சீனாவுடன் அமெரிக்கா, ரஷ்யாவின் நெருக்கம் அதிகரிப்பது இந்தியாவின் நலன்களை பாதிக்குமா?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் முத்தரப்பு உச்சி மாநாட்டை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்மொழிந்துள்ளார்.
அக்டோபர் 9ஆம் தேதி டிரம்புடன் 90 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடியபோது, அமெரிக்கா, சீனா ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முத்தரப்புக் கூட்டத்தை நடத்துவதற்கான யோசனையை அவர் பரிந்துரைத்தார்.
இரண்டாம் உலகப் போரின்போது உருவான கூட்டணி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டதுடன் இந்த முயற்சியை ரஷ்யா தொடர்புப்படுத்துகிறது.
சர்வதேச அரங்கில் தனக்கான அந்தஸ்தைப் பெறுவதும், யுக்ரேன் விவகாரத்தில் தனது நிபந்தனைகளுக்கு ஏற்பத் தீர்வைக் காண்பதும் ரஷ்யாவின் நோக்கமாகக் கூறப்படுகிறது.
இதை ஒரு புதிய யால்டா ஒப்பந்தமாக (Yalta Accord) புதின் பார்க்கிறார் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது, யுக்ரேனையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, வல்லரசுகள் மட்டுமே இணைந்து ஐரோப்பாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஓர் ஏற்பாடு.
ஆனால், புதிய யால்டா ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுவது முன்கூட்டியே எடுக்கப்படும் முடிவு என்று ரஷ்ய நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஒட்டுமொத்த நகர்விலும் சீனாவின் பங்கு மிகவும் முக்கியமானது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சீன அதிபர் ஷி ஜின்பிங் நேரடியாக விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றார்.
ஆனால், புதினை வரவேற்கக் கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளே அனுப்பப்பட்டனர்.
வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போட்டியை ஒழுங்குபடுத்தும் விதமாக புதிய 'ஷென்சென் சர்வதேச ஒழுங்கு' என்ற கருத்தைச் சீன நிபுணர்கள் முன்வைத்து வருகின்றனர்.
இந்த மூன்று நாடுகளும் சந்தித்துள்ள நிலையில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய முத்தரப்புக் கூட்டமைப்பான ஆர்ஐசி (RIC) பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆர்ஐசி கூட்டமைப்பை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இந்தியா இதுகுறித்து இன்னும் தெளிவான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
இருப்பினும், இந்தியாவுக்கு ஏற்படும் நன்மைகளும் பாதிப்புகளும் சமமாக இருக்காது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு மேம்படுவது இந்தியாவுக்குப் பயனளிக்கலாம். ஆனால், சீனாவுடன் அமெரிக்கா ஓர் ஒப்பந்தத்தை எட்டுவது இந்தியாவின் நலன்களுக்குப் பாதகமாக அமையக்கூடும்.
ரஷ்ய நிபுணர் ஆண்ட்ரே கோர்டுனோவின் கருத்துப்படி, இந்த மாநாடு உலகின் முக்கிய வல்லரசுகளில் ஒன்றாக ரஷ்யா தொடர்ந்து இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
ரஷ்ய அதிபர் மாளிகை அதிகாரியான உஷாகோவும், இந்தச் சந்திப்பை இரண்டாம் உலகப் போரின்போது உருவான கூட்டணி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டதுடன் ஒப்பிட்டுள்ளார்.
இருப்பினும், எந்தவொரு நாடும் தனது அமைப்பை மற்ற நாடுகளின் மீது திணிக்க முயற்சிக்கக் கூடாது என்று ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இது இந்தியாவுக்குப் பின்னடைவா?
OP ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் மோட்வானி-ஜடேஜா அமெரிக்க ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநரும் பேராசிரியருமான சி. ராஜாமோகன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே ஒரு முத்தரப்பு உறவை உருவாக்க புதின் விரும்புவதாகக் கூறுகிறார்.
ரஷ்யாவை மீண்டும் ஒரு முக்கியமான உலக வல்லரசாக நிலைநிறுத்துவது, யுக்ரேன் விவகாரத்தில் தனக்குச் சாதகமான தீர்வைப் பெறுவது, சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது, அமெரிக்காவுடன் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை இதன் நோக்கங்களாகும்.
"அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மோதல் எப்போதும் நீடிக்கும் என்றோ, மாஸ்கோவுடனான இந்தியாவின் நட்பு ரஷ்யாவின் பரந்துபட்ட மூலோபாய முன்னுரிமைகளைத் தீர்மானிக்கும் என்றோ இந்தியா கருதக் கூடாது" என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய கட்டுரையில் பேராசிரியர் ராஜாமோகன் குறிப்பிட்டுள்ளார்.
"ரஷ்யா தனது சொந்த நலன்களின் அடிப்படையிலேயே செயல்படுகிறது; யார் தனது நண்பர்கள் என்பதைப் பொறுத்து அதன் முடிவுகள் அமைவதில்லை. எண்ணெய், பாதுகாப்பு, அணுசக்தி ஒத்துழைப்பு மற்றும் கடந்தகால ராஜதந்திர ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தியா ரஷ்யாவுடனான உறவை அணுகுகிறது. ஆனால், சர்வதேச அரங்கில் தனது அந்தஸ்து, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வரம்புகள் தொடர்பாக ரஷ்யாவுக்கு இருக்கும் பரந்துபட்ட கவலைகளை இந்தியா கவனிக்கத் தவறுகிறது." என்றும் அவர் கூறுகிறார்.
"முன்பு ரஷ்யா-இந்தியா-சீனா ஒத்துழைப்பை மாஸ்கோ ஆதரித்தது, ஆனால், இப்போது அமெரிக்கா மற்றும் சீனாவுடனான இணைந்த ஒரு புதிய கூட்டமைப்பில் அதிக வாய்ப்புகளைக் காண்கிறது. இதன் பொருள், மாஸ்கோவின் கூட்டாளிகள் அதன் தேவைகள் மற்றும் உலகளாவிய அதிகார சமநிலைக்கு ஏற்ப மாறக்கூடும். வரலாற்று நட்புறவுகள் மட்டுமே அதன் முடிவுகளுக்கு அடிப்படையாக இருக்காது." என ராஜாமோகன் எழுதுகிறார்.
"சீனாவைச் சார்ந்திருப்பதற்கு மாற்று வழிகளை ரஷ்யா தேடுகிறது. மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களைச் சமாளிக்கச் சீனாவின் ஆதரவு மாஸ்கோவுக்கு உதவியுள்ளது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சமநிலையின்மை அதிகரித்துள்ளது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள், ரஷ்யாவின் பேரம் பேசும் வலிமையை அதிகரிக்க வாய்ப்பளிக்கும்" என்கிறார் அவர்.
"இதனால், சீனாவிடமிருந்து ரஷ்யா விலகிவிடும் என்று அர்த்தமல்ல. அமெரிக்கா - ரஷ்யா இடையிலான நெருக்கத்தை இந்தியா ஒரு துரோகமாகப் பார்க்கக் கூடாது. சீனாவைச் சார்ந்திருப்பதை ரஷ்யா குறைத்துக்கொண்டு, மேற்கத்திய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்தினால் அது இந்தியாவுக்குப் பயனளிக்கலாம். எனவே, ரஷ்யாவின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, அவை தனது முலோபாய சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இந்தியா ஆராய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
"பனிப்போர் காலத்து உணர்வுகளின் அடிப்படையில் இந்த முயற்சியை இந்தியா மதிப்பிடக் கூடாது என்றும், தனது உத்திசார் நலன்களின் அடிப்படையில் அணுக வேண்டும் என்றும் ராஜாமோகன் வலியுறுத்துகிறார்.
சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொள்ளும் ரஷ்யா இந்தியாவுக்குப் பயனளிக்கலாம். ஆனால், இந்த மூன்று வல்லரசுகளுக்கு இடையே ஏற்படும் குறிப்பிட்ட ஒப்பந்தங்கள், உருவாகும் புதிய உலக ஒழுங்கில் இந்தியாவின் இடம் குறித்த கேள்விகளையும் எழுப்பலாம்" என்கிறார் அவர்.
RIC கூட்டமைப்புக்கு என்ன ஆகும்?
