"ரோஹிஞ்சா இனப்படுகொலைக்கு மியான்மர் பொறுப்பு": சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுவது என்ன?

பட மூலாதாரம், EPA/Shutterstock
ரோஹிஞ்சா சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிரான இனப்படுகொலைக்கு மியான்மர் பொறுப்பு என்று சர்வதேச நீதிமன்றம் (ஐசிஜே) தீர்ப்பளித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. சர்வதேச நீதிமன்றத்தின் வரலாற்றில், ஒரு நாட்டை இனப்படுகொலைக்குப் பொறுப்பானதாகத் தீர்ப்பளித்திருப்பது இதுவே முதல்முறை.
தீர்ப்பின் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்த நீதிபதி யூஜி இவாசாவா, ரோஹிஞ்சா மக்களில் பெரும் பகுதியினரை அழிப்பதே மியான்மரின் நோக்கமாக இருந்தது என்று தெரிவித்தார்.
மியான்மரில் இனப்படுகொலை தொடர்பான ஆதாரங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், இனப்படுகொலைக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தவும், வழக்குத் தொடரவும், தண்டனை வழங்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
2017ஆம் ஆண்டு மியான்மர் ராணுவம் நடத்திய நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சா மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நடவடிக்கைக்குப் பிறகு, ஏழு லட்சத்துக்கும் அதிகமான ரோஹிஞ்சா மக்கள் மியான்மரிலிருந்து வெளியேறி அண்டை நாடான வங்கதேசத்துக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மியான்மரில் பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.
இந்த வழக்கை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுசென்றது காம்பியா. ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களுக்குத் தனது ராணுவம் பதிலடி கொடுத்ததாக கூறி தன் மீதான குற்றச்சாட்டுகளை மியான்மர் மறுத்தது.
ரோஹிஞ்சா மக்களுக்கு இழப்பீடு வழங்க மியான்மருக்கு உத்தரவு

பட மூலாதாரம், Salahuddin Ahmed / AFP via Getty Images
இனப்படுகொலையைத் தடுப்பதற்கான தனது பொறுப்பை மீறியதற்காக, ரோஹிஞ்சா சமூகத்துக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் மியான்மர் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரோஹிஞ்சா சமூகத்துக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை, அதை வழங்குவதற்கான வழிமுறைகள், மேலும் வழங்கப்பட வேண்டிய பிற வகையான நிவாரணங்கள் குறித்து சர்வதேச நீதிமன்றமே முடிவு செய்யும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தின் ரோஹிஞ்சா அகதிகள் முகாமில் கொண்டாட்டம்

பட மூலாதாரம், EPA/Shutterstock
வங்கதேசத்தில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் முகாமில் நிகழ்ந்த காட்சிகளை நாங்கள் கவனித்து வருகிறோம். அங்கு ஏராளமான மக்கள் ஒரு சிறிய திரையில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
ரோஹிஞ்சா சமூகத்துக்கு எதிரான இனப்படுகொலைக்கு மியான்மர் பொறுப்பு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு வெளியானதும் அங்கு இருந்த பல ஆண்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் எதிர்வினை
ரோஹிஞ்சா சமூகத்துக்கு எதிராக மியான்மர் ராணுவம் நீண்டகாலமாகக் கொடுமைகளை இழைத்துள்ளது என்பதை சர்வதேச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நிரூபிப்பதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் மூத்த சர்வதேச சட்ட ஆலோசகர் மரியா எலேனா விக்னோலி கூறுகையில், "உலகம் முழுவதும் இனப்படுகொலை மற்றும் பிற கடுமையான குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெறுவதற்கான முயற்சியில் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய முன்னுதாரணத்தையும் ஏற்படுத்துகிறது" என்றார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை மியான்மர் விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், ரோஹிஞ்சா சமூகத்துக்கு எதிரான கொடுமைகளை நிறுத்த வேண்டும் என்றும் விக்னோலி கூறினார்.
ரோஹிஞ்சா அகதிகள் பாதுகாப்பாகவும் தங்கள் விருப்பத்தின் பேரிலும் மியான்மருக்குத் திரும்புவதைத் தொடர்புடைய அரசாங்கங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு மியான்மரில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

பட மூலாதாரம், Getty Images
இதற்கு முன்பு இந்த நீதிமன்றம் எந்தவொரு நாட்டையும் இனப்படுகொலைக்குப் பொறுப்பானதாகத் தீர்ப்பளித்ததில்லை. ரோஹிஞ்சா இனப்படுகொலையில் உயிர் பிழைத்தவர்களுக்கும், வங்கதேசத்தின் அகதிகள் முகாம்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கும் தங்களுக்கு நேர்ந்தது இனப்படுகொலைதான் என்பதற்கான சர்வதேச அளவிலான அதிகாரபூர்வ அங்கீகாரமாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
சட்டரீதியாக, இனப்படுகொலை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் மியான்மருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், இது ஒரு குற்றவியல் வழக்கு அல்ல என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். ராணுவத் தளபதிகளைச் சிறையில் அடைக்க சர்வதேச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. அதேபோல், அதன் தீர்ப்புகளைச் செயல்படுத்துவதற்கான நேரடி ஏற்பாடுகளும் இல்லை. தனது தீர்ப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அரசியல் அழுத்தம் ஆகியவற்றை நீதிமன்றம் சார்ந்துள்ளது.
எனவே, ரோஹிஞ்சா மக்கள் பலருக்கு இந்தத் தீர்ப்பு அடையாளரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், இதன் மூலம் அவர்கள் பாதுகாப்பாகத் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்புவது தானாகவே உறுதியாகிவிடாது.
இந்தத் தீர்ப்பால் மியான்மரின் ராணுவத் தளபதிகளை நேரடியாகச் சிறையில் அடைக்கவும் முடியாது. இதற்குக் காரணம், நாடுகளின் பொறுப்பை சர்வதேச நீதிமன்றம் தீர்மானிக்கிறது; அதேவேளையில், தனிநபர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) வழக்குத் தொடர்கிறது.
இருப்பினும், இனப்படுகொலை தொடர்பான இந்தத் தீர்ப்பு, தனியாக நடைபெற்று வரும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் மூலம் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கும் சட்டரீதியாகவும் ராஜீய ரீதியாகவும் வலுசேர்க்கக்கூடும்.
கூடுதல் தகவல்கள்: அன்னா ஹாலிகன்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































