தஞ்சை பெரிய கோயில் உலகின் புதிய 7 அதிசயங்கள் பட்டியலில் இடம்பெறுமா? அதற்கான தகுதிகள் என்ன?

சோழர் கட்டடக் கலையின் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக திகழும் தஞ்சை பெரிய கோயிலை, உலகின் புதிய ஏழு அதிசயங்கள் பட்டியலில் சேர்க்கப் பரிந்துரைக்கவும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கவும் உள்ளதாக, நாடாளுமன்ற போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துக்கான நிலைக்குழுத் தலைவர் சஞ்சய் குமார் ஜா தெரிவித்துள்ளார். ஒரு பாரம்பரிய சின்னம் உலக அதிசயமாக அங்கீகரிக்கப்படுவதற்கான தகுதிகள் என்ன? புதிய உலக அதிசயங்கள் பட்டியலைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை தற்போது உள்ளதா?
உலகின் புதிய ஏழு அதிசயங்கள் பட்டியல் என்றால் என்ன?
உலகின் புதிய ஏழு அதிசயங்கள் பட்டியல், 2007ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நியூ7வண்டர்ஸ் (New7Wonders) அமைப்பு நடத்திய உலகளாவிய வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டது.
சீனப் பெருஞ்சுவர், ஜோர்டானின் பெட்ரா, பிரேசிலின் கிறிஸ்து மீட்பர் சிலை, பெருவின் மச்சு பிச்சு, மெக்சிகோவின் சிச்சென் இட்சா, இத்தாலியின் கொலோசியம் மற்றும் இந்தியாவின் தாஜ்மஹால் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
2000-ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் பெர்னார்ட் வெபர் இந்தத் தேர்வைத் தொடங்கினார். உலகம் முழுவதும் உள்ள வரலாற்றுச் சின்னங்களில் ஏழு அதிசயங்களைத் தேர்ந்தெடுப்பதே இதன் நோக்கம். முதலில் 77 வரலாற்றுச் சின்னங்கள் பரிசீலிக்கப்பட்டன. அவற்றில் இருந்து நிபுணர்கள் குழு 21 வரலாற்றுச் சின்னங்களை இறுதிப் பட்டியலுக்குத் தேர்வு செய்தது. பின்னர் உலகம் முழுவதும் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் ஏழு அதிசயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
New7Wonders என்பது தனி அமைப்பு. இந்த அமைப்பின் உலக அதிசயங்கள் பட்டியல், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் இருந்து வேறுபட்டது.

உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெறுவதற்கான தகுதிகள் என்ன?
New7Wonders அமைப்பு வெளியிட்டுள்ள விதிமுறைகளின்படி,
மனிதர்களால் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்கள், அவற்றின் அசல் கட்டமைப்பு மற்றும் உருவாக்கியவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும்.
கலை அல்லது கட்டடக்கலை சார்ந்த சிறப்புகளும் இருக்க வேண்டும்.
வரலாற்றுச் சின்னங்கள் உலகளவில் அடையாளம் காணக்கூடியவையாகவும், உலக மக்களின் கலாசார மற்றும் சமூகப் பன்முகத்தன்மையைப் பிரதிபலிப்பவையாகவும் இருக்க வேண்டும்.
2000-ஆம் ஆண்டு வரையிலான மனித வரலாற்றில் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்கள் இந்தத் தேர்வில் பரிசீலிக்கப்பட்டன. அசல் கட்டமைப்பை செயற்கையாக மீண்டும் உருவாக்காமல் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு சிதைந்திருந்த நினைவுச் சின்னங்கள் தேர்வில் இடம்பெற முடியாது.
இந்தத் தேர்வில் புவியியல் பிரதிநிதித்துவத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஒரு நாட்டிலிருந்து ஒரு வரலாற்றுச் சின்னம் மட்டுமே இறுதிப் பட்டியலில் இடம்பெற அனுமதிக்கப்பட்டது.
கட்டடக்கலை அல்லது வரலாற்றுச் சிறப்புகளை நிபுணர்கள் மதிப்பிடுவதன் அடிப்படையில் மட்டும் இறுதித் தேர்வு நடைபெறவில்லை. உலகளாவிய வாக்கெடுப்பே ஏழு அதிசயங்களைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகித்தது.
பட்டியல் புதுப்பிக்கப்படுமா? எப்போது வேண்டுமானாலும் பரிந்துரை செய்ய முடியுமா?
2007-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஏழு புதிய அதிசயங்கள் பட்டியல் இதுவரை மாற்றப்படவில்லை. ஏழு புதிய அதிசயங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அடுத்தகட்ட உலகளாவிய வாக்கெடுப்பை நடத்துவது குறித்த அறிவிப்பையும் New7Wonders அமைப்பு வெளியிடவில்லை.
இந்த அமைப்பு தொடர்ந்து பிற திட்டங்களையும் தேர்வுகளையும் நடத்தி வருகிறது.
ஒரு அரசு, அமைப்பு அல்லது தனிநபர், ஒரு வரலாற்றுச் சின்னத்தை உலகளவில் பிரபலப்படுத்தும் நோக்கில் New7Wonders அமைப்பை அணுகலாம் அல்லது பரிந்துரைக்கலாம். ஆனால், அத்தகைய பரிந்துரை மட்டும் புதிய தேர்வு நடைமுறையைத் தொடங்கவோ, அந்த நினைவுச் சின்னத்தை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறச் செய்யவோ முடியாது.
தஞ்சை பெரிய கோயிலைப் பொறுத்தவரை, அரசு பரிந்துரைப்பது, அந்தக் கோயிலை சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக கருதப்படுகிறது. புதிய ஏழு அதிசயங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகி, அதற்கான பரிந்துரை மற்றும் வாக்கெடுப்பு நடைமுறைகள் தொடங்கினால் மட்டுமே புதிய பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும்.

