கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார் - முதல்வர் விஜய், ஸ்டாலின் கூறியது என்ன?

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார் என எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவருக்கு வயது 75.

நீண்டகால சுவாச பாதிப்பு காரணமாக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் வி.எஸ்.பாபு சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சைகளை அளித்தும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததாகவும் இந்நிலையில், இன்று (நவம்பர் 19) பிற்பகல் 2.24 மணிக்கு அவர் உயிரிழந்தார் எனவும் மருத்துவமனை கூறியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க வேட்பாளராக வி.எஸ்.பாபு போட்டியிட்டார். தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்ததால் வி.எஸ்.பாபு அதிக கவனம் பெற்றார். அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் மாதம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்று வந்த வி.எஸ்.பாபுவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஸ்டாலின், கொளத்தூர், திமுக, தவெக
படக்குறிப்பு, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தவெகவில் இணைந்தார் வி.எஸ்.பாபு

நீதிமன்றத்தில் மனு

அவரது உடல்நலம் குறித்து தொடக்கத்தில் மருத்துவ அறிக்கைகள் வெளியாகி வந்தன. ஆனால், அதன்பிறகு அவரது உடல்நலம் குறித்த எந்தத் தகவலும் வெளிவரவில்லை.

நவம்பர் 18 ஆம் தேதி கொளத்தூர் தொகுதியை சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 'கொளத்தூர் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதியன்று அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து அலுவல்ரீதியாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை' எனக் கூறியிருந்தார்.

'அவரது தனிப்பட்ட அந்தரங்க உரிமை, கண்ணியம், தனிநபர் ரகசியம் தொடர்பான மருத்துவ விவரங்களை வெளியிடும்படி கோரவில்லை. ஆனால், தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் அவரது உடல்நிலை குறித்து தகவல்களைத் தெரிந்து கொள்ள அனைவருக்கும் உரிமை உள்ளது' எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

'மருத்துவ சிகிச்சையில் உள்ள வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தகவல்களை வெளியிடுமாறு நவம்பர் 5 மற்றும் நவம்பர் 13 ஆகிய தேதிகளில் அரசுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என வழக்கின் மனுவில் தேவராஜன் தெரிவித்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், வி.எஸ்.பாபு உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வி.எஸ்.பாபுவின் பின்னணி

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

வடசென்னையில் அரசியல் கட்சிகள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராக வி.எஸ்.பாபு இருந்தார். தி.மு.க தலைவருடன் தனக்கு நன்கு பழக்கம் இருந்ததாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் வி.எஸ்.பாபு கூறியிருந்தார்.

தி.மு.கவின் வடசென்னை மாவட்டச் செயலாளராக பணியாற்றிய வி.எஸ்.பாபு, 2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். பிறகு புரசைவாக்கம் தொகுதி பிரிக்கப்பட்டு கொளத்தூர் தொகுதி உருவானது.

2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அவரது வெற்றிக்காக தேர்தல் பணிகளில் வி.எஸ்.பாபு தீவிரம் காட்டினார்.

இதன்பிறகு அ.தி.மு.கவில் வி.எஸ்.பாபு இணைந்தார்.

அங்கு அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்காததால் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக த.வெ.கவில் இணைந்தார். அவருக்கு கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தேர்தல் முடிவுகள் தி.மு.கவினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. மு.க.ஸ்டாலினை எதிர்த்து வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார்.

முதல்வர் விஜய், ஸ்டாலின் கூறியது என்ன?

''வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபுவின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.'' என முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ''கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.'' என கூறியுள்ளார்.

வி.எஸ்.பாபு மரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் வி.எஸ்.பாபு உயிரிழந்துள்ளார். த.வெ.கவின் கடினமான காலகட்டங்களில் கட்சித் தலைவர் உடன் இணைந்து பணியாற்றினார்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "வடசென்னையின் முகமாக இருந்த அவர், எவ்வளவு கடினமான காலகட்டத்திலும் சிரித்த முகத்துடன் இருப்பார். கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் மக்கள் விரும்பக் கூடிய ஒருவராக இருந்தார்" எனக் குறிப்பிட்டார்.

வி.எஸ்.பாபுவின் வேண்டுகோளுக்காகவே பெரம்பூரில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு கொளத்தூர் தொகுதியில் த.வெ.க தலைவர் தேர்தல் பிரசாரம் செய்ததாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

''கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்.'' என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு