குழந்தைகள் பொய் சொல்வது ஏன்? அது ஆரோக்கியமான நடத்தையின் அறிகுறியா?

பட மூலாதாரம், Elena Hoicka
- எழுதியவர், ஜார்ஜ் சாண்டிமேன்
- பதவி,
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
சுவரில் கிறுக்கல்கள் காணப்பட்டாலோ அல்லது பிஸ்கட் டப்பாவில் இருந்த பிஸ்கட்டுகள் காணாமல் போயிருந்தாலோ, உங்கள் குழந்தை வளர்ப்பு நாயின் மீது பழி போடலாம் அல்லது பேய் வந்ததாகக் கூறலாம். அவர்கள் கையில் கிரயான்களை வைத்து இருந்தாலோ அல்லது உடல் முழுவதும் பிஸ்கட் துகள்கள் படிந்து இருந்தாலோகூட, அவர்கள் இப்படித்தான் சொல்லக்கூடும்.
குழந்தைகள் பொய் சொல்வதைப் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்கொண்டிருப்பார்கள். ஆனால், இத்தகைய நேர்மையின்மையும் ஏமாற்றும் செயலும் குழந்தையின் உளவியல் வளர்ச்சியில் ஒரு முக்கியமான அங்கம்.
"இது உண்மையில் அவர்கள் வளர்த்துக்கொள்ளும் ஒரு திறன். இதில் மேலும் தேர்ச்சி பெறுவதற்காக அவர்கள் தொடர்ந்து பயிற்சி செய்கிறார்கள்" என்று மருத்துவ உளவியலாளர் டாக்டர் ஜேட் ரெட்ஃபெர்ன், 'சிபீபிஸ் பேரன்டிங் டவுன்லோட்' (CBeebies Parenting Download) பாட்காஸ்டில் கூறினார்.
பொய் சொல்லக் கற்றுக்கொள்வது ஏன் ஆரோக்கியமான நடத்தையின் அறிகுறி என்பதையும், அதே நேரம் நேர்மையை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பதையும் நிபுணர்கள் இங்கே விளக்குகிறார்கள்.
சிறிய குழந்தைகளுக்கு முழுமையான அர்த்தத்தில் பொய் சொல்லும் அளவுக்கு முதிர்ச்சியான அறிவு இருப்பதில்லை என்று கூறும் மருத்துவர் ரெட்ஃபெர்ன், அதேநேரம் ஒரு வயதுக்கு முன்பே அவர்களால் மற்றவர்களை ஏமாற்ற முடியுமெனக் குறிப்பிடுகிறார்.
இந்த பாட்காஸ்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஓர் ஆய்வு, பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பத்து மாதக் குழந்தைகளிலேயே கால் பங்கினர் ஏதோவொரு வகையில் பிறரை ஏமாற்றும் திறனைப் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது.

பட மூலாதாரம், Elena Hoicka
இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் எலினா ஹோய்கா, குழந்தைகள் மிகச் சிறிய வயதிலேயே எவ்வளவு தந்திரமாகவும் திறமையாகவும் நடந்துகொள்கிறார்கள் என்பதைக் காண்பது வியப்பளிப்பதாகக் கூறுகிறார். இதில் அவரது சொந்தக் குழந்தைகளும் அடங்குவர். "மூன்று குழந்தைகளின் தாயாக, அவர்கள் எவ்வளவு தந்திரமாகவும் சூழ்ச்சியாகவும் நடந்துகொள்ள முடியும் என்பதற்கு என்னால் சாட்சி சொல்ல முடியும்."
"மேசைக்கு அடியிலோ அல்லது குளியலறையிலோ ஒளிந்துகொண்டு இனிப்புகளையோ சாக்லேட்டுகளையோ உண்பது அவர்களின் வழக்கமான தந்திரம்."
இரண்டு வயது முதலே குழந்தைகள் கையாளும் ஏமாற்று வேலைகள் மிகவும் எளிமையானவை என்று ஹோய்கா கூறுகிறார். உதாரணமாக, பெற்றோர்கள் சொல்வதைக் கேட்காதது போல நடிப்பது அல்லது தாங்கள் செய்த தவறை மறுப்பது போன்றவை இதில் அடங்கும்.
"தடை செய்யப்பட்ட செயல்களை ரகசியமாகச் செய்வதிலும் இது வெளிப்படலாம்" என்று அவர் கூறுகிறார். "உதாரணமாக பார்க்கக்கூடாது என்று சொல்லப்பட்ட பையை, யாரும் கவனிக்காத நேரத்தில் திறந்து பார்ப்பது அல்லது வீட்டைச் சுத்தம் செய்யச் சொல்லும்போது கழிவறைக்குச் செல்ல வேண்டுமென சாக்குப் போக்கு சொல்வது போன்றவை இதில் அடங்கும்."
மூன்று வயதை எட்டும்போது, அவர்கள் ஏமாற்றுவதில் இன்னும் அதிக திறமையுடனும் படைப்பாற்றலுடனும் செயல்படத் தொடங்குகிறார்கள். இது, மொழியைப் பற்றியும், மற்றவர்களின் மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றியும் அவர்களுக்கு இருக்கும் ஆழமான புரிதலைக் காட்டுகிறது.
அவர்கள் சில தகவல்களை மறைக்கவும் தொடங்குகிறார்கள் என்று அவர் கூறுகிறார். உதாரணமாகத் தங்கள் உடன்பிறந்தவர் தங்களைத் தாக்கியதை பெற்றோரிடம் உண்மையாகக் கூறினாலும், அதற்கு முன்பாகத் தாங்களே அந்த உடன்பிறந்தவரைத் தாக்கினோம் என்ற உண்மையை மறைத்துவிடுவார்கள்.

பட மூலாதாரம், Elena Hoicka
இத்தகைய ஏமாற்றுச் செயல்கள், ரெட்ஃபெர்ன் குறிப்பிடும் "மனம் குறித்த கோட்பாடு" என்னும் திறன் குழந்தைகளிடம் வளர்ந்து வருவதற்கான அறிகுறியாகும்.
"குழந்தைகள் வளரும்போது அவர்கள் தங்களுக்கென தனிப்பட்ட சிந்தனைகள், நோக்கங்களைக் கொண்ட, தனித்தனி மனிதர்கள் என்பதைப் புரிந்துகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டுமென நாம் விரும்புகிறோம்" என்று அவர் விளக்குகிறார்.
"இதன் மூலமே அவர்கள் 'பச்சாதாபம்' என்னும் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். அதாவது, மற்றவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும், அவை தங்களுடையவற்றில் இருந்து மாறுபட்டு இருக்கலாம் என்பதையும் உணர்ந்து சிந்திக்கும் திறன் இது."
குழந்தைகள் பொய் சொல்வதற்கு மற்றொரு காரணம், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற விருப்பம்தான். அவர்கள் தங்கள் பெற்றோரை வருத்தப்பட வைக்கவோ அல்லது ஏமாற்றமடையச் செய்யவோ விரும்புவதில்லை.
"மனிதர்கள் அனைவரும் பிணைப்பால் இயங்குகிறார்கள்," என்கிறார் ரெட்ஃபெர்ன். "குழந்தைகளைப் பொறுத்தவரை, தங்களைப் பராமரிப்பவர்களுடனான உறவைப் பாதுகாத்துக்கொள்வது மிக முக்கியம். ஏனெனில் அவர்கள் அந்த உறவைச் சார்ந்தே இருக்கிறார்கள்."
எந்தச் செயல்கள் தங்களைப் பராமரிப்பவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன, எவை அந்த நெருக்கத்தைக் குறைக்கின்றன என்பதை அவர்கள் மிக இளம் வயதிலேயே கற்றுக்கொள்கிறார்கள் என்று அவர் கூறுகிறார். இதைக் கருத்தில் கொண்டு, குழந்தைகள் உண்மையைச் சொல்வதற்கு ஏதுவான ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதன் மூலம், அவர்கள் நேர்மையாக இருக்க ஊக்குவிக்கலாம் என்று ரெட்ஃபெர்ன் கருதுகிறார்.
