகவும் அவர் கூறினார்.
வடக்கு ஆந்திரப் பிரதேச மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஸ்ரீகாகுளம் மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பிரகர் ஜெயின் அறிவுறுத்தியுள்ளார்.

பட மூலாதாரம், AFP via Getty Images
தமிழ்நாட்டில் புயலின் தாக்கம் என்ன?
அக்வான் புயல் ஆந்திரப் பிரதேசம் – ஒடிசா கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த சில நாள்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நவம்பர் 19ஆம் தேதி வெளியிட்ட ஏழு நாள் முன்னறிவிப்பின்படி, நவம்பர் 20ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழ்நாட்டுப் பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும்.
நவம்பர் 21ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலைப் பகுதிகள், வட கடலோரத் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 22ஆம் தேதி கடலோரத் தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோரத் தமிழகத்தை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 23 முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு: மாவட்ட வாரியான முன்னறிவிப்பு
நவம்பர் 23ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 23: கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. ஏனைய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 24: கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நவம்பர் 25: தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானிலை எப்படி இருக்கும்?
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று (நவம்பர் 20) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம் என்றும், பொதுவாக வறண்ட வானிலை நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை: இயல்பைவிட 13 சதவிகிதம் குறைவு
அக்டோபர் 1 முதல் நவம்பர் 19ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சராசரியாக 259.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் இயல்பாகப் பெய்ய வேண்டிய மழை அளவு 298.9 மி.மீ. ஆகும். இதன்படி, வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 13 சதவிகிதம் குறைவாகப் பதிவாகியுள்ளது.
மாவட்ட அளவில் தஞ்சாவூரில் இயல்பைவிட 57 சதவிகிதமும், செங்கல்பட்டில் 50 சதவிகிதமும், புதுச்சேரியில் 47 சதவிகிதமும், திருச்சிராப்பள்ளியில் 41 சதவிகிதமும், காஞ்சிபுரத்தில் 40 சதவிகிதமும் மழை குறைவாகப் பதிவாகியுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா 39 சதவிகிதம் குறைவாக மழை பெய்துள்ளது.
மாறாக, கோயம்புத்தூரில் இயல்பைவிட 36 சதவிகிதமும், ஈரோட்டில் 27 சதவிகிதமும், திருவள்ளூரில் 17 சதவிகிதமும், நாமக்கல்லில் 14 சதவிகிதமும் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்கள் நவம்பர் 19ஆம் தேதி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
அக்வான் புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையைக் கடந்த பிறகு கடல் நிலை படிப்படியாகச் சீராகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலின் வடக்குப் பகுதிகளில் நவம்பர் 20ஆம் தேதி வரையிலும், மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 21ஆம் தேதி காலை வரையிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கடல் நிலை மற்றும் துறைமுகங்களில் வெளியிடப்படும் எச்சரிக்கைகளையும் மீனவர்கள் கவனிக்க வேண்டும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