தஞ்சை பெரிய கோயிலின் வரலாற்றுச் சிறப்பு என்ன?
பிரகதீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோயில், சோழப் பேரரசின் மன்னர் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கி.பி. 1009–1010-ஆம் ஆண்டில் இந்தக் கோயில் குடமுழுக்கு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ குறிப்பிடுகிறது.
ஒன்பதாம் நூற்றாண்டில் தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் வலிமையான அரசை உருவாக்கிய சோழர்கள், பின்னர் தென்னிந்தியாவின் பெரும்பகுதியையும் அண்டை தீவுகளையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். சோழர்களின் கலை, கட்டடக்கலை மற்றும் கலாசார வளர்ச்சிக்கு பிரமாண்டமான கோயில்கள் முக்கியப் பங்களிப்பை அளித்தன.
முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில், சோழர் கட்டடக்கலையின் மிகச் சிறந்த சாதனையாக யுனெஸ்கோ குறிப்பிடுகிறது. முழுவதும் கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில், தென்னிந்தியக் கோயில் கட்டடக்கலையின் வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கிறது.
கோயிலில் உள்ள கல்வெட்டுகள், சோழர் கால நிர்வாகம், பொருளாதாரம், நன்கொடைகள், சமூக அமைப்பு மற்றும் அக்கால மக்களின் வாழ்க்கை குறித்த பல தகவல்களை வழங்குகின்றன.

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது எப்படி?
தஞ்சை பெரிய கோயில் ஏற்கெனவே ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1987-ஆம் ஆண்டு, 'Great Living Chola Temples' என்ற பெயரில் இந்தக் கோயில் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றது. 2004-ஆம் ஆண்டு கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரம் கோயில்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
கட்டடக்கலை மற்றும் கலாசார மரபுகள் மூலம் மனித மதிப்புகளின் பரிமாற்றத்தை வெளிப்படுத்துவது, ஒரு நாகரிகத்தின் தனித்துவமான சான்றாக இருப்பது ஆகிய இரண்டு அளவுகோல்களின் அடிப்படையில் இந்தக் கோயில்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
சோழர் கால கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை மற்றும் வெண்கலச் சிலை வடிவமைப்பின் சிறப்புகளை இந்தக் கோயில்கள் வெளிப்படுத்துகின்றன. இன்றளவும் வழிபாட்டுத் தலங்களாகப் பயன்படுத்தப்படுவதால், இவை தொடர்ந்து வாழும் கலாசார மரபின் எடுத்துக்காட்டுகளாகவும் உள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