"குழந்தைகள் தவறு செய்துவிட்ட சூழலில், நம்மை ஏமாற்ற விரும்பாதபோதும், அவர்கள் பயமின்றி உண்மையைச் சொல்லக்கூடிய பாதுகாப்பான சூழலை எப்படி உருவாக்கலாம் என்று நாம் சிந்திக்க வேண்டும்" என்கிறார் அவர்.
பிபிசியின் 'தி டிரைட்டர்ஸ்' (The Traitors) நிகழ்ச்சியின் சமீபத்திய பிரிட்டன் தொடரில் வெற்றி பெற்ற ரேச்சல் டஃபி, 'சி-பீபீஸ் பேரன்டிங் டவுன்லோட்' (CBeebies Parenting Download) என்ற பாட்காஸ்டில் பேசும்போது, தானும் இத்தகைய சூழலை உருவாக்கவே முயல்வதாகக் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Elena Hoicka
மூன்று குழந்தைகளின் தாயான அவர், ஒருமுறை தனது மூத்த மகன் தனது சகோதரனின் மிதிவண்டியை எடுத்துச் சென்று, அதை ஒரு கார் மீது மோதி உடைத்துவிட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
"முதலில் என்ன நடந்தது என்பதை மறைத்து அவன் பொய் சொல்ல முயன்றான். நான் அவனிடம், 'உண்மையைச் சொன்னால் உனக்குப் பெரிய சிக்கல் எதுவும் வராது' எனக் கூறினேன். பிறகு அவனுக்கு சற்று அவகாசம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டேன்."
"சிறிது நேரம் கழித்து அவன், 'ஆம், அது என்னால்தான் நடந்தது' என்று ஒப்புக்கொண்டான். அந்தச் சூழல் பாதுகாப்பானது என்பதை அவன் உணர்ந்துகொண்டான். நாங்கள் அமைதியாகப் பேசிக்கொண்டோம். குரலை உயர்த்தவோ, கத்தவோ இல்லை."
இத்தகைய சூழல்களைக் கையாள்வதற்கு இதுவொரு சிறந்த உதாரணம் என்று ரெட்ஃபெர்ன் கூறுகிறார். சில நேரங்களில், அதாவது தங்களுக்குப் பிடிக்காத பரிசுகள் கிடைக்கும்போதோ அல்லது பிறரின் உடல் தோற்றத்தைப் பற்றி விவரிக்கும்போதோ, உண்மையை அப்படியே சொல்லாமல் தவிர்ப்பதோ அல்லது நுணுக்கமாகக் கையாள்வதோ பொருத்தமானதாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
"சமீபத்தில் என் குழந்தைகள், என் முகத்தில் நிறைய சுருக்கங்கள் இருப்பதாக மிகவும் இயல்பாகச் சொன்னார்கள். அப்போதும் கூட, நான் அதை ஒருவித ஆர்வத்துடனும், வெளிப்படையான மனநிலையுடனும் எதிர்கொள்ள முயன்றேன்," என்று அவர் கூறுகிறார்.
'ஏன் அப்படி நினைக்கிறார்கள்' என்று குழந்தைகளிடம் கேட்டு உரையாடுவதன் மூலம் அவர் இதைச் செய்கிறார்.
"குழந்தைகள் வளரும்போது, அவர்களுடன் வெளிப்படையான, ஆர்வமூட்டும் உரையாடல்களை மேற்கொள்வது மிகவும் முக்கியம். பிறரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறன் (empathy) வளர்வதற்கு இது உதவுகிறது. பெரியவர்கள் தொடர்ந்து அவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து, அன்பையும் புரிதலையும் வெளிப்படுத்திக் காட்டும்போது, குழந்தைகளும் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக்கொள்கிறார்கள்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































