திறக்கப்பட்டது அணையா, கால்வாய் மதகா? – தேனி சோத்துப்பாறை விவகாரத்தில் என்ன நடந்தது?

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
சோத்துப்பாறை அணையில் இருந்து அதிகாரிகளுக்கே தெரியாமல், தவெக கட்சியினர் தண்ணீரை திறந்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது
அணை திறக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தேனி வடகிழக்கு தவெக மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி, அணையில் இருந்து செல்லும் கால்வாயில் உள்ள மதகுதான் திறக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால், உரிய அனுமதியின்றி கால்வாய் மதகு திறக்கப்பட்டதாகக் கூறியுள்ள மாவட்ட ஆட்சியர், இதுதொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீரை ஆதாரமாகக் கொண்டு வராக நதியின் குறுக்கே அமைந்துள்ளது சோத்துப்பாறை அணை. பெரியகுளம் மட்டுமின்றி தென்கரை, லட்சுமிபுரம், தாமரைக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளின் குடிநீர் மற்றும் பாசன தேவைக்கு இந்த அணை முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது.
அணையில் இருந்து பெரியகுளம் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளின் விவசாய நிலங்களுக்கும் இந்த அணை மூலம் பாசன வசதி கிடைக்கிறது.
பெரியகுளம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசன் செய்தியாளர்களிடம் அளித்துள்ள விளக்கத்தில், சோத்துப்பாறை அணையில் இருந்து வெளியேறும் நீர் சுமார் 26 கிலோமீட்டர் தூரம் குள்ளப்புரம் வழியாகச் சென்று வராக நதியில் கலப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நீர் வழித்தடத்தில் உள்ள 10 கண்மாய்களில் விவசாயிகள் தண்ணீரை தேக்கிப் பயன்படுத்தி வருவதாகவும், பொதுவாக நீர் செல்லும் கால்வாய் மதகை திறந்து விவசாயிகள் தண்ணீரை பயன்படுத்திக் கொள்வது வழக்கம் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், விவசாயிகளுடன் இணைந்து விவசாயிகள் அல்லாத சிலரும் மதகை திறந்து மலர் தூவி, சோத்துப்பாறை அணை திறக்கப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டது தவறான தகவல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அணையை யார் திறக்க வேண்டும்? அனுமதி வழங்குவது யார்?
பொதுவாக அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது என்பது சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளின் தொழில்நுட்ப ஆய்வு மற்றும் அரசின் நிர்வாக அனுமதிகளுக்கு உட்பட்ட நடைமுறை என்று ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
”முதலில் அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, இருப்பில் உள்ள நீரின் அளவு, குடிநீர்த் தேவை, பாசனத்திற்கு தேவையான நீரின் அளவு ஆகியவற்றை அணையை பராமரிக்கும் பொறியாளர்கள் ஆய்வு செய்வார்கள். அதன் அடிப்படையில் செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பரிந்துரை அளிப்பார்கள்.” என்கிறார் அவர்.
”அணையின் வகை மற்றும் அதற்கென வகுக்கப்பட்டுள்ள நீர் ஒழுங்குமுறை விதிகளை பொறுத்து, சில அணைகளில் நீர் திறப்பு குறித்து செயற்பொறியாளர் முடிவெடுக்கலாம். குறிப்பிட்ட முக்கிய அணைகள் மற்றும் பாசனத் திட்டங்களில் அரசின் உத்தரவு அல்லது அரசாணை வெளியிடப்படும்.”என்று மேலும் தெரிவிக்கிறார்.
”அத்தகைய அனுமதி கிடைத்த பின்னரே நீர்வளத்துறையின் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அணையின் மதகுகளை இயக்கி தண்ணீரைத் திறப்பார்கள். அணையின் மதகுகளைத் தன்னிச்சையாகத் திறப்பதற்கு தனிநபர்களுக்கு அரசியல் கட்சியினருக்கு அதிகாரம் கிடையாது.” என்கிறார் ஓய்வுபெற்ற செயற்பொறியாளர் விஸ்வநாதன்.

'அணை திறக்கப்படவில்லை' - தவெக நிர்வாகி விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் சேக் அலி, சோத்துப்பாறை அணை திறக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது எனக் கூறினார்.
சோத்துப்பாறை அணையில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜ வாய்க்கால் பகுதியில் இருக்கும் மதகுதான் திறக்கப்பட்டதாகவும், அணையின் பிரதான மதகு திறக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், அந்தப் பகுதியில் கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்ததால் விவசாயிகள் தண்ணீரைப் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது என்றும் கூறினார்.
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தனது சொந்தப் பணத்தில் செலவு செய்து 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாயைத் தூர்வாரியதாக சேக் அலி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ''கால்வாய் தூர்வாரபட்டதால் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் பயனடைவார்கள்” என்றார்.
விவசாயிகள் அழைத்ததன் பேரிலேயே தண்ணீர் திறக்கும் நிகழ்வில் பங்கேற்றதாகவும், விவசாயிகள்தான் மதகைத் திறந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்தை அணை திறப்பு எனத் தவறாக சித்தரிப்பதாக சேக் அலி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தேனி மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி, ”சோத்துப்பாறை அணை திறக்கப்படவில்லை, அணைக்கு அருகே சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கால்வாயின் மதகுதான் உரிய அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் புகார் அளித்ததன் அடிப்படையில் தென்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் உரிய அனுமதியின்றி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்
’’நீர்வளத்துறையின் நடைமுறைகள் மற்றும் உரிய நிர்வாக அனுமதிகளின் அடிப்படையில் பாசன நீர் திறப்பு மேற்கொள்ளப்படும்” என தேனி ஆட்சியர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





