1998ஆம் ஆண்டு டிசம்பரில், அப்போதைய ரஷ்ய பிரதமர் யெவ்ஜெனி பிரிமகோவ், புதுடெல்லியில் ரஷ்யா - இந்தியா - சீனா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய உத்திசார் முத்தரப்புக் கூட்டமைப்பை முன்மொழிந்தார். அந்தக் காலகட்டத்தில், கொசோவோவில் நேட்டோ ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.
RIC நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற முதல் கூட்டம் 2003-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன்பிறகு, 2021-ஆம் ஆண்டு வரை சுமார் 19 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பல்தரப்பு உறவுகளைப் பேணும் தனது கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியா RIC கூட்டமைப்பைப் பயன்படுத்தியது. ஆனால், சீனாவுடனான நம்பிக்கையின்மை தொடர்ந்து நீடித்தது.
2025ஆம் ஆண்டு மே மாதம், RIC கூட்டமைப்பை மீண்டும் செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்தார். 2026ஆம் ஆண்டு ஜனவரியில், இந்தக் கூட்டமைப்பை மீண்டும் கொண்டுவர ரஷ்யா நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறினார். சீனாவும் இந்தக் கூட்டமைப்பை மீண்டும் செயல்படுத்த ஆதரவளிக்கிறது. ஆனால், இந்தியா இதில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
சீனா தொடர்பாக இந்தியாவுக்கு மூன்று முக்கியக் கவலைகள் உள்ளன. முதலாவது, சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டம். இது இந்தியாவின் இறையாண்மைக் கவலைகளுடன் முரண்படுகிறது. இரண்டாவது, பயங்கரவாதம் தொடர்பான விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராகச் சீனா எடுக்கும் நிலைப்பாடு. மூன்றாவது, ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்து வரும் நெருக்கம். இது இந்த அதிகாரச் சமநிலையில் இந்தியாவைத் தனிமைப்படுத்தக்கூடும்.
பிரிமகோவ் முன்மொழிந்த RIC கூட்டமைப்பு, எந்தவொரு ஒற்றை வல்லரசின் ஆதிக்கத்தையும் எதிர்க்கும் ஓர் அமைப்பாக இருந்தது. அதில் இந்தியாவுக்கும் சமமான முக்கியத்துவம் இருந்தது. ஆனால், தற்போது ஷென்சென் நகரில் நடைபெறும் சந்திப்பு மூன்று அணு ஆயுத வல்லரசுகளுக்கான ஓர் அரங்காக மாறியுள்ளது. இதில் இந்தியா இடம்பெறவில்லை. இந்தியாவை அமெரிக்காவுடன் நெருங்க விடாமல் தடுப்பதற்கான ஒரு முயற்சியாகவும் RIC கூட்டமைப்பை மீண்டும் செயல்படுத்தும் ரஷ்யாவின் நடவடிக்கை இருக்கலாம்.
ஐரோப்பா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவற்றை உள்ளடக்காமல், உலகை வெவ்வேறு அதிகார மண்டலங்களாகப் பிரிப்பது சாத்தியமில்லை என்று ரஷ்ய ஆய்வாளர் மிகைல் ட்ரைஸ் நம்புகிறார்.
இந்தியா தனிமைப்படுத்தப்படும் அபாயம் உள்ளதா?
மூன்று வல்லரசுகளும் சீனாவை மேலும் வலுப்படுத்தும் ஒரு ஒப்பந்தத்தை எட்டக்கூடும் என்பதே இந்தியாவின் மிகப்பெரிய கவலையாகும். சீனாவுடனான எல்லைப் பிரச்னை ஒரு தீவிரமான பிரச்னையாகவே நீடிக்கிறது என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஏற்கெனவே கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பதற்றம் தணிந்தால், ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளின் அழுத்தம் குறையலாம். இது இந்தியாவுக்கு ராஜதந்திர மற்றும் பொருளாதார ரீதியில் நிவாரணம் அளிக்கக்கூடும்.
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் கன்வால் சிபல், இந்தச் சந்திப்பு குறித்து இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார். டிரம்பின் நிலைப்பாட்டை நம்ப முடியாது என்பதே அவரது கருத்து. சீனா மீது நம்பிக்கையின்மை இருந்தாலும், பல்வேறு விவகாரங்களில் இந்தியா இன்னும் சீனாவைச் சார்ந்துள்ளது.
2025-26 நிதியாண்டில் இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் 151.1 பில்லியன் டாலராக இருந்தது. இதில், சீனாவிலிருந்து இந்தியா செய்த இறக்குமதி 131.63 பில்லியன் டாலராக இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை 112.16 பில்லியன் டாலர் என்ற வரலாறு காணாத அளவை எட்டியது.
2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், வர்த்தகப் பற்றாக்குறை 83 பில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
இந்தியாவின் மொத்த இறக்குமதியில் சீனாவின் பங்கு சுமார் 17 சதவீதமாக உள்ளது.சிறப்பு வகை உரங்களுக்கான இந்தியாவின் தேவையில் சுமார் 80 முதல் 95 சதவீதம் சீனாவைச் சார்ந்துள்ளது.இதேபோல், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் உரங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியா ரஷ்யாவையும் கணிசமாகச் சார்ந்துள்ளது.
இந்தியா தனிமைப்படுத்தப்படும் அபாயம் உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
மூன்று வல்லரசுகளும் சீனாவை மேலும் வலுப்படுத்தும் ஒரு ஒப்பந்தத்தை எட்டக்கூடும் என்பதே இந்தியாவின் மிகப்பெரிய கவலையாகும். சீனாவுடனான எல்லைப் பிரச்னை ஒரு தீவிரமான பிரச்னையாகவே நீடிக்கிறது என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஏற்கெனவே கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பதற்றம் தணிந்தால், ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளின் அழுத்தம் குறையலாம். இது இந்தியாவுக்கு ராஜதந்திர மற்றும் பொருளாதார ரீதியில் நிவாரணம் அளிக்கக்கூடும்.
இந்திய வெளியுறவு முன்னாள் செயலர் கன்வால் சிபல், இந்தச் சந்திப்பு குறித்து இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார். டிரம்பின் நிலைப்பாட்டை நம்ப முடியாது என்பதே அவரது கருத்து. சீனா மீது நம்பிக்கையின்மை இருந்தாலும், பல்வேறு விவகாரங்களில் இந்தியா இன்னும் சீனாவைச் சார்ந்துள்ளது.
2025-26 நிதியாண்டில் இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் 151.1 பில்லியன் டாலராக இருந்தது. இதில், சீனாவிலிருந்து இந்தியா செய்த இறக்குமதி 131.63 பில்லியன் டாலராக இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை 112.16 பில்லியன் டாலர் என்ற வரலாறு காணாத அளவை எட்டியது.
2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், வர்த்தகப் பற்றாக்குறை 83 பில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
இந்தியாவின் மொத்த இறக்குமதியில் சீனாவின் பங்கு சுமார் 17 சதவிகிதமாக உள்ளது. சிறப்பு வகை உரங்களுக்கான இந்தியாவின் தேவையில் சுமார் 80 முதல் 95 சதவிகிதம் சீனாவைச் சார்ந்துள்ளது. இதேபோல், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் உரங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியா ரஷ்யாவையும் கணிசமாகச் சார்ந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மூன்று நாடுகளின் நெருக்கத்தால் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய முக்கியக் கவலைகள் என்ன?
இந்த மூன்று நாடுகளின் நெருக்கம் அதிகரிப்பதால் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய சில முக்கிய பாதிப்புகள்:
- அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மேம்பட்டால், இமயமலைப் பகுதியில் உள்ள எல்லையில் சீனா தனது கவனத்தையும் வளங்களையும் அதிகரிக்கக்கூடும்.
- ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு வலுப்பெறுவதால், இந்தியா - சீனா இடையே நெருக்கடி ஏற்பட்டால் சீனாவைக் கட்டுப்படுத்த ரஷ்யா உதவும் என்ற எதிர்பார்ப்பு குறையலாம்.
- அணுசக்தி நிலைத்தன்மை மற்றும் அணு ஆயுதக் கட்டுப்பாட்டில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது தொடர்பான புதிய கட்டமைப்புகள், இந்தியாவின் பங்கேற்பு இல்லாமலேயே முடிவு செய்யப்படலாம்.
- அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்தால், இந்தியாவுடனான உறவில் வாஷிங்டன் எந்த அளவுக்குத் தனது உறுதிப்பாட்டைத் தொடர்ந்து பேணும் என்பது முக்கியமான கேள்வியாக இருக்கும்.
ஷென்சென் நகரில் நடைபெற்ற அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் முத்தரப்புச் சந்திப்பு என்பது மூன்று நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர சந்திப்பு மட்டுமல்ல. மாறிவரும் உலகளாவிய அதிகார ஒழுங்கின் அடையாளமாகவும் இது உள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு இடையிலான மாறிவரும் சமன்பாடுகளில், இந்தியா தனது மூலோபாய நலன்கள், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பிராந்திய செல்வாக்கை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதே இந்தியாவுக்கான மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
உலகளாவிய பாதுகாப்பு அமைப்பை சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து வடிவமைத்தால், அந்தச் செயல்பாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைக்காமல் போகலாம் என்பதே இந்தியாவின் மிகப்பெரிய கவலை என்று சி. ராஜாமோகன் கருதுகிறார்.
இந்த முயற்சி நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான பயனுள்ள ஓர் அரங்கமாக மாறுமா அல்லது மற்ற நாடுகளின் நலன்களைப் புறக்கணிக்கும் வகையில் வல்லரசுகளுக்கான பிரத்யேகக் கூட்டமைப்பை உருவாக்குமா என்பதே இந்தியாவின் முன்னுள்ள கேள்வி.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைமையில் உருவாகும் ஓர் அமைப்பில், மற்ற முக்கிய நாடுகளுக்குப் போதிய கருத்துரிமை இல்லையென்றால், அதை உண்மையான பல்முனை உலக ஒழுங்கு என்று அழைக்க முடியுமா? உலகளாவிய விதிகளை உருவாக்கும் அதிகாரம் கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சீனா விரும்புகிறது. அதேசமயம், இந்த முயற்சியில் மாஸ்கோ பங்கேற்பது, ரஷ்யாவின் ஆதரவை இந்தியா உறுதியாக நம்ப முடியாது என்பதையும் காட்டுகிறது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான எந்தவொரு புரிந்துணர்வையும் உண்மையான பல்முனை உலக ஒழுங்காகக் கருதக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
"டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் ஆகியோருடன் ஒரே மேடையில் தோன்றுவதன் மூலம், ரஷ்யா தனது ராஜதந்திரத் தனிமையைக் குறைத்துக்கொள்வதுடன், தன்னை அவர்களுக்கு இணையான நாடாகவும் முன்னிறுத்துகிறது.
இந்தியாவின் பிரிக்ஸ் கூட்டாளிகளும் மேற்கத்திய நாடுகள் செலுத்துவதாக விமர்சிக்கும் அதே அதிகாரத்தையும் செல்வாக்கையும் தங்களுக்காகப் பெற முயற்சிக்கலாம். உலகளாவிய செல்வாக்கை அதிகரிப்பதற்கான அவர்களின் முயற்சிகளை, இந்தியாவின் செல்வாக்கு விரிவடைவதற்கான ஆதரவாகப் பார்க்கக் கூடாது" என்று அவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
"வாஷிங்டனின் நோக்கங்களைப் புரிந்துகொள்வதற்காக, குவாட் அமைப்பு மற்றும் ஜப்பானுடன் இணைந்து இந்தியா செயல்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கூட்டத்தில் இந்தியா இடம்பெறாதது மட்டுமே பின்னடைவாகாது. இந்தியாவின் வாய்ப்புகளைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தங்கள் தொடர்ந்து உருவாவதும், அவை குறித்த முன்கூட்டிய தகவலோ அல்லது முடிவுகளில் செல்வாக்கு செலுத்தும் வாய்ப்போ இந்தியாவின் கூட்டாளிகளுக்கு இல்லாமல் போவதும்தான் உண்மையான ஆபத்து" என்றும் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































